என் மலர்
புதுச்சேரி
புதுச்சேரியில் 5 பேருக்கு கொரோனா ஏற்படடுள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து பூஜ்யத்தை எட்டியது.
புதுவையில் கடந்த சில நாட்களாக தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொற்று பரிசோதனை தொடங்கி உள்ளது. புதுவையில் ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 4, ஏனாமில் ஒருவர் என 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 10 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 9 பேர் என 20 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2-வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 16 லட்சத்து 99 ஆயிரத்து 423 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இந்த தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நெறிமுறைகளை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பாகூர் தொகுதியில் ரூ.75 லட்சம் செலவில் பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி பொதுப்பணித்துறை சார்பில் இருளன்சந்தை பகுதியில் அமைந்துள்ள அரசு தொடக்கப் பள்ளியின் கட்டிட புனரமைக்கும் மற்றும் இடிந்து விழுந்த மதில் சுவரை மீண்டும் கட்டுவதற்காக ரூ.28 லட்சத்தில் மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையடுத்து, மதில்சுவர் மற்றும் கட்டிடம் சீரமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இதேபோல் பாகூர்பேட் அரசு ஆரம்ப பள்ளியில் இடிந்து விழுந்த சுற்றுச்சுவரை கட்டுவதற்காக ரூ.8 லட்சமும், பாகூர் பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைப்பதற்கும், கொரவள்ளிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.31 லட்சம் மதிப்பில் கழிவறை மேம்படுத்துவதற்காக பணியும் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, கல்வித்துறை துணை ஆய்வாளர் பக்கிரிசாமி, உதவி பொறியாளர் விக்டோரியா, தி.மு.க. பிரமுகர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எம்.ஐ.டி.கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து போட்டி செயின்ட் ஜோசப் கல்லூரி அணி முதல் பரிசு பெற்றது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், 5-ம் ஆண்டு ஸ்டெல்லர் கோப்பை கால்பந்து போட்டி புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையில் 2 நாட்கள் நடைபெற்றது.
இப்போட்டியை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் 2017-ம் ஆண்டு பட்டம் பெற்ற மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி, கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் வல்லவன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் புதுவை மற்றும் தமிழக கல்லூரிகளை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி முதல் பரிசும், புதுவை மாஸ் காலேஜ் ஆப் பிஸிக்கல் எஜூகேஷன் 2-ம் பரிசும், தாகூர் கலை கல்லூரி 3-ம் பரிசும், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி 4-ம் பரிசும் வென்றது.
பெண்கள் பிரிவில் புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லூரி முதல் பரிசும், இந்திரா காந்தி கலைக்கல்லூரி 2-ம் பரிசும், இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி 3-ம் பரிசும் புதுவை தொழில் நுட்ப பல்கலைக்கழகம் 4-ம் பரிசும் வென்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி முதல்வர் மலர்கண் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை தலைவர் அருண்மொழி, ஆராய்சி மற்றும் மேம்பாடு துறை தலைவர் வள்ளி, வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, உடற்கல்வி துறை இயக்குனர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கிராம வாய்கால்கள் தூர்வாரும் பணிக்கு டெண்டர் விடப்படுகிறது என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு பொதுப்பணித்துறை சில பணிகளுக்கு குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
குமாரமங்கலத்தில் இருந்து அபிஷேகபாக்கம் டேங்க் வரை உள்ள பிரதான ஆத்து வாய்க்கால் தூர்வாருதல், கோர்க்காடு துணை வாய்க்கால் தூர்வாருதல் (கீழூர் நிறுத்தத்தில் இருந்து கோர்க்காடு தொட்டி வரை உள்ள கால்வாய்), ஏம்பலம் பாசனப்பிரிவில் உள்ள சிவராந்தகம் கால்வாய்- உபரிநீர்நிலை தொட்டி, தாணிக்குப்பம் வடிகால் வாய்க்கால் தூர்வாருதல், புதுவை முருங்கப்பாக்கம் 1-வது மதகில் தொட்டி ஷட்டருடன் சேதமடைந்த மதகு நுழைவுவாயில் அறை புனரமைத்தல்.
