என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கடனை திருப்பித்தராததால் பெண்ணை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ஹெலன்மேரி (வயது 60).  இருவரும் சவபெட்டி செய்யும் வேலை செய்து வருகின்றனர்.

    செல்வம் ரெயின்போ நகரில் வசிக்கும் தனது தம்பியான அலெக்சாண்டரிடம் ரூ.30 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார். போதிய வருமானம் இல்லாததால் அந்த கடனை அவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை. 

    அலெக்சாண்டர் பலமுறை கடனை கேட்டும் தரவில்லை. நேற்று மாலை அலெக்சாண்டரின் மகன்களான ஒகிஸ்தயான், அகஸ்தீன் ஆகியோர் செல்வத்தின் வீடடுக்கு வந்து பணத்தை திருப்பித்தரும்படி கேட்டனர். 

    மேலும் செல்வத்தின் மனைவி ஹெலன்மேரியை கீழே தள்ளி தாக்கினர். வீட்டில் இருந்த பிணம் குளிரூட்டும் எந்திரத்தையும் உடைத்து இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். 

    இதுகுறித்து ஹெலன்மேரி அளித்த புகரின் அடிப் படையில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடிவருகின்றனர்.
    தமிழ் பற்றாளர்கள் கூட்டமைப்பு சார்பில்தமிழ் வளர்ச்சித்துறை அமைக்கக்கோரி அரசுக்கு மனு அனுப்பும் போராட்டம் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை தமிழ் பற்றாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம்   நடந்தது.

    புதுவை தமிழ் வளர்ச்சித் துறையை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழ் மொழி தொடர்பான அனைத்து விருதுகளையும் உடனடியாக வழங்க வேண்டும். படைப்பாளர் களுக்கு ஊக்கம் தரும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கள் மனுவாக அனுப்பி வைக்கப்பட்டது. 

    தொடர்ந்து உலகத்தாய் மொழி நாள் தலைமை தபால்நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஜெகநாதன், தமிழர்களம் அழகர், அண்ணாபேரவை சிவஇளங்கோ, வரலாற்ற சங்கம் ராசசெல்வம், நாணயவியல் கழகம் கோபிரான், மக்கள் இயக்கம் தாமோதரன், தமிழ்தேசிய பேரியக்கம் வேல்சாமி, நுகர்வோர் எதிரொலி வீரசேகரன், மனித உரிமை அமைப்பு ரகுபதி, கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்களின் பிரான்சுவா, திருவளவன், பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    ஏற்பாடுகளை சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் கோ.செல்வம், செயலாளர் சண்முக கார்த்திக், சிறப்பு தலைவர் செல்வமணி, சுசிலா, சரஸ்வதி, கவுசல்யா, மணிமேகலை, ராஜாராம், காமராஜ், ஜெகதீசன், பழனி பாஸ்கரன், இளமுருகன், சசிகுமார், இசையரசி உட்பட பலர் செய்திருந்தனர்.
    ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் காலக்கெடுவுக்குள் முடியுமா? என்று நேரு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பியுள்ளார்.
    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சரியான திட்டமிடுதல் இல்லாமல் முடங்கியுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சம் தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக செல்லுதல், குப்பையில்லா நகரம், மின்விளக்குகளால் ஒளிர செய்தல்,  கண்காணிப்பு  கேமரா,  நடைபாதை மேம்பாடு பணிகள்தான். இத்திட்டத்துக்கான காலக்கெடு வருகிற மார்ச் மாதம் முடிவடைய உள்ளதாக தெரிகிறது. 

    திட்டத்தின் அதிகாரிகள் நகர பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்களை அழைத்து பணிகள் குறித்து ஆலோசிக்கவில்லை. இந்த காலக்கெடு முடிவதற்குள் அதிகாரிகள் திட்டங்களை செயல்படுத்தி நகர பகுதியை மேம்படுத்துவார்களா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. 

    புதுவை நகர பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குடிநீர் குழாய்கள் பதித்து 30 ஆண்டுகளை கடந்து விட்டதால் துருவுடன் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

    இதை மேம்படுத்த நடவடிக்கை இல்லை. பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தவில்லை. தெருவிளக்குகள் எரியாத தால் குற்ற சம்பங்கள் அரங்கேறு கிறது. இதை தடுக்க கேமரா பொருத்த வில்லை. 

