என் மலர்
இந்தியா

மக்கள் அளித்த தீர்ப்பை ராகுல் காந்தி அவமதிக்கிறார்: முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள்.
- மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர்.
மும்பை:
மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
இதற்கிடையே மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
மக்களை சமாதானப்படுத்த முடியாவிட்டால், அவர்களை குழப்ப வேண்டும் என்ற கொள்கையை ராகுல் காந்தி ஏற்றுக் கொண்டுள்ளார். மக்களால் காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டு விட்டது. அதனால்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை கூறி ஜனநாயகத்தின் பிம்பத்தை அவர்கள் இப்போது கெடுக்கிறார்கள்.
மக்கள் ராகுல் காந்தியை நிராகரித்து விட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாக, அவர் மக்களையும் அவர்களின் ஆணையையும் நிராகரிக்கிறார். மக்கள் அளித்த தீர்ப்பை அவமதிக்கிறார்.
ஒரு முறை தோல்வியை ஏற்றுக்கொண்டு, நீங்கள் எங்கே தவறு செய்கிறீர்கள், மக்களுடனான உங்கள் தொடர்பு எங்கே இல்லை, அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சுயபரிசோதனை செய்வது மிகவும் புத்திசாலித்தனமாக இருக்கும்.
ஆனால் ராகுல் காந்தி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தலைவராக உள்ளார். பீகார் உள்பட வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்கால தோல்விகளுக்கு காங்கிரஸ் தலைவர் தனது சாக்குபோக்குகளைத் தயாரித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.






