என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அறிவியல் - பத்து கட்டளைகள்
- அகத்தில் குழந்தையாக இரு; புறத்தில் அறிஞனாக செயல்படு.
- நமக்கு என்னென்ன தேவையோ அவை நமக்கு வேண்டும் என்று முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
பைபிள் கூறும் பத்து கட்டளைகள் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.
நாம் நமது வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள பத்து வகையான விதிமுறைகளை வகுத்துள்ளோம். அவற்றை நாம் இக்காலத்து பத்து கட்டளைகளாகவே எடுத்துக் கொள்ளலாம்.
அவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிப்போம் ஆனால், அனைத்து சூழ்நிலைகளையும் எளிதாக எதிர்கொண்டு நல்வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
அந்த பத்து விதமான விதிமுறைகள் என்ன என்பதையும் ஒவ்வொன்றாகப் பார்த்திடுவோம்.
அகத்தில் குழந்தையாக இரு; புறத்தில் அறிஞனாக செயல்படு.
இதுதான் முதலாவது விதிமுறை.
அகத்தில் குழந்தையாக இருப்பது என்றால் என்ன?
மனதில் ஏற்படும் எண்ணங்களும், உணர்வுகளும் நம்மை அறியாமல் தாமாகவே ஏற்படுகின்றன.
இத்தகைய எண்ணங்கள் தாம் வரவேண்டும்; இத்தகைய உணர்வுகள் தாம் வரவேண்டும் என்று நாம் விரும்புவோம். அவற்றைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தப் போராடுவோம்.
ஆனால் எந்தவொரு குழந்தையும் தன்னைச் சீரமைக்க எண்ணுவதில்லை. அது இயற்கையாக இருக்கிறது; கள்ளம் கபடமற்று இருக்கிறது.
மனதைப் பொறுத்தவரை அது இயற்கையாக இருக்கவேண்டும். குழந்தையாக இருக்க வேண்டும்.
மன இயக்கத்தைப் பொறுத்தவரை அங்கு அறிவுக்கு வேலை கிடையாது.
அகத்தைப் பொறுத்தவரை நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது கிடையாது.
அனைத்தும் இயற்கையானவை. அனைத்தும் தெய்வீகமானவை. அங்கே நமது முயற்சிக்கோ, அறிவுக்கோ எந்தவொரு வேலையுமே கிடையாது.
அனைத்தும் நன்றே; அனைத்தும் தெய்வீகமானவையே.
அங்கு வாழ்வு மட்டுமே உள்ளது. அங்கு நிகழ்வு மட்டுமே உள்ளது. அங்கே செயல் என்று எதுவுமே கிடையாது. செய்வதற்கென்று எதுவுமே கிடையாது.
உங்களோடு நீங்கள் உடன்பட்டு வாழ்வதுதான் குழந்தையாக இருப்பது.
உங்களுடைய அகத்தில் நீங்கள் ஒரு குழந்தையாக மட்டுமே இருக்க வேண்டும்.
உங்களுடைய செயல்கள் யாவும் எப்படி இருக்க வேண்டும்?
அதுவும் குழந்தைத் தனமாக இருக்க வேண்டுமா?
உங்கள் செயல்கள் அனைத்தும் ஒரு அறிஞனுடைய செயல்களாக இருக்க வேண்டும்.
அறிவுக்கு எங்கே வேலை உள்ளது, எங்கே வேலை கிடையாது என்பதை நமது அறிவைக் கொண்டே புரிந்து கொள்ள வேண்டும்.
அகத்தைப் பொறுத்தவரை அறிவுக்கு வேலை எதுவும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படிப் புரிந்து கொள்வதையே ஞானம் என்னும் பெயரில் குறிப்பிடுகிறோம்.
அறிவின் குறுக்கீடு எதுவும் இல்லாமல் நமது அகம் - மனது சுதந்திரமாக இயங்குவதையே, முக்தி, மோட்சம், விடுதலை என்ற பெயரில் குறிப்பிடுகிறோம்.
இந்த விபரங்களை எல்லாம் நாம் ஆரம்பத்திலேயே விரிவாகப் பார்த்துவிட்டோம்.
அதன் சாராம்சமாகவே இந்த முதலாவது விதிமுறையை வைத்துள்ளோம்.
இனி அடுத்து வருவது இரண்டாவது விதிமுறை.
"முடிந்துபோனதை யெல்லாம் முடித்துக் கொண்டு, அடுத்தது என்ன வென்று முன்னேற வேண்டும்"
- இதுதான் அந்த இரண்டாவது விதி முறை.
இந்த இரண்டாவது விதிமுறை என்ன கூறுகின்றது?
