என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மனதை மயக்கும் மைசூர்!
- இந்தியாவில் உள்ளதிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் பெற்றுள்ளது மைசூர்.
- மன்னர்கள் அனைவரும் சாமுண்டி தேவியின் பக்தர்கள் என்பதால் அரண்மனை சாமுண்டி மலையை எதிர்நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் பாரம்பரியம் நீங்கள் சேரும் இடம் Our Heritage Your Destination –- இது தான் மைசூர் சுற்றுலாத் துறையின் அதிகாரபூர்வமான முத்திரை வாக்கியம்!
புராணத்தில் குறிப்பிடப்படும் இரண்டு தலைகள் உள்ள கந்த்பெருண்டா பறவை நடுவில் இருக்க இருபுறமும் அலங்காரத் துணி போர்த்தப்பட்ட யானைகள் இருக்க அங்கு பொறிக்கப்பட்டிருக்கும் இந்த வாக்கியம் மைசூரின் அதிகாரபூர்வமான முத்திரை வாக்கியமாகும். இந்தியாவில் உள்ளதிலேயே சுத்தமான நகரம் என்று பெயர் பெற்றுள்ளது மைசூர்.
மைசூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பார்த்து மகிழ ஏராளமான இடங்கள் உள்ளன.
கம்பீரமான மைசூர் அரண்மனை
நகரின் மகுடம் என்று சொல்லப்படும் மைசூர் அரண்மனை பழம் பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது. அம்பாவிலாஸ் என்று அழைக்கப்படும் இது 1912ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
மூன்று வாயில்கள் கொண்ட இந்த அரண்மனையின் முக்கிய வளாகம் 245 அடி நீளமும் 156 அடி அகலமும் கொண்டது. தெற்கு வாயில் வழியே பொதுமக்கள் செல்லலாம். கிழக்கு மற்றும் மேற்கு வாயில்கள் பொதுவாக தசரா விழாவின் போது திறக்கப்படுகிறது. கஜலட்சுமி சிற்பங்கள் உட்பட ஏராளமான சித்திர வேலைப்பாடுகளையும் குவி மாடங்களையும் இங்கு கண்டுகளிக்கலாம். சுமார் 18 கோவில்கள் இங்கு உள்ளன. தர்பார் மண்டபம் அரசருக்கே உரித்தான மண்டபமாக அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வியக்கலாம். மன்னர்கள் அனைவரும் சாமுண்டி தேவியின் பக்தர்கள் என்பதால் அரண்மனை சாமுண்டி மலையை எதிர்நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி ஆலயம்
சாமுண்டீஸ்வரி அம்மனின் கோவில் மைசூரிலிருந்து சுமார் 8 மைல் தொலைவில் உள்ளது.
சாமுண்டி மலையின் உச்சியில் சுமார் 3000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள சாமுண்டீஸ்வரி ஆலயம் 18 மஹா சக்தி பீடங்களில் ஒன்றாகும்.
இந்த மலையின் மீது அமைந்திருக்கும் கோவிலுக்குச் செல்ல ஆயிரம் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 800வது படிக்கட்டில் ஒரு சிறு சிவன் கோவில் உள்ளது. சிவபிரானுக்கு எதிரில் அமைந்திருக்கும் நந்தி மாபெரும் நந்தியாகும். கருங்கல்லினால் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நந்தியின் சிலை 15 அடி உயரம் உள்ளது. 24 அடி நீளம் உள்ளது. இதுவே நாட்டில் உள்ள நந்திகளில் பெரிய நந்தியாகும். இந்த கோவிலுக்கான கோபுரத்தை விஜயநகர சாம்ராஜ்ய மன்னர் 17ஆம் நூற்றாண்டில் கட்டினார்.
மைசூர் ராஜ்யத்தின் காவல் தெய்வமாக சாமுண்டீஸ்வரி அம்மனை தொன்று தொட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
நினைத்ததை அருளும் சாமுண்டீஸ்வரியைப் தரிசிப்பது மைசூருக்கு வருகை புரிவோரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கிறது.
