என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அட்சய திருதியையின் சிறப்புகள்
    X

    அட்சய திருதியையின் சிறப்புகள்

    • படைத்தல் தொழிலை நடத்தி வரும் பிரம்மா அட்சய திருதியை நாளில் உலகத்தை படைத்தார்.
    • கோடை வெயில் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி, பாய், போர்வை வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும்.

    பஞ்சாங்கம் என்பது திதி, கிழமை, வாரம், நட்சத்திரம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களின் தொகுப்பு ஆகும். நமது நாட்டில் பெரும்பான்மையான பண்டிகைகள் பஞ்சாங்கத்தின் முக்கிய அம்சங்களான திதி மற்றும் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அனுசரிக்கப்படுகின்றன. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை குறிப்பிடுவது திதியாகும். பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தின் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள்.

    ரோகிணி நட்சத்திரம் மற்றும் திருதியை திதியும் இணையும் நாளில் செய்யும் தான தர்மங்கள் மற்றும் வழிபாடுகளுக்கு பலமடங்கு பலன் உண்டு. இத்தகைய சிறப்பு மிக்க அட்சய திருதியை விசுவாவசு வருடம் சித்திரை 16ம்நாள் இன்று மாலை 5.32-க்கு (29.4.2025) துவங்கி சித்திரை 17-ம் நாள் (புதன்கிழமை) மதியம் 2.13-க்கு (30.4.2025) நிறைவடைகிறது.

    செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் அட்சய திருதியையின் சிறப்புகள்:

    அட்சய திருதியை நாளில் நடந்த வரலாற்று சம்பவங்கள்

    படைத்தல் தொழிலை நடத்தி வரும் பிரம்மா அட்சய திருதியை நாளில் உலகத்தை படைத்தார். அதனால் தான் உலக மக்களுக்கு தேவையான வளங்கள் உற்பத்தியாகிக் கொண்டு இருக்கிறது. மக்கள்தொகை உபரியாகிக் கொண்டு இருக்கிறது.

    அட்சய திருதியை நாளில் ஆதிசங்கரருக்கு ஏழை பெண் வறுமையிலும் நெல்லிக்கனியை தானம் தந்தார். மனம் குளிர்ந்த ஆதிசங்கரர் ஏழைப் பெண்ணின் வறுமை நீங்கும் எனக்கூறி, செல்வத்துக்கு அதிதேவதையான ஸ்ரீமகாலட்சுமி தேவியாரை மனதால் நினைத்து தியானம் செய்து "கனகதாரா" ஸ்தோத்திரத்தைப் பாடி ஏழை பெண்ணின் வறுமையை போக்க தங்க நெல்லிக் கனிகளை மழையாக பொழியச் செய்தார்.

    இதே நாளில் கிருஷ்ணன் வறுமையில் வாடிய தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை அட்சயம் என்று கூறி மூன்று பிடி உண்டு கோடி கோடியாக செல்வங்களை அள்ளிக் கொடுத்து குசேலனை குபேரனாக்கினார்.

    மகா விஷ்ணுவின் அதிபதி கிழமையான புதன்கிழமையும் கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமான ரோகிணியும் இணைந்த நாளில் அட்சய திருதியை வருவதால் அன்றைய தினம் மகாலட்சுமி, நாராயணர் படம் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம் பாடி, குசேலர் கதை படித்து அவல் பாயாசம் வைத்து வழிபட்டால் பல தலைமுறை வறுமை, கடன், தீராத சொத்து பிரச்சினை, திருமணத் தடை தீரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்கு கடன் வழங்கிய குபேரன் அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை வழிபட்டு சங்கநிதி, பதும நிதியை பெற்றதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் லட்சுமி குபேர பூஜை செய்தால் குறையாத செல்வம் உள்ள செல் வந்தர்களாக, லவுகீக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து ஐஸ்வர்யங் களையும் பெற்று பூரண நலத்துடன் வாழலாம்.

    செய்ய வேண்டிய சுப காரியங்கள்

    புதுக்கணக்கு தொடங்க, புதிய தொழில் துவங்க வீடு கட்ட ஆரம்பிக்க, கிணறு தோண்ட, நெல் விதைக்க, கல்வி கற்க ஆரம்பித்தல், பெண் பார்க்க, திருமணம் நிச்சயித்தல் போன்றவற்றிற்கு சிறந்த நாளாகும். பித்ரு கடன் தீர்க்க உகந்த நாள். திருதியை திதியின் அதிதேவதை கவுரி என்பதால் அன்று பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும். கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும்.

    பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து செந்தாமரை மலர்களால் வழிபட்டால் தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

    செய்ய வேண்டிய தான தர்மங்கள்

    கோடை வெயில் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி, பாய், போர்வை வழங்கினால் இன்ப வாழ்வு உண்டாகும். ஆடை தானம் செய்ய மன நிம்மதி கிட்டும் . தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும். தயிர் தானம் அளித்தால் பாவவிமோசனம் உண்டாகும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல் நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியமாகும்.

    அன்று பசுவிற்கு கோதுமை தவிடு அல்லது அரிசி தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து பசுவிற்கு உணவளித்தால் சகலபாவமும் நீங்கிநல்வாழ்வு உண்டாகும். மிக எளிமையாக சந்தனம், மஞ்சள் கிழங்கு, குங்குமம்,வெற்றிலை பாக்கு, உப்பு, முனை முறியாத பச்சரிசி போன்றவற்றை வாங்கினால் லட்சுமி கடாட்சம் கூடும்.பெண்கள் புடவை, ஜாக்கெட் மற்றும் மங்களப் பொருட்களை தானமாக வழங்க சுமங்கலித்தன்மை கூடும். படிக்கும் மாணவர் களுக்கு தேவையான பள்ளி உப கரணப் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.

    அட்சய திருதியை நாளில் வாங்க வேண்டிய மங்களப் பொருட்கள்

    அட்சயம் என்ற சொல்லுக்கு குறைவில்லாதது என்று பொருள். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் மென்மேலும் வளரும், இந்த நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து பாக்கிய பலனை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

    சமீப காலத்தில் அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்ற நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் மட்டும் தான் தங்கம் சேரும் என்பதில்லை. பரணி, பூரம், பூராடம் போன்ற சுக்கிரனின் நட்சத்திரம் வரும் நாட்களில் புதன், சுக்கிர ஹோரையில் தங்க நகை வாங்கலாம். அதே போல் புதன், வெள்ளி கிழமைகளில் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரம் சேர்ந்தது போல இருக்கும் நாட்களில் புதன், சுக்கிரன் ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். விலை உயர்ந்த பொருளான தங்கத்தை எல்லோராலும் வாங்க முடியாது. அதுவும் தற்போது சாமானியர்களுக்கும் எட்டாத உயரத்தில் தங்கம் விலை இருக்கிறது. எனவே கடன் வாங்கி தங்கம் வாங்கும் எண்ணத்தை கைவிடுவது நல்லது. அன்று அன்னை மகாலட்சுமி கைகளில் இருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தால் ஐஸ்வர்யம் எப்போதும் தங்கும்.

    பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்கம், வெள்ளி போன்ற விலை மதிப்புள்ள பொருட்களின் மேல் உள்ள மோகத்தை குறைத்தாலே குடும்பத்தில் இன்பம் கூடும். அதற்கு பதிலாக வேறு சில மங்களப் பொருட்களை வாங்குவதாலும் தானம் தர்மம் வழங்குவதாலும் ஐஸ்வர்யம் பெருகும். அட்சய திருதியை அன்று வாங்கக் கூடிய சில சுப மங்களப் பொருட்களைப் பார்க்கலாம்.

    தானியங்கள்:

    நாம் அன்றாடம் உணவு சமைக்க பயன்படுத்தும் தானியங்களில் நவகிரகங்களும் வாசம் செய்கிறார்கள். அன்று வீட்டு உபயோகத்திற்கு தேவையான நவதானியங்களை வாங்கி பயன்படுத்துவதும் தானம் வழங்குவதும் புண்ணிய பலன்களை அதிகரிக்கும். வீட்டில் எப்பொழுதும் உபரியாக தானியங்கள் இருக்கும்.

    இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது நல்ல காரியங்களுக்கு உதவுவது அளவற்ற புண்ணியத்தைக் அதிகரிக்கும். தானியங்களை தானம் வழங்கிட விபத்து, அகாலமரணம் நேராது. ஏழைகளுக்கு அன்ன தானம் அளித்தால் செல்வவளம் பெருகும்.

    பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும்

    பாதச் சுவடுகள்: ராமர் பாதம் போன்ற தெய்வங்கள் மற்றும் மகான்களின் பாதச் சுவடுகளை அட்சய திருதியை நாளில் வாங்கி வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட குருவருளும் திருவருளும் கிடைக்கும்.

    தெய்வச் சோழிகள்: கடலில் இருந்து கிடைக்கப் பெற்ற இயற்கை சோழிகளின் தெய்வத்தன்மை மிகுதியாக இருக்கும். அதை முறையாக சுத்தம் செய்து மஞ்சள் துணியில் முடிந்து பூஜை அறையில் எப்பொழுதும் வைத்து வழிபட வீட்டில் பொருளாதார மேன்மை அதிகரிக்கும்.

