என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    விஜய் சாதிக்க வாழ்த்து..! மீனா மலரும் நினைவுகள்
    X

    விஜய் சாதிக்க வாழ்த்து..! மீனா மலரும் நினைவுகள்

    • விஜய்யோடு இணைந்து நடிப்பதற்கு இரண்டு படங்களுக்கு வாய்ப்பு வந்தது.
    • குழந்தை நட்சத்திரமாக ரஜினி சாருடன் நடித்த நான் பின்னாளில் அவரது காதலி, மனைவி என்ற பாத்திரங்களையும் ஏற்று நடித்து இருக்கிறேன்.

    நடிகர் விஜய் ...!

    இப்போ தலைவர் விஜய் !

    அப்படி சொல்வது தான் சரியாக இருக்கும். தமிழ் திரை உலகில் இதுவரை இவரோடு நடிக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டதுண்டு. விஜய்யை பொறுத்தவரை கடுமையான உழைப்பாளி. நடிப்புன்னு வந்துவிட்டால் தனது முழு திறமையையும் காட்டக் கூடியவர்.

    எல்லோரிடமும் மரியாதையாக பேசி பழகக் கூடியவர். அதற்காக எப்போதும் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருப்பவர் என்று சொல்ல முடியாது. யோசித்து தான் எதையும் பேசுவார். அதேபோல் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் தீர ஆலோசித்து தான் முடிவெடுப்பார். இது அவரோடு பழகிய எல்லா கலைஞர்களுக்கும் தெரியும்.

    விஜய் இவ்வளவு சீக்கிரம் திரைத்துறையில் இருந்து விலகி அரசியலுக்கு வருவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அதற்கு காரணம் அவர் நடித்துக் கொண்டிருந்த போது இவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று நினைக்கக் கூடிய அளவில் எதுவும் நடக்கவில்லை. நடிகர் விஜயகாந்த்தோடு பல படங்களில் நடித்திருக்கிறேன். அப்போது அவரை தேடி பல அரசியல் தலைவர்கள் வந்ததை பார்த்திருக்கிறேன். எனவே அவருக்கும் அரசியலுக்குமான தொடர்பு எங்களுக்கு தெரியும்.

    ஆனால் விஜய் மீது அந்த மாதிரி அரசியல் நிழல் எதுவும் பட்டதில்லை. அப்படி இருக்கும் போது திடீரென்று விஜய் அரசியலுக்கு வந்தது எங்களுக்கு நம்ப முடியாததாக தான் இருந்தது. அதே நேரம் தீர யோசிக்காமல் அவர் இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பார் என்று தோன்றவில்லை. நன்றாக யோசித்து தான் அரசியலுக்கு வரும் முடிவையும் எடுத்திருப்பார்.

    அதிலும் உச்சத்தில் இருந்த நேரத்தில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்கு வருவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அப்படி ஒரு முடிவோடு அவர் வந்திருக்கிறார் என்றால் ஏதோ ஒரு லட்சியத்தோடு தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    அவர் அரசியலுக்கு வந்ததும் விஜய் இனி உங்கள் படத்தை மிஸ் பண்ணுகிறோம் என்று நேரிலேயே சொன்னேன். அது மட்டும் அல்ல அரசியல் துறையிலும் அவர் ஜெயிக்க வேண்டும் என்று விஷ் பண்ணவும் செய்தேன். திரைத்துறையில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டவர். அதேபோல் சக கலைஞர் என்ற முறையில் அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும் என்று எனது வாழ்த்துக்களையும் தெரிவித்தேன்.

    விஜய்யோடு இணைந்து நடிப்பதற்கு இரண்டு படங்களுக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் அப்போது கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. இனியாவது அவரோடு நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இப்போது அவர் அரசியலுக்கு வந்து விட்டதால் இனி அந்த வாய்ப்பும் கிடைக்கப்போவதில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. அதே நேரம் சக கலைஞர் ஒருவர் அரசியலிலும் தலைவராக உருவெடுத்துள்ளார் என்பது மகிழ்ச்சியை தருகிறது.

    சினிமாவில் இதுவரை நான் சந்தித்த பல சம்பவங்களை நினைத்து பார்க்கும் போது சுவாரஸ்யமாக இருக்கும். முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக சிவாஜி சாருடன் நடித்தது எல்லோரும் அறிந்தேன்.

    குழந்தை நட்சத்திரமாக ரஜினி சாருடன் நடித்த நான் பின்னாளில் அவரது காதலி, மனைவி என்ற பாத்திரங்களையும் ஏற்று நடித்து இருக்கிறேன்.

    மலையாளத்தில் 1984-ல் வெளிவந்த 'ஒரு கொச்சு கதா ஆரும் பறயாத கதா' என்ற மலையாள படத்தில் மம்முட்டி சாருடன் நடித்தேன். அந்த படத்தில் எனக்கு தந்தையாக நடித்த மம்முட்டி சாருடன் பின்னாளில் அவரது தாயாகவும் நடித்து இருக்கிறேன்.

    இதையெல்லாம் நினைக்கும் போது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.



    2014-ம் ஆண்டு 'பால்யகலசகி' என்ற படத்தில் மம்முட்டியின் அம்மாவாக நடித்தேன். அதே படத்தில் மம்முட்டியின் மற்றொரு கேரக்டருக்கு மனைவியாகவும் நடித்தேன். ஒரே நடிகருக்கு மகள், காதலி, தாய் என்ற மூன்ற பாத்திரங்களை ஏற்று நடித்தது பெருமையுகவும் அதே நேரத்தில் இனிமையாகவும் நினைவுகளாகவும் நிழலாடுகிறது.

    நிழல் காட்சிகளாக வெளிப்படுத்தும் சினிமாவை போலவே நிஜ வாழ்க்கையிலும் சுகமான அனுபவங்களும் இருக்கும், சோகமான தருணங்களும் இருக்கும். வாழ்க்கை பயணத்தில் இறைவன் என்ற டைரக்டர் வைக்கும் காட்சிகள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    அதையும் ஏற்று வாழும் (நடிக்கும்) பக்குவத்தை நாம் தான் பெற வேண்டும்.

    நிழலோடு தொடர்ந்த நிஜ சம்பவங்களோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×