என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

கல்லீரலுக்கு சக்தியூட்டும் கம்பு
- கம்பினைப் பல்வேறு வகையான உணவாகச் சமைத்து உண்பதே சிறந்தது.
- சத்தான கம்பு தோசை மிகுந்த சுவையாக இருப்பதுடன் அனைத்து வயதினரும் உண்ணும் விதமாகவும் இருக்கும்.
கம்பு தானியத்தின் நிறம் நமக்குத் தெரியும், பச்சை. இளம் பச்சை என்று சொல்லலாம். தானியங்கள் எதையெடுத்தாலும் கிட்டத்தட்ட எல்லாமே வெள்ளைக்கு நெருக்கமான நிறம். கேழ்வரகு மட்டும் சிவப்பு நிறம் மாவாக அரைத்தால் மங்கின சிவப்பு நிறமாக இருக்கும். ஆனால் கம்பு மட்டுமே தனித்த நிறத்தில் இருக்கும். மாவாக அரைத்து சமைத்த பிறகும் அதன் அடிப்படையான இளம் பச்சை நிறத்தை அது இழப்பதில்லை.
நம்முடைய ராஜ உறுப்புகள் ஐந்தும் ஒவ்வொரு நிறத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளன. பிற உறுப்புகள் குறித்து அப்புறம் பார்க்கலாம். கம்பு கல்லீரலுக்கு ஆதாரமான பச்சை நிறத்தைக் கொண்டுள்ளது. அதாவது பச்சை நிற உணவுப் பொருட்கள் முதன்மையாக கல்லீரலுக்குப் பலம் சேர்க்கிறது. பிற உறுப்புகளுக்கு சக்தி அளிக்காதா என்றால் அளிக்கும் தான். அதன் மாவுத்தன்மை மண்ணீரலுக்கு சக்தி அளிக்கும் தான். ஆனால் அதன் முதன்மைப் பண்பு கல்லீரலுக்குச் சக்தியைத் தருவதாகும். அதாவது உடலின் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். நரம்பு மண்டலம் பலமடைந்தால் கல்லீரலின் துணை உறுப்பாகிய மூளை பலம்பெறும். மூளையைத் தலைமைச் செயலகம் என்போர் உண்டு. உடலின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்படுத்தும் திறன் மூளைக்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் கல்லீரல் பலம் பெறாமல் அல்லது சக்தி குன்றிய நிலையில் மூளை முழுச் செயற்திறனுடன் இயங்க முடியாது.
அந்தவகையில் மூளைக்கும், அதன் செயற்திறனுக்கும் ஆதாரமாக இருப்பது ராஜ உறுப்பாகிய கல்லீரலே ஆகும். உடலின் மூன்றில் ஒரு பங்கு ரத்தத்தை எடுத்துக் கொள்வது மூளை. மூளையின் பெரும்பகுதி ஆற்றலை தன்வயப்படுத்திக் கொள்வது கண்கள். மூளைத்திறன் சிறப்பாக இருந்தால் தான் கண்பார்வையும் தெளிவாக இருக்கும். உடல் முழுதும் ரத்தத்தைக் கொண்டு சேர்ப்பது இதயம் தான். ஆனால் உடலில் உள்ள ரத்தத்ததை எந்தெந்த பகுதிக்கு எவ்வளவு அனுப்புவது என்ற நிர்வாகப் பணியை மேற்கொள்வது கல்லீரலே ஆகும். எனவே கல்லீரலுக்கு ஆற்றலைத் தரும் கம்பு தானியத்தை நம்முடைய உணவில் வாரத்திற்கு இரண்டு மூன்று முறையேனும் எடுத்துக் கொள்வது நமது உடல் நலத்திற்கும் மூளைப் பலத்திற்கும் நல்லதாகும்.
கம்பங்கதிரைப் பார்த்திருக்கிறீர்களா? அதன் ஆதாரத் தண்டில் கதிர் நேரடியாக வானத்தை நோக்கிக் குத்திட்டு நிற்கும். அதாவது சூரியனை நோக்கிப் பார்த்தபடி இருக்கும். கதிர் மட்டுமல்ல, தானியத்தின் மணிகூட மேநோக்கியே இருக்கும். அதாவது சூரிய சக்தியை அப்படியே விழுங்கி விடும் ஆர்வத்துடன் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கும். சூரியனைப் பார்த்து நிற்கும் தானியத்தை நாம் உணவாக எடுத்துக் கொள்கிற பொழுது நாம் இயற்கையான வெப்ப ஆற்றலைப் பெறுகிறோம். இயற்கையான வெப்ப ஆற்றல் உடலின் உறுதித் தன்மைக்கு ஆதாரமாகும். குறிப்பாக கம்பு தானியத்தின் நிறம் கல்லீரலுக்கு சக்தியை வழங்குவது போல அதன் வெப்பக் கூறு நரம்பு மண்டலத்திற்கு உறுதியை, நிலைத்தன்மையை வழங்குகிறது. அதன் பசைத்தன்மை உயிரணுவை உற்பத்தி செய்வதில் மகத்தான பங்கு வகிக்கிறது. ஆகையால் இனப்பெருக்கத்தில் பேருதவி புரியும்.
