என் மலர்tooltip icon

    கதம்பம்

    • உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் பிரபஞ்சத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
    • அந்த பிரபஞ்சம் உடல் உறுப்புகளின் வழியே நம்மோடு பேசும்.

    ஓய்வுக்கு மாற்றமாக மருத்துவத்தை தேடுபவர்கள் தான் நிரந்தர நோயாளியாகிறார்கள்.

    ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.. வருடத்தில் 365 நாட்களும் ஆரோக்கியமாக இருக்கமுடியாது.

    உலகில் ஒவ்வொரு உயிரும் உடலும் தனிதன்மையானது, ஒவ்வொரு உடலில் ஏற்படும் உடல் தொந்தரவுகளும் தனிதன்மையான காரணத்தால்தான் ஏற்பட்டிருக்கும்.

    இந்த நோய்களுக்கெல்லாம் பெயர் வைத்து வாழ்நாள் முழுவதும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவதை விட சிறிது நாட்கள் ஓய்வு எடுத்து பாருங்கள், இயற்கையின் குணமாக்குதல் புரியும்.

    உடலுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பு புரிந்தாலே உங்கள் தனிதன்மையான நோய்க்கு உங்கள் உடலே மருத்துவர்.

    உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் பிரபஞ்சத்தோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. அந்த பிரபஞ்சம் உடல் உறுப்புகளின் வழியே நம்மோடு பேசும். ஓய்வில் மட்டும்தான் இதை உணரமுடியும்.

    எதிர்காலம் என்னவாகும் என்று நம் அறிவுதான் நம்மை பயமுறுத்தி கொண்டே இருக்கும். நேரம் பார்த்து வேலை செய்ய சொல்வதும் இந்த உலக அறிவுதான். இந்த அறிவை கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு ஓய்வெடுத்து கொண்டே பிரபஞ்சத்தோடு பேசி பாருங்கள். உடல் உறுப்புகளின் வழியே பிரபஞ்சமும் நம்மோடு பேசும். நிரந்தர நோயாளியாவதையும் தவிர்க்கலாம்.

    ஆழ்மனதின் அற்புத சக்தியை புரிந்துகொண்டாலே குணமாக்குதல் தன்னாலே நடக்கும் இதற்கு தேவையும் ஓய்வுதான்.

    -ரியாஸ்

    • இறைச்சியோடும் மிளகு சேர்த்து சமைப்பதால் அது இறைச்சி கறி என்று அழைக்கப்பட்டது.
    • நாளடைவில் ஆட்டு இறைச்சி உணவை நாம் கறி என்று அழைக்கத் தொடங்கி விட்டோம்.

    பண்டைய தமிழர்கள் சமைக்கும் முறையானது அவித்தல், வறுத்தல், சுடுதல் என்ற வகையில் இருந்தது. எண்ணெயில் போட்டு பொரிக்கும் பழக்கம் விஜயநகர பேரரசுகள் வந்ததுக்கு அப்புறம் தான் வந்தது.

    எண்ணெய் என்றால் ஆரம்பத்தில் அது நல்லெண்ணெய்யைத் தான் குறிக்கும். எள் என்பது தமிழர்களின் பாரம்பரிய தானியம். அதனால் அதிலிருந்து பெறப்பட்ட நெய்யைத் தான் எண்ணெய் என்று அழைத்திருக்கிறார்கள்.

    எள் +நெய்= எண்ணெய்.

    அதனால் நெய் என்பது எண்ணெய்க்கு முன்பாகவே வந்து விட்டது. பாலில் இருந்து பெறப்படும் நெய், அதேபோல எள்ளிலிருந்து பெறப்படும் நெய்.

    நல்லெண்ணைக்கு பிறகு வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், புன்னை எண்ணெய் பயன்படுத்தினார்கள். அதன் பின்னரே தேங்காய் எண்ணெய் பயன்படுத்துகிறார்கள். கடலை எண்ணெய் என்பது கிபி 15 ஆம் நூற்றாண்டில் வந்தது. அப்போதுதான் நிலக்கடலையும் இங்கு வந்திருக்கும்.

    அதேபோல உணவின் காரத்திற்கு அப்போது மிளகு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இன்று நாம் பரவலாக பேசும் காய்கறி என்ற சொல் காய்களையும் மிளகையும் சேர்த்து குறிக்கும்.

    கறி=மிளகு. கருங்கறி=கருப்பு மிளகு.

    இறைச்சி உணவை கறி என்று சொல்லும் பழக்கம் இதனால் தான் வந்தது. இறைச்சியோடும் மிளகு சேர்த்து சமைப்பதால் அது இறைச்சி கறி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் ஆட்டு இறைச்சி உணவை நாம் கறி என்று அழைக்கத் தொடங்கி விட்டோம்.

    இன்று நாம் சமையலில் அதிகம் பயன்படுத்தும் மிளகாய் என்பது கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் சிலி என்ற நாட்டில் இருந்து தான் வந்தது. அதன் பின்னரே இங்கு சமையலில் மிளகாய் பயன்படுத்தப்படுகிறது.

    அதேபோல இட்லி, தோசை, பஜ்ஜி, காராசேவு போன்ற உணவுகள் விஜயநகர பேரரசு காலத்திலே இங்கே தோன்றின.

    அடுத்ததாக உப்பு. உப்பு என்பது நெருப்புக்கு பிறகான மனிதனின் இரண்டாவது கண்டுபிடிப்பு. உப்பு என்பதை சுவை என்று கூறுகிறார்கள். உப்புக்கு மிகப்பெரிய பாரம்பரியம் உண்டு. அந்த காலத்தில் உப்பு நெல்லுக்கு இணையான விலையைக் கொண்டது. இன்று உப்பு விற்கப்படும் விலையை விட அந்த காலத்தில் ஐந்து மடங்கு அதிக விலை விற்கப்பட்டது.

