என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

சிந்தனைகள் மாறினால் வாழ்க்கை மாறும்!
- ஒருமுறை தவறு செய்தால் இரு முறை அதனை சரி செய்யும் கஷ்டம் கூடி விடுகின்றது.
- முழு விவரம் தெரியாமல் எந்த இடத்திலும் பேசி விடக்கூடாது.
வாழ்க்கை மாறுவதுதான். நம் சிந்தனைகள் மாறினால் வாழ்க்கை மாறும்.....
ஒரு விழாவுக்கு உங்களால் செல்ல முடியவில்லை. இது உங்கள் குடும்ப விழாவாக இருக்கலாம். ஏதோ தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்களால் செல்ல முடியவில்லை. ஆனால் நீங்கள் வராததை யாரும் பெரிய விஷயமாக, ஏன் சின்ன விஷயமாகக் கூட அக்கறை கொள்ளவில்லை. மதிக்கவில்லை என்றால் உடனே ஒன்றினை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த உறவினர், நட்பு கூட்டம் நாம் சென்று பங்கேற்று இருந்தாலும் நாம் பெரிய மதிப்பு, மரியாதையினை பெற்றிருக்க முடியாது. எனவே நம் மரியாதை, மதிப்பு எந்த இடத்திலும் எப்படி இருக்கின்றது என்பதனை அறிந்தே செயல்பட வேண்டும்.
ஒருவர் முயன்று அடுத்தவருடன் உறவினை வேண்டுமென்றே முறித்துக் கொள்கின்றார் என்றால் அந்த உறவினை ஒட்ட வைக்க அதன் பின்னே முயற்சிக்க வேண்டாமே.
ஒரு நிகழ்வில் தீர்ப்பு என்பதனை நம் மனதில் தீர்மானிக்கும் முன் இருபக்கம் நடந்தவைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
யாராவது உங்களை பஞ்சாயத்து செய்ய சொல்லி கூப்பிட்டால் உடனே உங்களை நாட்டாமையாக கற்பனை செய்து ஓட வேண்டாம். நடந்தவைகளை மற்றவர்கள் விவாதிக்க ஓரமாய், அமைதியாய் அமர்ந்து கேளுங்கள். நிறைய புரியும்.
ஒருமுறை தவறு செய்தால் இரு முறை அதனை சரி செய்யும் கஷ்டம் கூடி விடுகின்றது.
பரந்த மனப்பான்மை உங்களது சிறப்பு அம்சமாக இருக்கட்டும்.
நான் மட்டுமே எல்லோருக்கும் பின்னால் இருக்கின்றேன் என்ற புலம்பலை விட்டு விட்டு நான் என் பாதை வரிசையில் சரியாக போய் கொண்டிருக்கின்றேன் என்று நினைத்து செயல்பட்டு பார்ப்போமா.
கமலி ஸ்ரீபால்
வாழ்வில் என்ன வேண்டும் என எனக்கே தெரியவில்லை என்று குழம்புவதை விட்டு எனக்கு சரியான பாதையினை நான்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என மனதை தெளிவு படுத்தி பாருங்களேன்.
சிலருக்கு முயற்சி செய்வதற்கே பயம். தவறு ஏற்படுமோ அல்லது தோல்வி ஏற்படுமோ என்ற பயம். ஆகவே எந்தவித முயற்சியும் செய்ய மாட்டார்கள். இது வாழ்வினை பயனற்றதாக்கி விடலாம். எனவே சற்று கவனத்துடன் கூடிய முயற்சி அவசியமாகின்றது.
உடற்பயிற்சி செய்ய சோம்பலாகத்தான் இருக்கும். ஆனால் சுறுசுறுப்பாய் ஓடி-ஆடி நடக்கும் மகிழ்ச்சி சோம்பலை விரட்டி அடித்து விடுமே.