புதுவை செம்பியம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏம்பலம் குஞ்சன் ஓடையை தூர்வாருதல் (கோர்க்காடு தொட்டி வாய்க்காலில் இருந்து கூடுவையாறு வரை) பணிகள் நடக்க உள்ளது.
ஒப்பந்தப்புள்ளி சமர்பிக்க விரும்புவோர் பொதுப்பணித்துறை இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏ.பி.சி.டி. தெரியாது என கூறியதால் கூலி தொழிலாளியை சாராய பாட்டிலால் தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருக்கனூர் அருகே சுத்துகேணி புதுநகரை சேர்ந்தவர் மாணிக்கம். கூலி தொழிலாளி. இவர் அங்குள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் வாங்கி குடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சாராயம் குடித்துக்குகொண்டிருந்த அரியாங்குப்பத்தை சேர்ந்த சத்யராஜ்(வயது31) என்பவர் மாணிக்கத்திடம் பேச்சு கொடுத்தார். இருவரும் மது குடித்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மாணிக்கத்திடம் சத்யராஜ் ஏ.பி.சி.டி. தெரியுமா? என கேட்டார். அதற்கு மாணிக்கம் தனக்கு எதுவும் படிக்க தெரியாது என தெரிவித்தார். ஏ.பி.சி.டி. தெரியாமல் இத்தனை காலம் ஏன் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என கூறி மாணிக்கத்திடம் சத்யராஜ் தகராறு செய்தார்.
இதில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ் தான் குடித்துக் கொண்டிருந்த சாராய பாட்டிலை எடுத்து மாணிக்கத்தின் தலையில் தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த மாணிக்கம் மண்ணாடிப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சத்யராஜை தேடி வருகிறார்கள்.
காரைக்காலில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஸ் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 36 வயதுநபர், தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வருகிறது. இவரது மனைவி 3 வயது மகளுடன் காரைக்காலில் தாய்வீட்டில் உள்ளார்.
நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்த நடத்துனர், 3 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய்,கோட்டுச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கண்டக்டரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
காரைக்கால், சின்ன கண்ணு செட்டித் தெருவை சேர்ந்தவர் நவாஸ். இவர் வீடுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகிக்கும் வேலை செய்துவருகிறார்.
நகரப் பகுதியில் பாட்டி வீட்டில் வசித்து வரும் 15 வயது சிறுமியுடன் நவாசுக்கு பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் சிறுமிக்கு நவாஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் உறவினர் போலீசில் புகார் கொடுத்தார். நவாஸ்மீது ‘போக்சோ’ பிரிவில் வழக்கு கைது செய்து,சிறையில் அடைத்தனர்.
லாஸ்பேட்டை கலாம் அறிவியல் கோளரங்கத்தில் ரூ.1½ கோடியில் புத்தாக்க மையத்தை கவர்னர் தமிழிசை திறந்து வைத்தார்
புதுச்சேரி:
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், தேசிய அருங்காட்சியக மன்றம் ஆகியவை இணைந்து புதுவை லாஸ்பேட்டையில் அப்துல்கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தை 2015-ல் நிறுவினர்.
இந்த அறிவியல் மைய வளாகத்தில் தேசிய அருங்காட்சியக மன்றம், புதுவை அறிவியல் தொழில்நுட்ப மன்றம் ஆகியவை இணைந்து ரூ.1.50 கோடி செலவில் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளனர்.
புத்தாக்க மையத்தில் மாணவர்கள் கண்டுபிடிப்பு மையம், திட்ட ஆய்வகம், உடைத்தல், உருவாக்குதல், உடைந்த பொருட்களில் செய்தல், ஆலோசனைப்பெட்டி, வடிவமைப்பு ஓவிய அறை ஆகியவை உள்ளது. இந்த புத்தாக்க மையத்தின் திறப்பு விழா இன்று நடந்தது.