கம்பந்தானியத்தைச் சோறாகவும், கூழாகவும் காய்ச்சுவது குறித்துக் கடந்தவாரம் பார்த்தோம். இன்றைய நகரிய வாழ்க்கை முறையில் கம்பங்கூழ், கம்பஞ்சோறு உண்பது அவ்வளவு விருப்பமாக இருக்காது சிலருக்கு. போக கம்பினை நேரடியாக உணவாகச் சமைக்கும் பொழுது மெலிதான கசப்புச் சுவை தென்படும். எனவே எப்போதும் எல்லோருக்கும் பிடித்த உணவாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
ஆகையால் கம்பினைப் பல்வேறு வகையான உணவாகச் சமைத்து உண்பதே சிறந்தது. நம்முடைய மரபுப்படியே பார்த்தாலும் கம்புத் தானியத்தில் எளிய சிறப்பான தின்பண்டம் ஒன்று செய்வார்கள். பொரிமாவுருண்டை என்று பெயர். முக்கால் பங்கு கம்பு, கால்பங்கு அரிசி இரண்டையும் பொரியும் அளவிற்கு தனித்தனியாக வறுப்பார்கள். பின்னர் அதனை ரவைப் பதத்திற்கு அரைத்து கைத் தாங்கும் அளவு வெந்நீரைத் தெளித்து உடன் நாட்டுச் சக்கரையும் சேர்த்து பிசைவார்கள். பின்னர் அக்கலவையை லட்டு போல உருண்டையாகப் பிடிப்பார்கள். காலையில் கிராமத்துத் தெருக்களில் "பொரிமாவுண்ட" "பொரிமாவுருண்ட" என்று கூவிக் கொண்டு வருவார்கள். குழந்தைகள் அடம் பிடித்து வாங்கி உண்ணும் அளவிற்குச் சுவையான தின்பண்டம் இந்தப் பொரிமாவுருண்டை.
இன்றைய 2020 குழந்தைகளின் பெற்றோருக்கும் பெற்றோர் சற்றே நம்முடைய மரபில் இருந்து விலகி வந்து விட்டனர். எனவே சட்டென்று நாம் மரபுத் தின்பண்டத்தின் பக்கம் திரும்பி விடமுடியாது. எனவே இந்தப் பொரிமா உருண்டை மாவுடன் வாசனைக்கு ஏலக்காய்த் தூளும், சிறிதளவு நெய்யும், கோகோ பவுடர் அல்லது ஆர்லிக்ஸ் பவுடர் போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டால் அந்த பிளேவர் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றாகி விடும். கூடுதல் சுவைக்கு ஒன்றிரண்டு பாதாம் முந்திரிப் பருப்புகளை வறுத்து மேற்படி அரைவையுடன் சேர்த்துக் கொண்டால் குழந்தைகளின் விருப்பத்தில் இருந்து தப்பாது பொரிமா உருண்டை.
இந்தப் பொரிமாவுண்டையை குழந்தைகள் பள்ளிக்குப் போகும்போது டப்பாவில் போட்டுக் கொடுத்து விட்டால் போகிற வழியிலேயே பேருந்தில், வேனில் சாப்பிட்டுக் கொண்டு போவார்கள். அல்லது பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் பொரிமா உருண்டை பிடித்துக் கொடுத்தாலும் வீட்டுப்பாடம், ட்யூசன் போன்ற இரண்டாம் கட்ட மூளை உழைப்பிற்குத் தயாராவார்கள். உண்மையில் குழந்தைகளை இவ்வளவு வருத்திப் படிக்க வேண்டுமா என்பதொரு முக்கியமான கேள்வி. அதனோடு முக்கியம் குறைந்தபட்சமாக அவர்களது மூளை உழைப்பிற்குரிய ஆற்றலை தரக்கூடிய சிறந்த தின்பண்டங்களையாவது வழங்குவது பெற்றோரது கடமையாகும்.
எதிர்காலம் குறித்த அச்சத்தால் பெற்றோர் குழந்தைகளின் முதுகில் படிப்பு என்ற பெயரில் குழந்தைமையைச் சிதைக்கும் அளவிற்கு ஏகப்பட்ட சுமையை ஏற்றிக்கொண்டே போகின்றனர். இன்றைய உணவுமுறை முற்றிலும் சத்து நீக்கப்பட்டதாக இருப்பதை நாம் உணராமல் இல்லை. இந்தச் சூழ்நிலையில் குறைந்தபட்சமாக இன்னமும் கெடுக்கப்படாத நம்முடைய மரபு தானியத்தில் சமைக்கும் உயிர்ச்சத்து வழங்கும் பண்டங்களை இன்றைய குழந்தைகளின் பெற்றோர் உத்திரவாதப்படுத்த வேண்டியது கடமையாகிறது.
