என் மலர்tooltip icon

    கதம்பம்

    • வறுமையின் பிடியில் வாடிய வ.உ.சி. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார்.
    • மளிகை கடை ஆரம்பித்தார். நஷ்டம். நண்பர்கள் விலகிப் போனார்கள்.

    "ஒரு மகிழ்ச்சியான செய்தி" என்று சொல்லியபடியே நண்பரின் வீட்டுக்குள் நுழைந்தார் வ. உ. சி.

    நண்பர் ஆர்வத்துடன், "அப்படியா, என்ன செய்தி அது? உடனே சொல்லுங்கள் பிள்ளைவாள்."

    "எனக்கு மகன் பிறந்திருக்கிறான்"

    என்று சொல்லிவிட்டு நண்பர் வீட்டு திண்ணையில் அமர்ந்தார் வ.உ.சி.

    "ரொம்ப சந்தோஷம் பிள்ளைவாள். தாயும் சேயும் நலம்தானே?"

    "மிக்க நலம். அடுத்து உங்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி."

    "என்ன ?"

    "இப்போது பிறந்திருக்கும் என் பையனுக்கு ஒரு வெள்ளைக்காரரின் பெயரை வைக்கப் போகிறேன்."

    நண்பர் திகைத்துப் போனார்.

    "என்ன சொல்கிறீர்கள் பிள்ளைவாள் ?"

    "ஆமாம். ஒரு ஆங்கிலேயரின் பெயரைத்தான் என் மகனுக்கு நான் வைக்கப் போகிறேன்."

    நண்பர் எதுவும் புரியாமல், "பிள்ளைவாள். நம் வாழ்நாள் எல்லாம் நாம் பாடுபட்டது ஆங்கிலேயர்களை இந்த நாட்டை விட்டு விரட்டத்தானே?"

    'ஆமாம்' என்று சொல்லியபடியே தலை குனிந்து அமர்ந்திருந்தார் வ.உ.சி.

    "அப்படி இருக்கும்போது எந்த வெள்ளைக்காரர்களுக்கு எதிராக போராடினோமோ, அந்த வெள்ளைக்காரரின் பெயரை எப்படி உங்கள் மகனுக்கு..."

    வ. உ. சி. கண்கள் கலங்க தலை நிமிர்ந்து பார்த்தார்.

    "அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது."

    ஆம். மிக மிக முக்கியமான காரணம் ஒன்று இருந்தது.

    சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ. உ. சி ஆரம்பித்த கப்பல் கம்பெனி, எதிர்பார்த்த அளவு வருமானம் இன்றி, ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு, கடனில் மூழ்கிப் போனது.

    வ. உ.சி.யின் குடும்ப சூழ்நிலை கேள்விக்குறியானது.

    வறுமையின் பிடியில் வாடிய வ.உ.சி. தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற என்னென்னவோ செய்து பார்த்தார்.

    மளிகை கடை ஆரம்பித்தார். நஷ்டம். நண்பர்கள் விலகிப் போனார்கள்.

    மண்ணெண்ணெய் வியாபாரம் ஆரம்பித்தார். அதிலும் நஷ்டம். சொந்தக்காரர்கள் காணாமல் போனார்கள்.

    தெரிந்தவர்கள் ஓரிருவரை தவிர எவரும் பெரிதாக உதவி செய்யவில்லை.

    அடுத்து எந்த திசையில் செல்வது, என்ன தொழில் செய்வதென்று புரியாமல் திக்கி திணறிக் கொண்டிருந்தார் வ. உ. சி.

    அடிப்படையில் வ. உ. சி ஒரு வழக்கறிஞர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அவருடைய வழக்கறிஞர் உரிமத்தை ஆங்கிலேய அரசு ரத்து செய்து வைத்திருந்தது.

    ஆனால் ஒரே ஒரு ஆங்கிலேயர் மட்டும் வ.உ.சி. மீது இரக்கம் கொண்டிருந்தார்.