    ஒருவருக்கு சம்பளமாக உப்பும், நெல்லும் அந்த காலத்தில் கொடுக்கப்பட்டது. அதனால் தான் Salary என்ற ஆங்கில சொல் salt என்ற சொல்லிலிருந்து பிறந்தது.

    மற்றபடி காப்பி, தேநீர், பாமாயில் ரீபைண்ட் ஆயில், வெள்ளை சர்க்கரை இவையாவும் வல்லரசு நாடுகளின் கண்டுபிடிப்புகள் தான். அவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்டவை. இவையாவும் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய பொருட்கள்.

    -தொ.பரமசிவன்

    • தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.
    • வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.

    பெரியார் சூரியன் என்றால் அண்ணா மழை. பெரியார் லட்சியவாதி. அண்ணா யதார்த்தவாதி. பெரியார் நாளையைப் பற்றி சிந்தித்தார். அண்ணா இன்றைய பொழுதை தமிழர்க்கு கையளிக்க செயல்பட்டார்.

    இரண்டு அறிவுசீவிகள் ஒரே கட்சியில் இருக்க முடியாது என்கிற நடைமுறை யதார்த்தத்திலிருந்து உருவானதே தி.மு.க. பெரியார் திருமணம் என்பதெல்லாம் பிரிவதற்காக உருவாக்கப்பட்ட காரணங்களே.

    அதிகாரத்துக்கு வெளியே இருந்ததால்தான் பெரியாரால் சமரசமின்ற சமராட முடிந்தது. சிறிய அளவில் தேர்தல் ஜனநாயகத்தோடு சமரசம் செய்து கொண்டதால்தான் பெரியாரின் நெஞ்சில் தைத்த பல முட்களைப் பிடுங்க முடிந்தது அண்ணாவால்.

    கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார். எந்த பக்தி இலக்கியங்களை பெரியார் கழுவி ஊற்றினாரோ அதே திருமூலரிடமிருந்து 'ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்' என்கிற பதத்தை உருவி கையாண்டார் அண்ணா.

    மாநிலங்களவை கன்னிப் பேச்சிலேயே திராவிட நாடு குறித்து அனல் கக்கினார். ஆனாலும் சீனப்போர் வந்தபோது, திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டார். வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும் என அதற்கொரு விளக்கமும் தந்தார்.

    தான் நிதானமானவன். அவசரப்பட்டு குழிக்குள் விழுந்து விடமாட்டேன். அதற்காக அச்சப்பட்டு அடங்கிப்போகவும் மாட்டேன் என அரசியல் நுட்பம் கூடியவர் அண்ணா.

    ஈரடி முன்னே, ஓரடி பின்னே எனும் யுக்தியை வகுத்தவர். இத்தகைய சாதுர்யத்தால்தான் முதல்வராக பதவி வகித்த குறுகிய காலத்தில் (2 ஆண்டுகள்) மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு எனப் பெயர் மாற்ற முடிந்தது. சுயமரியாதை திருமணத்துக்கு அரசு அங்கீகாரம் வழங்க முடிந்தது.

    தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை மனதில் கொண்டு, தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழி திட்டம் கொண்டுவர முடிந்தது.

    ஆகாஷ்வாணி வானொலியாக மாறியதும். ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசியும் சாத்தியமானது. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்ய முடிந்தது.

    பேருந்துகள் அரசுடைமை ஆகியது. ஏழை பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிந்தது. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற்றன.

    சென்னை செகரட்டேரியட், தலைமைச் செயலகமானது.

    விதவைகளைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க முடிந்தது.

    கூட்டத்தில் நின்றால் கண்டுபிடிக்க முடியாத தோற்றம். குள்ளமான உருவம். மாற்று சிந்தனை, தீவிரமாக செயலாற்றும் திறன், ஜனநாயகப் பண்பு, நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம், பேச்சாற்றல், ஆங்கில அறிவு, எளிமை, நேர்மை இத்தகைய எல்லா படிக்கட்டுகளிலும் அயராது ஏறி, தன்னை உயரமாக்கி, உலகுக்கு காண்பித்தார் அண்ணா.

    பிறர் பேச அஞ்சியதைப் பேசியவர். மாநில சுய உரிமை பற்றி மாநிலங்களவையில் அவர் பேசியபோது நம் அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அண்ணாவுக்கு ஆதரவாக இல்லை.

    தனித்து களமாடியவர். இந்திய மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசை நிறுவிய இரண்டாவது முதல்வர் அண்ணா. மாநிலக் கட்சியொன்றின் முதல் முதல்வர்.

    தொடர்பு சாதனங்கள் அதிகம் இல்லாத காலத்தில், பேச்சையும் எழுத்தையும் வைத்து ஓர் இயக்கத்தை சாத்தியப்படுத்தியவர் அண்ணா.

    வாழும்போது கிளையாக விரிந்து, நிழலையும் கனிகளையும் தமிழர்க்கு தந்த பெருமகன். இன்று மண்ணுக்குள் வேராக தமிழர் வாழ்வைத் தாங்கி நிற்கிறார்.

    -கரிகாலன்

    • கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது போல மக்கள் மனதைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.
    • அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை” என்றார்.

    அவர்கள் ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் "கடவுளைக் காணலாம்" என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்.

    அப்போது திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார்.

