என் மலர்tooltip icon

    இந்தியா

    பாலியல் தொல்லையால் தீக்குளித்து கல்லூரி மாணவி தற்கொலை: ஒடிசாவில் கடையடைப்பு போராட்டம்
    X

    பாலியல் தொல்லையால் தீக்குளித்து கல்லூரி மாணவி தற்கொலை: ஒடிசாவில் கடையடைப்பு போராட்டம்

    • பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாக மாணவி புகார் தெரிவித்திருந்தார்.
    • இந்த புகார் குறித்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். பேராசிரியரின் தகாத நடவடிக்கை குறித்து கல்லூரி புகார் குழுவிடம் ஜூலை 1 ஆம் தேதி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரில் பேராசிரியர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லையளித்ததாகவும், மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்திருந்தார். இருப்பினும், தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை ஆசிரியர் சமீர்குமார் சாஹு மறுத்தார்.

    அதனை தொடர்ந்து ஒரு வாரத்துக்குள் இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் உறுதியளித்தாலும், நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து கடந்த 12-ந்தேதி கல்லூரிக்குள் மாணவியுடன் சேர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து, திடீரென முதல்வர் அலுவலகத்தின் அருகே தன் மீது பெட்ரோல் ஊற்றி, மாணவி தீக்குளித்தார். மருத்துவமனையில் 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில், நேற்று இரவு கல்லூரி மாணவி உயிரிழந்தார்.

    இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறும் படி, கல்லூரியின் முதல்வரும், புகார்கள் குழு உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்ததாக மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.

    இந்நிலையில், பாலியல் துன்புறுத்தலால் மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் அம்மாநிலம் முழுவதும் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

    அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசாவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×