என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
சபாநாயகர் மீது தி.மு.க. வெறுப்பு அரசியல்-அ.தி.மு.க. கண்டனம்
சபாநாயகர் மீது தி.மு.க. வெறுப்பு அரசியல் நடத்துவது சரியானது அல்ல என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் அட்டவணை இனத்தவர்களுக்கு அரசின் குறைந்தபட்ச அதிகாரங்கள் கிடைத்திருக்கும்.
எம்.எல்.ஏ.க்களின் அதிகாரம் குறையும் என்ற ஒரே நோக்கத்திற்காக சில எம்.எல்.ஏ.க்களின் பிரதிநிதியாக நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை நிறுத்தியுள்ள தி.மு.க. செயலை மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள்.
எதிர்க்கட்சி அந்தஸ்தை மக்கள் தி.மு.க.விற்கு வழங்கி உள்ள நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த சபாநாயகர் மீது தனிப்பட்ட வெறுப்பு அரசியலை நடத்துவது சரியானது அல்ல.
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்டமன்ற நடத்தை விதிகளை தி.மு.க. புரிந்து கொள்வது நல்லது.
சட்டமன்ற நடத்தை விதியின் கீழ் சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் 14 நாட்களுக்கு முன் வழங்கப்பட வேண்டும் என உள்ளது.
வருகிற 30-ந் தேதி ஒரே ஒருநாள் மட்டும் நடைபெற இருக்கும் சட்டமன்ற நிகழ்வுகள் தி.மு.க.வின் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்பட வாய்ப்பில்லை என்பதை தி.மு.க. புரிந்து கொள்ள வேண்டும். வீணான வெற்று அறிக்கை விடுவதைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியின் பணியை தி.மு.க. செய்ய வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Next Story






