என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாகூரில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராவை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் இயக்கி வைத்தார்.
    புதுச்சேரி:

    பாகூர் மார்க்கெட் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க கேமரா பொருத்தி கண்காணிப்பு பணியை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் தொடங்கி வைத்தார். பாகூர் மார்க்கெட் வீதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும் திருமண மண்டபம், பள்ளிகள், அரசு அலுவலகங்கள், புகழ் பெற்ற சிவன் கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் மார்க்கெட் வீதியில் அடங்கியுள்ளது.
     
    இந்த பகுதியில் உள்ள கடைகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. மேலும் போக்குவரத்து பிரச்சினை இருந்து வந்தது. இதனை சரிசெய்ய கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவெடுக்கப்பட்டது. பாகூர் வியாபாரி சங்கம் சார்பில் சார்பில் வழங்கப்பட்ட கண்காணிப்பு கேமரா மற்றும் ஒலிபெருக்கி மார்க்கெட் வீதியில் பொருத்தப்பட்டுள்ளது. 

    இதன் கண்காணிப்பு மையம் பாகூர் சிவன் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமரா சேவையை தொடங்கி வைத்தார். இந்த சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் ஒலி பெருக்கிகளும் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ் பெக்டர்கள் விஜயகுமார், தமிழரசன் மற்றும் போலீசார். பாகூர் வியாபாரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், கடை உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    காலாப்பட்டு சிறப்பு பள்ளியில் தமிழக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் ஆனந்தரங்கப்பிள்ளை செவித்திறன் குன்றிய மற்றும் வாய்பேச இயலாத குழந்தைகள் சிறப்பு பள்ளி 1963 முதல்  காலாப்பட்டு பிள்ளைச்சாவடியில் செயல் பட்டு வருகிறது. 

    இதில் புதுவை, விழுப்புரம், கடலூர், நாகை, கள்ளக்குறிச்சி, திருவண்ணா மலை மாவட்ட குழந்தைகளும் இதுவரை பயன்பெற்று வந்தனர். 

    2021 முதல் புதுவையை சார்ந்த குழந்தைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கி வந்தது. அனைத்து வசதிகள் இருந்தும் போதிய எண்ணிக்கையில் மாணவர்கள் பயன்பெறுவதற்காக முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆலோசனையின்படி, ஏற்கனவே செயல்பட்டது போல் அண்டை மாவட்டங்களை சேர்ந்த வாய்பேச இயலாத, செவித்திறன் குன்றிய, பார்வையற்ற குழந்தைகளை சேர்த்து மீண்டும் செயல்படும். 

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
    முறைகேடுகள் நடந்ததாக புகார் வந்ததையடுத்து ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் முறைகேடு நடந்ததாக புகார் வந்த நிலையில் துறையின் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார்   அதிரடி ஆய்வு மேற்கொண் டார்.

    புதுவை அண்ணா நகரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டி.ஆர்.டி.ஏ.) அலுவலகம் இயங்கி வருகிறது. 

    இந்த அலுவலகம் மூலம் மத்திய, மாநில அரசுகள் கிராமப்புற வளர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கும் நிதிகளைக் கொண்டு கிராம உள்கட்ட மைப்பு, கிராமப்புற வேலை வாய்ப்பு, சுகாதாரம், அடிப் படை கல்வி, மருத்துவம், சமூகப் பாதுகாப்பு, மகளிர் மேம்பாடு, கைவினைத் தொழில் மேம்பாடு போன்ற சமூகப் பொருளாதார வளர்ச்சி திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. 

    இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதியை புதுவை மாவட்ட வளர்ச்சி முகமை அலுவலகம் முறையாக செலவு செலவு செய்யவில்லை என்றும், கழிவறைகள் கட்டுதல் உள்ளிட்ட திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்ப தாகவும் புதுவை கவர்னர் தமிழிசை செவுந்தரராஜன், தலைமை செயலாளர் அஸ்வின் குமார் ஆகியோருக்கு புகார் வந்தது. இந்த புகார் சமூக வலைத்தளத்திலும் பரவியது. 

    இந்த நிலையில் இத்துறையின் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் புதுவை அண்ணாநகரில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில்  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த அதிகாரிகளிடம், கடந்த 10 மாதத்தில்  மேற் கொள்ளப்பட்ட பணிகள், திட்டங்கள் மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதிகள் குறித்தும் கிராமப்புற வளர்ச்சிக்கு என்னென்ன திட்டங்கள் ஒதுக்கப்பட்டுள் ளது குறித்தும், குறிப்பாக கழிவறைகள் கட்டுவதில் முறைகேடுகள் நடந்துள் ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். திட்டங்கள் குறித்த கோப்புகளையும் பார்வையிட்டார். 

    அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தவளக்குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டார்.
    புதுச்சேரி:

    மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக் குப்பம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகரு மான ஏம்பலம் செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் டாக்டர் முரளி, டாக்டர் ரகுநாத் ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கனிமொழி  வரவேற்றார்.

    நிகழ்ச்சியையொட்டி புவியை காப்போம் என்ற தலைப்பில் மாணவ- மாணவி களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். மேலும் புவி வெப்பமயம்   ஆவதை தடுக்கும் நோக்கில் இலவச மரக்கன்றுகளையும் அவர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில்  பள்ளி நிர்வாகிகள்,  ஆசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள்,   ஆஷா பணியாளர்கள் மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர் கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, ராஜா, நாகமுத்து, விமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    உப்பளம் தொகுதியில் நீர்-மோர் பந்தலை கென்னடி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    புதுச்சேரி:

    தமிழக முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி புதுவை உப்பளம் தொகுதி தி.மு.க.  சார்பில் நீர்-மோர் பந்தல் அமைத்து உடல் வெப்பம் தணிக்கும் பழவகைகள் மற்றும் பழச்சாறுகள், காய் வகைகள் பொதுமக்களுக்கு மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி தனது சொந்த செலவில் வழங்கினார். 

    இதில் தொகுதி செய லாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி காத்தலிங்கம், ஆதி திராவிடர் துணை அமைப்பாளர்  தங்கவேல், பிரமுகர்    பிராங்கிளின், இணைஞர்  அணி துணை அமைப்பாளர் ராஜி, மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி,  கிளை செயலாளர்கள்  டேவிட், செல்வம், மணிகண்டன், வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    பால் வாங்க சென்ற மூதாட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.:
    புதுச்சேரி:

    புதுவை தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 80) இவர் அதிகாலை பால் வாங்க கஸ்தூரி பாய் சந்திப்பில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக மங்கையர்கரசி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

    இதில் தூக்கி வீசப்பட்ட மங்கையர்கரசி தலையில் படுகாயம் அடைந்தார் உடனே அங்கிருந்தவர்கள் மங்கையர்கரசியை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மங்கையர்கரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இது குறித்து அவரது மகன் அரவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை கன்னியக்கோவில் அருகே மணப்பட்டு சின்ன வீதியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 35) சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்து கொண்டு இருந்தார். 

    இடையார் பாளையம் என்.ஆர். நகர் அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மகேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தடுமாறி விழுந்த மகேசுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 

    பின்னர் இது குறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நயினார் மண்டபத்தில் பொதுமக்களுக்கு பா ஜனதாவினர் பாரத மாதா உருவப்படம்-சர்க்கரை வழங்கினர்
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை மற்றும் நயினார் மண்டபம் பகுதியில் பா.ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் கொண்டாடப்பட்டது. 

    பா.ஜனதா வணிகர் பிரிவு தலைவர் சத்தியராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று 10 இடங்களில் கொடியேற்றப்பட்டது.

    மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றம் சாலையோர வியாபாரிகளுக்கு பாரத மாதா உருவப்படம் மற்றும் இலவச சர்க்கரையை சத்தியராஜ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சியின் முதலியார்பேட்டை தொகுதி பொறுப்பாளர் செல்வகணபதி, தொகுதி தலைவர் இன்பசேகரன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    வில்லியனூரில் வேளாண் அறிவியல் நிலைய ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
    புதுச்சேரி:

    வில்லியனூர் கோபாலன் கடை காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன். (வயது 44) இவர் புதுவை குரும்பா பேட்டில் உள்ள அரசு வேளாண் அறிவியல் நிலையத்தில் தினக்கூலி ஊழியராக வேலைபார்த்து வந்தார். 

    இவருக்கு ஜான்சிலூர்து என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முருகையன் வழக்கம் போல் வேலைக்கு சென்றார்.

    6 மணிக்கு வீடு திரும்பிய அவர் குளித்து விட்டு வீட்டு வராண்டாவில் அமர்ந்து இருந்தார். அப்போது தலைவலிப்பதாக கூறி தைலத்தை தடவிக்கொண்டு வீட்டின் படுக்கை அறைக்கு சென்று ஓய்வு எடுத்தார். அப்போது திடீரென முருகையன் மயங்கி சரிந்தார். 