சிந்தனையோடு செயலினை மாற்றுங்கள்- சிந்தனை மனதிற்குள் இருக்கலாம். அதனை வெளிப்படுத்தும் சொல்லிலும், செயலிலும் கவனத்தோடு இருக்க வேண்டும்.
முழு விவரம் தெரியாமல் எந்த இடத்திலும் பேசி விடக்கூடாது. நம் வார்த்தைகளைக் கொண்டே பிறர் நம்மை அளந்து விடுவர்.
கோபம் இருக்கும் போது வாயே திறக்க வேண்டாம். நாமே அறிந்திராத பல கடும் சொற்களையும், தீய எண்ணங்களையும் வெளியே கொட்டி விடு.
நம் பெருமையை கட்டுப்பாடு இல்லாமல் நாமே பீற்றிக் கொள்வது போல் இருந்தால் வாயை 'கம்' போட்டு ஒட்டிக் கொள்ளவும்.
பிறர் மனதை உடைப்பது போல் இருந்தாலும், நம்பிக்கையை உடைப்பது போல் இருந்தாலும் வாயே திறக்கக் கூடாது.
எது ஆடம்பரம் என்ற சிந்தனையிலும் எண்ணத்திலும் மாற்றம் வேண்டும்.
இரவில் நல்ல தூக்கம் இருப்பதைப் போன்ற ஆடம்பரம் ஒன்று இருக்க முடியுமா?
நிதானமான காலை-பரபரவென்று ஓடாத காலை, எத்தனை பெரிய ஆடம்பரம் தெரியுமா?
அமைதியான சூழலில் பறவைகளின் சத்தம் எத்தனை ஆடம்பரம் தெரியுமா?
அப்படியே நிதானமாய் காலாற ஒரு நடை-அதுவும் இயற்கை சூழலில் நடப்பது அமோக ஆடம்பரம்.
நமக்கு நியாயமான முறையில் எது பிடிக்குமோ அதனைச் செய்யும் உரிமை, சுதந்திரம் இருப்பது மிகப்பெரிய ஆடம்பரம்.
வீட்டில் அன்பாய் தயாரிக்கப்பட்ட உணவு உண்பதும் ஆடம்பரமே. எனவே ஆடம்பரத்தினைப் பற்றிய சிந்தனைகளை மாற்றிக் கொள்ளுங்கள்.
சிலர் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். இதில் எந்த தவறும் இல்லை. ஆனால், செயலாற்றும் திறனும் இணைந்து இருக்க வேண்டும். வெறும் ஆழ்சிந்தனை மட்டுமே எந்த பயனையும் தராது.
எண்ணங்களை சரி செய்தாலே ஜெயித்தவர்கள் ஆகி விடுகின்றோம். எண்ணங்கள் செயல்களையும் மாற்றி விடும்.
'நல்லதே நினை, நல்லதே நடக்கும்' என்பது இதனால்தான்.
இதனைக் கருத்தில் கொண்டே சிந்தனைகளைப் பற்றி வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது.
பிரம்ம முகூர்த்த வழிபாடு- பிரம்ம முகூர்த்தம் என்பது மிக முக்கிய காலமாக கருதப்படுகின்றது. பிரம்ம முகூர்த்தத்தில் எதை செய்தாலும், எதை வேண்டினாலும் நடைபெறும் என்பது ஐதீகம்.
பொதுவில் பிரம்ம முகூர்த்தம் என்பதனை காலை 2 மணி முதல் காலை 5.30 மணி வரை என்பர். சிலர் காலை 4 மணி முதல் 6 மணி வரை என்றும் கூறுவர். அனைத்து விதமான சுபகாரியங்களுக்கும் ஏற்ற காலம் இது. படிப்பு, தியானம், வழிபாடு, கல்யாணம், கிரக பிரவேசம் என அனைத்தினையும் செய்யலாம். அதன் முழு பலனும் அப்படியே கிடைத்து விடுமாம்.