முடிந்துவிட்ட ஒன்றை நினைத்து நினைத்து புலம்பிக் கொண்டிருப்பவர்கள் சிலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அப்படிப்பட்டவர்களால் அடுத்ததாக செய்ய வேண்டிய செயல்கள் எதனையுமே செய்ய முடியாமல் போய்விடும்.
செயல் அளவில் முடிந்து போன ஒன்றை மனதளவிலும் முடித்துக் கொள்ள வேண்டும்.
முன்பதிவு செய்திருந்த ரெயிலை தவற விட்டு விட்டோம்.
தவறவிட்ட நிகழ்வு முடிந்து போன ஒன்று. அதனையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பதை விட்டுவிட வேண்டும்.
அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதையே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ரெயிலுக்குப் பதிலாக பஸ்சையோ அல்லது விமானத்தைப் பிடிக்கவோ முயன்றிட வேண்டும்.
முடிந்துவிட்ட ஒன்றிலேயே மூழ்கிக் கிடப்போமாயின், நாம் செயலற்று முடங்கிப் போய் விடுவோம்.
ஆகவே முடிந்துபோனதையெல்லாம் முடித்துக் கொண்டு, அடுத்தது என்னவென்று முன்னேற வேண்டும்.
அடுத்து வருவது மூன்றாவது விதிமுறை.
புராண காலத்துக் கதைகளைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
சிலர் இறைவனை நோக்கி தவம் செய்வார்கள். இறைவனும் அவர்களுடைய தவத்தினால் மகிழ்வடைந்து அவர்கள் கேட்ட வரத்தை வழங்குவார்.
இக்காலத்தில் அப்படி வரங்களைப் பெறுவது சாத்தியம் இல்லையா?
இப்போதும் அது சாத்தியமே.
அப்படி என்றால் அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
நமக்கு என்னென்ன தேவையோ அவை நமக்கு வேண்டும் என்று முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
இப்படி முடிவு செய்வது வேறு, வரங்கள் வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான்.
அது போல் இன்னும் ஒன்றையும் கூறுவார்கள்.
ஒரு முனிவர் கடும் தவம் செய்து கொண்டிருப்பார். சிலர் அவருக்கு இடையூறு செய்து அவருடைய தவத்தை கலைத்து விடுவார்கள்.
தவம் கலைந்த முனிவரும் அப்படி தவத்தை கலைத்தார்கள் மீது கோபங்கொண்டு அவர்களை, "நாயாகப் போ!" என்று சபித்து விடுவார்.
அத்தகைய சாபங்கள் இக்காலத்திலும் செயல்படுகின்றனவா?
அத்தகைய சாபங்கள் இன்றளவும் செயல்படுகின்றன.
நமக்கு ஏதாவது வேண்டும் என்று முடிவெடுப்பது வேறு;
நமக்கு வேண்டியது நமக்குக் கிடைக்காது என்று முடிவு செய்வது வேறு.
நமக்கு வேண்டியது நமக்குக் கிடைக்காது என்று முடிவு செய்து கொள்வது தான் சாபங்கள் ஆகும்.
வரங்களையும், சாபங்களையும் நமக்கு நாமேதான் உருவாக்கிக் கொள்கிறோம்.
நாம் நமக்கு வேண்டியதை அடைய நாம் செய்ய வேண்டிய செயல்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி நமது செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் விதமாக நாம் நமது செயல் முடிவுகளை யும் ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கான அணுகுமுறைதான் இந்த மூன்றாவது விதிமுறை.
நம்முடைய வெற்றிக்காக,
1. சில செயல்களை செய்ய வேண்டும் என்றோ, அல்லது
2. சில செயல்களை செய்ய வேண்டாம் என்றோ, ஏதாவது ஒரு முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு முடிவுகளையும் மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளக் கூடாது.
சில சமயங்களில் இரண்டு முடிவுகளுமே சரியானதாக இருக்காது.
அந்நிலையில் மூன்றாவது முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அது என்ன மூன்றாவது முடிவு?
இந்த முடிவு செய்யும் நிகழ்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மூன்றாவது முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று முடிவு செய்த பிறகும், செய்ய வேண்டாம் என்ற எண்ணம் வந்து கொண்டிருக்கலாம்.
அப்படி அந்த எண்ணங்கள் வருமேயானால் அவற்றை நிராகரித்து விட வேண்டும்.
அது போல் ஒரு செயலைச் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்த நிலையில், அந்தச் செயலை செய்ய வேண்டும், செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் வருமேயானால் அவற்றையும் நிராகரித்து விட வேண்டும்.