கவர்னர் தமிழிசை புத்தாக்க மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். முதல்-அமைச்சர் ரங்கசாமி, செல்வகணபதி எம்.பி., அறிவியல் தொழில் நுட்பத்துறை செயலர் ஸ்மித்தா, சாதனா, முதுநிலை பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த மையத்தின் செயல்பாடு, பராமரிப்பு 3 ஆண்டுக்கு ரூ.45 லட்சம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை மத்திய, மாநில அரசுகள் சரிசமமாக பகிர்ந்து கொள்ளும். இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம கூறியதாவது:-
உலக அருங்காட்சியக தினத்தில் குழந்தைகளுக்கு தேவையான வருங்கால விஞ்ஞானம், ஆராய்ச்சிக்கு இங்கே வழி வழி செய்யப்பட்டிருக்கிறது. பெங்களூரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனத்தோடு அப்துல் கலாம் அறிவியல் மையம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட இருக்கிறது.
இது வருங்காலத்தில் குழந்தைகளின் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிக உதவியாக இருக்கும். இதன் மூலம், எந்த பள்ளியில் படிக்கும் எந்த குழந்தையும் எந்த ஆராய்ச்சி செய்யலாம்.
புதுவை அரசும் மத்திய கலாச்சார அமைச்சகம் இணைந்து செய்யும் ஒரு புதிய முயற்சி. மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் இளைஞர்களுக்கு எவ்வளவு சிறந்த முறையில் வழிகாட்ட முடியும் என்பதற்கும், மக்கள் எவ்வளவு பலம் பெறுவார்கள் என்பதற்கும் இந்த கண்காட்சியும் ஆராய்ச்சி மையமும் உதாரணம்.
மரியாதைக்குரிய அப்துல் கலாம், வாழத் தகுந்த பூமியாக, முழுமை–யாக மறுசுழற்சிக்கு சாத்திய–முள்ள பூமியாக இது இருக்கவேண்டும் என்று கூறினார். குப்பைகளை அகற்ற ஒரு ரோபோ கண்டுபிடித்திருக்கிறார்கள். குப்பைகள் இல்லாத புதுவையாக மாறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சருடன் கலந்தாலோசனை செய்து திட்டங்களை வகுத்து குப்பைகள் இல்லாத புதுவையாக மாற்றும் வகையில் விஞ்ஞான–பூர்வமாக பல நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஆலோசனை இங்கு கிடைத்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். அவரிடம், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளாரே? என கேள்வி எழுப்பியதற்கு, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் கருத்து கூற விரும்பவில்லை எனக்கூறி சென்றார்.
வில்லியனூர் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே முத்துபிள்ளைப்பாளையம் அய்யனார் கோவில் அருகே பள்ளி மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு நின்றுக்கொண்டிருந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
அவர்களது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 80 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்த கார்த்திகேயன் (21) மற்றும் வில்லியனூர் கோட்டைமேடு நடுத்தெருவை சேர்ந்த முகிலன்(22) என்பதும், இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களுக்கும், சிறுவர்களுக்கும் கஞ்சா விற்று வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொழிலாளியை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை கோவிந்தசாலை ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது39). இவர் காலாப்பட்டில் உள்ள ஒரு மதுக்கடையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார்.
இரவு 11 மணியளவில் வேலை முடிந்து ரவிச்சந்திரன் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். புதுவை அண்ணாசாலை-ராஜா தியேட்டர் அருகே வந்த போது கோவிந்தசாலையை சேர்ந்த ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள ஒரு காபி கடையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் மணிவண்ணன் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிக்கொண்டிருந்தது.
இதனை ரவிச்சந்திரன் தட்டிக்கேட்டார். அப்போது அந்த கும்பல் ரவிச்சந்தினையும் அந்த கும்பல் கல்லால் சரமாரியாக தாக்கியது.
இதில் படுகாயமடைந்த ரவிச்சந்திரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோரை அந்த வழியாக வந்த மணிகண்டன் என்பவர் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
இதுகுறித்து ரவிச்சந்திரன் பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரவிச்சந்திரனையும், மணிவண்ணையும் தாக்கியவர்கள் முத்தியால்பேட்டை சோலைநகரை சேர்ந்த பிரவீன்(வயது23), சந்தோஷ்(21) மற்றும் முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த கிரி(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன்(57). இவர் கடந்த 17 ஆண்டுகளாக பூமியான்பேட்டை ஜவகர்நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் திருவாண்டார் கோவிலில் உள்ள ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் ஆட்களை வேலைக்கு அமர்த்தும் காண்டிராக்டர் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும் தொண்டமாநத்தத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு தமிழரசன் தொண்டமாநத்தத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவுக்கு சென்றார். அங்கு மண்டப மேடையில் மொய்பணம் கொடுத்து விட்டு கீழே இறங்க முயன்றார். அப்போது அங்கு வந்த ஜெயமூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி தமிழரசனை தாக்கினார். இதனை அங்கிருந்த 3 பேர் தட்டிக்கேட்ட போது அவர்களையும் ஜெயமூர்த்தி தாக்க முயன்றார்.