    ஐயா, இது பெரியார் பிறந்த மண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப்படுத்தி விட்டுப் போயிருக்கிறார்.

    பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே" என்றார்.

    அதற்கு மகரிஷி அவர்கள், "அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைநிலையை எல்லை கட்டி ஒரு இடத்தில் ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார்.

    அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.

    நானும் அதைத்தான் சொல்கிறேன். இறையாற்றல் எங்கும் நிறைந்த பரம்பொருள். இறையாற்றல் தான் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளது.

    அவனுள் இறையாற்றலே அறிவாகவும் இருக்கிறது. இதை யோகப் பயிற்சியின் மூலமும் தத்துவ விளக்கங்களையும் கொண்டு சிந்தித்து அறியச் சொல்கிறேன்.

    கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவது போல மக்கள் மனதைப் பண்படுத்தி சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.

    அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை" என்றார்.

    -ஆர்.எஸ்.மனோகரன்

    • வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன.
    • ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

    நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

    எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

    வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.

    வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

    எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

    வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

    இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

    வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

    தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

    நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள்.

    தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

    நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

    - ஆறுமுகம்

    • என் ராசாவின் மனசிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கேரக்டருக்கு ஆள் தேவைப்பட்டது.
    • ரொம்ப சின்ன கேரக்டர். ரெண்டே ரெண்டு சீன் மட்டும்தான்.

    "அறைக்குள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தார் ராஜ்கிரண்.

    ஒரு கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வந்திருந்தார் அவர்.

    காலையில் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துவிட்டது. இனி இரவு ரெயிலில்தான் சென்னை திரும்ப வேண்டும்.

    பகல் முழுவதும் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையில், தனிமையில் இருந்து கொண்டு என்ன செய்வது? நேரம் போகாமல் போர் அடித்தது.

    அப்போதுதான் கல்யாணத்துக்கு அவரை மதுரைக்கு அழைத்திருந்த மாப்பிள்ளை இளங்கோ அங்கு வந்தார்.

    "என்ன அண்ணே, ரொம்ப போர் அடிக்கிறதா?"

    "ஆமா தம்பி."

    "ராஜ்கிரண்அண்ணே... ஒண்ணு செய்யட்டுமா?"

    "என்ன ?"

    "என் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். நல்லா சிரிக்க சிரிக்க பேசுவான்."

    "அப்படியா ?"

    "ஆமாண்ணே. அவனை உடனே வரச் சொல்றேன். நீங்க அவன்கிட்ட பேசிக்கிட்டு இருங்க. அவன் பேச ஆரம்பிச்சா உங்களுக்கு நேரம் போறதே தெரியாது."

    ஆச்சரியத்துடன் கேட்டார் ராஜ்கிரண். "அந்தப் பையன் பெயர் என்ன தம்பி ?"

    "வடிவேலு."

    அடுத்த ஒரு சில நிமிடங்களில்...

    "வணக்கம்ணே."

    வெள்ளந்தியாய் சிரித்தபடி வந்து நின்றார் வடிவேலு.

    "என்னப்பா வேலை பண்றே ?"

    வடிவேலு பேச ஆரம்பித்தார்.

    ஃபோட்டோவுக்கு ஃபிரேம் போடும் ஒரு கடையில், தான் வேலை செய்வதைப் பற்றி... தன்னுடைய நண்பர்களை பற்றி... தெருவில் தாங்கள் செய்யும் சேட்டைகளை பற்றி... ஊருக்குள் நடக்கும் வேடிக்கைகளை பற்றி, நிறுத்தாமல் வடிவேலு பேசிக் கொண்டே இருக்க...

    ராஜ்கிரணும் நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். பொழுது போனதே தெரியவில்லை.

    ரெயிலுக்கு நேரமாகவே ராஜ்கிரண் புறப்பட்டு விட்டார். வடிவேலுவும், தான் வேலை பார்க்கும் கடைக்கு கிளம்பி போய்விட்டார்.

    இதை ஒரு பேட்டியில் சிரித்தபடியே சொன்னார் ராஜ்கிரண் அவர்கள். தொடர்ந்து அவர் சொன்னதுதான் ஆச்சரியமான விஷயம்.

    "ஒரு விஷயம் சொல்லட்டுமா ?

    அந்த சந்திப்பில் வடிவேலு என்னிடம் நடிக்க வாய்ப்பு கேட்கவே இல்லை. எனக்கும் வடிவேலுவை முதன்முதலாக பார்க்கும்போது அவரை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை."

    அப்புறம் எப்படி நடந்தது அந்த மேஜிக்?

    அதை சுவாரசியமாகச் சொல்கிறார் ராஜ்கிரண்.

    "என் ராசாவின் மனசிலே படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு கேரக்டருக்கு ஆள் தேவைப்பட்டது. ரொம்ப சின்ன கேரக்டர். ரெண்டே ரெண்டு சீன் மட்டும்தான்.

    யாராவது ஒரு புது ஆளை நடிக்க வைக்கலாமான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்போதான் ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னால, மதுரையில நான் சந்திச்ச அந்தப் பையன் ஞாபகம் வந்தது. உடனே அவனை ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு வரச் சொன்னேன்.

    ஆரம்பத்துல இரண்டு சீன்ல மட்டும்தான் நடிக்க சொன்னேன். அதை நடிச்சு முடிச்சிட்டு நான் புறப்படறேண்ணேன்னு கிளம்பிட்டான்.

