என் மலர்
புதுச்சேரி
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் மகா சம்மேளனமும், அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.
இதன்படி நாடு முழுவதும் நேற்று வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., ஏ.ஐ.டி.யூ.சி., எம்.எல்.எப்., எல்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி. உட்பட தொழிற்சங்கங்கள், மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன. மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
2-வது நாளான இன்று தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உட்பட அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இதன்படி இன்று காலை 6 மணிக்கு பந்த் போராட்டம் தொடங்கியது.
போராட்டத்தால் புதுவையில் தனியார் பஸ்கள் ஓடவில்லை. புதுவையை பொறுத்தவரை தனியார் பஸ்களே அதிகம் என்பதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். புதிய பஸ் நிலையத்தின் பெரும் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
ஆட்டோ, டெம்போக்கள் இயங்கவில்லை. அதே நேரத்தில் புதுவை மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டது.
புதுவை பணிமனையில் இருந்தும் தமிழக அரசு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது.
பிரதான சாலைகளான மறைமலை அடிகள் சாலை, காமராஜர் சாலை, நேருவீதி, மிஷன் வீதி, அண்ணா சாலை, புஸ்சிவீதி, 100 அடி சாலையில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தது. பாலகம், மருந்தகம் மட்டும் திறக்கப்பட்டிருந்தது.
தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. பெரிய மார்க்கெட்டில் காய்கறி, பழம், மளிகை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 2-வது நாளாக இன்றும் தொழிற்பேட்டைகள் மூடப்பட்டிருந்தது. வங்கிகளும் போராட்டத்தில் பங்கேற்றதால் இன்றும் பண பரிவர்த்தனை வெகுவாக பாதிக்கப்பட்டது.
நகர்ப்புறத்தில் உட்புற சாலைகள், குடியிருப்பு பகுதியில் சிறிய கடைகள் திறக்கப்பட்டிருந்தது. புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம்போல இயங்கியது.
புதுவையில் பெரும்பாலான தனியார், அரசு பள்ளிகள் வழக்கம்போல இயங்கியது. ஒரு சில தனியார் பள்ளிகள் பஸ்களையும் இயக்கியது. ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருந்தனர். 10-ம் வகுப்பு, பிளஸ்-2 வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்றதால் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர்.
கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டிருந்தது. கல்லூரி பஸ்களும் இயக்கப்பட்டது. நகர பகுதியில் பெட்ரோல் பங்குகள், ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தது. புதுவையில் 11 இடங்களில் தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். இவரது மகன் நாகராஜ் (வயது 24). இவர் மீது ஈரோடு, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டு தமிழகத்தை கலக்கிய 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
பிரபல கொள்ளையனான நாகராஜ் நீண்ட காலமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வருவதால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதற்கிடையே நாகராஜ் கடந்த வாரம் ஈரோட்டில் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.
அவரது செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்திய போது புதுச்சேரி ஆம்பூர் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஈரோடு போலீசார் புதுச்சேரி விரைந்து வந்தனர். பின்னர் ஒதியஞ்சாலை போலீசார் உதவியுடன் அந்த தங்கும் விடுதியை சுற்றி வளைத்து நாகராஜை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு அழைத்துச் சென்றனர்.
புதுவையில் முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது. பா.ஜனதா மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்காததால் அதிருப்தியில் இருந்தனர். தங்களின் அதிருப்தியை கட்சி மேலிட பொறுப்பாளரிடம் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்னிச்சையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் புதுவையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ஜனதா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க.வோடு கூட்டணியில் இருந்தாலும் பா.ஜனதா உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதேபோல புதுவையிலும் பா.ஜனதாவின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளனர்.
சமீபத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், தனித்து போட்டியிட தயாராகும்படி பா.ஜனதாவினருக்கு மேலிட தலைவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தங்கள் பகுதியில் உள்ள கொம்யூன், நகராட்சி வார்டுகளில் போட்டியிட தகுதியானவர்களை தேர்வு செய்யும்படியும் மாநில நிர்வாகிகளுக்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் வருகிறது. விசாரணையில் அரசு தரப்பில் தேர்தலை நடத்த கால அவகாசம் கோர முடிவு செய்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த தயார் நிலையில் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு அளிக்க உள்ள உத்தரவை பொறுத்து புதுவையில் உள்ளாட்சி தேர்தல், கூட்டணி விவகாரம் சூடுபிடிக்கும்.
புதுச்சேரி:
புதுவையில் ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., எம்.எல்.எப்., எல்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று வேலைநிறுத்தமும், நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தன. இதன்படி இன்று புதுவையில் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் காரணமாக புதுவையில் உள்ள தொழிற்பேட்டைகளான தட்டாஞ்சாவடி, திருபுவனை, மேட்டுப்பாளையம், சேதராப்பட்டு ஆகிய பகுதிகளில் பெரும்பாலான தொழிற்சாலைகள் இயங்கவில்லை.
அதேநேரத்தில் அரசு அலுவலகங்களில் இன்றும், நாளையும் பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வழக்கம் போல இயங்கியது.
வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால் புதுவையில் வங்கிகள் இயங்கவில்லை. பண பரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டத்தையொட்டி புதுவை நகர், தொழிற்பேட்டை பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழகத்தில் போராட்டம் காரணமாக தமிழக அரசு பஸ்கள் வழக்கத்தைவிட குறைவாகவே இயக்கப்பட்டன. இதனால் புதுவையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும், தமிழக பகுதியில் இருந்து புதுவை வழியாக செல்லும் தமிழக அரசு பஸ்களும் குறைவாக இயங்கியது. தனியார் பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.






