என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
போலி பத்திரம் தயார் செய்து ரூ.70 லட்சம் மோசடி
அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் தயார் செய்து ரூ.70 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக முன்னாள் அமைச்சர் மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி
லாஸ்பேட்டை பெத்து செட்டிபேட்டில் அன்சாரி துரைசாமி அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு சொந்தமான 1700 சதுர அடி இடம் அந்த பகுதியில் உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு இந்த இடத்துக்கு போலியாக பத்திரம் தயார் செய்து புதுவையை சேர்ந்த 2 பேரிடம் ரூ.70 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது-.
இதனையறிந்த பள்ளி நிர்வாகம் பள்ளி கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தது. அதன் பேரில் பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் நடனசபாபதி லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அரசு பள்ளிக்கு சொந்தமான இடத்தை போலி பத்திரம் தயார் செய்து விற்பனை செய்தது புதுவை முன்னாள் அமைச்சர் கதிர்வேலின் மகன் ரியல் எஸ்டேட் அதிபர் பாண்டியன் என்பது தெரியவந்தது.
இதனையறிந்த பாண்டியன் தலைமறை வானார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டியனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே இந்த சம்பவத்தில் பத்திர எழுத்தர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது.
Next Story