    கொஞ்சம் இருன்னு சொல்லி, என் கூடவே இருக்க வச்சேன். ஏன்னா வடிவேலு நடித்த இரண்டு காட்சிகளிலேயும், நாங்கள் சொல்லிக் கொடுத்ததற்கு மேலாகவே சிறப்பாக நடித்திருந்தார்.

    எனவே அந்தக் கேரக்டரை கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் செய்தோம். ஒரு பாட்டு காட்சியில் கூட அவரை நடிக்க வைத்தோம். அதுதான் "போடா போடா புண்ணாக்கு..."

    இதை புன்னகையோடு அந்தப் பேட்டியில் சொன்னார் அண்ணன் ராஜ்கிரண்.

    அதற்கு பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலு தன்னை வளர்த்துக் கொண்டது ஒரு வரலாறு.

    -ஜான்துரை ஆசிர் செல்லையா

    • 2018 செப்டெம்பரில் ஜப்பானிய அமைச்சு அறிக்கை ஒன்றின் பிரகாரம் 100 வயதை எட்டிப்பிடித்தவர்கள் தொகை 69,785 என்று அறிவித்திருந்தார்கள்.
    • தொகையில் 88 சதவீதமானவர்கள் பெண்கள் என்பது நம்மை ஆச்சரியப்படுத்தும் புள்ளி விபரம்.

    உலகிலேயே ஜப்பானியர்கள் தான் நீண்டகாலம் உயிர் வாழ்கிறார்கள். அவர்களின் சராசரி ஆயுள்காலம் பெண்களுக்கு 86 ஆகும். ஆண்களுக்கு 79 ஆகும். இதற்கு காரணம் ஆரோக்கியமான உணவு முறைதான் எனறு கூறப்படுகிறது. அவர்கள் அரிசியையும், மீனையும் அதிக அளவில் சாப்பிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    2018 செப்டெம்பரில் ஜப்பானிய அமைச்சு அறிக்கை ஒன்றின் பிரகாரம் 100 வயதை எட்டிப்பிடித்தவர்கள் தொகை 69,785 என்று அறிவித்திருந்தார்கள். இத்தொகையில் 88 சதவீதமானவர்கள் பெண்கள் என்பது நம்மை ஆச்சரியப்படுத்தும் புள்ளி விபரம்.

    சாப்பாட்டை தவிர, வேறு காரணங்களும் 100 வயது வரை வாழ கைகொடுக்கின்றன.

    வயதைப் பற்றியே நினைத்து அலட்டிக் கொள்வதும், மன அழுத்தங்களுக்கு உட்படுவதும், ஒழுங்கற்ற தூக்கமும், குறைந்த பட்சம் நடந்தாவது உடற்பயிற்சி செய்யமாலிருப்பதும் உங்களை நீண்ட காலம் வாழவிடாதிருக்க தடையாகவுள்ள பொதுக் காரணங்கள்.

    ஜப்பானில் "ஒக்கினாவா" என்ற ஒரு பிராந்தியமுண்டு. உலகிலேயே நீண்ட காலம் வாழும் அதிகமானவர்கள் இங்குதான் உள்ளார்கள். தமக்கு 55 வயது வரும் வரை, தங்களை "பிள்ளைகளாகவே" இவர்கள் நோக்குகிறார்கள். 97 வயதை எட்டும்போது, இளமை திரும்புவதாக கூறி, "கஜிமாய" என்ற பெயரில் ஒரு சடங்கு நடத்தப்படுகின்றது.

    -மைதிலி

    • ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக இருக்கும்.
    • ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.

    கடல் என்பது ஆதியில் இருந்தே மனித இனத்திற்கு ஒரு புரியாதப்புதிராகவே இருந்து வந்துள்ளது.

    சிறிது சிறிதாக அச்சம் நீங்கி கடலைத்தாண்டி இருக்கும் நாடுகளை, கடலைக்கடந்து சென்று அறிந்து கொண்டனர்.

    கடலைத்தாண்டியதும் தான் பூகோளம் எனும் நிலவியல் தோன்றியது. உலகில் இருக்கும் இதரப்பகுதிகள் தெரிய ஆரம்பித்தது.

    கடலைக்கடந்தார்களேத்தவிர கடலின் ஆழத்தை மனிதனால் அவ்வளவு எளிதில் யூகித்து அறிய இயலவில்லை. கடல் மிகுந்த ஆழம் கொண்டது என்பது மட்டுமே புரிந்தது.

    கடலின் ஆழத்தைக் கண்டறிய 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் முயற்சிகள் மேற்கொண்டனர்.

    ஆனால் அப்போது அதற்கு நவீனக் கருவிகள் இல்லையாதலால் மிக நீளமான கயிற்றை அல்லது சங்கிலியைக் கடலின் உள்ளே ஆங்காங்கே இறக்கி மிகவும் பழமையான முறையை மேற்கொண்டு, சுமார் 7000 இடங்களில் இவ்வாறு ஆழம் கண்டறிந்தனர்.

    இந்த முறையில் குறிப்பிட்ட இடத்தின் ஆழத்தை மட்டும் அறியமுடிந்ததே தவிர, கடலின் அடிமட்டம் குறித்து அறிய வரைபடம் தயாரிக்க இது உதவவில்லை.

    பிறகு ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தின் பலனாக ஒலி அலைகளைப் பயன்படுத்திக் கடல் ஆழத்தை அறிய முயன்றனர்.

    இந்த உத்தி அடிப்படையில் எக்கோ சவுண்டிங், சைட் ஸ்கேன் ஸ்கேனர் ஆகிய கருவிகள் உருவாக்கப்பட்டு கடலின் நில அமைப்பை வரைபடமாகக் காட்டுகின்றன.