இதற்கு விஞ்ஞான ரீதியாகவும் விளக்கம் சொல்கின்றனர். அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை சூரியனின் வெப்பமோ, சந்திரனின் குளிர்ச்சியோ முழுவதுமாக காணப்படாது. மத்தியமான கால நிலையில் இருக்குமாம்.
இந்த சமயத்தில் நமது உடல் இயக்கங்கள் சீராக இருக்கும். பதற்றம் இல்லாத நிலை மனதில் அமைதியை உண்டாக்கும். இது ஒருவரின் மனம், உடல் இயக்கத்தினை சீராக்கி நம்மை ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
பிரம்மாவே படைப்பின் கடவுள் என்கின்றனர். இரவு தூங்கி காலை கண் விழிப்பது புதிய பிறப்புக்கு சமம் என்கின்றனர்.
இந்த விடியற்காலை பொழுதினை படைத்தல் தொழில் செய்யும் பிரம்மாவுக்கு சமர்ப்பிக்கின்றனர். அதனை பிரம்ம முகூர்த்தம் என்கின்றனர். இந்த நேரத்தில் ஒவ்வொரு கிழமையிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கு விளக்கேற்றி வழிபட உகந்த நேரமாகக் கூறுகின்றனர்.
ஞாயிறு- அகல் விளக்கு- பெருமாள் வழிபாடு, பித்ரு தோஷம் நீங்கும். முற்பிறவி கர்ம வினைகள், கிரக தோஷங்கள் நீங்கும்.
திங்கள்- அகல் விளக்கு- அம்பாள் வழிபாடு- பயம் நீங்கும். ஞானம் உண்டாகும்.
செவ்வாய்- பஞ்ச லோக விளக்கு- கந்தசஷ்டி கவசம் சொல்லி முருக வழிபாடு- நோய், கண் திருஷ்டி, பீடை, செய்வினை கோளாறுகள் நீங்கும். புதன்- குத்து விளக்கு- துளசி சாற்றி, விஷ்ணுசகஸ்ரஹோமம் பாராயணம் செய்தல்- கிருஷ்ண வழிபாடு- குழந்தை பாக்கியம், கல்வி உயர்தல், கலைகளில் தேர்ச்சி ஏற்படும்.
வியாழன்-அகலில் நெய் விளக்கு- சித்தர்கள், மகான்கள் வழிபாடு- சகல சவுபாக்கியமும் ஏற்படும்.
வெள்ளி-வெள்ளி விளக்கு, கனகதாரா சுலோகம்- மகாலட்சுமி வழிபாடு- கடன்கள் தீரம், அஷ்ட லட்சுமியின் ஐஸ்வர்யம் ஏற்படும்.
சனி- நல்ல எண்ணெய் அகல்விளக்கு- ஸ்ரீ ருத்திர மந்திரம் சிவ வழிபாடு- சனி தோஷம் நீங்கும். ஒரு பெரியவர் சொல்ல இதனை பகிர்ந்து கொள்கிறோம். மேலும் அவர் கூறியது.... * நம் பாதம் தான் செல்வம் தரும். இது மகாலட்சுமி யாகம் ஆகும்.
* இந்த பாதத்திற்கு தனி மரியாதை உண்டு.
* நம் கால் தவறி பிறர் மேல் பட்டு விட்டால் அவரை தொட்டு வணங்குகின்றோம். இல்லையெனில் ஸ்ரீ தேவி நம்மை விட்டு விலகி மூதேவி குடிபுகுந்து விடுவாள் என்பது நம்பிக்கை. மேலும் லட்சுமி விலகி கால் பட்டவரிடம் சென்று விடுவாராம்.
** எண்சாண் உடம்பிற்க்கு சிரசே பிரதானம் என்பர். ஆனால் பூஜை என்பது பாதத்திற்குத் தானே நடக்கின்றது. * உலகளந்த பெருமாள் தன் பாதத்தினால்தான் உலகை அளந்தார்.