தொடர்ந்து அரிசியை மட்டுமே பயன்படுத்துவது சத்துக்குறைபாட்டையே உருவாக்கும். இன்றைய நெல் விளைவிக்கும் முறை, அது அரிசியாகத் தீட்டப்படும் முறை என ஒவ்வொரு கட்டத்திலும் அதன் சத்து நீர்க்கப்பட்டதாகவே இருக்கிறது. நம்முடைய மரபு தானியங்கள் மிகை ரசாயன உரங்களை ஏற்க இயலாதவை என்பதால் அவற்றின் சத்துக்கூறுகள் பெருமளவு கெடுக்கப்படாததாக உள்ளது. எனவே நம்முடைய தானியங்களில் இருந்து நமக்குத் தேவையான கார்போ ஹைட்ரேட் புரதம் போன்ற முதன்மைச் சத்துக்களுடன் நுட்பமான உயிர்ச்சத்துக்களுடன் தாதுச் சத்துக்களும் கிடைக்கின்றன.
அதுபோலவே இன்றைய சமைக்கும் முறையும் சத்துக்களை விலக்குவதாக உள்ளது. சமைக்கும் முறையிலும் நாம் கூடுதல் கவனம் செலுத்தியாக வேண்டும். இன்று பலரும் சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்கிறோம் என்ற பெயரில் தானியங்களை உலர் மாவாக அரைத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது தோசையாக ஊற்றி உண்பதைப் பழக்கமாக வைத்துள்ளனர். அது நோயுற்றவர்களுக்கு வழங்கும் தண்டனையாக வறண்ட வரட்டி போல உள்ளது.
கம்பு தானியம் இரண்டு பங்கு, ஒருபங்கு பச்சரிசி, ஒருபங்கு உளுந்து, சிறிதளவு வெந்தயம் ஆகியவற்றை நான்குமணி நேரம் ஊறவைத்து கிரைண்டரில் ஈரமாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவினை நான்கு மணிநேரம் புளிக்க வைத்தால் போதும். தடிமனாகவோ, சன்னமாகவோ எப்படி வேண்டுமானாலும் தோசைவார்த்து கல்லுடன் போராடாமல் எடுக்கலாம்.
சத்தான கம்பு தோசை மிகுந்த சுவையாக இருப்பதுடன் அனைத்து வயதினரும் உண்ணும் விதமாகவும் இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் வழக்கமான தோசையைப் போலவே துணைப் பொருட்களுடன் சேர்த்து உண்ணலாம். கம்பு, அரிசி, கருப்பு உளுந்து ஆகியவற்றை ஒன்றாகவே ஊறவைத்து உடன் சீரகம், இஞ்சி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை உடன் சேர்த்து அரைத்து அரைமணி நேரம் வைத்திருந்து அடைபோலவும் ஊற்றி எடுக்கலாம். நெய் ஊற்றி வார்த்தெடுத்தால் துணைக்கு சட்னி சாம்பார் ஏதுமின்றி அப்படியே சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
போப்பு, 96293 45938
சதை தொளதொளப்பாக உள்ள ஆண், பெண் நடுத்தர வயதினர் இத்தகைய கம்பு அடையை உணவாக எடுத்துக் கொள்கிற பொழுது உடல் இறுக்கமடையும். அடிக்கடி எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்ற சத்துக்குறைபாடு உள்ளவர்களுக்கு இந்தக் கம்பு அடை சரியான மாற்று உணவாக இருக்கும். கம்பு அடையை உண்டால் உடல் இளைப்பு முடிவுக்கு வந்து சதைப்பிடிக்கத் தொடங்கும்.
முன்னர் சொன்னது போல பொரிமா உருண்டை மாவுடன் தேங்காய்த் துருவல், எள் போன்றவற்றைப் போட்டுப் பிசைந்து கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேக வைத்தால் உண்ணச் சுவையாக இருப்பதோடு உடலுக்கும் பலம் சேர்க்கும். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சினைகளுக்குக் காரணம் மாவுதன்மை மிகுந்த புளித்த உணவுகளே என்பதை நம்மில் பலரும் காணத் தவறுகிறோம். புளித்த மாவில் செய்த பண்டங்கள் மீண்டும் மீண்டும் வயிற்றில் தங்குவதால் அது அமிலமாக மாறி செரிமானத்தை பாதித்து சத்துக் குறைபாட்டை உருவாக்குகிறது. இங்கே கூறும் மாற்று உணவுகள் மேற்படி பிரச்சினைகளுக்கு எளிய தீர்வாக அமையும்.
தேங்காய்த் துருவல், நெய், வாசனைக்குப் பால் பவுடர் போன்றவற்றை சேர்த்து தானியங்க ளைச் சமைக்கிற பொழுது அப்பண்டங்கள் மெத்தென்று மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் நன்மை செய்யும்.
பழங்காலம் தொட்டே புகழ்பெற்ற தேனும், தினையும் குறித்து அடுத்தவாரம் பார்ப்போம்.
சுவைப்போம் சுகம்பெற.






