என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ஒடிசாவில் காணலாம் இந்திய பொக்கிஷம்!
    X

    ஒடிசாவில் காணலாம் இந்திய பொக்கிஷம்!

    • ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும்.
    • டால்பின்களைக் கண்டு களிப்பதற்குப் பெயர் பெற்ற ஏரியாகும்.

    இந்தியாவின் பொக்கிஷம் என்று சொல்லப்படும் ஒடிசா மாநிலத்தில் பார்ப்பதற்கும் ஓய்வெடுத்து புத்துணர்ச்சி கொள்வதற்கும் ஏராளமான இடங்கள் உள்ளன.

    அதன் தலைநகரமான புவனேஷ்வர் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப்பகுதியில் கம்பீரமாக அமைந்திருக்கிறது.

    மகாநதியின் தென்மேற்கு கரையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. பழைய காலத்தில் இதன் பெயர் கலிங்க தேசம்.

    புகழ்பெற்ற புனிதமான பூரியைச் சுற்றியுள்ள சில இடங்களை இங்கு பார்ப்போம்.

    பூரி ஜகந்நாதர் ஆலயம்

    புனிதமான இந்தத் தலம். புவனேஸ்வரில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இந்தத் தலம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஜரா என்ற வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின் உடல் கடலில் ஒரு மரம் போல் மிதக்க, கிருஷ்ணர் கனவில் கூறியவாறு அதை, புரியை ஆண்டு வந்த இந்திரதுய்மன் என்னும் மன்னன் எடுத்து, ஒரு சிலையை அமைக்க ஏற்பாடுகள் செய்தான்.

    பெருமாளே ஒரு முதிய தச்சர் வேடத்தில் தோன்றி 21 நாட்கள் யாரும் தான் வேலை செய்யும் அறையைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிற்ப வேலையை ஆரம்பித்தார்.

    ச.நாகராஜன்


    15 நாட்கள் அறையில் இருந்து சத்தம் கேட்டது. அதன் பின்னர் கேட்கவில்லை. மூன்று நாட்கள் பொறுத்த மன்னன் பின்னர் அவசரப்பட்டு அறைக் கதவைத் திறந்தான். தச்சர், "21 நாட்கள் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையை நீ ஏன் மீறினாய். ஆகவே அரைகுறையாக உள்ள சிலையை அப்படியே பிரதிஷ்டை செய். இதை தரிசிக்க வருவோர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர்" என்று கூறினார். அங்கிருந்த பலராமர், சுபத்ரா, ஜெகந்நாதர் ஆகிய சிலைகளை முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் நிலையில் அரசன் பிரதிஷ்டை செய்தான்.

    கால கிரமத்தில் இந்தக் கோவிலை 1135ஆம் ஆண்டு ஆனந்தவர்மன் என்ற அரசன் புதுப்பித்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள மரத்தினாலான திருமேனிகள் புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரி ஜகந்நாதரின் ரத யாத்திரை பல லட்சம் மக்களை ஈர்க்கும் உலகப் பெரும் தேர்த்திருவிழா ஆகும். பத்து லட்சம் மக்கள் இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு ஜெகந்நாதரின் அருளுக்குப் பாத்திரமாகின்றனர்.

    16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு மஞ்சள் நிறத் தேரில் புரி ஜெகந்நாதரும், 14 சக்கரங்கள் கொண்ட சிவப்பு பச்சை நிறமுடைய தேரில் பலபத்ரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் தேர்வலம் வருவர்.

    ஒவ்வொரு தேர்ச்சக்கரமும் 7 அடி குறுக்களவு கொண்டது. ஜகந்நாதரின் தேரின் உயரம் 45 அடி ஆறு அங்குலம்; அகலம் 34 அடி ஆறு அங்குலமாகும். இந்தத் தேர்கள் வருடா வருடம் புதிதாக செய்யப்படுகின்றன. தேர் கட்டுவதில் வல்லவர்களான தச்சர்களால் குறிப்பிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை மகாநதியில் மிதக்கவிடப்படுகின்றன. அவற்றை புரி அருகே எடுத்து குறிப்பிட்ட முறைப்படி இந்த விசேஷமான தேர்கள் அமைக்கப்படுகின்றன.

    தேரோடும் வீதியை தங்கத் துடைப்பத்தால் மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வதுப் பாரம்பரியமாக இன்றளவும் நடைபெற்று வருகிறது.

    முதலில் பலபத்ரர் தேர், அடுத்து சுபத்ரா தேவி தேர், பின்னர் இறுதியில் நந்திகோஷ ரதம் எனப்படும் புரி ஜெகந்நாதர் தேர் முறையாகப் புறப்படும். ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். குண்டிச்சா கோவில் நோக்கிப் புறப்படும் இந்த ரத யாத்திரை மவுசிமா கோவில் வழியே செல்லும். அங்கு ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகந்நாதர் கோவிலை அடையும்.

