என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாகூர் அருகே சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    பாகூர் அடுத்த கீழ்பரிக்கல் பட்டு அட்டகுளம் பகுதியில் உள்ள சிமெண்ட் களத்தில் சேவல் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார்  சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் அங்கு கூடியிருந்தவர்கள் நாலாபுறமும் தெரித்து ஓடினர். 
     
    இதில் உஷாரான போலீ சார் தப்பியோடியர்களை விரட்டினர். இதில் 4 பேரை மட்டும்  மடக்கி  பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தனர். 

    விசாரணையில் அவர்கள் மேல்பரிக்கல்பட்டு விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சர்வேஸ்வரன் என்ற அப்பு (வயது 28) அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (32)பாகூர் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் (42), பழைய காமராஜ் நகரை சேர்ந்த கதிரவன் (32) என்பது தெரியவந்தது.  பொது இடத்தில் கால்நடையான சேவலை வைத்து சூதாடிய தாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் தயார் செய்து ரூ.70 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர் மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுச்சேரி

    லாஸ்பேட்டை பெத்து செட்டிபேட்டில் அன்சாரி துரைசாமி அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான 1700 சதுர அடி இடம் அந்த பகுதியில் உள்ளது. 

    கடந்த 2008-ம் ஆண்டு இந்த இடத்துக்கு போலியாக பத்திரம் தயார் செய்து புதுவையை சேர்ந்த 2 பேரிடம் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது-.

    இதனையறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளி கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தது. அதன் பேரில் பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் நடனசபாபதி லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். 

    விசாரணையில் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்தது புதுவை முன்னாள் அமைச்சர் கதிர்வேலின் மகன் ரியல் எஸ்டேட் அதிபர் பாண்டியன் என்பது தெரியவந்தது.   

    இதனையறிந்த பாண்டியன் தலைமறை வானார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டியனை வலைவீசி தேடி வருகின்றனர்.

     இதற்கிடையே இந்த சம்பவத்தில் பத்திர எழுத்தர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பதாக  கூறப்படுகிறது.  அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது.
    முன்விரோதத்தில் இரும்பு கம்பியால் பெண்ணை தாக்கி வீடு சூறையாடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    நெல்லித்தோப்பு பெரியார்நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காண்டீபன் (வயது50). இவரது மனைவி முனியம்மாள்(48). இவர்களது மகன் கவி என்ற மணிபாலன். முனியம்மாள் புதுவை பஸ் நிலையத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்தநிலையில் மணி பாலனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டு தகராறு இருந்து வந்தது. இதில் ஆத்திரம் தீராத மணிகண்டன் மணிபாலனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இரும்பு கம்பியால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார். இதனை தடுக்க முயன்ற முனியம்மாளையும் கம்பியால் தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார்.

    இதுகுறித்து முனியம்மாள் உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவையின் பிரதான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாளை வணிக, வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படாது என தெரிகிறது.
    புதுச்சேரி:

    அகில இந்திய அளவில் இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

    புதுவையில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிற்சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். தொழிற்சங்கங்களின் முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

    கடைகளை அடைக்கும்படி வற்புறுத்தினாலோ, பஸ், ஆட்டோ, டெம்போக்களை இயக்க தடை ஏற்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிற்சங்கங்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இருப்பினும் பஸ், ஆட்டோ, டெம்போ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கங்களில் பெரும்பாலானவை போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

    இதனால் புதுவையில் நாளை (செவ்வாய்கிழமை) பஸ், ஆட்டோ, டெம்போ ஆகியவை ஓடாது. அதே நேரத்தில் அரசு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மூலம் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    புதுவையின் பிரதான எதிர்கட்சிகள், தொழிற்சங்கங்கள் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் நாளை வணிக, வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படாது என தெரிகிறது. பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 திருப்புதல் தேர்வு நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தனியார் பள்ளிகளில் அந்த வகுப்புகளை மட்டும் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. மற்ற வகுப்புகள் இயங்காது. அரசு பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் இயங்கும்.

