என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பொங்கல் விழாவை முன்னிட்டு ஆரோவில், வானூர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையங்களில் போலீசார் தமிழ் கலாச்சாரப்படி பெண் போலீசார் புடவை அணிந்தும் ஆண் போலீசார் வேட்டி அணிந்தும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
    • காவலர் முதல் அதிகாரிகள் வரை ஒரே நிறத்தில் புத்தாடை உடுத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    பொங்கல் விழாவை முன்னிட்டு ஆரோவில், வானூர், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையங்களில் போலீசார் தமிழ் கலாச்சாரப்படி பெண் போலீசார் புடவை அணிந்தும் ஆண் போலீசார் வேட்டி அணிந்தும் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

    ஆரோவில் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் போலீஸ் நிலைய வாசலில் சூரிய பொங்கலிட்டனர். வானூர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராபின்சன், கோட்டகுப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் முன்னிலையில் அந்தந்த போலீஸ் நிலையங்களில், மண்பானையில் பொங்கலிட்டனர்.

    காவலர் முதல் அதிகாரிகள் வரை ஒரே நிறத்தில் புத்தாடை உடுத்தி பொங்கல் விழாவை கொண்டாடினர். பொங்கல் சூரியனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    • விசாரணையில் இடிபாட்டில் சிக்கி இறந்த நபர் தஞ்சாவூர் விளார் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ஜெகதீசன் என்பதும் அவர் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணி என்பதும் தெரிந்தது.
    • மறைவான இடத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய போது சம்பவம் நடந்துள்ளது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை கென்னடி நகருக்கு செல்லும் சுப்புராயப்பிள்ளை சத்திரம் சாலையில் அரசின் கால்நடை துறை அலுவலகம் உள்ளது.

    கால்நடை துறை அலுவலக கட்டிடத்தின் மதில்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் அந்த வழியாக சென்ற சுமார் 40 வயது மதிக்கதக்க நபர் சிக்கி கொண்டார்.

    அவரது கூச்சல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் வந்தனர். தகவல் அறிந்த தி.மு.க. பொறுப்பாளர் கோபால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தார். பொதுமக்கள் துணையோடு இடிபாட்டில் சிக்கியிருந்த நபரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

    விசாரணையில் இடிபாட்டில் சிக்கி இறந்த நபர் தஞ்சாவூர் விளார் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ஜெகதீசன் (42) என்பதும் அவர் புதுவைக்கு வந்த சுற்றுலா பயணி என்பதும் தெரிந்தது. மேலும் மறைவான இடத்தில் சிறுநீர் கழிக்க ஒதுங்கிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

    கால்நடை துறை அலுவலக மதில் சுவர் மிகவும் மோசமாக உள்ளது என்றும், விபத்து ஏற்படுவதற்கு முன் அதனை உடனடியாக இடிக்க வேண்டும் என்றும் கென்னடி நகர் தி.மு.க. நிர்வாகிகள் துறை இயக்குநரிடம் ஒரு மாதத்திற்கு முன்பு மனு அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் அலட்சியத்தால் ஒரு உயிர் பலியாகி உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறினர்.

    இடிபாட்டில் சிக்கியவரை உருளையான்பேட்டை தி.மு.க. பொறுப்பாளர் கோபால் தலைமையில் தி.மு.க.வினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய பின் கட்டிடம் இடிந்த இடத்தை பார்வையிட்டனர்.

