என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கிராம நிர்வாகிகள் கூட்டாக பேட்டி
    • காலாப்பட்டில் அமைந்துள்ள இது போன்ற கம்பெனிகளால் எங்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது.

    புதுச்சேரி:

    கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவில் மண்டபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, பிள்ளைசாவடி, கனகச்செசெட்டிகுளம் பகுதி பஞ்சாயத்தார்கள் சரவணன், கண்ணன், கோதண்டம், அருணகிரி, தமிழ்மாறன், சங்கர், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை 1986-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு தொடர்ந்து இதுபோன்ற எதிர்பாராத விபத்துக்கள் நடந்து வண்ணம் உள்ளது. காலாப்பட்டில் அமைந்துள்ள இது போன்ற கம்பெனிகளால் எங்களுடைய குடிநீர் உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் பாதிப்படைந்துள்ளது.

    காலாப்பட்டு தொகுதியில் ஒரு அ.தி.மு.க. உறுப்பினர் கூட இல்லதா நிலையில் சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு ஆதரவாக காலாப்பட்டு பகுதியை சேர்ந்த கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் செயல்படுவதாக அ.தி.மு.க.வினர் கூறிய குற்றச்சாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.

    கடந்த 4-ந் தேதி இரவு தொழிற்சாலையில் விபத்து நடந்து தீக்காயம் அடைந்த தொழிலாளர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல சொல்லி தொழிலாளர்களின் உறவினர்கள் வற்புறுத்தியதின் அடிப்படையிலேயே அவர்கள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
    • பேராசிரியர்கள் மற்றும் சுகாதார நிலைய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

    ஊர்வலத்தை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யா, டாக்டர்கள் ஜமுனாஸ்ரீ, ஷீலா தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் மணக்குள விநாயகர் பாலி டெக்னிக் கல்லூரி என். எஸ்.எஸ்.மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சுகாதார நிலைய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். அலுவலர் வேலழகன் செய்திருந்தார்.


    • தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்
    • அவர்களுக்கு என்ன ஆனது என்று உண்மை நிலவரத்தை அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

    புதுச்சேரி:

    தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி மாநில அமைப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில்,

    புதுச்சேரி பெரியக்காலாப்பட்டில் இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலை அபாயகரமான சூழ்நிலையில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 4ம் தேதி இரவு நடந்த கொதிகலன் வெடித்து நடந்த பயங்கர விபத்தால் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்துள்ளனர்.

    ஜிப்மரில் அனும திக்கப்பட்ட 11 பேர் அவசர அவசரமாக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு நிர்வாகம் சார்பில் கொண்டு செல்லப் பட்டனர். மற்றவர்கள் புதுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இரண்டு பேர் 90% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவது தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு என்ன ஆனது என்று உண்மை நிலவரத்தை அவர்களது உறவினர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை.

    உறவினர்களிடம் விசாரிக்கையில் இது வரைக்கும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் யாரும் வந்து பார்க்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட தொழி லாளர்களின் எதிர்காலம் கருதி தீக்காயம் அடைந்த அனைவருக்கும் தலா ரூபாய் ஒரு கோடி ரூபாய் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்ட காலாப்பட்டு தொழிற்சாலையை போல், காலாப்பட்டு ஈ சி ஆர் சாலையில் மற்றொரு தொழிற்சாலை இயங்கி வருகிறது பாதுகாப்பு உறுதி தன்மை குறித்து அந்த கம்பெனியிலும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    இதே போல் புதுச்சேரியில் சேதராப்பட்டு மேட்டுப்பாளையம் தட்டாஞ்சா வடி நெட்டப் பாக்கம் திருபுவனை கிருமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் ஆபத்தான தொழிற்சாலை களை அடையாளம் கண்டு உடனடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 2 கோவில்களில் அடுத்தடுத்து கொள்ளை
    • கொள்ளை கும்பல் புகுந்து கோவில் உண்டியலை உடைத்தும்,

    புதுச்சேரி:

    பாகூர், கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள 2 கோவில்களில் கடந்த 5-ந்தேதி நள்ளிரவில் கொள்ளை கும்பல் புகுந்து கோவில் உண்டியலை உடைத்தும், சாமிக்கு வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்ளிட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள், பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இது சம்பந்தமாக இரு போலீஸ் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    கோவிலில் திருட்டு சம்பவம் நடந்ததால் பக்தர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் 30-க்கும் மேற்பட்ட போலீசார் கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், கந்தன் பேட் பகுதிகளில் நேற்று இரவு போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.