* பசுவின் பாதத்தில்தான் மகாலட்சுமி குடி கொண்டுள்ளாள் என்பர்.
* புதுமணப்பெண் முதன் முதல் புகுந்த வீடு வரும்போது வாயிற்படியில் படி நெல், அரிசியினை தன் வலது காலால் தட்டிதான் வருகின்றாள். * பெரியவர்களை காலை தொட்டுதான் வணங்குகின்றோம்.
* எனவே தான் பனிவான நடை அவசியம்.
* காலை கழுவும் பொழுது குதிகாலையும் நன்கு நீர் ஊற்றி கழுவ வேண்டும். * பொதுவில் பலர் தனது காலை பிறர் தொட்டு வணங்க அனுமதிக்க மாட்டார்கள். அதிர்ஷ்டம் அவர்களை விட்டு சென்று விடக்கூடாது என்ற அக்கறை.
* மேலும் தீயோர்கள் தொடும் போது அவர்கள் திருந்தாமல் இருந்தால் அந்த புனிதம் கெட்டு விடும் என்பர்.
திருஷ்டி சுற்றி போட்டதை காலால் தவறி கூட மிதிக்க மாட்டார்கள். ஆக பாதத்திற்கு இத்தனை மதிப்பு கொடுக்கப்படுகின்றது என்பதனை அறிந்து கொள்வோம்.
இவை அனைத்தையும் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் படிப்பதில் தவறு இல்லை.
10 நிமிடங்கள் சொல்லித் தரும் பாடங்கள் எவ்வளவு தெரியுமா?
* 10 நிமிடங்கள் வீட்டில் அம்மா முன்பு அல்லது வேலை செய்யும் மனைவி முன்னால் அமர்ந்து அவர்கள் ஓடி ஓடி செய்யும் வேலையை கவனியுங்கள். வாழ்க்கை எவ்வளவு கடினம் என்று புரியும்.
* 10 நிமிடம் குடிகாரன் முன்பு அமர்ந்து பாருங்கள். இதற்கு எதுவுமே சொல்லத் தேவையில்லை.
* 10 நிமிடம் சாதுக்கள், சந்நியாசிகள், மகான்கள் முன்பு அமர்ந்து பாருங்களேன்.
* 10 நிமிடம் ஆயுட் காப்பீடு முகவர் முன்னால் உட்காருங்கள். இறந்து போவது எவ்வளவு சிறந்தது என்று புரியும்.
* 10 நிமிடம் வியாபாரிகள் முன்னால் உட்காருங்கள். நாம் சம்பாதிப்பது எவ்வளவு குறைவு என்று புரியும்.
* 10 நிமிடங்கள் ஆசிரியர்கள் முன்பு அமர்ந்தால் மீண்டும் மாணவன் ஆக வேண்டும் என்று தோன்றும்.
* 10 நிமிடங்கள் விவசாயி அல்லது தொழிலாளி முன்னால் அமர்ந்தால் நாம் இன்னமும் கடினமாக உழைக்கவில்லை என்று புரியம்.
* 10 நிமிடம் ஒரு ராணுவ வீரன் முன்பு உட்கார்ந்தால் நம் சேவைகளும், தியாகங்களும் மிகக் குறைவு என்று புரியும்.
* 10 நிமிடம் நல்ல நண்பன் முன் உட்கார்ந்தால் சொர்க்கம் தெரியும். ஆக ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் நாம் எப்படி செலவழிக்கின்றோம் என்பதே முக்கியம். படித்த முக்கிய பதிவு. பகிர்ந்து கொள்கிறோம்.
நம் நேரம் என்பது நம்மை வாழ்விலும், பண்பின் தரத்திலும் உயர்த்துவதாக அமைய வேண்டும். சாக்கு போக்குகளை நீக்கி உடல் நலம், உள்ள நலம் பெறவே இக்கட்டுரைகள் எழுதப்படுகின்றது.