    அவர்தான் நீதிபதி வாலஸ்.

    வ. உ. சி. ஒரு நல்ல மனிதர் என்பதை நன்கு அறிந்திருந்தார் வாலஸ்.

    ஜாதி, மதம், இனம், மொழி எல்லாவற்றையும் கடந்து மனித நேயத்தோடு சிந்தித்தார்.

    வ. உ.சிக்கு உதவி செய்வதற்காக அவர் இழந்திருந்த வக்கீல் உரிமையை, வாதாடி போராடி மீட்டுக் கொடுத்தார் நீதிபதி வாலஸ். இந்த தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் கண்கலங்கி கைகூப்பி தொழுதார் வ. உ. சி !

    நீதிபதி வாலஸ் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக் கடனாக, தான் என்ன செய்ய முடியும் என சிந்தித்தார்.

    தன் மகனுக்கு வாலேஸ்வரன் என்று பெயர் சூட்டினார்.

    "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

    செய்ந்நன்றி கொன்ற மகற்கு".

    செக்கிழுத்ததால் மட்டும் அவர் நம் நினைவில் நிற்கவில்லை. செய்நன்றி மறவாத அந்த நல்ல குணத்தால்தான் சரித்திர புகழ் பெற்று விளங்குகிறார் வ. உ. சி.

    -ஜான்துரை ஆசீர்செல்லையா

    • “அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்...”
    • இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை..." என்று படித்துவிட்டு, இதன் பொருள் என்ன? என்று கேட்டு உடல் குலுங்க குலுங்க சிரித்தார் டி.எம்.எஸ்.

    ஒருவரும் பதில் சொல்லவில்லை.

    "என்னய்யா சொல்கிறீர்கள்? இந்த பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று இங்கே இருக்கும் ஒருவருக்குமே தெரியாதா ?"

    ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அத்தனை பேரும் டிஎம்எஸ்ஸின் அந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள்.

    அருணகிரிநாதர் பட பாடல் பதிவு நேரம் அது. (1964)

    சிரிப்பதை நிறுத்திய டிஎம்எஸ்ஸின் குரல் கொஞ்சம் கோபத்தோடு உயர்ந்தது.

    "சொல்லுங்கள் ஐயா, அர்த்தம் தெரியாவிட்டால் இதை நான் எப்படி உணர்வுகளோடு பாட முடியும் ? அந்தப் பாடலை கேட்பவர்கள்தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும் ?"

    சுற்றி இருந்தவர்களின் மௌனம் தொடர்ந்தது.

    ஏனெனில் அவர்களுக்கு தெரியும், எந்த ஒரு பாடலையும் அதன் அர்த்தம் தெரியாமல், உணர்வுகள் புரியாமல் ஒருபோதும் பாடமாட்டார் டிஎம்எஸ்.

    மீண்டும் ஒரு முறை தன் கையிலிருந்த அந்த பாடல் வரிகளை வாசித்துப் பார்த்தார் டிஎம்எஸ்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை

    அத்திக்கிறை சத்திச் சரவண

    முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்..."

    திரும்ப திரும்ப வாசித்துப் பார்க்கிறார் டி.எம்.எஸ். அதன் பொருள் விளங்கவில்லை.

    தலைநிமிர்ந்து தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்த பின், அழுத்தமாக உதட்டை பிதுக்கி விட்டு, பாடல் எழுதி இருந்த காகிதத்தை கீழே வைத்தார் டி.எம்.எஸ்.

    "அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்..."

    இப்படி சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.

    அவரது பிடிவாதம் அறிந்த படக் குழுவினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்.

    அப்போது அருகில் இருந்த யாரோ ஒருவர் அசரீரி போல குரல் கொடுத்தார் : "வாரியார் சுவாமிகளை கேட்டால் இதன் பொருள் புரியும்..."

