என் மலர்
புதுச்சேரி
மயிலம் கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான மயிலம் செவிலியர் கல்லூரியில் தேசிய அளவிலான முதல் கருத்தரங்க பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
புதுச்சேரி:
மயிலம் சுப்பிரமணிய சாமி கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி பேரிடர் முன் ஏற்பாடு மற்றும் தீயணைப்பு மேலாண்மை பற்றிய முதல் தேசிய அளவிலான கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தமிழ்செல்வி வரவேற்புரையாற்றினார். மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக ஜிப்மர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் குமாரி சிறப்புரையாற்றினார். அவரை தொடர்ந்து மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரியின் முதல்வர் தனுசு, மயிலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் பார்த்திபன் ஜெயராமன், விழுப்புரம் மாவட்ட பயிற்சி குழுவின் மருத்துவ அதிகாரி டாக்டர் பாக்கியலட்சுமி, விழுப்புரம் மாவட்ட தொற்றா நோய் திட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் விஷ்ணுகுமரன், ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
2 நாள் கருத்தரங்கில் திண்டிவனம் தீயணைப்பு துறை அதிகாரி கதிர்வேல் மற்றும் குழுவினர்களால் தீயணைப்பு மேலாண்மை பற்றிய செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இக்கருத்தரங்க பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா முடிவில் பேராசிரியர் அருணா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மயிலம் செவிலியர் கல்லூரி மாணவர்கள் மற்றும் மணக்குள விநாயகர் செவிலியர் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்
அரிக்கமேடு பகுதிக்கு பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை பாரத் வித்யாஸ்ரமம் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள் முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமம் மற்றும் அரிக்கமேடு ஆகிய இடங்களுக்கு களப் பயணம் மேற்கோண்டனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அருண் நாகலிங்கம் வரவேற்று நோக்க உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக அரிக்கமேடு கல்வி மையம் நிறுவனத் தலைவர் ரமேஷ் பங்கேற்றார். அவர் தலைமையில் அரிக்கமேடு அகழாய்வுத் தளத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்.
அரிக்கமேட்டின் சிறப்பு, வரலாறு, பண்டைய காலத்தில் வர்த்தகம் நடை பெற்றதற்கான சான்றுகள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. களப்பயணத்திற்கான ஏற்பாடுகளை, பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
பாரதிதாசன் நினைவுநாளையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர் பேரவை மற்றும் தேவிதாசன் அறக்கட்டளை சார்பில் பாரதிதாசன் நினைவுநாளையொட்டி சிறப்பு கருத்தரங்கம் ஜோதி கண்மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
கருத்தரங்கத்துக்கு தமிழ் அறிவியல் ஆய்வறிஞர் தாமரைக்கோ தலைமை தாங்கினார். சிந்தனையாளர் பேரவை செயலாளர் காமராசு வரவேற்புரையாற்றினார். பேரவை தலைவர் கவிஞர் கோ.செல்வம் நோக்கவுரையாற்றினார்.
கருத்தரங்கில் மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகநாதன், தன்னுரிமை கழக தலைவர் சடகோபன், படைப்பாளர் இயக்கம் சீனு.தமிழ்நெஞ்சன், கலாச்சார புரட்சி இயக்கம் பிராங்க்ளின் பிரான்சுவா, சுவடுகள் இலக்கிய பேரவை செல்வமணி அசோகன் ஆகியோர் உரையாற்றினர். இதில் தேவிதாசன் அறக்கட்டளை நிறுவனர் தேவிதிருவளவன், பேரவை துணைத்தலைவர் கவுசல்யாதேவி, பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ் வளர்ச்சிதுறை அமைக்க வேண்டும், தமிழ் விருதுகள் வழங்கவேண்டும், படைப்பாளர்களுக்கு ஊக்கத்திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 29ந் தேதி பாரதிதாசன் பிறந்தநாளில் சுதேசி மில் அருகே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் லாஸ்பேட்டையில் தொடங்கி பாகூர் வரை சைக்கிள் பயணம் தொடங்கியது.
புதுச்சேரி:
மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்காமல், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
மத்திய பா.ஜனதா அரசு அளித்த ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
பஞ்சாலைகளை புனர மைத்து நிதி ஒதுக்கி தொடர்ந்து இயக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை நிவாரணமாக மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களை முறைப்படுத்தி குறைந்தபட்ச சம்பளமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும்.
இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேலைவாய்ப்புகளை உருவாக்க வலியுறுத்தி இந்த சைக்கிள் பயணம் மேற் கொள்ளப்பட்டது.
இதில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். சைக்கிள் பயணம் புதுவையின் முக்கிய வீதிகளின் வழியாக பாகூரை சென்றடைகிறது.
