என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

செய்வினை உண்மையா?
- நம்முடைய தேவைக்கேற்ப அவை நமது வெளி மனதில் வெளிப்படுகின்றன.
- நமது அடிமனது என்பது நமது ஆற்றல்கள் அனைத்தும் குவிந்து கிடக்கும் ஒரு சுரங்கம்.
ஒவ்வொரு மத நம்பிக்கைகளிலும் தீயசக்திகளை ஏவி விடுவது போன்ற செய்திகள் காணப்படுகின்றன. ஏவல், பில்லி சூனியம் என்றெல்லாம் கூறுகின்றனர்.
இவையெல்லாம் உண்மையா?
அவைகளுக்கெல்லாம் சக்தி உண்டா?
அவைகளைக் கண்டு நாம் பயப்பட வேண்டுமா?
புத்தரிடம் சீடராக இருந்த ஒருவர் புத்தரிடம் இது பற்றி விளக்கம் ஒன்றைக் கேட்டார்.
நான் உங்களிடம் சீடனாகச் சேர்ந்திடுவதற்கு முன்னால், உங்கள் மீது பொறாமை கொண்டு உங்களுக்கு எதிராக தீய சக்திகளை யெல்லாம் ஏவி விட்டேன்.
ஆனால் அதனால் உங்களுக்கு எந்த ஒரு சேதாரமும் பாதிப்பும் ஏற்படவில்லை.
என்ன நடந்துள்ளது? தீய சக்திகளை எதிர்த்து நீங்கள் என்ன செய்தீர்கள்?
எப்படி அதனை வெற்றி கொண்டீர்கள்?
புத்தர் அவரைப் பார்த்து புன்முறுவலுடன் கூறினார்: "உனக்கு முன்பாக ஒரு பெரிய மாமரம் நிற்பதாக வைத்துக் கொள்வோம். நீ அதை நோக்கிக் ஒரு கல்லை எறிந்தால் என்ன ஆகும்? அது மரத்தில் பட்டு மரத்துக்கு ஏதாவது ஒரு சேதத்தை ஏற்படுத்திவிடும். நீ அப்படி கல்லை எறியும் போது அங்கு மரமே இல்லையென்றால் அந்த கல் என்ன ஆகும்?...
" நீ வேகமாக எறிந்த கல் படிப்படியாக வேகத்தை இழந்து தானாகவே கீழே விழுந்து விடும்.
என்னைப் பொறுத்தவரை எனக்குள் "நான்" என்று எதுவுமே கிடையாது. அதனால் எந்தவொரு சக்தி வந்தும் எனக்குள் மோதி எந்தவொரு பாதிப்பையும் சேதத்தையும் ஏற்படுத்தி விடமுடியாது!"
புத்தர் ஒரு ஞானி. அவர் நான் எனும் அகந்தை இல்லாதவர். அவரால் ஏவல் போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க முடிகிறது.
நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதர்களால் இத்தகைய பிரச்சினைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியுமா?
மேஜையின் மீது ஒரு அட்டைப் பெட்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம்.
"இந்த அட்டைப் பெட்டியில் ஐம்பது கிலோ இனிப்பு உள்ளது. இந்தப் பெட்டியை எடுத்துச் சென்று இதிலுள்ள இனிப்புகளை இங்குள்ள மக்களுக்கு விநியோகம் செய்யுங்கள்" என்று உங்களிடம் கூறுகிறேன்.
ஐம்பது கிலோ எடையுள்ள பெட்டியைத் தூக்குகிறீர்கள்.
உண்மையில் அந்தப் பெட்டியினுள் எதுவுமே இல்லை. அது ஒரு காலிப் பெட்டி.
ஐம்பது கிலோ எடையுள்ள பெட்டியைத் தூக்கும் முயற்சியில் அதை நீங்கள் தூக்கினால் என்ன ஆகும்?
அது விருட்டென்று மேலே எழும்பி விடும்.
ஏன் அப்படி?
நீங்கள் ஐம்பது கிலோவைத் தூக்கவேண்டும் என்று முடிவு செய்த உடனேயே, ஐம்பது கிலோவைத் தூக்கக் கூடிய ஆற்றல் உங்கள் கைகளுக்கு வந்துவிடுகின்றது.
அது வெற்றுப் பெட்டி தான் எனத் தெரிந்திருந்தால், நீங்கள் வெறும் இரண்டு விரல்களைக் கொண்டுதான் தூக்குவதற்கு முயன்றிருப்பீர்கள்.
நம்முடைய சக்திகள் அனைத்தும் நமது அடிமனதினுள்ளேயே குவிந்து கிடக்கின்றன. நம்முடைய தேவைக்கேற்ப அவை நமது வெளி மனதில் வெளிப்படுகின்றன.