    நடைபாதை ஆக்கிரமிப்பால் சுற்றுலா பயணிகளும், புதுவை மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. முக்கிய வாய்க்கால்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை. 

    பெரியமார்க்கெட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் காலக் கெடுவுக்குள் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்குத்தான் அவப்பெயர் ஏற்படும். இதுகுறித்து முதல்&அமைச்சர், அமைச்சர், திட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

     இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரியில் கோரிக்கை அட்டையுடன் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
    புதுச்சேரி:

    உயர்கல்வி குழுமத்தின் கீழ் அரசின் முழு நிதியுதவியோடு புதுவையில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளும், காரைக்காலில் ஒரு கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது.

    இங்கு 4  ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக எந்த பதவி உயர்வும்  வழங்கவில்லை. மாத சம்பளமும் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. 

    வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உட்பட இதர படிகள் அரசு  ஊழியர்களுக்கு இணையாக கடந்த 6 ஆண்டாக வழங்கவில்லை. 

    பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நிதித்துறை செயலர், அதிகாரிகளை கண்டித்தும், சம்பளம், பதவி உயர்வு, 7-வது சம்பளக்குழு நிலுவைத் தொகை உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாணவர்களின் வகுப்புகள், தேர்வுகள் பாதிக்காத வகையில் போராட்டத்தை தொடங்கினர்.  

    அனைத்து கல்லூரிகளிலும் வாயிற்கூட்டம் நடத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளை நடத்தி வந்தனர். 

    இந்நிலையில் கருப்புபேட்ஜ், கோரிக்கை அட்டை அணிந்து வகுப்புகளை நடத்தும் போராட்டத்தை தொடங்கினர். 24-ந் தேதி  உயர்கல்வி குழும தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும். 25-ந் தேதி மாலை 6 மணி முதல் கோரிக்கை நிறைவேறும்வரை  காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது என ஆசிரியர் சங்க தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.
    புதுவையில் 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவையில் ஆயிரத்து 62 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    இதில் புதிதாக 22 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 15, காரைக்காலில் 6, ஏனாமில் ஒருவர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 14, காரைக்காலில் 3, மாகியில் 2 பேர் என 19 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    புதுவையில் 40, காரைக் காலில் 32, ஏனாமில் 4, மாகியில் 2 பேர் என 78 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். 

    புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 619 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 296 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். புதுவையில் 189, காரைக்காலில் 116, ஏனாமில் 23, மாகியில் 16 பேர் என 344 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 

    புதுவை மாநிலத்தில் இப்போது 363 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 969 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை  உட்பட 15 லட்சத்து 69 ஆயிரத்து 840 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

    இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சேலியமேட்டில் ரூ.2.44கோடியில் தார் சாலை பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
    புதுச்சேரி: 

    ஏம்பலம் தொகுதி அரங்கனூரிலிருந்து பாகூர் ஏரிக்கரை வரை சுமார் 3.250 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய தார்சாலை அமைக்க பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்தது. 

    இதன் செலவீடு மதிப்பு ரூ.2கோடியே 44 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இதற்கான பூமி பூஜை  சேலியமேடு பகுதியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் ராஜவேலு முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு மற்றும் செயற்பொறியாளர் பாஸ்கரன் மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    மின் அளவிடும் பணியில் தனியார் நிறுவன ஈடுபாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களின் வைப்பு நிதியின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள மின்துறை எந்தவித இழப்புமின்றி இயங்கி வரும் நிலையில் சுமார் 85 கோடி மதிப்புள்ள புதுவை மின்துறையை மக்கள் விரோத மத்திய பா.ஜனதா அரசு தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிக்கு உறுதுணையாக செயல் பட்டு வரும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் உள்பட மத சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து போராடி எதிர்த்து வந்தது.