    "அப்படியா ?" என்று திரும்பி அவரைப் பார்த்து கேட்ட டி.எம்.எஸ்., அடுத்த நிமிடமே வாரியார் வீட்டை நோக்கி விரைந்து புறப்பட்டார்.

    வரவேற்றார் வாரியார்.

    பணிவோடு தன் அருகில் வந்து அமர்ந்த டிஎம்எஸ்-க்கு புன்னகையோடும் பொறுமையோடும் பொருள் விளக்கினார் வாரியார்.

    "முத்தைத்தரு பத்தித் திருநகை ...

    வெண்முத்தை நிகர்த்த, அழகான

    பல்வரிசையும் இளநகையும் அமைந்த....

    அத்திக்கு இறை ...

    தெய்வயானை அம்மைக்குத் தலைவரே...

    சத்திச் சரவண...

    சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே...

    முத்திக்கொரு வித்துக் குருபர...

    மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு

    விதையாக விளங்கும் ஞான குருவே..."

    இப்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளை வாரியார் விளக்கமாக எடுத்துச் சொல்ல சொல்ல,

    அதை கவனமாக கேட்டுக் கொண்டு, அதன் பிறகே 'அருணகிரிநாதர்' படத்தின் அந்தப் பாடலைப் பாடினாராம் டி.எம்.எஸ்.

    -துலாக்கோல் சோம நடராஜன்

    • இனிப்பு சுவையை வருடம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பண்டிகை காலங்களில் மட்டும் நாவுக்கும் மூளைக்கும் காட்டி வருவதே நல்லது.
    • எதிலும் வரம்பு மீறாமல் இருப்பது பல தீயவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அல்லவா?

    இனிப்பு என்பது மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் ஒரு சுவை அன்று.

    அது என்றோ ஒரு நாள் கிடைத்தால் தான் அதற்கு மரியாதை.

    அதற்கு மேல் இனிப்பு சுவை அனுதினமும் கேட்பது மூளையில் ஒரு அடிமைத்தனத்தை உருவாக்கி விட்டதன் அர்த்தம்.

    மூளையில் பரிசில் தரும் மையம் உள்ளது.

    அதை Reward centre என்று கூறுவோம் .

    மதிமயக்கும் விசயம் ஒன்றை நாம் செய்தால் அது பரிசில் தரும் இடத்தைத் தூண்டும்.

    பிறகு மீண்டும் மீண்டும் அதையே செய்யச்சொல்லி மூளை நம்மை கட்டாயப்படுத்தும் .

    மூளைக்கு அது நமது உடலுக்கு நன்மையான காரியமா? தீமை தரும் காரியமா? என்றெல்லாம் தெரியாது.

    தனக்கு விருப்பமான தன்னை குதூகலத்தில் ஆற்றும் ஒன்றை மீண்டும் மீண்டும் செய்யச்சொல்லி நம்மை உந்தும் இந்த கூறுகெட்ட மூளை.

    போதைப்பொருட்களான மது, கொகெய்ன் போன்றவை போலவே இந்த இனிப்பு சுவையும் அதிகமான அளவு மூளையின் பரிசில் தரும் மையத்தை தூண்டுகிறது .

    இன்னும் சொல்லப்போனால் கொகெய்ன் போதைப்பொருளை விட சில மடங்கு அதிகமாக நாம் அனுதினம் உண்ணும் சீனி/சர்க்கரை போன்ற இனிப்பு சுவை தரும் உணவுகள் தூண்டுகின்றன என்பது ஆய்வுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள்.

    இந்த இனிப்பு சுவை இவ்வாறு மூளைக்கு அடிமைத்தனத்தை ஏற்படுத்துகின்றது.

    இதில் இருந்து எப்படி வெளியே வருவது?

    என்னதான் மூளை அடம்பிடித்தாலும் இனிப்பு உண்பதை ஒரு மாதம் நிறுத்தி விட்டால் தானாக மூளை வழிக்கு வந்துவிடும்.