அதேபோல் முடிவெடுப்பதை தற்காலிகமாக ஒத்திப்போட வேண்டும் என்று முடிவெடுத்த பின்னரும், செய்ய வேண்டும் என்றோ அல்லது
செய்ய வேண்டாம் என்றோ எந்தவொரு எண்ணங்கள் ஏற்பட்டாலும் அவை அனைத்தையுமே நிராகரித்துவிட வேண்டும்.
இவ்வாறு, "ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றோ, அல்லது செய்ய வேண்டாம் என்றோ அல்லது முடிவு செய்வதை தற்காலிகமாக ஒத்திப்போடுவது என்றோ ஏதாவது ஒரு முடிவை எடுத்துக்கொள்ள வேண்டும்"
- என்பதுதான் இந்த மூன்றாவது விதிமுறை.
அடுத்து வருவது நான்காவது விதிமுறை.
"எட்டியதை எடு; எட்டாததைக் கொடு"
- என்பதுதான் இந்த நான்காவது விதிமுறை.
உணர்மனம் என்றால் என்ன, முழு மனம் என்றால் என்ன என்பதை ஏற்கெனவே பார்த்துள்ளோம்.
நமக்கு நன்கு தெரிந்த செயல்களை நாமாகவே எத்தகைய தடுமாற்றமும் இல்லாமல் எளிதாக செய்து முடித்துவிட முடியும்.
ஆனால் நாம் எதிர்கொள்ளும் செயல்கள் அனைத்தும் அத்தகையதாக இருக்க முடியுமா?
அவற்றுள் பல, சிக்கல்கள் நிறைந்ததாகவும் நம்மை மீறியதாகவும் இருக்கக்கூடும்.
எட்டாதவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டால் என்ன ஆகும்?
அந்நிலையில் செய்யக்கூடிய செயல்களைக் கூட செய்ய முடியாமல் போய்விடும்.
ஆகவே எட்டக்கூடிய செயல்களை மட்டும் எடுத்துக் கொண்டு, எட்டாத செயல்களை எல்லாம் முழு மனதிடமோ அல்லது இறைவனிடமோ ஒப்படைத்து விட வேண்டும்.
அந்நிலையில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தையும் திறம்பட செய்து முடிக்க முடியும்.
அடுத்து வருவது ஐந்தாவது விதிமுறை.
ஓர் உதாரணம். நீங்கள் ஒரு மென்பொருள் பொறியாளர் என வைத்துக் கொள்வோம்.
உங்கள் வேலையில் நீங்கள் ஒரு ஜீனியஸ். - அற்புதமான திறமைசாலி.
நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் ஒரு பெரிய பணி ஒப்பந்தம் ஒன்றைக் கையில் எடுத்திருந்தார்கள். அந்த பணித் திட்டத்தில் உங்களைப் போன்ற திறமைசாலிகளால் மட்டுமே பணியாற்ற முடியும்.
ஆயிரக்கணக்கானோர் பணியாற்றும் உங்கள் நிறுவனத்தில், இந்த விசேஷப் பணிக்காக உங்களைப் போன்ற பத்து பொறியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஒரு வருடம் இந்தப் பணியில் ஈடுபட வேண்டும். மூன்று மடங்கு ஊதியம் வழங்கப்படும்.
பத்து நபர்களில் முதல் நபராக உங்களைத் தேர்வு செய்கின்றனர். இன்னும் ஒன்பது நபர்களையும் தேர்வு செய்கின்றனர்.
எவராலும் இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, உங்கள் பத்து நபர்களுக்கு மட்டும் என ஒரு பெரிய ஹாலையும் ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்த உதாரணத்தில் வேறு ஒரு வித்தியாசமான அம்சமும் உள்ளது.
ஸ்ரீ பகவத்
அதென்ன வித்தியாசமான அம்சம்?
உங்களோடு சேர்ந்து பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட மற்ற ஒன்பது நபர்களும், உங்களுடைய பரம எதிரிகள். உங்கள் கால்களை எப்படி வாரிவிடலாம் என்று ஒவ்வொரு விநாடியும் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள்.
அத்தகைய நபர்களுக்கு மத்தியில் நீங்கள் ஒற்றை நபராக இருந்து வேலை செய்யவேண்டும்.
அந்நிலையில் சாதாரண சராசரிப் பணிகளைக் கூட உங்களால் செய்ய முடியாது.
இந்நிலையில் விசேஷமான பணிகளை உங்களால் எப்படி செய்ய முடியும்?
தொடர்ந்து பார்ப்போம்...
தொடர்புக்கு:
வாட்ஸப் - 8608680532