    பந்த்தையொட்டி நாளை தொழிற்சங்கங்கள் சார்பில் புதுவை, காரைக்காலில் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடக்கிறது. புதுவையின் முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என எதிர்கட்சி தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை  கதிர்காமம் தெகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் புதுவை லப்போர்த் வீதியில் உள்ள தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மாநில  தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ.  தலைமை தாங்கி பேசியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்படும். அந்த குழு யாரை பரிந்துரை செய்கிறதோ அவர்களே வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

    தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல் மகத்தான வெற்றியை உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற வேண்டும். புதுவை நகரமன்ற தலைவர் பதவியை தி.மு.க. பிடிக்க வேண்டும். அந்தவகையில் நாம் பணியாற்ற வேண்டும்.

    புதுவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் ஆட்சி நடைபெறவில்லை. பா.ஜனதாவின் பினாமி ஆட்சிதான் நடைபெறுகிறது.புதுவை வழியாக தமிழகம் செல்ல வேண்டும் என்றும்  பா.ஜனதா நினைக்கிறது. அதற்கு நாம் இடம் அளிக்கக்கூடாது. 

    நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று  அவர்களின் எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

    சபாநாயகர் என்பவர் பொதுவானவராக இருக்க வேண்டும். எதிர்கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் நடுநிலையாக இருந்து மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆனால் புதுவை சபாநாயகர் பா.ஜனதா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை பாஜனதாவினராக முன்னிறுத்தி வருகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது,  கண்டிக்கத்தக்கது.  எம்.எல்.ஏ.  நம்பிக்கை ஏற்படும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும். இல்லையென்றால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவோம்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ.  பேசினார்.
    ரெட்டியார்பாளையம் சமுதாயநல கூடத்தில் மாநில அளவிலான பென்காக் சிலாட் போட்டி நடந்தது-
    புதுச்சேரி:

    புதுவை மாநில அமெச்சூர் பென்காக் சிலாட் தற்காப்பு கலை சங்கம் மற்றும் என்.ஆர். விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான  பென்காக் சிலாட் போட்டி ரெட்டியார் பாளையம் சமுதாய நல கூடத்தில்  நடந்தது.

    போட்டியை உழவர்கரை நகராட்சி  ஆணையர் சுரேஷ்ராஜ், வருவாய் அதிகாரி அய்யனார் ஆகி யோர் முன்னிலையில் புதுவை ஒலிம்பிக் சங்க துணை செயலாளர் கராத்தே  வளவன் தொடங்கி வைத்தார். 

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக சேவகர்   செந்தமிழ்செல்வன், இளையராஜா, அஞ்சு மற்றும் சங்க நிர்வாகிகள் பச்சையப்பன், அருள்ஜோதி, ஆறுமுகம், மகேஷ், தணிகா சலம், தயாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    போட்டியில் வெற்றி  பெறுபவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார்.
    மடுகரை காமராஜர் நகர் முத்துமாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் அடுத்த மடுகரை காமராஜ் நகரில் உள்ள செல்வ விநாயகர், முத்துமாரியம்மன், கோவில் கும்பாபிஷேகம் குமரகுரு நாத அய்யர் தலைமையில் நடைபெற்றது. 

    முன்னதாக விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. 

    பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று செல்வவிநாயகர், முத்துமாரி அம்மன் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 

    துணை சபாநாயகர் ராஜவேலு ஊர் முக்கிய பிரமுகர் தனபூபதி ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர். 

    பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவல் குழுவினர் மற்றும் கிராமக்கள் செய்திருந்தனர்.
    புதுவை வர்த்தக சபை நிர்வாக குழு தேர்தல் நடந்தது.
    புதுச்சேரி:

    புதுவை வர்த்தக சபையின் நிர்வாக குழுவின் பதவிக் காலம் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது.

    இதனையொட்டி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல்  வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்தது தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. 

