என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எங்கள் வீட்டுக்குள்ளும் புகுந்த கொரோனா- மீனா மலரும் நினைவுகள்
    X

    எங்கள் வீட்டுக்குள்ளும் புகுந்த கொரோனா- மீனா மலரும் நினைவுகள்

    • நாடு முழுவதும் எல்லோருமே அப்படித்தான் முடங்கி கிடந்தார்கள்.
    • எந்த அறிகுறியும் உடனே வெளியே தெரியவில்லை.

    ஜனவரி-2019 வழக்கமாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், மே மாதங்களில் குறைந்தது 10 நாட்களாவது ஓய்வுக்காக குடும்பத்துடன் வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்வேன். அதற்கு ஏற்ற வகையில்தான் படங்களுக்கும் கால்ஷீட் கொடுப் பேன்.

    அதே போலத்தான் அந்த ஆண்டிலும் கால்ஷீட்டுகளை கொடுத்து வைத்திருந்தேன். இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு விமான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்தால் எளிதாகவும், கட்டணம் குறைவாகவும் கிடைக்கும் என்பதால் கணவர் சாகரிடம் பாஸ்போர்ட்டை பல முறை கேட்டும் அவர் தரவில்லை. இதனால் டிக்கெட் முன்பதிவும் தாமதமாகி கொண்டே வந்தது. அவர் ஏன் பாஸ்போர்ட்டை தராமல் இழுத்தடிக்கிறார் என்று எனக்கு எதுவும் புரியவில்லை.

    அவர் பாஸ்போர்ட்டை தராமல் இருக்கிறார்.. இந்த ஆண்டு 'டிரிப்' என்ன ஆகுமோ...? என்று என் தோழிகளிடம் சொல்லி புலம்பி வந்தேன்.

    ஜனவரி மாதம் வந்தாச்சு... இனியும் தாமதிக்க கூடாது என்று அன்று விடா பிடியாக பாஸ் போர்ட்டை கொடுங்க என்றேன்.

    அப்போதும் வழக்கம் போலவே 'கொஞ்சம் பொறுமையாக இரு' என்றார். என்னால் அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை.

    தொடர்ந்து நான் வற்புறுத்தியதும் அவர் சொன்னார், 'உலக அளவில் பெரிய அளவில் ஏதோ நடக்கப் போகு துங்கிறாங்க. நிலைமை மோசமாகலாம். எனவே கொஞ்சம் பொறுமையாக இரு' என்றார்.

    அதை கேட்டதும் எனக்கும் திக் என்றாகி விட்டது. எதுவும் புரியவில்லை. அப்படி என்னதான் வரப்போகுது என்று என்னால் எதுவும் யோசிக்க முடியவில்லை.

    ஆனால் அவர் உலக நடப்புகளை தெரிந்து வைத்திருந்ததால் சீனாவில் ஏதோ மர்ம நோய் பரவி வருவதாகவும் அது உலகம் முழுவதும் பரவலாம் என்பதையும் கேள்விப்பட்டு இருக்கிறார்.

    ஆனால் எப்போ வரப்போகுது? என்ன வரப்போகுது. அதனால் என்ன பாதிப்பு வரும்? என்று எதுவும் தெரியாத நிலையில் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

    அதன் பிறகு சீனாவில் இருந்து மிக மோசமான வைரஸ் ஒன்று பரவி கொண்டிருக்கிறது. அது தாக்கினால் ஆபத்து என்ற செய்திகள் வெளி வந்து கொண்டிருந்தன.

    மார்ச் மாதம் வந்தது. திடீரென்று 'லாக்டவுன்' என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது. இதுவரை அப்படி ஒரு அறிவிப்பை கேட்டதும் இல்லை.