    இந்தக் கருவிகள் தயாரித்துள்ள பதிவேடுகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துப் பெரியதொரு படமாக்கிப் பார்த்தால் கடல்கள் அனைத்தும் வற்றிப் போனால் அவை எவ்வாறு காட்சி அளிக்குமோ அப்படிப்பட்ட காட்சியை அப்படம் அளிக்கும்.

    அப்படத்தைப் பார்த்தால் கண்டத்திட்டு (Continental Shelf). கண்டச் சரிவு (Continental Slope) ஆழ்கடல் (Abyss) ஆகிய மூன்று பகுதிகளை நீர் உலகம் கொண்டது எனத் தெரியவரும்.

    ஆழ்கடல் பகுதி என்பதில் ஒளியே இல்லாமல் இருட்டாய் இருக்கும். கடல் நீர் மிகக் குளிர்ச்சியாக இருக்கும். ஆழ்கடலின் அடித்தளத்தில் சமவெளிகள், பள்ளத்தாக்குகள், ஆறுகள் முதலியவை உள்ளன.

    சுமார் ஒரு மைல் ஆழம் உள்ள சேறு மாதிரிப் படிவுகள் கடலின் அடித்தளத்தில் உள்ளன. மடிந்த கடல்வாழ் உயிரினங்கள், மக்கிப் போன கடல் தாவரங்கள், நதிகள், ஆறுகள் கொண்டுவந்து சேர்த்த வண்டல் ஆகியவையே இச்சேறு மாதிரியான படிவுகள்.

    இவ்வாறு ஆண்டுதோறும் 500 கோடி டன் வண்டலை ஆறுகள், நதிகள் கொண்டு வந்து சேர்க்கின்றனவாம்.

    கடலடியில் அனேக செங்குத்தான மலைகள் உள்ளன. அசன்ஷன் தீவுகள், அஜோர்ஸ் தீவுகள் ஆகியன கடலடி மலைகளின் உச்சிகளே.

    கடலுக்கு அடியில் 10,000 மைல் நீளத்திற்குச் சங்கிலித் தொடர்போல் மலைகளும், வங்காள விரிகுடாவில் 4 மைல் அகலம், 300 அடி ஆழத்துக்குக் கடலடி ஆறுகள் உள்ளன. இவ்விதம் சுமார் 20 ஆறுகள் உள்ளனவாம்.

    அந்தமான் தீவுகள் அருகே 1,700 மைல் நீளமும் 25 மைல் அகலமும் கொண்ட பள்ளத்தாக்கு உள்ளது. பிற இடங்களிலும் இவ்வாறு பள்ளத்தாக்குகள் உள்ளன. சில இடங்களில் இதன் ஆழம் சுமார் 3 மைல்.

    கடல்களில் மிக ஆழமான இடங்கள் கடலுக்கு அடியில் உளள அகழிகள் ஆகும். இந்த அகழிகள் குறுகலானவை. நீளமானவை. கடலடி அகழிகளின் ஆழம் கடலின் சராசரி ஆழத்தைவிட இரு மடங்கு ஆகும்.

    இந்த அகழிகளின் ஆழத்துடன் ஒப்பிட்டால் உலகின் கடல்களின் சராசரி ஆழம் 12,556 அடி. அதாவது, இரண்டரை மைல்.

    பிலிப்பைன்சுக்குக் கிழக்கே உள்ள மின்டானாவோ அகழியில் அமைந்துள்ள குக்மடு தான் உலகின் கடல்களில் மிக ஆழமான இடமாகும். இதன் ஆழம் 37,782 அடி. அதாவது சுமார் 7 மைல். குக்மடுவில் எவரெஸ்ட் சிகரத்தை இறக்கினால் அச்சிகரம் மூழ்கி அதற்கு மேலும் பல ஆயிரம் அடிக்குத் தண்ணீர் நிற்கும். ஏனெனில், எவரெஸ்டின் உயரம் 29,028 அடி.தான் .

    -அண்ணாமலை சுகுமாரன்

    • மன நோயில் பல வகைகள் இருக்கின்றன. மனச்சிதைவு , மனபிறழ்வு பைபோலார் டிஸார்டர், ஃபோபியா, மனப்பதட்டம், என பல வகைகள்.
    • பொத்தாம் பொதுவாக மன அழுத்தம், டிப்ரஷன் எனச் சொல்வதற்கு முன் அதற்குரிய நிபுணரை அணுக வேண்டும்.

    நமது மனம் சாதாரணமாக இருக்கும் போது சிந்திப்பதற்கும் அதீதமாக உணர்ச்சிவசப்படும் போது சிந்திப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

    ஒரு சண்டையின் போது கோபத்தில் நாம் என்ன செய்கிறோம், என்ன சொல்கிறோம் என்றெல்லாம் கட்டுப்படுத்த முடியாமல் போகிறதல்லவா? கொஞ்ச நேரம் கழித்து இதற்காகவா இப்படியெல்லாம் நடந்து கொண்டோம் என உணர்கிறோம் அல்லவா? காரணம் உணர்ச்சி வசப்படும்போது நமது மூளை தாறுமாறாக இயங்குகிறது.

    தீவிர மனச்சோர்வும் அப்படித்தான். அது தீவிரமான உணர்வு நிலை. அப்போது நமது உணர்வுகள், எண்ணங்கள், செயல்பாடுகள் நமது கட்டுப்பாட்டில் இருக்காது. எல்லாமே எதிர்மறையாகத் தோன்றும். எதுவுமே செய்யப் பிடிக்காது. ரசிக்காது. தற்கொலை எண்ணங்கள் தோன்றும். அந்த சமயம் எத்தனை அறிவுரை சொன்னாலும், பாசிட்டிவ் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளச் சொன்னாலும் முடியாது.

