என் மலர்
புதுச்சேரி
- அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
- கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த இரும்பை குபேரன் நகரில் பாலா திரிபுர சுந்தரி அம்பாள் கோவில் உள்ளது.
இங்கு 10-ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி சதசண்டி ஹோம பூஜை கடந்த 3-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை 7.30 மணிக்கு சதசண்டி ஹோமம் ஆரம்பமானது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. இறுதியில் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கலசம் புறப்பாடாகி அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
இரவு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பா லித்தார். தொடர்ந்து பவுர்ணமி பூஜை, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏற்பாடு களை கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
- புபேஷ் குப்தா கடந்த 17 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- ஆந்திர மாநில கடப்பா மாவட்டத்தில் புலிவேந்தலாவில் அந்த மாநில முதல்-மந்திரியின் நேரடி பார்வையில் நகர வனம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் கைவினை கிராமம் முருங்கப்பாக்கத்தில் இயங்கி வருகிறது. சுற்றுலாத் துறையின் கீழ் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுஉள்ளன.
கைவினை கலைஞர்கள் மட்டுமல்லாது ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் இங்கு பல்வேறு சிற்பங்கள் உருவாக்கப்படுகின்றன. அதிலும் குறிப்பிடத்தக்க வகையில் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புதுவை பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களில் அழிவின் விளிம்பில் உள்ள பறவைகள், மிருகங்கள், பூச்சி வகைகள் போன்றவற்றை சிற்பங்களாக வடிவமைக்கபடுகின்றன.
புதுவை அரசும் சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் இணைந்து இந்த விழிப்புணர்வு சிற்பங்கள் உருவாக்கி வருகின்றன. சர்வதேச சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் நிறுவனரான முனைவர் புபேஷ் குப்தா கடந்த 17 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து வனவிலங்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இவரது முயற்சியால் புதுவையை அலங்கரித்து வரும் இது போன்ற சிற்பங்கள் தற்போது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என தென் மாநிலங்களுக்கும் செல்ல தொடங்கியுள்ளன. இங்கு உருவாகும் மிருகங்கள், பறவைகள் போன்றவை திருப்பதி பூங்காக்களிலும் சேலம் சரணாலயங்களும் வண்டலூர் மிருக காட்சி சாலையிலும் மக்களை ஈர்க்கும் வகையில் இயற்கை சூழலுடன் வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது ஆந்திர மாநில கடப்பா மாவட்டத்தில் புலிவேந்தலாவில் அந்த மாநில முதல்-மந்திரியின் நேரடி பார்வையில் நகர வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே புலி, சிங்கம், மான்கள், மயில், பாம்பு உட்பட 50 கற்சிற்பங்கள் புதுவையில் உருவாக்கப்பட்டு அனுப்பப் பட்டுள்ளன. தற்போது வரவேற்பில் வைக்க பிரமாண்ட யானை சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலை 250 கிலோ பைபரில் 9½ அடி உயரத்தில் 90 நாட்களில் 10 கலைஞர்களை கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பிரமாண்ட யானைசிலை ஆந்திராவிற்கு பயணமாக உள்ளது.
- புதிய விதி அமலுக்கு வருகிறது
- மோசடி செய்யும் நிறுவனத்தின் சொத்துக்கள் பிணையாக பறிமுதல் செய்யப்படும்.
புதுச்சேரி:
புதுவையில் பலர் ஏலச்சீட்டுகள், தீபாவளி சீட்டுகள், நிதி நிறுவ னங்களை அரசின் அனுமதி யின்றி நடத்தி வருகின்றனர்.
இதில் ஏழை மக்கள் பலரும் பணம் செலுத்தி ஏமாந்து வருவது வாடிக்கை யாக உள்ளது. போலீசார் வழக்குப்பதிந்து மோசடி செய்தவர்களை கைது செய்தாலும் பொதுமக்கள் கட்டிய பணம் திரும்ப கிடைப்பதில்லை.
இந்நிலையில் மோசடி செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசின் ஒழுங்கு படுத்தப்படாத வைப்பு நிதி சட்ட திருத்த மசோதா 2019 புதுவையில் அமல்படுத் தப்பட உள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை செயலர் வல்லவன் அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த சட்டத்தின் மூலம் ஒழுங்குப்படுத்தப்படாத வைப்புத் தொகை செலுத்து வது முழுமையாக தடை செய்யப்படும். வைப்புத் தொகை செலுத்தி யவர்களுக்கு பணத்தை திருப்பித்தரா விட்டால் கடும் தண்டனை கிடைக்கும்.