    இனிப்பு சுவையை வருடம் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பண்டிகை காலங்களில் மட்டும் நாவுக்கும் மூளைக்கும் காட்டி வருவதே நல்லது.

    எதிலும் வரம்பு மீறாமல் இருப்பது பல தீயவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கும் அல்லவா?

    நீரிழிவு நோயர்களே.. தயவு செய்து இனிப்பு சுவை தரும் அத்தனை உணவுகளையும் இன்றிலிருந்து ஒரு மாதம் நிறுத்துங்கள்.

    அதற்குப்பின்பு இனிப்பு கலக்காத பாலில் உள்ள தித்திப்பைக்கூட உங்கள் நாவின் சுவை அரும்புகள் உங்களுக்கு காட்டும்.

    இனிப்பு சுவை என்பது மனிதனின் உடலுக்கு தீது உண்டாக்கவல்லது .

    அதை மருந்தைப்போல எப்போதாவது பண்டிகைகளின் போது எடுக்கலாம்.

    தேன் கூட மருந்து தான். அதை தினமும் எடுப்பது தவறு.

    நம் முன்னோர்கள் எந்த காலத்திலும் நம்மைப்போல தினமும் சீனி/சர்க்கரை கலந்த இனிப்புகளை கண்டதுமில்லை... உண்டதுமில்லை...

    இட்லி தோசை கூட ஆடம்பரமாக பண்டிகைகளுக்கு மட்டுமே வீட்டில் செய்யப்பட்ட காலங்கள் உண்டு. இன்று தினமும் இட்லி, தோசை உண்ணாத வீடுகள் இல்லை .

    பப்ஸ், சமோசா டொரினோ கலர் போன்றவை எப்போதாவது விருந்தாளிகள் வந்தால் வீட்டுக்குள் வரும்.

    ஆனால் இன்று நமது குளிர்சாதனப்பெட்டிகளில் எங்கும் குளிர்பானங்கள்.

    மாலை நேர ஸ்நேக்ஸாக இத்தனை பண்டங்கள்.

    அனைத்திலும் நீக்கமற நிறைந்திருப்பது இனிப்பு சுவை.

    நாம் இந்த இனிப்பு சுவைக்கு பிறந்த குழந்தை முதற்கொண்டு அடிமைப்படுத்துகிறோம்.

    ஆறு மாதம் வரை நன்றாக பால் பருகி எடை கூடிய குழந்தை அதற்குப்பிறகு பிஸ்கட்/ இனிப்பு கலந்து பால் / இனிப்பு கலந்த உணவுகள் கொடுக்கப்பட்டு அதற்கு அடிமையாக்கப்படுகின்றன.

    பிறகு இனிப்பு இல்லாத உணவுகளை அவை உட்கொள்ள மறுக்கின்றன.

    இனிப்பு என்பது மருந்து போன்றது.

    இனிப்பை நாம் மருந்து போல எப்போதாவது எடுத்தால் எதிர்காலத்தில் நீரிழிவுக்கு தினமும் மருந்து எடுக்கும் நிலையை தவிர்த்துக்கொள்ளலாம்.

    -Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

    • முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர் இருந்தார்.
    • அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றபடி இருப்பார்.

    அவ்வையார் எளிதாக எழுதிய வைத்துச் சென்றுவிட்டார். சினம் கொள்ளாமல் இருந்து விட முடிகிறதா? முடியவில்லையே!

    "தீராக் கோபம் போதாய் முடியும்" என்பது முதுமொழி.

    ஆண்களுக்கு எளிதாக சினத்தைக் காட்டும் இடம் மனைவிதானே!

    மனைவி மட்டும் தான், "இது இப்படி தான், முதலில் பாயும் அப்புறம் பதுங்கும்" என்று நினைத்து அமைதி காப்பவர்.