    பொறுமையாக அந்த காலகட்டத்தைக் கடப்பது, மனதை அமைதிப்படுத்தத் தேவைப்பட்டால் மருந்துகள் எடுத்துக் கொள்வதே அதற்கான சிகிச்சை.

    இசை, இயற்கையை ரசித்தல், உடற்பயிற்சி செய்தல், யோகா, பாசிட்டிவ் எண்ணங்கள் இதெல்லாம் லேசான மனச்சோர்வுக்குப் பயனளிக்கும். தீவிரமான மனச்சோர்வு இருப்பவரை இதையெல்லாம் பண்ணச் சொல்வது பிரயோசனப்படாது.

    இவற்றை எல்லாம் மனச்சோர்வு வராமல் காக்கும் தடுப்பு முறைகளாகக் கொள்ளலாம். வந்தபின் செய்யும் சிகிச்சைகள் அல்ல. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் தினமும் வாக்கிங், உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். ஆனால் மாரடைப்பு வந்த ஒருவரை வாக்கிங் போனால் போதும் மருத்துவமனைக்குப் போக வேண்டாம் எனச் சொல்வது அபத்தமாக இருக்கும் அல்லவா? அது போலத்தான் தீவிர மனச் சோர்வும்.

    நமக்கு இருப்பது தீவிர மனச்சோர்வுதான் என எப்படி அறிவது? மேலே சொன்ன எந்த வழிமுறைகளாலும் பலனளிக்கவில்லை என்றால் அல்லது செய்ய முடியவில்லை என்றால் அது தீவிர மனச்சோர்வாக இருக்கலாம்.

    மேலும் மன நோயில் பல வகைகள் இருக்கின்றன. மனச்சிதைவு , மனபிறழ்வு பைபோலார் டிஸார்டர், ஃபோபியா, மனப்பதட்டம், என பல வகைகள். பொத்தாம் பொதுவாக மன அழுத்தம், டிப்ரஷன் எனச் சொல்வதற்கு முன் அதற்குரிய நிபுணரை அணுக வேண்டும்.

    -டாக்டர் ஜி. ராமானுஜம்

    • பணம் என்கிற ஒரே பண்டத்தால் மட்டுமே பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகி விடுவதில்லை.
    • பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளின் பணமும் ஒன்று.

    நிம்மதியும், மகிழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். மகிழ்ச்சி காணாமல் போகும் போது நிம்மதியும் காணாமல் போகிறது.

    காற்று, நீர், உணவு, உறக்கம், பாலின்பம் இவை தான் ஒரு மனித உடலுக்கான அடிப்படைத் தேவைகள். இவற்றில் ஒன்றில்லையென்றாலும் உடல் துன்பப்படுவது உறுதி. அந்த உடற்துன்பம் காரணமாக மனநலமும் கெடுவது உறுதி.

    நடைபாதையில் வசிப்பவனின் மனைவியும் சரி. அரசாங்க அதிகாரியின் மனைவியும் சரி. நட்சத்திர விடுதி போன்ற மாளிகையில் வசிப்பவனின் மனைவியும் சரி. மகா கோடீஸ்வரனின் மனைவியும் சரி. தங்கள் கணவனுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் வழங்க தயங்குகிறார்கள்.

    மனித உடலின் அடிப்படைப் பசியான காமம் தணிக்கப்படாத போது ஆழ்மனதில் ஏக்கம் பிறக்கிறது. ஏக்கம் பூர்த்தியடையாத போது ஏமாற்றம் உருவாகிறது. தொடர் ஏமாற்றம் மனநிலையை விரக்தியடையச் செய்கிறது. நாள்பட்ட விரக்தியே வெறுப்பாக மாறுகிறது. இந்த வெறுப்பு தான் மன நிம்மதியை வேரறுத்து, மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்திச் செல்லும். மனைவியின் மனநலத்தை பொறுத்தே கணவனின் மகிழ்ச்சியும், அவன் பெறக்கூடிய வெற்றியின் அளவும், சமூக மதிப்பும், அவனுடைய ஆயுட்காலமும், குழந்தைகளின் எதிர்காலமும், குடும்பத்தின் தரமும் தீர்மானிக்கப்படுகின்றன.

    குடும்ப வாழ்க்கையில் நிகழும் அவலங்களுக்காக கூறப்படுகின்ற காரணங்கள் அனைத்துமே சாக்குப் போக்குகள். உண்மையான காரணம் பாலின்ப ஆற்றாமை. தாம்பத்ய வாழ்வில் காமம் தணிக்கப்படாத போது, பாலின்ப ஆற்றாமை பெண்ணின் உடலில் உருவாகிறது. இந்த ஆற்றாமை நுண்ணிய அளவிலான மன நோயாக மாறுகிறது. அந்த மனநோயின் விளைவாக அப்பாவி பெண் கூட பிடாரியாக மாற வாய்ப்புண்டு. அதன்பின் தன்னுணர்வற்ற நிலையில் கணவனை சகட்டு மேனிக்கு வதைக்கத் தொடங்குகிறாள்.

    பணம் என்கிற ஒரே பண்டத்தால் மட்டுமே பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகி விடுவதில்லை. பெண்ணின் மனதை மகிழ்விக்கும் காரணிகளின் பணமும் ஒன்று. மற்றபடி, பணம் மட்டுமே பாலின்பப் பஞ்சத்தால் ஏற்படும் மன வக்கிரங்களைப் போக்கி விட முடியாது. பாலின்பத்துக்கு மாற்றுப் பொருளாக பணத்தைப் பயன்படுத்த முடியாது. பணம் அத்தகைய சக்தி வாய்ந்த மந்திரக்கோல் அல்ல.