நமது அடிமனது என்பது நமது ஆற்றல்கள் அனைத்தும் குவிந்து கிடக்கும் ஒரு சுரங்கம்.
அங்கு என்னவெல்லாம்குவிந்து கிடக்கின்றன என்பது நமக்கே தெரியாது. ஏனெனில் அது நாம் எட்டிப் பிடிக்கும் எல்லைகளுக்கும் அப்பால் உள்ளது. அந்த அடிமனதின் ஒரு பகுதியாகவே நமது ஆழ்மனதும் உள்ளது.
அந்த ஆழ்மனதினுள் பிரபஞ்ச இரகசியங்களும் சக்திகளும் சேமிக்கப்பட்டுள்ளன.
நம்மைப் பொறுத்தவரை நாம் ஒவ்வொருவரும் ஒரு குட்டிக் கடவுளராகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்.
உங்களைப் பற்றி நீங்களே தாழ்வாக எண்ணிக் கொண்டால் என்ன ஆகும்? நீங்கள் சக்தியற்றவராக மாறி விடுவீர்கள்.
அளப்பரிய சக்திகள் உங்களுக்குள்ளே புதைந்து கிடக்கின்றன என்பதை நீங்கள் நம்புவீர்களானால் நீங்கள் பலம் மிகுந்தவர்களாகி விடுவீர்கள்.
அந்நிலையில் எந்தவொரு தீய சக்திகளாலும் உங்களை நெருங்க முடியாது.
அக்காலத்தில் நாடு சுபிட்சம் அடைய பல விதமான யாகங்கள் நடத்தினர். அத்தகைய யாகங்கள் இன்றளவும் நடந்து வருகின்றன.
அது போல் எதிரி நாட்டுக்கு கஷ்டங்கள் கொடுக்கவேண்டும் என்பதற்காகவும் சில யாகங்களை நடத்தியுள்ளனர். அவை அபிசார யாகம் என கூறப்பட்டன.
அத்தகைய செயல்கள் அனைத்து மதங்களாலும் தூற்றப்படுகின்றன.
கிராமப்புற பகுதிகளில் சிலர் இப்படி ஒருக்கொருவர் செய்வினை, ஏவல் போன்றவற்றை வைத்து விடுவதாகக் கேள்விப்படுகிறோம்.
அது எந்த அளவுக்கு சாத்தியம்?
A மற்றும் B என இரண்டு நபர்களை எடுத்துக் கொள்வோம். இருவரும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகளாக இருக்கின்றனர். A என்பவர், B-க்கு எதிராக செய்வினை எதையோ செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம்.
இந்நிலையில் B வீட்டில் ஒரு விஷேட நிகழ்ச்சி தற்செயலாக நடைபெறுகிறது. ஊர் வழக்கப்படி, B ஊரிலுள்ள அனைவரையும் அந்த விஷேடத்துக்கும் அதைச் சார்ந்த விருந்துக்கும் அழைக்கிறார். அந்த விஷேடத்தில் A கலந்து கொண்டாலும் அவர் அந்த விருந்தில் கலந்து கொண்டு சாப்பிட மாட்டார்.
ஏன் அப்படி?
ஏவல், பில்லி சூனியம் அனைத்தும் எதிரிகளிடத்தில் மட்டுமே வேலை செய்யும்.
கொடுத்த உணவை சாப்பிடும் பட்சத்தில், எதிரித் தன்மை முறிந்து விடும். அந்நிலையில் B-க்கு எதிராக A வைத்த செய்வினையும் பலமிழந்து முறிந்து விடும்.
இப்படி நமக்கு எதிராக ஏவல் செய்தவருக்கு, விருந்து கொடுத்துதான் அவரிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமா?
ஒருவர் நம்மை எதிரியாக எண்ணிக் கொள்ளலாம். அதற்காக நாம் அவரை எதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ன? நாம் அவரை எதிரியாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் மட்டும் போதுமா ?
அது மட்டும் போதாது. அவரை நமது அன்புக்கு உரியவராக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் மீது நாம் அன்பு காட்ட வேண்டும்.
அன்பைக் காட்டுதல் என்றால் என்ன?
நம்மிடம் இருக்கும் அன்பை, அவர் மீது செலுத்த வேண்டுமா?
அன்பு என்றால் என்ன?
அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று கூறுவதைக் கேட்டிருப்போம்.
அன்பு என ஒன்று எப்போதும் நம்மிடம் இருப்பது போலவும் அதை நாம் எவரிடம் வேண்டுமானாலும் காட்டலாம் என்பது போலவும் பலரும் கூறுகின்றனர்.