    தலைமை ஆசிரியர் என்னை அழைத்துச் சினந்தார். "உங்களால் தான் பள்ளிக்கூடமே கெடுகிறது. மாணவர்களை அடக்கவே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் ஏன் வாத்தியாரா வந்தீங்க?" என்றெல்லாம் கூறி, யார் மேலோ உள்ள கோபத்தை என்னிடம் வெளிப்படுத்தினார்.

    அவர் அப்படிப் பேசலாம். நான் அவரிடம் அவ்வாறு பேச முடியுமா? அமைதியாக வீடு வந்தேன்.

    மனைவி காப்பி ஆற்றியவாரே வந்தார். நான் வாங்கிய வசவை யாரிடமாவது கொட்டியாக வேண்டுமே!

    "காப்பியாடி இது..? கழனித்தண்ணி மாதிரி இருக்கு!" என்று சீறினேன்.

    என் மனைவி புரிந்து கொண்டார். "இது எங்கேயோ வாங்கினதை இங்கே வந்து இறக்கி வைக்குது" என்று பக்குவமாகக் கேட்டார்.

    "ஏங்க.. உங்க எச்.எம். ஏதாவது திட்டிட்டாரா?"

    புரிந்து கொண்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன். நடந்ததை விவரமாகக் கூறி மனச்சுமையை இறக்கினேன்.

    ஆண் நெருப்பு என்றால் பெண் தண்ணீர். ஆம், நான் நெருப்பாகச் சுட்ட போது, என் மனைவி தண்ணீராக மாறி அதை அணைத்தார்.

    கொள்ளிக்கட்டையின் மீது நீரை ஊற்றினால், சுறுசுறுவென்று சத்தம் வரும். கூடவே கொஞ்சம் புகையும் வரும்.

    அதனால் தான் அடுத்த வீட்டுக்காரர், "பக்கத்து ஊட்டுல என்னா புகையுது?" என்று அவர் மனைவியிடம் கேட்கிறார். இதனால் தான் நெருப்பை "அக்னி பகவான்" என்று ஆணாக்கிக் கூறுகிறார்கள்.

    காவிரி கங்கை ஆறுகளை, "காவிரி அன்னை" என்று பெண்ணாக்குகிறார்கள். "கங்கா மாதா" என்று நெகிழ்கிறார்கள்.

    முல்லா ஒரு சிறந்த சிந்தனையுடன் நகைச்சுவையும் கூட்டி நல்வழிகாட்டுபவர். அவர் வீட்டில் ஒரு வேலைக்காரர் இருந்தார். அவருக்கு ஒரு பழக்கம், அன்றாடம் ஒவ்வொரு பொருளைத் திருடிச் சென்றபடி இருப்பார்.

    முல்லா வேலைக்காரர் திருடிச் செல்வதை அறிந்து கொண்டார். ஆயினும் அவரிடம் கோபமாகப் பேசாமல் நயமாகவே திருத்த நினைத்தார்.

    ஒவ்வொன்றாக நிறையப் பொருளை எடுத்துப்போய் விட்டார். கடைசியாக ஒரு நாள் ஒரு தம்ளரை எடுத்து மறைவாக மடியில் கட்டிக் கொண்டு, முல்லாவிடம் விடைபெற்று வீடு சென்றார். அவர் பின்னாலயே முல்லாவும் பணியாள் வீட்டுக்குச் சென்றார்.

    வீடு சென்ற பணியாள் திரும்பிப் பார்க்கிறார், முல்லாவும் பின்னாலயே வருகிறார்.

    "முல்லா நீங்க எங்கே வாரிங்க?" என்றார் வேலைக்காரர்.

    "நானும் உங்க வீட்டுக்கே வந்துடறேனே" இது முல்லா.

    "ஏன் முல்லா இப்படிச் சொல்றீங்க?"-வேலையாள்

    "வேற என்னப்பா? என் பொருளெல்லாம்தான் இங்கே வந்துட்டு, நான் மட்டும் அங்கே இருந்து என்ன செய்யப்போறேன்? நானும் வந்துடறேன். அதான் வந்துட்டேன்"

    முல்லா இவ்வாறு கூறியதைக் கேட்டதும் வேலைக்காரர் வெட்கப்பட்டுத் தலைகுனிந்தார்.