    ஆகவே காமத்தின் புனிதத்தை புரிந்து கொள்ள முடியாத கணவனால் மனைவிக்குரிய இன்பங்களை நிச்சயம் வழங்க முடியாது. பாலின்பங்களை வழங்காத வரை மனைவியின் மனம் மலர முடியாது. மனைவியின் மனம் மலராத வரை, குடும்ப விவகாரச்சண்டைகள் முடிவிற்கே வராது. குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாகக் குடியேற முடியாது.

    படித்ததில் பிடித்தது

    • எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர் வீட்டில் விருந்தாளியாக இருக்கக்கூடாது . அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு.
    • நோய்வாய் பட்டால் 3 நாள் மருந்து சாப்பிட்டாலே குணம் ஆக வேண்டும். அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு .

    "விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்" என பழமொழி இருக்கும்பொழுது மாதக்கணக்கில் மருந்து எடுத்துக் கொள்வது சரியா?

    இந்த பழமொழியை கேள்விப்படும் போதெல்லாம் ஒரு அருமையான கதை என் நினைவுக்குவரும். கதையை சொன்னவர், எங்கள் ஊர் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சி நிகழ்ந்த வந்த பரவை முனியம்மா அவர்கள்.

    ஒருத்தன் தன் தாயிடம் சென்று "அம்மா என்னை என் மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். போயிட்டு வரட்டுமானு அனுமதி கேட்டான்.

    தாயும் சரி என்று சொல்ல... அம்மா எப்போ நான் திரும்பி வர என்று மகன் கேட்க , அதற்கு அந்த தாய் "எப்பொழுது உன் முகம் உனக்கு தெரிகிறதோ அன்று வந்துரு.. அதற்கு மேல் ஒரு நாள் கூட அங்கே தங்க வேண்டாம்"னு சொல்லியனுப்பினாள்.

    தாய் என்ன சொன்னாள் என்று புரியாமல் மகனும் மனைவியை அழைத்துக் கொண்டு விருந்துக்கு சென்றான். அங்கே தடல்புடலாய் விருந்து உபசரிப்பு. இலையில் வைக்க இடம் இல்லை, அத்தனை வகைகள். கோழி, முட்டை, மட்டன், மீன் என்று அனைத்தும் பரிமாறப்பட்டன. அவனுக்கு சந்தோஷமோ சந்தோசம்.

    2ஆம் நாளும் நல்ல விருந்து, இலையில் எல்லாம் இருந்தது மட்டனை தவிர.

    3ஆம் நாள் இலையில் மீன் இல்லை.

    4ஆம் நாள் இலையில் கோழி இல்லை.

    5ஆம் நாள் இலையில் முட்டையும் இல்லை.

    6ஆம் நாள் இலையில் சைவ உணவு சாம்பார் ஒரு கூட்டு,ஒரு பொரியல்.

    7ஆம் நாள் இலையே இல்லை, தட்டில் சோறு சாம்பார் உடன் ஒரே ஒரு பொரியல்.

    8 ஆம் நாள் சாம்பார் சாதம் மட்டுமே.

    இதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவனும் அதை சாப்பிட்டான். 9 ஆம் நாள் அவனுக்கு ஒரு அதிர்ச்சியை தந்தது. தட்டில் கஞ்சி சோறு, தொட்டுக்க ஊறுகாய்.

    பசியில் அதையும் சாப்பிடுவதற்கு தலையை குனிஞ்சா அந்த கஞ்சி தண்ணியில் அவன் முகம் தெரிந்தது. அப்போ தான் அவன் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. அவனும் இனிமேல் இங்கே இருந்தா நமக்கு மரியாதை இல்லை என்று உணர்ந்து தன் வீட்டுக்கு கிளம்பி விட்டான் .

    எவ்ளோ நெருங்கிய சொந்தமா இருந்தாலும் 3 நாளைக்கு மேல் ஒருத்தர் வீட்டில் விருந்தாளியாக இருக்கக்கூடாது . அது தான் ஒரு நல்ல மனுசனுக்கு அழகு. அதை போல் நோய்வாய் பட்டால் 3 நாள் மருந்து சாப்பிட்டாலே குணம் ஆக வேண்டும். அது தான் நல்ல ஆரோக்கியமான உடலுக்கு அழகு .

    -மைதிலி

    • எங்களுக்கு சாமாசார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.
    • எங்கள் நாகூரில் அவர் ஒரு முக்கியப்புள்ளி. எல்லார் வீட்டு விழாக்களிலும் அவருக்கே முதன்மை. ஏன் அப்படி?

    செப்டம்பர் 5 டாக்டர் சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் பிறந்தநாள். அவர் விரும்பியவாறு இது ஆசிரியர் நாளாக மலர்ந்துள்ளது.

    ஆசிரியராகத் தொடங்கிக் குடியரசுத் தலைவர் பொறுப்பு வரை அனைத்தையும் பொறுப்புடன் நிறைவேற்றிய பெருந்தகை அவர்.

    'வருங்கால இந்தியா வகுப்பறையில்தான் உள்ளது' என்று கல்வியின் பெருமையைக் கவின்மிக உரைத்தவர்.