    மேலும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா அரசின் தனியார் மயம் கொள்கைக்கு எதிராக மின்துறை ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மின்துறை ஊழியர்களிடம் முதல்-அமைச்சர் மற்றும் மின்துறை அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் காரணமாக அரசின் உத்தர வாதத்தை ஏற்று மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த நிலையில் மத்திய பா.ஜனதா அரசின் மறைமுகமான தனியார் மயம் நடவடிக்கையின் காரணமாக மின்சாரம் பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோரின் வீடு, கடைகள், தொழில் நிறுவனங்களில் மின் அளவீடு கணக்கெடுக்கும் பணியை மின்துறை ஊழியர்களுக்கு பதிலாக தற்போது மின்துறையை சாராத நபர்களின் மூலம் மின் அளவீடுகளை கணக் கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தும் செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு மத்திய பா.ஜனதா அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து துணைபோவதை கைவிட்டு புதுவை மக்களின் உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகாமல் மறைமுகமாக மின் அளவீடு உள்பட எந்த பணியையும் தனியார் மூலம் செயல்படுத்தாமல் அப்பணிகளை உணடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    மருத்துவ இடங்களுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது.
    புதுச்சேரி :

    பல் மருத்துவ படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 142, சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 53, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் சிறுபான்மை இடங்கள்-135 என மொத்தம் 202 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக்கல்லூரியில் 5 என்.ஆர்.ஐ. சீட்டுகள் காலியாக உள்ளன. மாகி பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய பொதுப் பிரிவு 65, வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரியில் தெலுங்கு பேசும் மாணவர்களுக்கு 15, அகில இந்திய பொது பிரிவுக்கு 50 என 65 பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.

    புதுவையில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து, 2-ம் கட்ட கலந்தாய்வுக்கான ஏற்பாடு நடந்து வருகிறது. 2-ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், வருகிற  25-ந் தேதிக்குள் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    முதல் கட்ட கலந்தாய்வு முடிவில், அரசு மருத்துவக் கல்லூரியில் 7, 3 தனியார் கல்லூரிகளில் 14 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ளன. என்.ஆர்.ஐ. சிறுபான்மை, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 290 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. ஒட்டு  மொத்தமாக 309 எம்.பி.பி.எஸ். இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன.
    ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க ரூ.12.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை ரோடியர் மில்லில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

    தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் இருந்த ஆலையை புதுவை அரசு எடுத்துக் கொண்டது. ஆலை விரிவாக்கம், நிர்வாகத்தின் தவறான செயல்பாடுகளால் லாபத்தில் இயங்கி வந்த பஞ்சாலை நலிவடைந்தது.

    ஊழியர்களுக்கு சம்பளம் கூட போட முடியாமல் அனைத்து பிரிவுகளும் 30.4.2020-ல் மூடப்பட்டன. 665 ஊழியர்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த ஊழியர்களுக்கு 2020 நவம்பரில் ரூ.6.5 கோடி, கடந்தாண்டு மார்ச்சில் ரூ.9.65 கோடி, ஆகஸ்ட்டில் ரூ.8.66 கோடி என மொத்தம் 24.81 கோடி நஷ்டஈடு வழங்கப்பட்டது. 

    கடந்தாண்டு ஜூலை பணிக் கொடையில் 65 சதவீதமாக ரூ.17.77 லட்சம் ஒதுக்கீடு செய்து, பட்டு வாடா செய்யப்பட்டது. மீதமுள்ள 35 சதவீத பணிக் கொடை தொகையை செட்டில் செய்யும் வகையில், ரூ.12 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரத்து 226 இப்போது தொழில் வணிகத்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. 

    ரோடியர் மில் தொழிலாளர்களுக்கு 2012 முதல் ரூ.38 கோடி சம்பளம் நிலுவையில் உள்ளது. வருங்கால வைப்பு நிதி ரூ.16 கோடி, நலநிதி ரூ.6 கோடி, இ.எஸ்.ஐ. ரூ.4 கோடி என மொத்தம் 64 கோடி இன்னும் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது.
    சண்டே மார்க்கெட்டில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    சண்டே மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏ.ஐ.டி.யூ.சி. சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் முதற்கட்டமாக  காந்தி வீதியில் 6 மையங்களில் கேன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    சண்டே மார்க்கெட் சங்க கவுரவ தலைவர் துரை.செல்வம், தலைவர் பாபு, செயலாளர் கார்த்திக், துணைத் தலைவர்கள்  முகமது இக்பால், பிரகாஷ், டோனி, முகமது அலி, சங்கர், துணைச் செயலாளர்கள் சரவணன்,  சிலம்பரசன்,  நாகராஜ், பழனிவேல், அருள்ராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
    பாகூரில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை சிலம்பம் மற்றும் அடிமுறை கழகம் சார்பில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நடைபெற்றது. 