    கோவமாகப் பேசி இருந்தால், வேலைக்காரர் தலைகுனிவாரா?

    ஒரு திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கே.யும் மதுரமும் கணவன் மனைவியாய் நடிப்பார்கள்.

    பல ஆண்டுகளாகியும் அவர்களுக்குக் குழந்தைப் பேறு இல்லை. ஒரு நாள் கலைவாணர் சினத்துடன் சொல்வார், "பத்துவருசமாப் புள்ளை இல்லே. வேற கல்யாணம் பண்ண வேண்டியது தான்."

    மதுரம் சொல்லுவார், "புள்ளை இல்லேன்னா என்னாங்க? கல்யாண எல்லாம் வேணாங்க"

    கலைவாணர்,"அதலெல்லாம் முடியாது, வேற கல்யாணம் பண்ணியே ஆகனும்" என்று பிடிவாதம் பிடிப்பார்.

    மதுரம் கடைசியாகச் சொல்லுவார், "நான் வேணாம் வேணாம்னு சொல்லுறேன். நீங்க என்ன கேட்க மாட்டேங்கறீங்க. சரிங்க நீங்களே சொல்றீங்க, வேற என்ன செய்றது? நல்ல மாப்பிள்ளையாப் பாருங்க. கல்யாணம் பண்ணிடலாம்" என்றதும் கலைவாணர் கலங்கி நிப்பார்.

    இது வெறும் சிரிப்பு மட்டுமா? சிந்திக்க வேண்டிய செய்தி. சினம் ஒரு சேர்ந்தாரைக் கொல்லி. சினம் தவிர்ப்போம் சிறக்க வாழ்வோம்!.

    -புலவர் சண்முகவடிவேல்

    • வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம்.
    • அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.

    *வீட்டில் திருவிளக்கு ஏற்றுவதற்கு விளக்கெண்ணெய் தீபம் மிகவும் நல்லது.

    * வீட்டில் குறைந்தது இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும், துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.

    * வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.

    * வீட்டில் பணப்பெட்டி தென்மேற்கு திசையில் கிழக்கே பார்த்து அல்லது வடக்கே பார்த்து வைக்கலாம். அல்லது வடமேற்கு திசையில் கிழக்கே பார்த்து வைத்தால் பணம் சேரும் வாய்ப்பு அதிகம்.

    * குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வீட்டில் வடகிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் அமர்ந்தும் செவ்வாய், புதன், கிழக்கே பார்த்து அமர்ந்தும் மற்ற நாட்களில் வடக்கே பார்த்து அமர்ந்தும் படித்தால் படித்தவுடன் மனதில் பதியும் வாய்ப்பு மிக அதிகம்.

    * 15 வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் அம்பாளுக்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.

    -ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • நம் உடலில் இருக்கின்ற நீர் சக்தி மற்றும் வெப்ப சக்தி இயல்பாக இருக்கும் போது கிரகணங்களால் நமக்கு பெரும் பாதிப்பு நேராது.
    • அதே சமயத்தில் உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களின் உடலில் வெப்ப சக்தியும் நீர் சக்தியும் இயல்புக்கு மாறாக இயங்கும்.

    சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ன செய்யும் ?

    நமது உடலுக்கு ஆதார சக்தியாக சூரியனும், இயக்க சக்தியாக சந்திரனும் இருக்கிறார்கள்.

    அறிவியல் உலகம், சூரியனுடைய தன்மையை வெப்ப சக்தி, விட்டமின் டி எனவும், சந்திரனுடைய தன்மையை நீர்சக்தி, நீர்ச்சத்து எனவும் கூறுகிறது.

