என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் விடுதியில் 12 பவுன் நகை திருடிய வழக்கில் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி நயம்பாடி குளக்கரை தெருவை சேர்ந்தவர் மாதவி (வயது 42). இவர் புதுவை தன்வந்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்.

    இவருடன் புதுவை காட்டேரிக்குப்பம் புதுநகரை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் சிவ பிரீத்திகா (21) உள்பட மொத்தம் 4 பேர் தங்கியிருந்தனர். சிவ பிரீத்திகா கடந்த மாதம் பெற்றோருடன் கோபித்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறி விடுதியில் வந்து தங்கியிருந்தார். இவர் தமிழ்நாடு பெண் போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் வருகிற 1-ந் தேதி பயிற்சியில் சேர உள்ளதாக தெரிகிறது.

    இந்தநிலையில் மாதவி தனது தங்க சங்கிலி, வளையல், கம்மல் உள்ளிட்ட 12 பவுன் நகைகளை கழற்றி நேற்று முன்தினம் ஒரு பெட்டியில் வைத்துள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பெட்டியில் இருந்த 12 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாதவி, உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

    இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினா். அப்போது மாதவியுடன் தங்கியிருந்த சிவ பிரீத்திகா மீது போலீசுக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் நகையை திருடியதாக ஒப்புக் கொண்டார்.

    அவர் அளித்த தகவலின்பேரில் குப்பைத்தொட்டியில் மறைத்து வைத்திருந்த 10 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் அவர், அடகு வைத்ததாக கூறிய 2 பவுன் நகைளையும் கைப்பற்றினர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு காலாப்பட்டு பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். புகார் அளித்த சில மணி நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த போலீசாரை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா பாராட்டினார்.
    காரைக்கால் திரு.பட்டினத்தில் அளவுக்கு அதிகமாக சாராயம் குடித்த நபர் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அருகே திரு.பட்டினம் மகத்தோப்பு சாராயக்கடையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், வழக்கம் போல், சாராயம் வாங்கிசென்று கடை அருகே வைத்து குடித்துள்ளார்.

    வழக்கத்தைவிட அதிகமாக குடித்ததால், அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதனை பார்த்த பலர் அந்த நபர் குடிபோதையில் தூங்குகிறார் என சென்று விட்டனர். கடை காசாளர் தங்கபாண்டியன், அடையாளம் தெரியாத அந்த நபர் அருகே சென்று பார்த்த போது, அவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    இது குறித்து, தங்கபாண்டியன், திரு.பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    புதுவை பழைய துறைமுக வளாகத்தில் நடைபெறும் ஹூனர் ஹாட் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் அன்றாட உபயோகப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
    புதுச்சேரி:

    கண்காட்சியில் பல்வேறு வகையான கலை வேலைப்பாடுகள் நிறைந்த பொருட்கள், மரத்தால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களுடன் மூங்கில் மற்றும் பிரம்பால் செய்யப் பட்ட பொருட்கள் உள்ளது.

    இந்த கண்காட்சியில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆண்கள், மூத்த குடிமக்கள் எனப் பலரும் திரளாக வருகின்றனர். 

    பெரும்பாலோர் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய உணவுகளை வாங்கி சுவை பார்க்கின்றனர். பீஹாரின் லிட்டி-சோக்கா முதல் டெல்லியின் சாட் வரை, ஹரியானாவின் தூத் ஜிலேபி ராப்ரி முதல் ராஜஸ்தானின் டால் படி சூர்மா வரை பல வகை உணவுகளை மக்கள் விரும்பி வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர். 

    இந்தூரின் போஹாவும் கூடுதல் விற்பனையாவதோடு வழக்கமான குல்பி, ஐஸ்கிரீம்களும் அதிகம் விற்பனை ஆகின்றன.

    தினந்தோறும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வந்தாலும் வார இறுதி நாட்களில் மக்கள் அலை கடலெனத் திரண்டு வருகின்றனர். 

    இந்தியா கேட், மாட்டு வண்டி, விஸ்வகர்மா வாடிகா, அசோகா ஸ்தூபி ஆகிய இடங்களில் மக்கள் செல்பி எடுத்துக்கொள்வதோடு கண்ணாடி ஆடை மனிதர் களுடனும் விரும்பி செல்பி எடுத்துக்கொள்கிறனர். 

    நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தால் பிரபலமான பெர்சியன் ரக பூனை ஒன்று புதுவையில் திருடு போய் உள்ளது.
    புதுச்சேரி:

    ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் பூனை ஒன்றை வளர்த்து வருவார்.

    இந்த படத்தில் ஜேடி என்ற பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் வீட்டில் வலம் வரும் புசு புசு பெர்சியன் ரக பூனையும் இடம் பெற்றிருந்தது. இதனை மக்கள் ரசித்தனர்.

