என் மலர்
இந்தியா

இந்திய அரசியலமைப்பை ஒழிக்க பா.ஜ.க. முயற்சி- ராகுல் காந்தி குற்றச்சாட்டு
- பெரும்பாலான அரசியல் வழக்குகள் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே உள்ளன.
- ஒரு தொழில் அதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 15-ந்தேதி ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முடிவதற்குள் வெளிநாட்டுக்கு சென்றதால் அவரை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில் சி.பி.ஐ, அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும், அரசியலமைப்பை ஒழிக்க பா.ஜ.க. முயற்சித்து வருகிறது என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.
கடந்த வாரம் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் மாணவர்களுடனான உரையாடலின் போது அவர் பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில் ராகுல்காந்தி பேசியதாவது:-
நமது அரசுத்துறைகள் மீது கடுமையான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சி.பி.ஐ, உளவுத் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜ.க. ஒரு ஆயுதம் போல் பயன்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக சி.பி.ஐ, அமலாக்கத்துறை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
பெரும்பாலான அரசியல் வழக்குகள் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராகவே உள்ளன. ஒரு தொழில் அதிபர் காங்கிரசை ஆதரித்தால் அவர் உடனடியாக அமலாக்கத்துறையால் மிரட்டப்படுகிறார்.
காங்கிரஸ் கட்சி தான் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை போன்ற துறைகளை உருவாக்கியது. அவற்றை ஒருபோதும் சொந்த துறைகளாக பார்க்கவில்லை. ஆனால் பா.ஜ.க. இதை இப்படி பார்க்கவில்லை. அவர்கள் தங்களுக்கு சொந்தமானதாக பார்க்கிறார்கள். அரசியல் அதிகாரத்தை கட்டியெழுப்ப அமலாக்கத்துறையையும், சி.பி.ஐ.யையும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.
ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கும். அரசியல் அமைப்பை ஒழிப்பதற்கு பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. மாநிலங்கள் இடையேயான சமத்துவம் என்ற கருத்தை ஒழிப்பது, அரசியலமைப்பு மைய கருவான ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒரே மதிப்பு உண்டு என்ற கருத்தை ஒழிப்பது என்பது பா.ஜ.க. நிலைப்பாடாகும்.
நாங்கள் பா.ஜ.க.வை எதிர்த்து போராடவில்லை. இந்தியாவில் உள்ள அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற துறைகளை காப்பாற்றுவதற்காகவே போராடுகிறோம்.
ஜனநாயக அமைப்பின் மீது தாக்குதல் நடக்கும் போது எதிர்க்கட்சிகள் அதை எதிர்கொள்ள வழிகளை கண்டறிய வேண்டும். இந்திய நிறுவன கட்டமைப்பை கைப்பற்றியதற்கு எதிராகவே நாங்கள் போராடுகிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் தேர்தல் எந்திரத்தில் ஒரு சிக்கல் இருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்திய ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதலை பற்றி பேசும்போது அதை வெளிப்படையாக சொல்லவில்லை. ஆனால் அது உண்மையில் இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. உலக ஜனநாயக அமைப்பின் மீதான தாக்குதல் ஆகும்.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆர்.எஸ்.எஸ்-ன் அடிப்படை கொள்கையுடன் உடன்படவில்லை. அந்த கேள்வியில் நாங்கள் மிகவும் ஒற்றுமையாக உள்ளோம். எங்களுக்குள் சில விஷயங்களில் போட்டிகள் உள்ளன. அவை தொடரும். ஆனால் எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இருப்பதை பாராளுமன்றத்தில் பார்த்து இருப்பீர்கள்.
நாங்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் உடன்படாத சட்டங்கள் குறித்து பா.ஜ.க.வை எதிர்த்து போராடுவோம்.
இவ்வாறு ராகுல்காந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.