    வான் வெளியில் இருக்கும் சூரியனும் சந்திரனும் நம் உடலில் வெப்ப சக்தியாக நீர் சக்தியாக இருக்கிறார்கள்.

    இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.

    இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

    வான் வெளியில் சூரிய சந்திர சக்தியின் வெளிப்பாடு மாறும்போது நமது உடலில் அவை எதிரொலிக்கும்.

    நம் உடலில் இருக்கின்ற நீர் சக்தி மற்றும் வெப்ப சக்தி இயல்பாக இருக்கும் போது கிரகணங்களால் நமக்கு பெரும் பாதிப்பு நேராது. அதே சமயத்தில் உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களின் உடலில் வெப்ப சக்தியும் நீர் சக்தியும் இயல்புக்கு மாறாக இயங்கும். இவர்களுக்கு கிரகங்களினால் பாதிப்பு நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    நன்றாக கவனியுங்கள்... நிச்சயம் நேரும் என்பதல்ல நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதற்காகவே கிரகண நேரங்களில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என நமது பெரியவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    -சிவ. இராம. கணேசன்

    • யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள்.
    • அவர்கள் தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள் என்றார் வேதாத்திரி மகிரிஷி.

    ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்...

    அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

    அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா.. மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது என்று கேட்டார்.

    அதற்கு மகிரிஷி பதிலளிக்கையில், "யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான் முதலில் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள் என்றார்.

    உங்கள் வீட்டில் இனி யார் விட்டுக் கொடுத்துப் போவது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இருவரும் அறிவாளியாக இருந்தால் அதுவே கோவில்.

    -உழவன் மகன்

    • சிவன் மேல் தீராத பற்றுகொண்ட ராஜராஜன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும் திட்டமிட்டான்.
    • ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.

    எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன்.

    கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது.

    அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன்.

    ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும்.

    அந்த ராஜராஜன் இதில்தான் உருவானான். அக்காலம் பாண்டியர், சிங்களர் இன்னும் சாளுக்கிய மன்னர்கள் என பல அச்சுறுத்தல் இருந்த நேரம் ராஜராஜன் முடிசூடினான்.

    அவனிடம் அன்றே எல்லா படையும் இருந்தது, கப்பல் படை இருந்தது, நாவாய் படை என்று அதற்கு பெயர், இன்று உலகம் கொண்டாடும் நேவி எனும் வார்த்தை அதிலிருந்தே வந்தது.

    சோழநாட்டை காக்கவும், சைவ சமயத்தை பரப்பவும் பெரும் போர்களை அவன் தொடுத்தான். பாண்டிய நாடு முதல் சேரநாடு வரை அவன் கட்டுபாட்டில் இருந்தது.

    சேரநாட்டில் காந்தளூர்சாலை என்றொரு இடம் இருந்திருக்கின்றது. அங்கு பகைவரின் கப்பல்கள் எல்லாம் வந்திருக்கின்றன, அங்கு சென்று அந்த கடற்கலன்களை எல்லாம் அழித்திருக்கின்றான், இது அவனது மெய்கீர்த்தியில் இருக்கின்றது.

    பாண்டியரும் சிங்களரும் சேர்ந்து தொடுக்கும் போர் அபாயத்தில் இருந்து தப்பிக்க பெரும் கடற்படையுடன் சிங்கள நாட்டைதாக்கி இருக்கின்றான், அநுராதாபுரம் எனும் சிங்கள நகரம் அவனால் நொறுக்கபட்டிருக்கின்றது.

    வடக்கே கலிங்கம் வரை அவன் கைபற்றியிருக்கின்றான்.

    ராஜராஜன் காலம் புத்த மதத்தை வீழ்த்தி சைவ மதம் செழித்த காலம், தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் சைவ மதம் வளர்த்திருக்கின்றான்.