வைப்பு நிதியை பெற்றுத்தர அதிகாரம் பெற்ற அதிகாரி நியமிக்க ப்படுவார். மோசடி செய்யும் நிறுவனத்தின் சொத்துக்கள் பிணையாக பறிமுதல் செய்யப்படும்.
வைப்புத் தொகை செலுத்தி யவர்களின் தொகையை திருப்பித்தர நிறுவன உடைமைகள், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். இதற்கான விதிமுறைகள் விரைவில் வகுக்கப்பட உள்ளன.
- மருத்துவ அதிகாரிகள் டாக்டர் சரண்யா மற்றும் டாக்டர் பாலாஜி தொடங்கி வைத்தனர்.
- வாய்க்கால் தூர் வாரி குப்பைகளை அகற்றினர்.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக தீவிர டெங்கு ஒழிப்பு பணி ஏ.எப்.டி. மில் சாலையில் நடைபெற்றது.
இப்பணியை முதலியார் பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அதிகாரிகள் டாக்டர் சரண்யா மற்றும் டாக்டர் பாலாஜி தொடங்கி வைத்தனர்.
புதுவை நகராட்சி ஊழியர்கள், சுகாதார அலுவலர் துளசிராமன் தலைமையில் வாய்க்கால் தூர் வாரி குப்பைகளை அகற்றினர்.
- குடிமை பணி தேர்வு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
புதுச்சேரி:
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்துறையுடன் பயிற்சி குடிமை பணி தேர்வு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.மற்றும் வேலை வாய்ப்பு துறை இணைந்து நடத்திய சிவில் சர்வீஸ் குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டிவனம் சப்-கலெக்டர் கலந்துகொண்டு பேசினார்.
கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மத்திய தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமை பணி தேர்வு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மயிலம் கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார்.
துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் மருத்துவர் நாரயணசாமி மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் இயக்குனர் செந்தில் பேசினார். கல்லூரியின் முதல்வர் ராஜப்பன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா கலந்து கொண்டு மாணவர்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த வழிகாட்டு தல்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் அனைத்து துறையைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து மாணவர்கள் சார்பில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பான முறையில் இயல்பான பாணியில் விளக்கிக்கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் துறைத்தலைவர் கலைவாணி ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.
- மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் கம்யூனி கேஷன் துறை தலைவர் ஷோபா வரவேற்றார்.
- மத்திய அரசின் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரா னிக் கம்யூனிகேஷன் மற்றும் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் துறை சார்பாக டெக்னோ ஸ்பார்க் 2023 பெயரில் தொழில்நுட்ப சிம்போசியம் எனும் கருத்தரங்கம் கடந்த 4, 5-ந் தேதி நடைபெற்றது.
தொடக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜய கிருஷ்ண ரபாகா தலைமை தாங்கினார்.
துணை முதல்வர் ஐயப்பன் சிறப்புரை ஆற்றினார். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக் கம்யூனி கேஷன் துறை தலைவர் ஷோபா வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து இரு நாட்களாக நடைபெற்ற பல்வேறு தொழிற்நுட்பம் மற்றும் தொழிற்நுட்பம் அல்லாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிறைவு நாளான நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசினார். மேலும் மத்திய அரசின் போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார். பின்னர் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
விழாவில் இந்திய எம்.யூ.என்.எஸ்.எஸ். எனப்படும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் பத்மநாபன் மற்றும் ராஜீவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு இடையே பரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
நிகழ்ச்சியில் பொறியியல் துறை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் துறை தலைவர் பேராசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.
- தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது.
- இதற்கான ஏற்பாடுகளை காட்டுக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதி காட்டுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள கடம்பாடி அம்மன் 42வது ஆண்டு செடல் உற்சவ விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நேரங்களில் சிறப்பு அலங்காரத்தில் ராஜராஜேஸ்வரி, தானிய லட்சுமி, ஆனந்த சேஷனம், திருச்செந்தூர் முருகன், மதுரை மீனாட்சி சாமிகளின் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 108 பால்குட ஊர்வலமும் பிறகு மாலையில் 101 தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது.
பிறகு கார், டிராக்டர், கிரேன் வாகனங்களை கொண்டு பக்தர்கள் செடல் உற்சவம் நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை காட்டுக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனர்.