    இப்போட்டியை, புதுவை போலீஸ் சூப்பிரண்டு ரகுநாயகம், கிராம பஞ்சாயத்து முன்னாள்  துணை தலைவர் குமாரசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மினி சப்-ஜூனியர், சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் என்ற பிரிவுகளில் நடந்த போட்டியில், புதுவையின் பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 

    இப்போட்டியில் வெற்றி பெற்றவர்ளுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. இதில் பா.ஜனதா பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான ருத்ரமூர்த்தி வரவேற்றார். மூத்த பயிற்சியாளர் திராசு கணபதி முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். அப்போது அவர்  பேசியதாவது:-

    புதுவையில் விளையாட்டு துறை, கல்வி துறையுடன் இணைந்துதான் செயல் படுகிறது. அதனை கல்விதுறையில் இருந்து பிரித்து, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு என்ற தனி துறையாக அமைக்கப்பட வேண்டும் என முதல்- அமைச்சரிடம் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அவரும் அதனை ஏற்றுக் கொண்டார். 

    அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மினி விளையாட்டு அரங்கம், மற்றும் கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு திடல்களை மேம்படுத்திட வேண்டும் என மத்திய  மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன். அதற்காக, அவர் ரூ.10 கோடி நிதி ஒதுக்கி தருவதாக தெரிவித்துள்ளார். 

    புதுவையில் உலகதரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் உருவாக்க வேண்டும் என்பது எண்ணம். அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த வீரர்களுக்கான நிலுவையில் உள்ள ஊக்க தொகையை வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது விரைவில் வழங்கப்படும். 
    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக முன்னாள் கவுன்சிலர் ருத்தரமூர்த்தி, பாகூரில் ஏற்கனவே இடம் கையப்படுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் செய்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் நமச்சிவாயம் அது தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

    விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்கரமன், பா.ஜனதா மகளிரணி தலைவி தவமணி, தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப கழக துணை தலைவர் தட்சிணா மூர்த்தி, சங்க நிர்வாகிகள் கேசவன், அய்யப்பன், குமாரபாண்டியன், விஜயபாலன், ஜெயசந்திரன், அதியமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதுவை சிலம்பம் மற்றும் அடிமுறை கழக செயலாளர் அன்புநிலவன் போட்டியை ஒருங்கிணைப்பு செய்தார். தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
    காரைக்காலில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி நிலம் விற்பனை செய்தது தொடர்பாக தந்தை, மகன்கள் கைது செய்யப்பட்டனர்.
    காரைக்கால்:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் குமார் கேசவன். இவர் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார். இவருக்கு காரைக்கால், நெடுங்காடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் உள்ளது.

    இந்த நிலங்களை மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரைச் சேர்ந்த தில்லையம்மாள் என்பவருக்கு பவர் வழங்கி, அவரது பராமரிப்பில் விடப்பட்டது. இதை பயன்படுத்தி, தில்லையம்மாள் மற்றும் அவரது மகன் தேவராஜ் ஆகியோர் சேர்ந்து, குமார் கேசவனின் பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை கைப்பற்ற முயற்சி செய்தனர்.

    இதனை தனது உறவினர்கள் மூலம் அறிந்த குமார் கேசவன், தில்லையம்மாளுக்கு வழங்கிய பவரை 1996-ல் ரத்து செய்து விட்டார். ஆனால் ரத்து செய்யப்பட்ட பவர் பத்திரத்தோடு மேலும் சில போலி ஆவணங்களை தயாரித்து, கடந்த 2003-ம் ஆண்டு தில்லையம்மாள் தனது பேரன் ஆனந்த் என்பவருக்கு நிலங்களை விற்பனை செய்துள்ளார்.

    இதற்கிடையில் குமார் கேசவனும், தில்லையம்மாளும் உயிரிழந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தேவராஜ் மற்றும் அவரது மகன்கள் ஆனந்த், ஆதித்ய சுந்தரபாண்டியன் ஆகியோர், நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட பவர் பத்திரம் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் உள்ள குமார் கேசவனுக்கு சொந்தமான ரூ.18 கோடி மதிப்பிலான இடங்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

    இது பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் குமார் கேசவன் மகன் குமார் ஆனந்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனது உறவினரான நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் மூலம் திருநள்ளாறு போலீசில் புகார் அளித்தார்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜ் மற்றும் அவரது மகன்கள் ஆனந்த், ஆதித்ய சுந்தரபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர்.

    தேவராஜ், ஆனந்த் ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே நிலமோசடி வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.



    ×