புதுவை அரசு சார்பில் பாரதிதாசன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் பாரதிதாசன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, கே.எஸ்.பி.ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதியில் அமைந்துள்ள பாவேந்தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகத்தில் அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த பாரதிதாசனின் உருவப் படத்திற்கு அமை ச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ் எம்.எல்.ஏ. ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அரசுச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குநர் கந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.
புதுவை அறியவில் இயக்கம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சூற்றுச்சூழல் துறை சார்பில், பூஜ்யம் நிழல் நாள் குறித்த விளக்க நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
புதுவை அறியவில் இயக்கம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சூற்றுச்சூழல் துறை சார்பில், பூஜ்யம் நிழல் நாள் குறித்த விளக்க நிகழ்ச்சி கடந்த 19-ந் தேதி லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கில் நடந்தது.
அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி முன்னிலை வகித்து பூஜ்யம் நிழல் நாள் குறித்து விளக்கினார். சூரிய வெளிச்சத்தில் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தின் போது அதிக நீளத்தோடு இருக்கும்.
பின்னர் படிப்படியாக குறைந்து உச்சி வேளையில் மிகக்குறைவாக இருக்கும்.
பிறகு, சூரியன் மறையும் வரை அதிகமாகிக்கொண்டே செல்லும். ஆண்டுக்கு இரு நாட்கள் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச்சரியாக கீழே விழுவதால், உச்சி வேளையில்கூட நிழல் காண முடியாது.
இதுவே பூஜ்ய நிழல் நாள் எனப்படுகிறது. இந்த பூஜ்யம் நிழல் நாள் காரைக்காலில் நிகழ்ந்தது.
பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு, சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. பூமியின் அச்சு சூரியனை சார்ந்து 23.45 டிகிரி கோணத்தில் சாய்வாக சுற்றுவதால் பருவநிலை மாற்றம் உண்டாகிறது. இந்த பூஜ்யம் நிழல் நாள் நிகழ்வை லாஸ்பேட்டை கோளரங்கம், சுத்துக்கேணி அரசு உயர்நிலைப்பள்ளி, வழு தாவூர் அரசு உயர் நிலைப்பள்ளி, செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி, உறுவையாறு அரசு உயர்நிலைப்பள்ளி, சன்னியா சிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கண்டுகளித்து விளக்கம் பெற்றனர்.
புதுவை அரசின் தொழிலாளர் துறை, பயிற்சி உதவி இயக்குனர் அலுவலகம் சார்பில், தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை வம்பாகீரப் பாளையம் அரசு பெண்கள் ஐ.டி.ஐ., காரைக்காலில்
டி.ஆர்.பட்டினம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. மற்றும் மாகி, ஏனாமிலும் முகாம் நடந்தது. தொழிற் பயிற்சி முடித்தவர்கள், 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், திறன் பயிற்சி பெற்றவர்கள், பட்டயப் படிப்பு, பட்ட தாரிகள் முகாமில் பங்கேற்றனர்.
பயிற்சியில் சேர்வோருக்கு மாத ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை வழங்கப்படும். பயிற்சி காலம் 12 மாதம் முதல் 36 மாதம் வரையாகும்.
வம்பாகீரப்பாளையத்தில் நடந்த முகாமை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார். முகாமில் அனிபால்கென்னடி பேசியதாவது:-
போக்குவரத்து துறை மூலம் உப்பளம் தொகுதியில் டெம்போ, மினிபஸ் வசதிகள் செய்துதர வேண்டும். மெரீனா கடற்கரைக்கு பஸ் வசதி செய்துதர வேண்டும். இந்த பயிற்சி முகாமில் 40 கம்பெனிகள் வந்துள்ளன. இந்த பயிற்சி முகாமை இளைஞர்கள் பயன்படுத்தி கற்றுக்கொண்டு வேலை வாய்ப்பை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர்சந்திர பிரியங்கா பேசியதாவது:-
மக்களுக்கு தேவையான வற்றை செய்ய வேண்டும் என்பதே அரசின் எண்ணம். மக்களுக்கான அரசாங்கம் நடக்கிறது. முதல்-அமைச்சர் ரங்கசாமி வரும்கால இளைஞர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்பதே எண்ணம். தொழிலாளர் துறை அதிகாரிகள் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களின் முயற்சியால் பயிற்சி முகாமை நடத்து கின்றனர். வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் படித்த இளைஞர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் நன்றாக பயிற்சி பெற்றால் சிறப்பாக செயல் படுபவர்களை நிறுவனத் தினரே வேலைக்கு எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வில்லியனூர் லூர்து மாதா ஆலய ஆண்டு திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
புதுச்சேரி:
வில்லியனூர் தூய லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை பிச்சைமுத்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை வில்லியனூரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்து அன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6-ம் நாளில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். அதன்படி 145-வது ஆண்டு திருவிழா ஏப்ரல் 23-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்குகிறது.