- கல்வி கற்க எப்போதும் யாருக்கும் வயது தடையாக இருந்தது இல்லை.
- கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி சுஜாதா ஜடா வெற்றி பெற்றார்.
காரைக்கால் :
நம்மில் பலருக்கு டாக்டராக வேண்டும் எனற கனவு இருந்தாலும், அதற்கான தகுதி இருந்தால் மட்டுமே மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்து சேர்ந்து படிப்பதுடன் மருத்துவ சேவை செய்வதில் சாதிக்க முடியும். அதேநேரத்தில் படிப்புக்கு வயது தடை இல்லை என்பது பலரால் பல வகைகளில் நிரூபிக்கப்பட்டு வந்துள்ளது. அந்தவகையில் 63 வயதில் பெண் ஒருவர் காரைக்காலில் எம்.பி.பி.எஸ். படித்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
50 வயதாகி விட்டாலே பலர் ஓய்வை தேடும் இந்த காலத்தில், மக்களுக்கு சேவை செய்வதற்காக 63 வயதான சுஜாதா ஜடா, என்ற பெண், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் தனியார் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து வருவது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த ருசிகரம் குறித்த விவரம் வருமாறு:
மத்தியப்பிரதேச மாநிலம் அம்லா பகுதியைச் சேர்ந்தவர் வினோத் யாதவ் (66), இவர் பிரபல தொழிலதிபர். இவரது மனைவி சுஜாதா ஜடா (63). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர், மத்திய பிரதேசத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், ராணுவத்தில் 8 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற சுஜாதா ஜடா, தேசிய வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றார். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் சுஜாதா ஜடா, ஓய்வு காலத்தை மக்களுக்கு சேவை செய்யும் வகையில் மாற்ற விரும்பினார். இதற்காக அவர் தேர்ந்தெடுத்தது டாக்டர் படிப்பு. அதற்கு முன்புபோல் மருத்துவக் கல்லூரியில் உடனே சேர்ந்து விட முடியாது என்பதால் நீட் தேர்வுக்கு தயாரானார்.
அதன் விளைவாக கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து, கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி சுஜாதா ஜடா வெற்றி பெற்றார். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விநாயகா மிஷின் மருத்துவக்கல்லூரியில் சுஜாதா ஜடாவிற்கு இடம் கிடைத்தது. தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியாக சுஜாதா ஜடா கல்லூரியில் நுழைந்தார்.
வகுப்பறைக்கு சென்ற சுஜாதா ஜடாவை, கல்லூரி மாணவர்கள் புதிய பேராசிரியை என கருதி கைத்தட்டி வரவேற்றனர். ஆனால், சுஜாதா ஜடாவோ தனது இயல்பான புன்னகையில், நானும் உங்களைபோல் ஒரு மாணவிதான் என்றதும் முதலில் மாணவர்கள் நம்ப மறுத்தனர்.
பின்னர், மாணவிக்கான அடையாள அட்டையை அவர் காட்டியதும், சக மாணவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். பெற்றோர் வயதில் ஒரு மாணவியா? என ஆச்சரியமாக இருந்தாலும், போகபோக சக மாணவியை போல், அனைவரும் அவருடன் பழகி வருகின்றனர். இதில் மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சுஜாதா ஜடாவுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவ பேராசிரியருக்கு வயது 48.
தனது படிப்பு குறித்து சுஜாதா ஜடா கூறுகையில், ''ராணுவத்திலும், அதன்பிறகு வங்கியிலும் வேலை பார்த்தபோதிலும் எனது கவனம் மக்கள் சேவை என்பதே என்றிருக்கும். கல்வி கற்க எப்போதும் யாருக்கும் வயது தடையாக இருந்தது இல்லை. தன்னம்பிக்கை இருந்தால் போதும். தற்போது எனக்கு வயது 63 என்றாலும் அதை நான் எப்போதும் உணர்ந்தது இல்லை. என் நோக்கமெல்லாம், மருத்துவமனையே இல்லாத எனது கிராமத்தில், சிறு மருத்துவமனை அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள். அதற்காகதான் முறைப்படி டாக்டருக்கு படித்து சேவை செய்ய உள்ளேன்'' என்றார்.
சுஜாதா ஜடாவின் டாக்டர் கனவு நிறைவேற பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
- புதுவை திரும்பிய ஜெர்மன் இளம்பெண் ஓடும் பஸ்சில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
- வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது பெங்களூருவை சேர்ந்த வாலிபர் என தெரியவந்தது.