    • புதுவையில் முதியோர், ஆதரவற்றோர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
    • இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்த 616 ஆக உயர்ந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதியோர், ஆதரவற்றோர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 847 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, விண்ணப்பித்து நிலுவையில் உள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஜனவரி 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை 16 ஆயிரத்து 769 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவி த்தொகை பெற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் இம்மாதம் முதல் உதவித்தொகை பெற உள்ளனர். இதனால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்த 616 ஆக உயர்ந்துள்ளது. முதல்கட்டமாக தட்டாஞ்சாவடி, இந்திராநகர் தொகுதியில் புதிய பயனாளிகளுக்கு உதவித் தொகையை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், அரசு செயலர் உதயகுமார், இயக்குனர் முத்துமீனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • புதுவை மாநில திமுக சார்பில், சங்கமம் கலைவிழாவோடு சமத்துவ பொங்கல் விழா பாகூர் மூலநாதர் கோவில் அருகில் இன்று கோலாகலமாக நடந்தது.
    • கிராமிய இசைக்கலைஞர் சினிமா பாடகர்கள் சித்தன் ஜெயமூர்த்தி தலைமை யிலான குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில திமுக சார்பில், சங்கமம் கலைவிழாவோடு சமத்துவ பொங்கல் விழா பாகூர் மூலநாதர் கோவில் அருகில் இன்று கோலாகலமாக நடந்தது.

    செந்தில்குமார் எம்.எல்.ஏ.ஏற்பாட்டில் மூலநாதர் கோவில் குருக்கள் பாபு, அருட்தந்தை பெர்க்மென்ஸ்பீட்டர், பள்ளிவாசல் முத்தவல்லி சமியுல்லா முன்னிலையில் 320 பெண்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு சமத்துவப் பொங்கலிட்டனர். இதனை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    மங்கள இசையுடன் தொடங்கிய புதுவை சங்கமம் கலை விழாவில், புதுவை மண்ணின் இயல், இசை, நாடகக் கலைஞர்களை ஒன்றிணைத்து, ஆஞ்சநேயர் சிலம்பம், மல்லர் கம்பம், மரக்கால் ஆட்டம், சூரமங்கலம் கும்மிப்பாட்டு, உடுக்கை பம்பை, கரகாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கண்மணி கிரியேஷன் அமைப்பு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    கிராமிய இசைக்கலைஞர் சினிமா பாடகர்கள் சித்தன் ஜெயமூர்த்தி தலைமை யிலான குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியை புதுவை சங்கமம் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் புதுவை தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, பொதுச் செயலாளர் சீனு. மோகன்தாசு, முன்னாள் எம்.எல்.ஏ. பூ. மூர்த்தி, புதுவை கண்மணி கிரியேஷன் அமைப்பின் தலைவரும், தி.மு.க இலக்கிய அணித் தலைவருமான எம். எஸ். ராஜா, தமிழ்ச்சங்கப் பொருளாளர் திருநா வுக்கரசு, துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், துணை செயலர் அருள்செல்வம், புதுவை மாநில தமிழ்க் கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆறுசெல்வம், தி.மு.க. தொகுதி செயலாளர் பாண்டு அரிகிருஷ்ணன், முன்னாள் துணை சேர்மன் தவமுருகன், விவசாய அணி அமிர்தலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தமிழரசன், மகளிர் அணி கல்பனா அபிமன்யு, நெசவாளர் அணி சிவா, இளைஞர் அணி ரவீந்தர், மாணவர் அணி கீர்த்தி யாழினி, நிர்வாகிகள் சால்வை மூர்த்தி, குமார், சத்தியமூர்த்தி, குமரன், பாலு, சேகர், சிவா, பார்த்திபன், வினோத், மணிவண்ணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

    விழாவில், மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் சண்.குமரவேல், ஏ.கே. குமார் என்கிற கிருஷ்ணன், குணாதிலீபன், எஸ்.எஸ். செந்தில்குமார், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் கே.எம்.பி. லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் எஸ். கோபால், கார்த்திகேயன், முகிலன், சன். சண்முகம், வடிவேல், கோபாலகிருஷ்ணன், டாக்டர் நித்திஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், பூ.சு. இளங்கோவன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, கோகுல், பழனி, பிரபாகரன், சத்யா ஆறுமுகம், ரவீந்திரன், தொகுதி செயலாளர்கள் ராமசாமி, சக்திவேல், செ.நடராஜன், ராஜா, சிவக்குமார், சவுரிராஜன், சக்திவேல், சீத்தாராமன், செல்வ. பார்த்திபன், தங்கவேலு, ரவிச்சந்திரன், மதிவாணன், கலைவாணன், கலிய கார்த்திகேயன், சாரங்கன், ராஜாராமன், அணிகளின் அமைப்பாளர்கள் மணிமாறன், சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விழாவிற்கு வந்தவர்களை பாகூர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அவரது துணைவியார் ஜனனி ஆகியோர் வரவேற்றனர்.

    • புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்கம் மாநில செயலாளர் கராத்தே சுந்தரராஜன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் தலைமை விருந்தினராக புதுவை தமிழ் சங்கத்தின் துணைத் தலைவர் பாலசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார். புதுவை மாநில ஒலிம்பிக் சங்க துணை தலைவர்வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் பொங்கல் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்து வாழ்த்துரை வழங்கினார்.

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்கம் மாநில செயலாளர் கராத்தே சுந்தரராஜன் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளியில் கோலப் போட்டி நடைபெற்றது.

    மேலும் புது பானையில் பொங்கலிட்டு மாணவர்கள் அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கூறி மகிழ்ந்தார்கள்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளி மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின், ஆசிரியர் ஜெனிபர் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பத்தில் தொகுதி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
    • பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், உசுடு தொகுதி துணைத் தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பத்தில் தொகுதி பா.ஜனதா மகளிர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

    அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமையில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநில துணைத்தலைவர் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ, மாநில மகளிர் அணி தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், உசுடு தொகுதி துணைத் தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் அணி செயலாளர் மீனா வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி மகளிர் அணி தலைவி லட்சுமி, கூடப்பாக்கம் அய்யனார், ஊர் முக்கியஸ்தர்கள் தர்மலிங்கம், சுந்தரமூர்த்தி, சேகர், அச்சுதா, ஆறுமுகம், ஆறுபடையப்பா, சவுரி, தர்மன், பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சமத்துவ பொங்கல் விழாவில் பெண்களுக்கான கோலப் போட்டிகள், இசை நாற்காலி, லெமன் ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் யுத்தம் கலை க்குழுவின் தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சி ஏற்பாட்டினை பிள்ளை யார்குப்பம் பா.ஜனதா கிளை தலைவர் ஆனந்த் செய்திருந்தார்.

    • தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனை வருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.

    புதுச்சேரி:

    பொங்கல் பண்டிகையையொட்டி புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனை வருக்கும் இனிய தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது பொங்கல் விழா. இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பை யும், கலை களையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம்.

    2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டா க ஐ.நா. சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மை யையும் பாரம்பரிய உணவு தானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் என்ற செய்தியோடு, இந்த பொங்கல் திருநாளில் அனை வரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் போகிப்பண்டிகையுடன் தொடங்கியது. அனைத்துத் தரப்பின ராலும் ஆனந்தத்தோடு கொண்டா டப்படுவது பொங்கல் திருநாள். தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள்தோறும் கொண்டாடப்படுகின்றது.
    • பண்டிகை யினையொட்டி சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவைகளை எரிக்காமல் பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வுடன் கொண்டாடினர்.

    புதுச்சேரி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் போகிப்பண்டிகையுடன் தொடங்கியது.

    அனைத்துத் தரப்பின ராலும் ஆனந்தத்தோடு கொண்டா டப்படுவது பொங்கல் திருநாள். தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள்தோறும் கொண்டாடப்படுகின்றது. கிராமங்களில் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிக களை கட்டும். பண்டிகையின் முதல் நாளான போகி பண்டிகையையொட்டி புதுவையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடும் குளிரில் முதல் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எடுத்து வந்து வீட்டின் வாசல் முன்பு தீயிட்டு எரித்தார்கள், பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    பண்டிகை யினையொட்டி சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் உள்ளிட்டவைகளை எரிக்காமல் பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வுடன் கொண்டாடினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சுகாதாரத்துறையில் ஊழியர்கள் வருகையை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
    • சரியான நேரத்தில் பணிக்கு வராத 400 அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள 54 துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருவதில்லை.

