என் மலர்
புதுச்சேரி

சொகுசு பஸ்சில் வெளிநாட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்
- புதுவை திரும்பிய ஜெர்மன் இளம்பெண் ஓடும் பஸ்சில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
- வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது பெங்களூருவை சேர்ந்த வாலிபர் என தெரியவந்தது.
புதுச்சேரி:
ஜெர்மன் நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கோணமங்கலம் கிராமத்தில் தங்கியிருந்து சமூக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று இவர், பெங்களூருவில் உள்ள தனது தோழியை பார்க்க அங்கு சென்றார். புதுவை புதிய பஸ்நிலையத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்ட படுக்கை வசதி கொண்ட தனியார் சொகுசு பஸ்சில் புறப்பட்டு சென்றார்.
நள்ளிரவில் முன் வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் இருந்த 23 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ஜெர்மன் நாட்டு பெண்ணின் படுக்கைக்கு அருகில் காலியாக இருந்த படுக்கையில் வந்து படுத்துக்கொண்டார்.
அப்போது ஓடும் பஸ்சில் அவர் அந்த இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். திடீரென அவரை கட்டியணைத்து வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கூச்சல் போட்டார். இதனால் பஸ்சுக்குள் பரபரப்பு ஏற்பட்டது. பஸ்சை நிறுத்தி விசாரித்ததில் ஜெர்மன் பெண்ணை பலாத்காரத்துக்கு முயன்றது தெரியவந்தது.
உடனே பஸ்சின் டிரைவர், கண்டக்டர் அந்த வாலிபரை கடுமையாக எச்சரித்து பஸ்சில் இருந்து நடுவழியில் இறக்கி விட்டனர். தொடர்ந்து அந்த பஸ் பெங்களூரு புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் பெங்களூருக்கு சென்று விட்டு புதுவை திரும்பிய ஜெர்மன் இளம்பெண் ஓடும் பஸ்சில் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றது தொடர்பாக உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பஸ்சில் பயணம் செய்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது பெங்களூருவை சேர்ந்த வாலிபர் என தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.