புதுச்சேரி:
ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோணமங்கலம் கிராமத்தில் தங்கியிருந்து சமூக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர், பெங்களூருவில் உள்ள தனது தோழியை பார்க்க அங்கு சென்றார். புதுவை புதிய பஸ்நிலையத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்ட படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ்சில் புறப்பட்டு சென்றார்.
நள்ளிரவில் முன் வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் இருந்த 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ஜெர்மன் நாட்டு பெண்ணின் படுக்கைக்கு அருகில் காலியாக இருந்த படுக்கையில் வந்து படுத்துக்கொண்டார்.
அப்போது ஓடும் பஸ்சில் அவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். திடீரென அவரை கட்டியணைத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சல் போட்டார். இதனால் பஸ்சுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சை நிறுத்தி விசாரித்ததில் ஜெர்மன் பெண்ணை பலாத்காரத்துக்கு முயன்றது தெரியவந்தது.
உடனே பஸ்சின் டிரைவர், கண்டக்டர் அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்து பஸ்சில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டனர். தொடர்ந்து அந்த பஸ் பெங்களூரு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் பெங்களூருக்கு சென்று விட்டு புதுவை திரும்பிய ஜெர்மன் இளம்பெண் ஓடும் பஸ்சில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது பெங்களூருவை சேர்ந்த வாலிபர் என தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
- கங்கா நகரில் அமைந்துள்ள பராசக்தி கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.
- இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிழக்கு கடற்கரை சாலை அனிச்சங்குப்பம் கங்கா நகரில் அமைந்துள்ள பராசக்தி கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. இதில் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை யொட்டி நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. இதில் புதுவை பா.ஜ.க மாநில தலைவர் சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். கும்பாபிஷேக பூஜைகள் நேற்றும் நடந்தது. தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது.
கணபதி ஹோமம் முடிந்தவுடன் அனுஷம் குப்பம் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கோபுர கலசம், சூலம் ஆகியவை முளைப்பாரி ஊர்வலத்துடன் வேத மந்திரங்கள் முழங்க கொண்டுவரப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பராசக்தி கோவில் கும்பாபிஷேக விழாவில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதல-அமைச்சர் ரங்கசாமி மற்றும் புதுவை மாநில பா.ஜ.க தலைவர் சாமிநாதன் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பக்தர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஜீவிதாவிற்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.
- கடந்த ஒரு வாரமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்
புதுச்சேரி:
புதுவை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜீவிதா (வயது 37). இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகிறது. ஜீவிதாவின் தங்கையின் கணவர் விபத்தில் இறந்தார். இதனால் குடும்பமே சோகத்தில் இருந்துள்ளது.
இந்த நிலையில் ஜீவிதாவிற்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜீவிதா நேற்று காலை வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் வீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜீவிதா இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து ஜீவிதாவின் தந்தை கணேசன் கொடுத்த புகார் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது.
- கடந்த 7 மாதமாக பராமரிப்பு ஏதுமின்றி இயக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக–நாதன் கவர்னர், முதல்-அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரி–களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை சுண்ணாம்பாறு படகு குழாம் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாக உள்ளது. இங்குள்ள படகுகளும், எந்திரங்களும், கடந்த 7 மாதமாக பராமரிப்பு ஏதுமின்றி இயக்கப்பட்டு வருகிறது. 8 படகுகள் எந்திரங்கள் சரி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய படகுகள் மற்றும் இயந்திரங்கள் எதையும் வாங்காமல் நிர்வாகம் செயலிழந்துள்ளது. பயணிகள் பயன்படுத்தும் கழிப்பிடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. படகு சவாரி செய்யும் பயணிகள் பேரடைஸ் கடற்கரை செல்கின்றனர். அங்கு பொதுழுதுபோக்கு அம்சங்கள் நிறுத்தப்பட்டு–உள்ளது.
உணவகங்களின் மேற்கூரை சேதமான நிலையில் உள்ளது. சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை சுற்றுலா வளர்ச்சி கழகமே பராமரிக்க வேண்டும். தனியாருக்கு தாரை வார்க்கும் சதி திட்டத்தை கைவிட வேண்டும். சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் பேரடைஸ் கடற்கரை பகுதிகளை மறு சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