    ஸ்வஸ்திக் சின்னம்: இந்த சின்னம் மகாலட்சுமியின் சின்னமாகும். இது விநாயகர் சின்னமாகவும் கருதப்படுகிறது. இது பல மதங்கள் மற்றும் கலாச்சாரங்களில் புனிதமான, மங்களகரமான குறியீடாகப் பயன்படுத்தப்படும் ஒரு சின்னம். இதை வரைவதற்கு ஒரு குறிப்பிட்ட முறை உள்ளது. ஸ்வஸ்திக் சின்னம் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் உரிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஸ்வஸ்திக் சின்னம் வாங்கி பூஜை அறையில் வைத்து வழிபட செல்வமும் செல்வாக்கும் கூடும்.

    ஸ்ரீசக்கரம்:

    அட்சய திருதியை அன்று ஸ்ரீசக்கரம் வாங்கலாம். உரிய முறையில் வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ சக்கரத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

    தீராத துன்பங்கள் தீர்ந்து மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.ஸ்ரீ சக்கரம் உள்ள இடத்தில் துஷ்ட சக்திகளும் பில்லி, சூனியம் போன்ற மாந்திரீகங்களும் அண்டாது. இந்த சக்கரம் உள்ள வீட்டில் வாஸ்து குறைபாடு நீங்கும். குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீ சக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம்.

    வலம்புரிச்சங்கு: செல்வாக்கு, புகழ், அந்தஸ்து கவுரவத்தை அதிகரிக்க கூடிய மற்றொரு மங்களப் பொருள் வலம்புரிச் சங்கு. இந்த வலம்புரி சங்கு சக்தி வாய்ந்ததா என்பதை கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது. அதாவது இதை காதில் வைத்து கேட்கும்போது ஓம் என்ற பிரணவ மந்திரம் நமக்கு கேட்க வேண்டும். நல்ல சக்தி வாய்ந்த வலம்புரிச் சங்கை அட்சய திருதியை அன்று வீட்டில் வைத்து வழிபட வாழ்நாள் முழுவதும் வறுமை வராது கடன் அண்டாது. பவுர்ணமி அன்று வலம்புரிச் சங்கு வைத்து குபேர பூஜை செய்ய சொத்து சுகம் சேரும். அடமானத்தில் உள்ள நகைகள் சொத்துக்கள் மீண்டு வரும்.

    'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் மகாபாரதத்தில் தர்மனுக்கு சூரிய பகவான் அட்சய பாத்திரத்தை அளித்ததாக சொல்லப்படுகிறது. அது வற்றாமல் உணவுகளை வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன். அட்சய திருதியை நாளில் வெள்ளி அல்லது பஞ்ச லோகத்தால் செய்யப்பட்ட சிறிய கிண்ணங்கள் சில வாங்க வேண்டும். குல, இஷ்ட தெய்வத்தை வேண்டி அந்த பாத்திரத்தில் அட்சயம் என்று எழுத வேண்டும். இப்பொழுது உங்களுக்கு அட்சய பாத்திரம் தயாராகி விட்டது. வசதி வாய்பிற்கு ஏற்ப எத்தனை கிண்ணம் வேண்டு மானாலும் தயார் செய்யலாம்.

    அதில் அரிசி, பருப்பு போன்ற தானியங்களை நிரப்பி பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் உபரியான உணவுப் பொருட்கள் கிடைக்கும். அதில் வீட்டில் உள்ள தங்கம், வெள்ளி காயின்களைப் போட்டு வழிபட்டால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். அதில் 5 ரூபாய் நாணயங்கள் 9 வைத்து வழிபட்டால் தொழில் பெருகி வருமானமும் வாழ்வாதாரமும் உயரும்.

    சாஸ்திரங்களில் கூறப்பட்ட பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் மனிதர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயம் உயர்த்தும். அதனால் உங்களால் முடிந்த மங்களப் பொருட்களை வாங்கி வைத்து மகாலட்சுமியை வழிபட ஐஸ்வர்யம் பெருகும்.அன்று அதிக ஆசையில் கடன் வாங்கி எந்த பொருளையும் வாங்கக்கூடாது.அன்று கடன் வாங்கினால் கடன் உபரியாகிக் கொண்டே இருக்கும்.மாலைமலர் வாசகர்கள் அனைவரும் தங்களது சூழ்நிலைக்கு தகுந்த பொருட்களை வாங்கி அட்சய திருதியை மகிழ்ச்சியாக கொண்டாடி வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள நல்வாழ்த்துகள்.

    Next Story
    ×