    ஊரடங்கு என்றால் கடைகள் பூட்டப்பட்டிருக்கும். மற்றபடி வெளியே வழக்கம் போல் வரலாம், போகலாம் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால் யாரும் வீட்டை விட்டு வெளியே போக முடியவில்லை. அத்தியாவசிய தேவைக்கு கூட பொருட்கள் வாங்க முடிய வில்லை. வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன். நாடு முழுவதும் எல்லோருமே அப்படித்தான் முடங்கி கிடந்தார்கள்.

    நான் சென்னையில் இருந்தேன். சாகர் பெங்களூருவில் மாட்டிக் கொண்டார். நாட்கள் போக போக கொரோனா வைரசின் வீரியமும் அதன் பாதிப்பும் தெரிந்தது.

    விதிகளை கடைபிடிக்காமல் கொரோனா தாக்கி ஏராளமானோர் மடிந்து கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் கட்டுப்பாடுகளையும் மீறி மக்கள் வெளியே நடமாடியதை பார்த்த போது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. இதனால் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டேன். அதில் வீட்டில் இருந்தே உங்கள் குடும்பத்தை மட்டுமல்ல நாட்டையும் காக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. வீட்டிலேயே இருங்கள், குடும்பத்தினரோடு பொழுதை போக்குங்கள் என்று தெரிவித்தேன்.

    தினமும் சாகரோடு போனில் தான் பேச முடிந்தது. அவர் பேரிடர் வரப்போகிறது என்பதை முன் கூட்டியே உணர்ந்து பெட்டி பெட்டியாக முக கவசம், சானிடைசர், ஹேன்ட்வாஷ் எல்லாம் வாங்கி தந்துவிட்டார்.

    அவற்றை பயன் படுத்தியது புது அனுபவமாக இருந்தது. காய்கறிகள், பழங்களை கூட வெறுங்கையால் தொடகூட பயமாக இருந்தது. கையுறை அணிந்து வாங்குவது, பின்னர் பக்கெட்டில் மஞ்சள், உப்பு கலந்த தண்ணீரில் போட்டு எடுப்பது... இப்படி வீட்டுக்குள் கூட ஏகப்பட்ட கட்டுப்பாடு. அப்படி இருந்தும் எங்கள் வீட்டுக்குள்ளும் கொரோனா புகுந்தது. மொத்த குடும்பமும் மீண்டது.

    நான், அம்மா உள்பட மொத்த குடும்பமே கொரோனாவின் பிடியில் சிக்கியது. அம்மா வயதானவர் என்பதால் பாதிப்பு அதிகமாகி விடும் என்று போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ மனையில் சேர்த்தேன்.


    ஒரு வாரம் சிகிச்சைக்கு பிறகு அம்மாவுக்கு உடல் நிலை சீரானது. சாகர் பெங்களூருரில் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிறைய புறாக்கள் இருந்தது. அந்த புறாக்களின் எச்சம், இறகுகள் மூலம் ஒரு வகையான தொற்று நுரையீரலை பாதித்து இருக்கிறது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் உடனே வெளியே தெரியவில்லை. ரொம்ப லேட்டாத்தான் அந்த பாதிப்பு தெரிந்தது. அதன்பிறகு தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிகிச்சையின் பலனாக அதில் இருந்து குணமடைந்தும் விட்டார். ஆனால் அப்போது மருத்துவர் 'சாகருக்கு நுரையீரல் கடுமையாக பாதித்து இருக்கிறது. மாற்ற வேண்டியது வரலாம். அதற்கும் பதிவு செய்து வையுங்கள் என்றார். நான் அதை நம்பவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையும் விரைவிலேயே வந்தது.

    கொரோனா என்ற மிகப்பெரிய நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து எல்லோரும் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய கால கட்டம். ஒரு மனிதனுக்கு இப்படியெல்லாம் ஆபத்து வருமா? என்று என்னால் நம்ப முடியாத தருணம் அது. என் வாழ்க்கையை புரட்டி போட்ட அந்த தருணத்தை பற்றி அடுத்த வாரம் கூறுகிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×