    இதனால் ஐரோப்பிய நாடுகளில் வீடுகளில் வளர்க்கப்படும் பெர்சியன் ரக பூனைக்கு தற்போது மவுசு கூடியது.

    இந்த நிலையில் பெர்சியன் ரக பூனை ஒன்று புதுவையில் திருடு போய் உள்ளது. புதுவை முத்தியால்பேட்டை மணிகூண்டு அருகில் வண்ண மீன்கள் விற்கும் கடை நடத்தி வருபவர் ஜெயக்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக பெர்சியன் ரக பூனையை வளர்த்து வருகிறார்.

    கடையில் சுதந்திரமாக இந்த பூனை உலாவி வரும். ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு பிறகு இந்த பூனை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 8.30 மணிக்கு கடைக்கு வந்த 3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, வண்ண மீன்கள் பற்றி விவரங்களை கேட்டதுடன் பூனையுடன் விளையாடினர்.

    பின்னர் 2 பேர் மட்டும் வெளியேறி மோட்டார் சைக்கிளுடன் தயாராக நின்றுகொண்டனர்.

    மற்றொருவர் உரிமையாளரிடம் விசிட்டிங் கார்டு கேட்பது போல் அவரது கவனத்தை திசை திருப்பி பெர்சியன் ரக பூனையை திருடிக் கொண்டு சென்று விட்டார்.

    இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. திருடிய பூனையை மீட்டு தருமாறு முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார்.
    கடலில் மூழ்கி பெங்களூர் வாலிபர் பலியானார்.
    புதுச்சேரி :

    பெங்களூரைச் சேர்ந்தவர் விநாயகா (வயது 26).  இவர் தனது நண்பர்கள் 8 பேருடன் புதுவைக்கு  சுற்றுலா வந்தார்.

     அவர்கள் புதுவையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இன்று காலை தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடலில் இறங்கி குளித்தனர்.  கடலில் குளித்த போது திடீரென எழுந்த ராட்சத அலையில் விநாயகா கடலின் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டார்.

     இதனையறிந்த   அவரது நண்பர்கள் அலறல் சத்தம் போட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் விநாயகாவை  காப்பாற்ற முயன்றும் காப்பாற்ற முடியவில்லை. தகவலறிந்த பெரியகடை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடலில் மூழ்கி மாயமான விநாயகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

     சிறிது நேர தேடலுக்குப் பின்னர் விநாயகத்தை மீட்டனர். பின்னர் அவரை புதுவை  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

     இதுகுறித்து விநாயகாவின் நண்பர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்,  சப்&இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    2016 மறுசீரமைப்பை ரத்து செய்து சுழற்சி முறையில் இடஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தல் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட வழக்கில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான இட ஒதுக்கீடே அளிக்காமல் தேர்தலை நடத்திக் கொள்வது மாநில அரசின் விருப்பத்தை பொறுத்தது என்று உச்ச நீதி மன்றம் கருத்து தெரிவித்தது. உண்மை நிலை இவ்வாறு இருக்க புதுவை  தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த மகாராஷ்டிர மாநில அரசை காரணம் காட்டி மக்களை திசை திருப்புகிறது.

    உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தி.மு.க.விற்கு எந்த ஒரு விருப்பமும் இல்லை. எதையாவது ஒரு காரணத்தை கையில் எடுத்துக் கொண்டு நீதி மன்றத்தின் மூலம் தேர்தலை தடுப்பதுதான் தி.மு.க.வின் உண்மை நிலையாகும்.

    2016-ம் ஆண்டு நடை பெற்ற வார்டு மறுசீரமைப்பு அட்டவணையை ரத்து செய்து தேர்தலை அறிவித்தாலே பல்வேறு குழப்பங்கள் தீரும். 

    எனவே, 2001-ம் ஆண்டு மக்கள் ஜனத்தொகை அடிப் படையில் அப்போதைய  நகராட்சிகள், நகராட்சிகளின் வார்டு, கொம்யூன் பஞ்சாயத்துக்கள், வார்டு எண்ணிக்கைகளில் மாற்றம் செய்யாமல் சுழற்சி முறையில் உரிய இட ஒதுக்கீடு அளித்து உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்.

    இந்திய அளவில் புதுவையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்ற பிரதமருடைய ஆதங் கத்தை தீர்க்கும் வகையில் அரசு உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் நமது மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைத்தெறிய அரசு முன்வர வேண்டும். 

    உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தியுள்ள தி.மு.க.விற்கு, உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு அரசு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.
    புதுவையில் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 19-ந் தேதி 1672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

    இதில்  33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 17 பேரும், காரைக்காலில் 9 பேரும், ஏனாமில் 4 பேரும், மாகியில் 3 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர், அரசு மருத்துவமனையில் ஒருவர், அரசு மார்பக மருத்துவமனையில் 5 பேர், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது மருத்துவ மனைகளில் 20 பேர், வீட்டு தனிமையில் 399 பேர் என ஒட்டுமொத்தமாக 410 பேர் சிகிச்சையில உள்ளனர். இன்று ஒரு நாளில் 108 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

     புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 218 பேர் குணமடைந்துள்ளனர். 

    புதுவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை மகாத்மாகாந்தி நகரை சேர்ந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1960 ஆக உயர்ந்துள்ளது.

    புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. தினமும் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இது பொதுமக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.
    முதலியார்பேட்டையில் பொது இடத்தில் ரகளை செய்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை உடையார்தோப்பு பகுதியில் 3 வாலிபர்கள் நின்றுக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்ததாக முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு ரகளையில் ஈடுபட்ட 3 வாலிபர்களையும் மடக்கி  பிடித்தனர். விசாரணையில் அவர்கள் போலோஸ்நகர் ஒசனாம்வீதியை சேர்ந்த வில்லியம் ஜான்(வயது21), உடையார்தோட்டம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த  கோகுல்(21) மற்றும் முதலியார்பேட்டை அப்துல்கலாம் நகர் அரசு குடியிருப்பை சேர்ந்த முகேஷ்(22) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.
    காட்டேரிக்குப்பத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு காவலாளி இறந்து போனார்.
    புதுச்சேரி: 

    புதுவை காட்டேரிகுப்பம் அன்னை ராணி பள்ளி வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது45). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி விஜயா(37). இவரும் அதே பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு ஒரு  மகன் உள்ளார்.

    இந்த நிலையில்   வெங்க டேசன் வீட்டில் சாப்பிட்டு விட்டு தூங்கினார்.   அதிகாலை 5 மணியளவில் திடீரென வெங்கடேசனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரது மனைவி விஜயா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு காட்டேரிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். 

    அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக  ஆம்பு லன்ஸ் மூலம் ஊசுட்டேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து அவரது மனைவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் காட்டேக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தவறான புரிதலுடன் ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காமல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் சிவா  எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை உயர்நீதி மன்றம், புதுவை உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு சம்பந்தமாக  வழக்கை சமூக நீதிக்காக போராடி வரும் தி.மு.க.  உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து  சென்றுள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு விசாரிக்கும் நிலையில் உள்ளது. 

    இந்த நிலையில்  இட ஒதுக்கீடு மற்றும் தேர்தல் நடத்துவது சம்பந்தமான குழப்பமான கருத்துக்களை  சென்னை ஐகோர்ட்டு  ஆணைக்கு மதிப்பளிக் காமல் தவறான சட்ட புரிதலுடன் தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளி யிட்டு வருவது கண்டனத் திற்குரியது.

    அண்மையில் மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு சம்பந்தமாக சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதையும்  தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். 

    சென்னை ஐகோர்ட்டு  தீர்ப்புக்கு மதிப்பளித்து  தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ள  வழக்கில் நீதிமன்றத்தின்  நிலைபாட்டை அறிந்த பின் பழங்குடியினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் முறையான இட ஒதுக்கீடு அளித்து விரைவாக உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் ராமானுஜர் இன்டலெக்ட் நிறுவனம் இணைந்து கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை, மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியுடன் ராமானுஜர் இன்டலெக்ட் நிறுவனம் இணைந்து கூட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

    இந்நிகழ்ச்சியில் ராமானுஜர் இன்டலெக்ட் நிறுவனத்தின் நிறுவனர் தேவிபிரியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி அறக் கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணன் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி வரவேற்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடெமிக் டீன் அன்புமலர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறை வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம், ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சரின் முதல்வர் மனோகரன், கலை மற்றும் அறிவியல் கல்லூரி முத்து லட்சுமி மற்றும் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
    செம்பியம்பாளையத்தில் தனியார் தொழிற்சாலையை கண்டித்து போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    ஏம்பலத்தை அடுத்த செம்பியம்பாளையம் கிராமத்தில் தனியார் சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 

    இந்த தொழிற்சாலையில் கடலூர் மாவட்டம் செல்லஞ்சேரி  பகுதியை சேர்ந்த ஆதி என்பவர் பணிபுரிந்து வந்தார்  கடந்த மாதம் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டை சரிந்து விழுந்ததில், இவரது பின்பக்க கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    பின்னர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், எலும்பு முறிவு காரணமாக பணிக்கு செல்ல முடியாமல் இருந்தது. இவருக்கு தொழிற்சாலையின் மூலம் உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. 

    இதையடுத்து தொழிற்சாலையை கண்டித்து சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

    ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சாலை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஜெகன், ரஜினி குமார், ஏழுமலை, சீனிவாசன், ஆனந்தன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    ×