என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மனு வழங்கிய காட்சி.
    X
    முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மனு வழங்கிய காட்சி.

    துறைமுக பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. மனு

    துறைமுக பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று ரங்கசாமியிடம் கென்னடி எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை துறைமுக முகத்துவாரத்தில் மணல் தூர்ந்ததால் துறைமுக செயல்பாடு படிப்படியாக குறைந்து 2004-ம் ஆண்டு முற்றிலும் முடங்கியது. மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் இந்த துறைமுகத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

    ஆனால், கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திரைப்பட படப்பிடிப்புகள் மட்டும் அவ்வப்போது நடைபெற்றது. 
    இந்த நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுவை கடல் வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் நள்ளிரவில் திடீரென பழைய துறைமுக பாலம் இடிந்து விழுந்தது. தாங்களும், கவர்னரும் சேதமடைந்த பாலத்தை பார்த்த போது நானும் உடனிருந்தேன்.

    அப்போது தாங்களும், கவர்னரும், புதுவைக்கு சாகர்மாலா திட்டத்தின் மூலம் ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் புதுவையின் அடையாளமாக விளங்கும் இப்பாலத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்ைக எடுக்கப்படும் என்று உறுதி அளித்தீர்கள். 

    ஆனால், இது சம்பந்தமாக எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் இருக்கிறது. தாங்கள் உறுதி அளித்தது போல் விரைவில் பாலம் கட்டுமான பணியை பழமை மாறாமல் புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி இதற்கான பணியை விரைவில் செய்து தருவதாக உறுதி அளித்தார்.  அப்போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, கிளை செயலாளர் செல்வம், காலப்பன் மற்றும் தி.மு.க.வினர் உடனிருந்தனர்.
    Next Story
    ×