    தேர்தலில் சிவசங்கரன் எம்.எல்.ஏ. உள்பட 20 பேர் போட்டியிட்டனர்.  காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஆயுட்கால உறுப்பினர்கள் 240 பேரும், ஆண்டு சந்தா உறுப்பினர்கள் 67 பேரும் வாக்களிக்கின்றனர்.

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும். 
    பழங்குடியின மக்கள் மருத்துவ வசதிக்காக இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டத்தை கவர்னர் தொடங்கி வைத்தார். 2 இருசக்கர ஆம்புலன்சுகளை அவர்களுக்கு கவர்னர் தமிழிசை வழங்கினார்.

    புதுச்சேரி:

    தெலுங்கானா மாநில கவர்னராக தமிழகத்தை சேர்ந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இருந்து வருகிறார். அவர் புதுவை கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

    புதுவையில் இருக்கும் போது மக்களுக்கான பல்வேறு திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் இணைந்து தொடங்கி வைத்து வருகிறார்.

    மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். புதுவையில் இதுவரை முழுமையான தமிழ்தெரிந்த கவர்னர்கள் பணியாற்றியதில்லை. ஆனால், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களை சந்திக்கும் போதும் அரசியல் பிரமுகர்களை சந்திக்கும் போதும் தமிழில் பேசி வருவதால் அவரை பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகிறார்கள்.

    பழங்குடியினர் பயன்படுத்தும் வில், அம்பை கவர்னர் பார்வையிட்டார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நாகர் கர்னூல் மாவட்டத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அப்பபூர்செஞ்சூ என்ற இடத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் புதிய திட்டத்தை பரீட்சார்த்த முறையில் செயல்படுத்த அரசு முடிவு செய்திருந்தது.

    இந்த திட்டத்தை தொடங்கி வைக்க அவர்கள் வசிக்கும் அடர்ந்து காட்டுப்பகுதிக்குள் 15கி.மீ தூரம் கவர்னர் தமிழிசை சென்றார். அங்கு அவர்களின் குடிசை வீடுகளுக்குள் சென்று பார்வையிட்டார்.

    பழங்குடியின குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கும் தமிழிசை சென்றார். அந்த குழந்தைகளிடம் பேசினார். நன்றாக படிக்க வேண்டும் என குழந்தைகளிடம் அறிவுறுத்தினார்.பெண்களிடம் உணவு பழக்க முறையை ஆவலுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.

    பழங்குடியின மக்கள் மருத்துவ வசதிக்காக இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டத்தை கவர்னர் தொடங்கி வைத்தார். 2 இருசக்கர ஆம்புலன்சுகளை அவர்களுக்கு கவர்னர் தமிழிசை வழங்கினார்.

    அந்த ஆம்புலன்சுகளை அக்கிராமத்திலேயே நிறுத்திவைக்க உத்தர விட்டார்.

    பழங்குடியின நோயாளிகளை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு உதவும் வகையில் இருசக்கர ஆம்புலன்ஸ் திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது.

    பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து அதிக லாபம் பெற்று தருவதாக புதுவை வியாபாரியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த மும்பையை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்தவர் சிவசங்கரன் (வயது 50). இவர் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்ய விரும்பி சமூக வலைதளத்தை தொடர்பு கொண்டார். 

    அப்போது மும்பையை சேர்ந்த அங்கீட் ஜெய்ஸ்வால் (29), ரோகித் குமார்சிங் (20) ஆகியோர் சிவசங்கரிடம் தொடர்பு கொண்டு எங்கள் மூலம் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினர். 

    இதனை நம்பி சிவசங்கர் அவர்களை புதுவைக்கு வரவழைத்து ரூ.25 லட்சம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் அதன் பிறகு லாபத் தொகை எதுவும் சிவசங்கரிடம் கொடுக்கவில்லை. 

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிவசங்கர் பணம் பெற்ற  அங்கீட் ஜெய்ஸ்வால், ரோகித் குமார்சிங்கிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டார். 

