என் மலர்
புதுச்சேரி
பாகூர்:
புதுவை அருகே கிருமாம்பாக்கத்தை அடுத்த கன்னியக்கோவில் 4 முனை சந்திப்பில் தனியார் மதுபான கடை உள்ளது.
இந்த கடையின் அருகில் சிமெண்ட் கடை மற்றும் டீ கடை உள்ளது. இரவு நேரங்களில் அங்கு பழைய பேப்பர் மற்றும் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தில் மது குடிக்கும் சிலர் தூங்குவது வழக்கம்.
அதுபோல் நேற்று இரவு அந்த கடைகள் முன்பு 2 பேர் படுத்து தூங்கினர். நள்ளிரவு 2 மணியளவில் ஒரு சைக்கோ நபர் அங்கு வந்தார். அவர் அங்கு தூங்கிகொண்டிருந்த ஒருவரிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் தன்னிடம் ரூ.50 மட்டுமே உள்ளது. அந்த பணத்தை தர முடியாது என மறுத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சைக்கோ நபர் அங்கு கிடந்த சிமெண்ட் கல்லை எடுத்து பணம் தர மறுத்தவரை சரமாரியாக தலையில் தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
இதனை கண்ட அவருடன் தூங்கி கொண்டிருந்த மற்றொருவர் அதிர்ச்சியடைந்து கல்லால் தாக்கிய சைக்கோ நபரை தட்டிக்கேட்டார். அவரையும் அந்த நபர் கல்லால் தலையில் தாக்கினார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இதுபற்றி கிருமாம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், தமிழரசன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
அங்கு படுகாயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைதொடர்ந்து சம்பவ இடத்திலேயே நின்றுக்கொண்டிந்த கொலையாளியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே குட்டியாங்குப்பத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது45). என்பதும், இவர் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சுற்றிதிரிந்து வந்ததும் தெரியவந்தது. மனநோயாளியான இவர் மேலும் 3 பேரை கொலை செய்ய உள்ளதாக போலீசாரிடம் கூறிக்கொண்டே இருந்தார்.
இதற்கிடையே கிருமாம்பாக்கம் அருகே நரம்பை சுடுகாட்டில் ஒருவர் இன்று காலை ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் கொலை செய்யப்பட்ட 2 பேரும் யார்-எந்த ஊர் என்பது தெரியவில்லை. இருவரையும் சைக்கோ நபரான மணிகண்டன்தான் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து சைக்கோ நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் யார் என்ற விவரம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிருமாம்பாக்கத்தில் இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 2017-ம் ஆண்டு விடுமுறைக்காக திண்டிவனம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தமிழ் என்கிற தமிழரசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறை முடிந்தபின் அந்த மாணவி புதுவைக்கு வந்துள்ளார். அப்போது தமிழரசன் செல்போனில் அந்த மாணவியிடம் பேசியுள்ளார்.
பின்னர் புதுவைக்கு வந்த தமிழரசன் அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்று நீ என்னை காதலிக்க வேண்டும். இல்லை என்றால் உனது பாட்டியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். அப்போது அவரது நண்பர் என்ஜினீயர் வினோத் (32) என்பவர் உடன் இருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு புதுவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்தது.
விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன், வினோத் ஆகிய 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.