    பணி நேரத்தில் இருக்கையில் இருப்பதில்லை. இதையடுத்து நிர்வாக சீர்திருத்த துறை தனிப்படை அமைத்து கடந்த மாதம் 18-ந் தேதி முதல் ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்கிறது. சுகாதாரத்துறையில் ஊழியர்கள் வருகையை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

    இதில் 90 சதவீத ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணியில் இருந்தனர். அங்கிருந்த பதிவேட்டை கைப்பற்றிய தனிப்படையினர் பணிக்கு வராதவர்கள் பட்டியலை எடுத்தனர். இதுவரை 25 அரசு துறைகளில் வருகை பதிவை தனிப்படை ஆய்வு செய்து சரியான நேரத்தில் பணிக்கு வராத 400 அரசு ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    • கடையில் வேலை செய்த பெண் ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார்.
    • கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ.13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், (வயது 50). லெனின் வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் வாணிதாசன் வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார்.

    அப்போது மளிகை கடைக்கு வந்த மர்ம நபர், முருகானந்தத்தை செல்போனில் தொடர்பு கொண்டு, கடையில் அரிசி, நெய் விற்பனை குறித்து கேட்டுக் கொண்டிருந்தார்.

    அதே நேரத்தில் கடையில் வேலை செய்த பெண் ஊழியர் கீர்த்தனாவிடம், அவசரமாக அண்ணன் பணம் வாங்கி வரச் சொன்னார். கல்லா பெட்டியில் உள்ள பணக்கட்டை எடுத்துக்கொடு என்றார். அதற்கு கீர்த்தனா, முதலாளி சொல்லாமல் தர முடியாது என்றார்.

    உடன் மர்ம நபர், செல்போன் இணைப்பில் இருந்த முருகானந்தத்திடம் அரிசிக்கு பதிலாக நெய் கேட்டால் மாற்றி தரமாட்டேன் என்கிறார். நீங்கள் கூறுங்கள் என்றபடி, போனை கடை ஊழியர் கீர்த்தனாவிடம் கொடுத்தார்.

    செல்போனில் பேசிய முருகானந்தம், கீர்த்தனாவிடம் கொடுங்கள் எனக் கூறினார். அதன்பேரில் கீர்த்தனா, கல்லா பெட்டியில் இருந்த ரூ.13,500 பணத்தை மர்ம நபரிடம் கொடுத்தார்.

    உடன் அந்த நபர் வேகமாக புறப்பட்டு சென்றார். முருகானந்தம் கடைக்கு வந்த பிறகே, மர்ம நபர் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து முருகானந்தம் அளித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • ரூ.3.35 லட்சம் வீதம் 3 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை எல்.ஐ.சி. வீட்டுவசதி வாரியம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் இணைந்து பூரணாங்குப்பம், புதுக்குப்பம் மற்றும் தானம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு தலா ரூ.3.35 லட்சம் வீதம் 3 பள்ளிகளுக்கு மொத்தம் ரூ.10 லட்சத்து 5 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு பூமிபூைஜ செய்து பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா விவசாய அணி பொறுப்பாளர் ராமு, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், வேளாண் கடன் வழங்கும் சங்க தலைவர் தட்சிணாமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு, பள்ளி துணை ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
    • புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கொடியசைத்துப் பேரணியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கொடியசைத்துப் பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் கவுண்டன் பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு பேரணியாகச் சென்று டெங்கு நோயை விரட்டுவோம்.

    டெங்கு கொசுவை ஒழிப்போம், மழை நீர் தேங்காாமல் தடுப்போம், கொசுக்களை ஒழிப்போம் டெங்கு வராமல் தடுப்போம் போன்ற பதாகைகளை ஏந்திய வண்ணம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின்மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×