    மக்கள் கூடும் இடங்களில் போலீசார் ஒலிபெருக்கி மூலம், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, பண்டிகை காலம் என்பதால் வெளியில் செல்லும்போது வீடு பூட்டி இருக்கிறதா என்று உறுதி செய்த பின்பு செல்ல வேண்டும். மேலும் வீட்டிலேயே சாவியை வைத்து விட்டு செல்லக்கூடாது.

    ஊருக்குள் சந்தேகப்ப டும்படியான நபர்கள் சுற்றி வந்தால் போலீசாருக்கு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம். வீட்டில் உள்ள வாகனங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பூட்டுகளால் பாதுகாக்க வேண்டும். சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது.

    பண்டிகை காலங்களில் விபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்பாக பட்டாசை வெடிக்க வேண்டும். என அறிவுறுத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் பேசும்போது: ரோந்து போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

    அவ்வப்போது ஊருக்குள் வாகன சோதனை நடத்த வேண்டும் என்று போலீ சாருக்கு உத்தரவிட்டார்.

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்
    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா 110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட, கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு தீபாவளியையொட்டி பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா 110 பால் உற்பத்தியாளர்களுக்கு இன்டக்சன் அடுப்பு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வில்லியனூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் காளிதாஸ், நிர்வாகிகள் வேலு பாலமுருகன் மற்றும் தி.மு.க தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மாநில விவசாய அணி அமைப்பாளர் குலசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்த போது அதிவேகமாக வந்த பைக் சக்கரபாணியின் பைக் மீது வேகமாக மோதியது.
    • சக்கரபாணி சிகிச்சை பலன் இன்றி சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே ஆழியூர் பகுதியை சேர்ந்தவர் சக்கரபாணி ( வயது50). இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று சக்கரபாணி தனது மகளை கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அழைத்துச்சென்றார். பின்பு சர்வீஸ் சாலை வழியாக வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்.

    அப்போது கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்த போது அதிவேகமாக வந்த பைக் சக்கரபாணியின் பைக் மீது வேகமாக மோதியது. இதில் சக்கரபாணி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ேமல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சக்கரபாணி சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அன்பழகன் எச்சரிக்கை
    • ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    புதுச்சேரி:

    அ.தி.மு.கவின் கொடி, சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ். தரப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

    இதை வரவேற்று புதுவை அ.தி.மு.க.வினர் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதன்பின் அன்பழகன் கூறியதாவது:-

    அ.தி.மு.க. கொடி, சின்னம் பழனிசாமி தரப்புக்கு சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் கட்சியில் குழப்பம் ஏற்படுத்த ஓ.பி.எஸ். தரப்பினர் கோர்ட்டிற்கு சென்றனர். தற்போது கோர்ட்டிலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே புதுவையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடி, சின்னத்தை பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


    • சண்முகவேலுடன் சீனிவாசனும் கல்லூரி விடுமுறை என்பதால் தங்கி இருந்தான்.
    • மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி பிரேத சோதனைக்கு அனுப்பி விட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மோதிலால் நகர் கிராஸ் எக்ஸ்டன்சன் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57).

    இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், சண்முகவேல் (23), சீனிவாசன் (19) என்ற என்ற 2 மகன்களும் ராஜாமணி என்ற முருகேசனின் தாயும் உள்ளனர்.

    சண்முகவேல் பி.எஸ்.சி. நர்சிங் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து முடித்துள்ளார்.

    கடந்த ஒரு வருடமாக வேலை செய்து வந்தார். சண்முகவேல் ஒரு வாரத்திற்கு முன்பு வேலையை ராஜினாமா செய்து விட்டு புதுச்சேரியில் வேலை பார்க்கப் போவதாக கூறி மூலக்குளத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். சண்முகவேலுடன் சீனிவாசனும் கல்லூரி விடுமுறை என்பதால் தங்கி இருந்தான்.