அன்று காலை 5.30 மணிக்கு திருத்தல வளாகத்தில் அமைந்திருக்கும் ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் சென்னை- மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா கொடியேற்றி ஆண்டு திருவிழாவினை தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக ஆலயத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடி யேற்றப்படுகிறது. தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள் மற்றும் தேர் பவனி நடைபெறுகிறது.
வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் சவரிமுத்து ஆரோக்கியராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
மே 1-ந் தேதி ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது.
காலை 11.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் யுவான் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு புதுவை&கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் திருவிழா, மாலை திருப்பலி, இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்ப்பவனி நடக்கிறது.
மே 2-ந் தேதி காலை 6.30 மணி திருப்பலிக்கு பின்னர் கொடியிறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல அருட்தந்தையர்கள் பிச்சைமுத்து, ஜோசப் சகாயராஜ், அருட்சகோதரர் ஜீவா, அருட்சகோதரிகள் மற்றும் வில்லியனூர் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சரக்கு-சைடிசுக்காக மீன் திருடிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்
புதுச்சேரி:
வறுமையின் காரணமாக சிலர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபடுவது வழக்கம்.
சிலர் எளிதில் பணம் கிடைக்க வேண்டும், உல்லாசமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்.
ஆனால், புதுவையில் மது குடிக்கவும், மதுவுக்கு சைடிஷ் தயாரிக்கவும் மீன்களை திருடியவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தனக்கு சொந்தமான மீன்களை, பெரிய மார்க்கெட் மீன் அங்காடியில் ஐஸ் பெட்டியில் வைத்திருந்தார். மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்த நிலையில் கடந்த 15ந்தேதிக்கு பின் மீன் விற்பனை செய்ய மீன் பெட்டியை ராஜேஷ் திறந்து பார்த்தார்.
ஐஸ் பெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மீன்கள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பெரியக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் நடைபாதையில் வசிக்கும் விஜய்(22), சதீஷ்(22) மற்றும் குரு ஆகியோர் மீன்களை திருடியது பதிவாகியிருந்தது.
இதையடுத்து விஜய், சதீஷ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பியோடிய குருவை தேடி வருகின்றனர்.
இவர்கள் இரவு நேரத்தில் சாலையோரத்தில் தங்கி, நகர பகுதியில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததும், இரவில் ஐஸ்பெட்டிகளை திறந்து மீனை திருடி விற்று மது வாங்கியதும் தெரிய வந்தது.
மது அருந்த சைடிசுக்காக திருடிய மீனை சமைத்து தின்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீராம்பட்டினம் கடற்கரையில் மீனவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவருக்கு பீர்பாட்டில் குத்து விழுந்தது.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினம் சிவாஜிநகரை சேர்ந்தவர் செல்வம்(வயது48). மீனவர். தற்போது மீன்பிடி தடைக்காலம் உள்ளதால் செல்வம் மீன் பிடி தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
செல்வம் வீராம்பட்டினம் கடற்கரையில் காற்று வாங்க சென்றார். அங்கு அதே பகுதியை சேர்ந்த பொட்டுக்கடலை என்ற மணிகண்டனுடன் செல்வம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மற்றொரு மீனவரான ஜெயசீலன் என்பவர் செல்வத்தை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி மணிகண்டன் என்ன பெரிய ஆளா? அவனுடன் பேசிக் கொண்டு இருக்கிறாய்? என்று திட்டி கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் செல்வத்தின் முகத்தில் குத்தினார்.
இதனை செல்வம் தட்டிக்கேட்ட போது மீண்டும் அவரை பீர்பாட்டிலாலும், கையாளும் தாக்கிய ஜெயசீலன் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
இந்த தாக்குதலில் முகம், மூக்கு, நெற்றியில் பலத்த காயமடைந்த செல்வத்தை அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பெற்ற செல்வம் பின்னர் இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருவடிக்குப்பத்தில் பொது இடத்தில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் கருவடிக்குப்பம் சாராயக்கடை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் குடி போதையில் பொதுமக்களுக்கு இடையூறாக அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்த விநாயகம்(வயது55), சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன்(51), குமரகுருபள்ளம் பகுதியை சேர்ந்த ராம்(60), நாவற்குளம் வசந்தம் நகரை சேர்ந்த ஏழுமலை(51) மற்றும் முத்தியால்பேட்டை முத்தையா முதலியார்வீதியை சேர்ந்த செல்லப்பன்(45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நடுரோட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தவர் இறந்து போனார்.
புதுச்சேரி:
புதுவை ரங்கப்பிள்ளை வீதி-காந்தி வீதியில் ஒரு தனியார் அரிசி கடை அருகில் 50 வயது மதிக்கதக்க ஒருவர் திடீரென ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்த ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி மணிகண்டன்(வயது28) என்பவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயங்கி விழுந்தவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அவரிடம் அங்கிருந்த போலீசார் விசாரித்த போது அவர் பெயர் மூர்த்தி என்றும் ஈரோட்டை சேர்ந்தவர் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மூர்த்தி சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