    புரி கோவிலில் முதலில் சிங்க துவார் வழியே நுழைந்து 22 படிகள் ஏறி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் தீபத்தை வழிபடுதல் மரபு. ஜகந்நாதர் சந்நிதிக்கு இடது பக்கம் சுபத்ராவும் பலபத்ரரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். கோவில் கூரையில் கிருஷ்ண லீலை ஓவியங்கள் அழகுறத் திகழ்கின்றன.

    இறைவனுக்கு 56 வகையிலான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்பட்ட பின் இந்த மகா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் இங்கு வழங்கப்படுகிறது.


    சிலிகா ஏரி

    பூரியில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிலிகா ஏரி ஆசியாவிலேயே மிகப் பெரிய உப்பு ஏரியாகும். இதை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. இது மூன்று மாவட்டங்களை உள்ளடக்கி 1100 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள ஏரியாகும். இது டால்பின்களைக் கண்டு களிப்பதற்குப் பெயர் பெற்ற ஏரியாகும். சடப்படா நகரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியில் பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் காட்வால், முள்வால் பறவை உள்ளிட்ட ஏராளமான பறவைகளையும் காணலாம். பேரிக்காய் வடிவத்தில் உள்ள இந்த ஏரியுடன் 52 ஆறுகள் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்குவதற்கு எராளமான ஹோட்டல்கள் உள்ளன.

    கொனார்க் சூரியன் கோவில்

    பூரி நகரில் இருந்து வடகிழக்கில் 35 கிலோமீட்டர் தூரத்தில் கொனார்க் உள்ளது. இங்குள்ள கோவில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். சிவப்பு மணல்கற்களாலும் கருங்கற்களாலும் அழகுற அமைக்கப்பட்ட இந்தக் கோவிலை ஐரோப்பிய மாலுமிகள் கறுப்பு கோவில் பிளாக் பகோடா என்று அழைத்தனர்.

    நூறு அடி உயரமுள்ள ரதமானது 24 சக்கரங்கள் கொண்டதாகவும் ஆறு குதிரைகள் இழுத்துச் செல்வதாகவும் இருக்கும் படி அமைக்கப்பட்டது.

    இந்த தேரின் சக்கரத்தை வியப்புடன் அனைவரும் பார்ப்பது வழக்கம்.

    "இங்கே கல்லின் மொழி மனிதனின் மொழியையும் தாண்டிச் செல்கிறது" என்று நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் வியந்து போற்றுகிறார்.


    யுனெஸ்கோ இதை பாரம்பரியக் கலைச்சின்னமாக அறிவித்துள்ளது.

    சந்திரபாகா கடற்கரை

    பூரியிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சந்திரபாகா கடற்கரை. இது உலகப் பிரசித்தி பெற்ற கொனார்க் சூரியதேவன் கோவில் தலத்திற்கு 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஏராளமானோர் வந்து சூரிய தேவனை வழிபடுகின்றனர்.

    எண்ணற்ற மக்கள் இந்த கடற்கரைக்கு, ரத சப்தமி தினத்தன்று வந்து கூடுகின்றனர்; சூரியனைத் தொழுகின்றனர். இங்கு நீர் விளையாட்டுக்கள் பிரபலம். படகு சவாரி உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளைக் கவரும்.


    சூரியதேவன்கோவிலுக்கு உலகின் பாரம்பரிய தளம் என்ற அந்தஸ்தை யுனெஸ்கோ வழங்கியுள்ளது.

    ராம்சண்டி ஆலயமும் கடற்கரையும்

    குசபத்ரா நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது ராம்சண்டி ஆலயம். கொனார்க் சூரிய கோவிலில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. தேவி ராம்சண்டி இங்கு கோவிலில் குடியிருந்து அருள் பாலிக்கிறாள். தேவி ஒரு தாமரை மலரின் மீது வீற்றிருக்கிறாள். கோவிலின் பின் பக்கம் ஓடும் குசபத்ரா நதி கண்ணுக்கு இனிமையான காட்சியைத் தரும். இங்கு தசரா விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள கடற்கரையும் மிகவும் பிரபலமான ஒன்று.

    இவை தவிர பார்க்க வேண்டிய ஆலயங்களும் பூங்காக்களும் அருங்காட்சியகங்களும் நிறையவே இந்தப் பகுதியில் உள்ளன.


    அவரவர் பட்ஜெட்டிற்கும் ஓய்வெடுக்க உள்ள காலத்தையும் பொறுத்து இந்த இடங்களுக்குத் திட்டமிட்டுப் பயணிக்கலாம்; புத்துணர்ச்சியைப் பெறலாம்!

    பழம்பெரும் ஆலயங்கள், அழகிய கடற்கரைகள், அடர்ந்த வனாந்திரங்கள், புகழ் பெற்ற பண்டைய வரலாறு, மனதை ஈர்க்கும் இயற்கை வனப்பு கொண்ட ஒடிசா இந்தியாவின் பொக்கிஷம் என்று சொல்வது சரிதானே!

    Next Story
    ×