    மேலும் சண்முகவேல் அவரது நண்பர்களிடம் மனஅழுத்தமாக இருப்பதாக போன் மூலம் அட்க்கடி தெரிவித்து வந்துள்ளான். கல்லூரியில் சண்முகவேலுக்கு மனஅழுத்ததுக்கு மருத்துவ ஆலோசனை கொடுத்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று காலை வீடு சுத்தம் செய்து எல்லோரிடமும் நன்றாக பேசிக்கொண்டு இருந்தான். மாலை 5 மணிக்கு மேல் வீட்டை சுத்தம் செய்வதாக கூறி அறைக்கு சென்றான். நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால், சீனிவாசன் சண்முகவேலின் போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் என வந்தது.

    பின்னர் இரவில் சீனிவாசன் மேலே சென்று கதவை தட்டியபோது திறக்காததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

    அப்போது சண்முகவேல் மின்விசிறியில் நைலான் கயிரில் தூக்கு போட்டுக் தொங்கி கொண்டு இருந்தான். உடனே சீனிவாசனும் பக்கத்தில் இருந்தவர்களும் கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு சண்முகவேலை மீட்டு கொண்டு சென்றனர்.

    அப்போது சண்முகவேலை மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி பிரேத சோதனைக்கு அனுப்பி விட்டனர்.

    இது குறித்து முருகேசன் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் சண்முகவேல் மன அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது வேறு காரணமாகவோ இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உத்தரவு
    • காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் இவிதான் செயலி திட்டத்தின் மூலம் புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏக்கள் ரமேஷ், அங்காளன், ரிச்சர்டு, அரசு செயலர் மணிகண்டன், சட்டசபை செயலர் தயாளன், தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார், தேசிய தகவல் மைய அதிகாரி கோபி சுவாமிநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், புதுவை சட்டசபையை காகிதம் இல்லாத சட்டசபையாக மாற்றும் பணிகளை வரும் டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என சபநாயகர் செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


    • முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு
    • தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை விட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தர விட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அரசு அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் சட்டசபையில் இன்று நடந்தது.

    கூட்டத்தில், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, அரசு செயலாளர்கள் கேசவன், மணிகண்டன், பங்கஜ்குமார்ஜா உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு பொது விடுமுறை விட முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தர விட்டுள்ளார்.

    • மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் தத்தளித்தபடியே செல்கின்றன.
    • போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்தாலும் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கடற்கரை நகரமான புதுவை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. புதுவை கடற்கரையின் அழகை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

     சுண்ணம்பாறு படகு குழாம், பாரடைஸ் பீச் உள்ளிட்ட சுற்றுலா தளங்களை காண சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    இதனால் புதுவையின் முக்கிய சாலையான முதலியார் பேட்டை, மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    குறிப்பாக மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் தத்தளித்தபடியே செல்கின்றன.இதனால் பொதுமக்கள் தினந்தோறும் அவதியடைந்து வருகின்றனர்.

    ேமலும் புதுவை நகர பகுதிகளிலும் இதே நிலையே உள்ளது. தற்போது தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்க வெளி ஊர்களில் இருந்து இரு சக்கர வாகனம் மற்றும் கார்களில் ஏராளமானோர் வருவதால் புதுவை நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இது தொடர்பாக புதுவை போக்குவரத்து போலீசார் தகுந்த நடவடிக்கை எடுத்தாலும் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

    கனரக வாகனங்களை பிரித்து மாற்றுப் பாதையில் அனுப்பினால் புதுவையில் நிலவு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தலாம்

    மேலும் முக்கிய சாலைகளை விரிவுபடுத்துதல், மேம்பாலம் அமைத்தல் போன்ற நடவடிக்கைகளால் போக்குவரத்து நெரிசலை குறைக்க தீர்வு காணலாம் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • ரூ.500 உயர்த்தி ரூ.3 ஆயிரமாக 18 ஆயிரத்து 504 மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் மீன்வளம், மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் மழைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.

    நடப்பு ஆண்டு முதல் ரூ.500 உயர்த்தி ரூ.3 ஆயிரமாக 18 ஆயிரத்து 504 மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது. மொத்தம் ரூ.5 கோடியே 55 லட்சத்து 12 ஆயிரம் மழை நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி புதுவை சட்டசபையில் நடந்தது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு மழைக்கால நிவாரணத்தை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தின் கீழ் புதுவையில் 9 ஆயிரத்து 565, காரைக்காலில் 3 ஆயிரத்து 264, மாகேவில் 523, ஏனாமில் 4 ஆயிரத்து 792 குடும்பத்தினர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

    ×