    என் ஆசிரியர்கள் நினைவுக்கு வருகிறார்கள். இரண்டாம் வகுப்பு ஆசிரியர் அருமையாகப் பாடம் நடத்துவார். இனிய கருத்துகளை எளிமையாக விளக்கும் ஆற்றல் உடையவர். மதியம் உணவு உண்ட களைப்பில் சற்றே அவர் கண்ணயர்வார். இந்தப் பழக்கத்தை மட்டும் அவரால் விடமுடியவில்லை. இதனால் தலைமையாசிரியரிடம் பலமுறை திட்டுவாங்கியிருந்தார்.

    ஒருநாள் மதியம் சட்டாம் பிள்ளையான என்னை ஆத்திசூடி சொல்ல வைத்துவிட்டுத் தூங்கிப்போனார். என்னிடம் 'அந்த ஹச்.எம் வந்தார்னா என்னை எழுப்பிவிடுடா' என்று சொல்லியிருந்தார்.

    தலைமையாசிரியர் இவரைக் கையுங்களவுமாகப் பிடிக்கவேண்டுமென்றே வருவது தெரிந்தது. இரண்டு மூன்றுமுறை எழுப்பினேன். அவர் விழிப்பதாயில்லை.

    ஓங்கி ஒரு தட்டு தட்டி எழுப்பினேன். அவர் விழித்தெழவும் தலைமையாசிரியர் வகுப்பில் நுழையுவும் சரியாக இருந்தது. தலைமையாசிரியர் சினத்துடன், 'என்னாய்யா பண்ணிக்கிட்டு இருக்கீங்க' என்று பொறிந்தார்.

    எங்கள் ஆசிரியர் கவலையே படாமல், "ஒன்னுமில்லே சார், சிங்கமும் சுண்டெலியும் கதை சொன்னேனா, சிங்கம் எப்படித் தூங்கும்னு பையங்க கேட்டாங்க. அதைத்தான் செஞ்சு காட்டிகிட்டு இருந்தேன். நீங்களும் கரெக்டா வந்துட்டீங்க." என்ற சொல்லிச் சமாளித்தார்.

    பையன்களாகிய நாங்கள் மிகவும் ரசித்தோம்.

    எங்களுக்கு சாமாசார் என்று ஒரு ஆசிரியர் இருந்தார். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.

    எங்கள் நாகூரில் அவர் ஒரு முக்கியப்புள்ளி. எல்லார் வீட்டு விழாக்களிலும் அவருக்கே முதன்மை. ஏன் அப்படி?

    மாணவர்களுக்கு அவர் ஆசான் மட்டுமல்ல. ஆலோசகர் மற்றும் வழிகாட்டி.

    மேலே எவ்வளவு படித்தபின்னும் அவரிடம் வந்து யோசனை கேட்டு, அதன்படி முன்னாள் மாணவர்கள் நடப்பார்கள்.

    உடல் நலமில்லாமல் இருப்போருக்கு அவர் மருத்துவ ஆலோசகர், பள்ளிமுடிந்து அவர் தெருவில் நடந்து போகும்போது அழைத்துக் காட்டுவார்கள்.

    அவர் நாடி பிடித்துப் பார்ப்பார். "உடனே ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டுப் போங்க" என்பார். நோயாளி பிழைப்பார்.

    சில பேர் நாடி பார்த்த பின் "ரெண்டு நாள் பார்த்துட்டு அப்புறமா ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகலாம்" என்று சொல்லுவார். அந்த ரெண்டு நாளில் நோயாளி பரமபதம் அடைந்து விடுவார்.

    நிலை உணர்ந்து கருத்துச்சொல்லி உதவுவார். ஊர் மக்கள் அவரிடம் உயிரையே வைத்திருந்தனர்.

    சாமிநாத அய்யர் என்ற அவர் ஒவ்வொரு நாளும் நாகூர் தர்காவுக்குப்போவார். அவர் போவதை பார்த்து வெற்றிலைப் பாக்குக் கடை உசேன் ராவுத்தர் வெற்றிலை சீவல் எடுத்து பொட்டலம் கட்டி வைப்பார்.

    அவர் திரும்பி வரும்போது தெருவில் இறங்கி வந்து அவரிடம் பணிவோடு வழங்குவார். சாமாசார் பையில் கைவிடுவார், காசுகொடுக்க. உசேன் ராவுத்தர் "போயிட்டு வாங்க சார்" என்று வழிஅனுப்புவார். இந்த நாடகம் ஒவ்வொருநாளும் நடப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

    கணவர் அனுப்பிய பணத்தை சரியாக தரவில்லை என்று போஸ்ட்மேன் மீது குறை சொல்லுகிறார் ஓர் இஸ்லாமிய மாது. சாமாசார் அதை கேட்டு, அந்த போஸ்ட்மேனை வரவழைத்து, அவரைக் கண்டித்து பணத்தை வாங்கி அம்மையாரிடம் கொடுத்து அனுப்பி விட்டு, போஸ்ட் மாஸ்ட்டருக்குத் தெரிஞ்சா உன் வேலையே போய்விடும். இனிமே இப்படிச் செய்யாதே என்று எச்சரித்தார்.

    ஊரில் முக்கியமானவராக ஆசிரியர் இருந்திருக்கிறார் என்பதற்கு இந்த சாமாசார் ஓர் உதாரணம்.

    ஆசிரியர் என்பவர் எல்லோராலும் மதித்து போற்றப்படுபவர். எனவே ஆசிரியர்கள் பொறுப்புணர்ந்து நடப்பது அவசியம்.

    ஆசிரியர் என்பவர் பணியாற்றுபவர் அல்லர். அவர் சிறந்தப் பொறுப்பினை வகுத்து நிறைவேற்றுபவர்.

    -புலவர் சண்முகவடிவேல்

    ×