search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீயணைப்பு நிலைய புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
    X
    தீயணைப்பு நிலைய புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    காலி பணியிடங்கள்நிரப்பபடும்-முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி

    புதுவை அரசு பதவிகளில் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்தார்.
    புதுச்சேரி:

    பாகூர் தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டுமான பணி கடந்த 2019-ம் ஆண்டு  ரூ.67 லட்சம் செலவில் தொடங்கப்பட்டது. 

    இதற்கான பணி நீண்ட நாட்களுக்கு பின் முடிந்த நிலையில் இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தீயணைப்புத்துறை  செயலர் சுந்தரேசன் வரவேற்றார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலை வகித்தார். 

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் மற்றும்  செந்தில்குமார்   எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    அரசின் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு உதவியுடன் தேர்தலின்போது அறிவித்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படும். கடந்த பல ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் தகுதியை இழந்து பாதிக்கப் பட்டுள்ளனர். 

    புதுவையில் போலீஸ் துறையில் ஊர்க்காவல் படை, சப்-இன்ஸ்பெக்டர் என 400 பணியிடங்கள் நிரப்பப்படும். சீர்திருத்த பிரிவிலிருந்து இளநிலை எழுத்தர், முதல்நிலை எழுத்தருக்கான பதவிகளில் சுமார் 700 பேர் நியமிக்கப்பட உள்ளனர். 

    இந்த நியமனம் நேரடி தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கு 2 மாதத்தில் தேர்வு நடத்தப்படும். இதுபோல் சுகாதாரத் துறை, தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள காலிப்பணியிடங்களை அடுத்தடுத்து நிரப்பி இளைஞர்களின் எதிர் காலத்தை சிறந்த முறையில் இந்த அரசு கொண்டு வரும். 

    கடந்த மழை காலத்தில் பாகூர் பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடங்க பாகூர் காரணமாக இருந்தது. அதனால் என்.ஆர். காங்கிரஸ் அரசு என்றும் மறக்காது. இவ்வாறு அவர்  பேசினார்.

    முடிவில் கோட்ட தீயணைப்பு அதிகாரி (பொறுப்பு) இளங்கோ நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பாகூர் நிலைய அதிகாரி பக்கிரி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் செய்திருந்தினர். 

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. தங்க.விக்ரமன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து  ஆணையர் கார்த்தி கேயன், தாசில்தார் குப்பன், உதவி கோட்ட தீயணைப்பு அதிகாரி ரித்தோஷ் சந்தரா,  தன்வந்திரி தீயணைப்பு அதிகாரி சுரேஷ், வில்லியனூர் தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி,  மடுகரை தீயணைப்பு அதிகாரி ஏழுமலை, திருக்கனூர் லட்சுமணன், புதுவை மனோகர், சேதராப்பட்டு பாலவேலன், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×