பிருந்தாவன் கார்டன்ஸ்
மைசூரிலிருந்து 29 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பிருந்தாவன் கார்டன்ஸ். மைசூருக்கு பயணம் மேற்கொண்டோர் தவறாமல் பார்த்து மகிழும் இது ஒரு பிரம்மாண்டமான பூங்கா தோட்டமாகும். இரவு நேரத்தில் ஒளி விளக்குகள் பளீரென மின்ன, ஆங்காங்கே நீரூற்றுகள் நீரை வானில் செலுத்த தேவலோகம் போலக் காட்சி அளிக்கும் இது ஏராளமான திரைப்படங்களில் இடம் பெற்று அனவரையும் மகிழ்வித்த தோட்டமாகும். கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கீழே அறுபது ஏக்கர் பரப்பளவில் இது அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவின் மையத்தில் சிறு குளம் ஒன்றில் காவேரி அம்மனின் விக்ரஹம் உள்ளது.
இசைக்கப்படும் இசைக்கு ஏற்ப நீரூற்றுகள் இங்கு நடனமாடும் காட்சி அதிசயிக்க வைக்கும் ஆனந்தக் காட்சியாகும்.
ரங்கந்திட்டு பறவைகள் காப்பகம்
கர்நாடகத்தில் மாண்டியா மாவட்டதில் அமைந்துள்ள இந்த பறவைகளின் சரணாலயம் மைசூருக்கு வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் காவிரி ஆற்றின் கரையில் ஆறு தீவுகளைக் கொண்டுள்ளது. சுமார் 170க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கே உள்ளன என்பதால் பறவை ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கில் இங்கு திரள்கின்றனர். 2016-17ல் மட்டும் இங்கு மூன்று லட்சம் பயணிகள் வந்தனர். தீவுகளின் வழிகாட்டும் படகு சவாரி நாள் முழுவதும் கிடைக்கும். நுழைவுக் கட்டணம் உண்டு.
ஸ்ரீரங்கப்பட்டண ஆலயம்
மைசூருக்கு மேற்கே 14 கிலோமீட்டர் தூரத்தில் மாண்ட்யா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். ஶ்ரீ ரங்கப்பட்டணம் என்ற பெயர் இந்த ஆலயத்தின் பெயரால் எழுந்ததே. இங்கு மஹாவிஷ்ணு அனந்தசயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். விஷ்ணுவின் பாதங்களில் லக்ஷ்மி தேவி காட்சி அளிக்கிறார். ஸ்ரீ்ரங்கப்பட்டணம், திருவரங்கம், கும்பகோணம், திருபேர்நகர்,, மயிலாடுதுறை ஆகிய ஐந்து இடங்களில் அமைந்துள்ள பஞ்சரங்கத் தலங்கள் ஐந்தில் இதுவும் ஒன்று.
மைசூர் மிருகக்காட்சி சாலை
157 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிருகக்காட்சி சாலையில் 25 நாடுகளைச் சேர்ந்த 168 இனங்களைக் கொண்ட 1500 மிருகங்கள் உள்ளன. யானைகள், ஆப்பிரிக்க காட்டெருமை, ராஜ நாகம், சிறுத்தை உள்ளிட்டவற்றை இங்கு பார்க்கலாம்.
இங்குள்ள கரஞ்சி ஏரியில் 45 வகையான பறவை இனங்கள் உள்ளன. கரஞ்சி ஏரி 77 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பிரம்மாண்டமான ஏரி; குழந்தைகளுடன் செல்ல வேண்டிய இடம் இது.
மெழுகு அருங்காட்சியகம்
மைசூர் அரண்மனையிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் பிரமிக்க வைக்கும் மெழுகுச் சிலைகளைக் காணலாம். மகாத்மா காந்தி அமர்ந்த நிலையில் இங்கு காட்சி தருகிறார். இங்கு பல பகுதிகளைச் சேர்ந்த பலவகையான இசைக்கருவிகள் உள்ளன. பார்வையாளர் விரும்பினால் அவர் விருப்பத்திற்கேற்ப இசைக்கருவிகளை இசைக்கும் வாய்ப்பும் உண்டு. நுழைவுக் கட்டணம் உண்டு. ரயில்வே மியூசியம், கடல் சிப்பி அருங்காட்சியகம் உள்ளிட்ட இன்னும் பல இடங்கள் மைசூரில் பார்ப்பதற்கு உள்ளன.
மைசூருக்கு வருகை தருவோர் கூறுவது:-
இங்குள்ள ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்கிறது!
ஒவ்வொரு இடத்திலும் போட்டோ எடுக்காமல் இருக்கவே முடியாது!!
மாயாஜாலம், மனதைக் கவரும் காட்சிகள் – இதுவே மைசூர்!!!