மேலும் தமிழரசனை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு ஜெயமூர்த்தி சென்றார்.
இதுகுறித்து தமிழரசன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துறைமுக பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை துறைமுக முகத்துவாரத்தில் மணல் தூர்ந்ததால் துறைமுக செயல்பாடு படிப்படியாக குறைந்து 2004-ம் ஆண்டு முற்றிலும் முடங்கியது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் இந்த துறைமுகத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்றது.
இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுவை கடல் வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் நள்ளிரவில் திடீரென பழைய துறைமுக பாலம் இடிந்து விழுந்தது. தாங்களும், கவர்னரும் சேதமடைந்த பாலத்தை பார்த்த போது நானும் உடனிருந்தேன்.
அப்போது தாங்களும், கவர்னரும், புதுவைக்கு சாகர்மாலா திட்டத்தின் மூலம் ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் புதுவையின் அடையாளமாக விளங்கும் இப்பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்ைக எடுக்கப்படும் என்று உறுதி அளித்தீர்கள்.
ஆனால், இது சம்பந்தமாக எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் இருக்கிறது. தாங்கள் உறுதி அளித்தது போல் விரைவில் பாலம் கட்டுமான பணியை பழமை மாறாமல் புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான பணியை விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தார். அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, கிளை செயலாளர் செல்வம், காலப்பன் மற்றும் தி.மு.க.வினர் உடனிருந்தனர்.
ஜூன் 3, 4-ந் தேதிகளில்பு துவையில் தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளர்.
புதுச்சேரி:
புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை காவல்துறை, கல்வித்துறை, தொழில்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பதிவு உயர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறோம்.
பிரதமர் கூறியது போல பெஸ்ட் புதுவையை நோக்கி அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அடுத்த மாதம் (ஜூன்) 3,மற்றும்4-ந் தேதிகளில் புதுவையில் தொழில் முனைவோர் மாநாடு நடத்த உள்ளோம். இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பல்வேறு முதலீட்டாளர்கள் புதுவையில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். தொழில் செய்ய உகந்த மாநிலமாக புதுவையை உருவாக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம்.
இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.
அடையாள அட்டை வழங்காததால் மானியம், சலுகை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்று முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருபுவனை தொகுதி மதகடிப்பட்டு விவசாய பண்ணையில் உழவர் உதவியகம் மூலம் திருபுவனை, கலிதீர்த்தாள்குப்பம், ஆண்டியார் பாளையம், குச்சிப்பாளையம், சிலுக்காரிபாளையம், பி.எஸ்.பாளையம், நல்லூர், திருவண்டார்கோவில், சன்னியாசிகுப்பம், கொத்தபுரிநத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாயிகள் விவசாய விளை பொருட்களுக்கான மானியம் மற்றும் விதைகள் மற்றும் இடுபொருள்கள் பெற்று வருகின்றனர்.
சிறு விவசாயிகள் தங்கள் அடையாள அட்டையை பயன்படுத்தி இந்த உதவிகளை பெற்று வருகின்றனர்.
தற்போது விவசாயிகள் புதிய சிறு விவசாய அடையாள அட்டை பெறுவதற்கு விண்ணப்பித்து அது அதிகாரிகளால் ஆய்வு செய்து தயார் செய்யப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள் உழவர் உதவியகம் மூலம் மானியம், சலுகைகளை பெற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதில் முதல்- அமைச்சர்மற்றும் வேளாண் அமைச்சர் தலையிட்டு துறையின் இயக்குனரிடம் அறிவுறுத்தி உடனடியாக விவசாயிகளுக்கு சிறுவிவசாயி அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கோபிகா அறிக்கையில் கூறியுள்ளார்.