உண்மையில் அப்படி எதுவுமே கிடையாது.
நமது குடும்பத்தில் உள்ளவர்கள் மீதும், நமது நண்பர்கள் மீதும் நாம் அன்பு செலுத்துகிறோம் என்றால் அதன் பொருள் என்ன?
அவர்கள் நமக்கு நல்லது மட்டுமே செய்வார்கள் என்றும், அவர்கள் நம்முடைய நன்மையின் மீது அக்கறை கொண்டவர்கள் என்றும் நாம் அவர்களைப்பற்றி எண்ணுகிறோம். அதனால் நமக்கு அவர்கள் மீது ஓர் ஈடுபாடு ஏற்படுகிறது. அந்த ஈடுபாட்டு உணர்வுக்குப் பெயர்தான் அன்பு.
நாம் அவர்களைப்பற்றி நல்லவிதமாக எண்ணும் தோறும், இந்த அன்பு என்பது ஒரு ரியாக்ஷன் ஆக நமக்குள் ஏற்படுகிறது.
அன்பு என்பது இப்படி தற்காலிகமாக வந்து செல்லும் ஒரு ரியாக்ஷன் மட்டுமே.
அது நிரந்தரமான ஓர் அமைப்பு அல்ல.
நம்மை எதிரியாக எண்ணிக் கொள்பவர் நம்மைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளலாம். ஆனால் அவர் நலமாக இருக்கவேண்டும் என்றும் அவருக்கு நாம் நல்லவைகளையே செய்ய வேண்டும் என்றும் நாம், நாமாகவே எண்ணிக் கொள்வோமேயானால்,
- நம்மையறியாமலேயே நமக்கு அவர் மீது அன்பு ஏற்பட்டுவிடும்.
இந்நிலையில், அவர் நம்மீது எத்தனை ஏவல் செய்தாலும் அவற்றால் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அது மட்டும் அல்ல.
நீங்கள் ஒரு மரத்தை நோக்கி ஒரு கல்லை எறிந்தால் அந்தக் கல் அந்த மரத்தை சேதப்படுத்துகிறது.
ஒரு வேளை உங்கள் குறி தவறிவிட்டால், உங்கள் கல் அந்த மரத்தைத் தாக்காது. அது எதையுமே தாக்காமல் பலமிழந்து போய்விடும்.
ஆனால் இந்த ஏவல் மற்றும் பில்லி சூனியத்தின் கதையே வேறு.
ஒருவர் உங்களுக்கு எதிராக இத்தகைய ஏவல்களில் ஈடுபடுவதாக வைத்துக் கொள்வோம்.
நீங்கள் அவர்மீது அன்பு செலுத்தும் பட்சத்தில், அந்த ஏவல் உங்களைத் தாக்காது.
அதன் பிறகு அந்த ஏவல் என்ன ஆகும்?
வீசிய கல் பலமிழந்து விழுந்ததைப் போல் ஆகிவிடுமா?
அப்படி ஆகாது. பிறகு அது என்ன ஆகும்?
அப்படியே அது சுற்றிவந்து, அது எங்கிருந்து புறப்பட்டதோ அங்கேயே வந்து சேர்ந்து விடும்.
அது மட்டும் அல்ல. அவர் என்ன தீங்கினை ஏற்படுத்துவதற்காக ஏவினாரோ அந்தத் தீங்கினை, ஏவல் செய்த அவருக்கே ஏற்படுத்திவிடும்.
நாம் ஒரு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வதாக வைத்துக் கொள்வோம்.
அங்கு என்னவெல்லாம் நிகழ்கின்றன?
இறைவனுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன. நீங்களும் பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டு உங்களுக்கு வேண்டியவைகளைப் பிரார்த்திக்கிறீர்கள்.
அந்நிலையில் என்ன நிகழ்கிறது?
இறைவன் உங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு அருள் புரிகிறாரா?
இறைவன் மற்றும் பூஜைகள் அனைத்தும் வெறும் கண்ணாடி மட்டுமே.
உங்கள் அடிமனம் மற்றும் ஆழ்மனதினுள் புதைந்து கிடக்கும் உங்களது சக்திகளே அந்தக் கண்ணாடியில் பிரதிபலித்து உங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொடுக்கின்றன.
அனைத்து சக்திகளும் உங்களிடமிருந்தே புறப்படுகின்றன.
நீங்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே தெய்வீக சக்திகளும் பலம்பெறும்; தீய சக்திகளும் பலம்பெறும்.
நல்லவற்றையே எண்ணுங்கள் நல்லவையே நிகழ்ந்திடும்.
தொடர்புக்கு: வாட்ஸப் - 8608680532