    அதற்கு அவர்கள் ரூ.13 லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்தனர். ஆனால் மீதி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். 
    இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சிவசங்கர் புதுவை கோர்ட்டில் முறையீடு செய்தார். கோர்ட்டு உத்தர வின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து பணம் மோசடி செய்த அங்கீட் ஜெய்ஸ்வால், ரோகித் குமார்சிங் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். 

    இந்த நிலையில் இவர்கள் 2 பேரும் பெங்களூரில் தங்கி இருப்பது செல்போன் டவர் மூலம் தெரிய வந்தது. 

    இதையடுத்து பெரியக் கடை சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் தனிப் படை போலீசார் பெங்களூர் விரைந்து சென்று அங்கு பதுங்கி  இருந்த அங்கீட் ஜெய்ஸ்வால், ரோகித் குமார்சிங் ஆகிய 2 பேரையும்  கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். 

    பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
    நோணாங்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணிகளின் சிரமத்தை கருதி ஆன்லைன் மூலம் பதிவு முறை ஏற்பாடு செய்ய அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு சுற்று லாத்துறையின் கீழ் நோணாங்குப்பம் சுண்ணாம் பாறு படகு குழாம் செயல்பட்டு வருகிறது. 

    இங்கிருந்து பல்வேறு விதமான படகுகள் மூலம் பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகிறார்கள். அங்கு  பல்வேறு விதமான விளையாட்டுகள் நடத்தப் பட்டு வருகிறது.

    மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புது விதமான பாரா கிளைடர் எனும்  விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் அரசு செயலர்கள் அருண், நெடுஞ்செழியன் ஆகியோர் தனித்தனியே பாராகிளைடரில் சிறிது பறந்து மகிழ்ந்தனர். 

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணல்பரப்பில் செல்லக்கூடிய   ஏ.டி.வி. காரினை ஓட்டி மகிழ்ந்தார். அதில் பெரும்பாலானோர் இந்த பாரா கிளைடரில் கட்டணம் செலுத்தி பறந்து மகிழ்ந்தனர். இதற்கான கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயித்துள்ளனர்.

    தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணன் பாரடைஸ் பீச்சை ஆய்வு செய்தார்.  பலத்த காற்றினால் சேதமான குடில்களை சரி செய்து இந்தக் கோடை காலத்திற்கு சுற்றுலா பயணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

    மேலும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்து நேரம் ஒதுக்கி பயனடைய ஏற்பாடு செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

     இந்நிகழ்ச்சியின் போது படகு குழாம் மேலாளர் மனோஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
    புதுவை சட்டசபையில் அரசியலமைப்பு விதியை திருத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30-ந் தேதி புதுவை சட்டமன்ற  கூட்டத்தொடரில் அடுத்த 4 மாதங்களுக்கான அரசின் செலவின ஒப்புதலை பெறுவதோடு மக்கள் மற்றும் மாநில நலன் சார்ந்த சில பிரச்சினைகளை விவாதித்து தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டும். 

    புதுவை அரசின் மின் துறையை தனியார் மயமாக்கும்  முடிவை கைவிட வேண்டிய தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும் புதுவை  யூனியன் பிரதேசத்தை மாநிலமாக கருதி 15-வது நிதிக்குழு வரம்புக்குள் புதுவையை கொண்டு வருவது அல்லது அக்குழுவின் பரிந்துரைக்கு இணையான நிதி உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். 

    இந்த தீவிர பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனில் அரசியலமைப்பு விதி 280(3) யை திருத்த வேண்டும் என  தீர்மானம்  நிறைவேற்ற வேண்டும். 

    இது, சாத்தியம் இல்லை என்றால் நிதிக் குழுவில் இருந்து கோவாவுக்கு எவ்வளவு நிதி வழங்கப்படுகிறதோ அதுபோல புதுவைக்கும் வழங்க வேண்டும் என்று தீர்மானம்  நிறைவேற்ற  வேண்டும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    ×