    இதனை கண்ட அவரது மனைவி ஜான்சி லூர்து பதறியடித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு ஆட்டோவில் கதிர்காமம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முருகையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ஜான்சி லூர்து கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தவளக்குப்பத்தில் கணவன் மது குடித்து விட்டு வந்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    தவளகுப்பம்-அபிஷேகபாக்கம் மெயின் ரோடு வி.ஐ.பி. கார்டன் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனியார் நிறுவனத்தில் ஓவியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயா (வயது 44) இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    பாஸ்கருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவ்வப்போது கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி சிறு சிறு பிரச்சனைகள ஏற்படும். ஆனாலும் கணவன்-மனைவிக் கிடையே சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். 

    இந்த நிலையில் பாஸ்கர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது சமையல் சரியில்லை என்று பாஸ்கர் மனைவியிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக் கிடையே பிரச்சினை எழுந்தது. 

    இதையடுத்து பாஸ்கர் கழிவறைக்கு சென்று விட்டார். அப்போது ஜெயா திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்காமல் ஜெயா அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு பாஸ்கர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்து மனைவியை 108 ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். 

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஜெயா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜெயாவின் சகோதரி மலர் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுவை மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்.) 1.1.2004-ல் அமல்படுத்தப்பட்டதால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

    இதற்காக அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அவர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்,  பணிக்கொடை உள்பட பணப்பலன்கள் இது வரை முழுமையாக வழங்கப்படவில்லை. 

    மேற்கு வங்கத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை  ஏற்காமல் பழைய திட்டத்தையே பின்பற்றுகின்றனர். காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய  திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய திட்டத்துக்கு மாநில அரசின் பங்களிப்பு 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

    எனவே, புதுவை  யூனியன் பிரதேசத்தில் டி குரூப் பணியாளர்களுக்கும், இப்போதைய குரூப் சி பணியாளர்களுக்கும் மட்டுமாவது பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்தவேண்டும். 

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    புதுவை அரசு பதவிகளில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தார்.
    புதுச்சேரி:

    பாகூர் தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டுமான பணி கடந்த 2019-ம் ஆண்டு  ரூ.67 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது. 

    இதற்கான பணி நீண்ட நாட்களுக்கு பின் முடிந்த நிலையில் இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தீயணைப்புத்துறை  செயலர் சுந்தரேசன் வரவேற்றார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். 

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் மற்றும்  செந்தில்குமார்   எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    அரசின் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு உதவியுடன் தேர்தலின்போது அறிவித்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் தகுதியை இழந்து பாதிக்கப் பட்டுள்ளனர். 

    புதுவையில் போலீஸ் துறையில் ஊர்க்காவல் படை, சப்-இன்ஸ்பெக்டர் என 400 பணியிடங்கள் நிரப்பப்படும். சீர்திருத்த பிரிவிலிருந்து இளநிலை எழுத்தர், முதல்நிலை எழுத்தருக்கான பதவிகளில் சுமார் 700 பேர் நியமிக்கப்பட உள்ளனர். 

    இந்த நியமனம் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கு 2 மாதத்தில் தேர்வு நடத்தப்படும். இதுபோல் சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை அடுத்தடுத்து நிரப்பி இளைஞர்களின் எதிர் காலத்தை சிறந்த முறையில் இந்த அரசு கொண்டு வரும். 

    கடந்த மழை காலத்தில் பாகூர் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடங்க பாகூர் காரணமாக இருந்தது. அதனால் என்.ஆர். காங்கிரஸ் அரசு என்றும் மறக்காது. இவ்வாறு அவர்  பேசினார்.

    முடிவில் கோட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) இளங்கோ நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பாகூர் நிலைய அதிகாரி பக்கிரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செய்திருந்தினர். 

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க.விக்ரமன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து  ஆணையர் கார்த்தி கேயன், தாசில்தார் குப்பன், உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்தரா,  தன்வந்திரி தீயணைப்பு அதிகாரி சுரேஷ், வில்லியனூர் தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,  மடுகரை தீயணைப்பு அதிகாரி ஏழுமலை, திருக்கனூர் லட்சுமணன், புதுவை மனோகர், சேதராப்பட்டு பாலவேலன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கூலி தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
    புதுச்சேரி:

    திருக்கனூர் வாதானூர் மாரியம்மன் கோவில் தெரு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. 

    போட்டியின் முடிவில் விழுப்புரம் வாதானூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான சிவசேகர் (வயது41). மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார், சரவணன் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

    ஒரு கட்டத்தில் மது போதையில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த செல்வக்குமார், சரவணன் ஆகியோர் சிவசேகரை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் சிவசேகர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது-. 

    இதுகுறித்து சிவசேகர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×