என் மலர்
இந்தியா

தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும்- மோடியை குறிப்பிட்டு பேசினாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர்?
- தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி.
- மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கலந்து கொண்டார்.
அப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி குறித்த புத்தகத்தை வெளியீட்டு மோகன்பகவத் பேசியதாவது:-
தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி. அவசர நிலைக்கு பிந்தைய அரசியல் குழப்பத்தின் போது முடிவுகளை சரியாக கணித்தவர். அவரது இயல்பு மிகவும் நகைச்சுவையானது. மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார்.
தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
மோகன் பகவத்தின் இந்த பேச்சு விவாதங்களுக்கு களம் அமைத்துள்ளது. எதிர்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு குறித்து கேள்வி கேட்க தூண்டி இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
பிரதமர் மோடிக்கு இப்போது 74 வயது ஆகிறது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு மோடி வந்த போதும் அவரது ஓய்வு குறித்த விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத் கூறுகையில், எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த்சிங் போன்ற தலைவர்களை 75 வயது நிரம்பிய பிறகு ஓய்வு பெற பிரதமர் மோடி கட்டாயப்படுத்தினார். இப்போது அதே விதியை அவர் தனக்கும் பயன்படுத்துகிறாரா? என்று பார்ப்போம் என கூறினார்.