    இன்றைய இந்தோனேஷியா, மலேசியா, கம்போடியா நாடுகள் அடங்கிய அன்றைய ஸிரி விஜயா நாட்டின் மீதும் தன் மகன் தலைமையில் பெரும் போர் புரிந்துவென்று வெற்றிகொடி நாட்டி, சைவ மதம் வளர்த்திருக்கின்றான்.

    அவனது கடற்கலன்களும், அவனின் போர்முறையும் அவனுக்கு அப்படி பெரும் வெற்றிகளை கொடுத்திருக்கின்றன‌.

    உலகில் தோல்விபெறாத அரசர்கள் வரிசையில் ராஜராஜனின் பெயரும் உண்டு, ஆனால் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர்கள் அலெக்ஸாண்டர், சீசர் என வேறு வரிசை வைத்திருப்பார்கள், வைக்கட்டும்.

    சிவன் மேல் தீராத பற்றுகொண்ட ராஜராஜன், தன் வெற்றிக்கெல்லாம் சிவனே காரணமென்றும், சிவனுக்கு காலத்தால் அழியாத ஆலயம் கட்டவும் திட்டமிட்டான்.

    ஆலய பணிகளில் சிவனடியாரான கரூர் சித்தரைத்தான் முன்னிறுத்தினான், அதுதான் அவன் அடியார்களை அற்புதமாக மதித்த விதம்.

    பல நாடுகளில் திரட்டபட்ட செல்வமும், பல மன்னர்கள் கொடுத்த வரியும், அவன் அடிமைகளாக பிடித்த எதிரி நாட்டு வீரர்களும் அதற்கு பயன்பட்டன‌.

    காலத்தை வென்று நிற்கும் கற்காவியமான பெரிய கோவில் அவனால்தான் கட்டபட்டது, முழுக்க முழுக்க கல்லான் ஆன கோவில் அது.

    கற்தூண்கள் உச்சியில் பாரம் இல்லையென்றால் விலகிவிடும் என்பதற்காக பெரும் கல்லை உச்சியில் நிறுத்தி , ஆலயத்தை நிலைபெற்றிருக்க செய்வதில் நிற்கினது அவனின் கட்டட கலை அறிவு.

    ஆலய பாதுகாப்பும் அதுதான், எவனாவது அழிக்க முயன்றால் ஒரு தூணை தொட்டாலும் முடிந்தது விஷயம்.

    அதாவது அந்நிய நாட்டு படைகள் முதலில் தாக்குவது அந்த ஆலயத்தைத்தான், காரணம் அளவுக்கு அதிகமான செல்வம் அங்குதான் சேர்ந்திருக்கும்.

    அதனை எண்ணித்தான், தன் காலத்திற்கு பின்பு என்றாவது எவனாவது அதனை அபகரிக்கும் எண்ணத்தில் வந்தால் அவன் அழிந்து போகவேண்டும் என்று சில வரங்களை அவன் ஆலயத்தில் நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது.

    அப்படி தன் மூச்சே அந்த ஆலயம் என வாழ்ந்திருக்கின்றான் ராஜ ராஜன்.

    ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், தமிழர்களின் தனிபெரும் அரசன் ராஜராஜன், தமிழர்களின் தனிபெரும் அடையாளம் அந்த கோவில்.

    வரலாற்றில் பெரும் அடையாளம் மிக்கவனும், உலகின் மிக வலுவான கப்பல் படையினை முதலில் நிறுவியவனும், தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் ஆன அந்த வீர தமிழனுக்கு பிறந்தநாள் மரியாதைகளை செலுத்துவதில் ஒவ்வொரு தமிழனும் பெருமையடைகின்றான்.

    -சுந்தர் நத்தமன்

    • மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும், ஏனெனில் நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.
    • மூத்த குடிமக்களிடம் அதிகம் பேசினால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.

    வயதானவர்கள் பொதுவாக தொண தொண என்று ஏதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். அது நமக்கு சற்றே அசௌகரியம் உண்டாக்கும். ஆனால் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா.?

    அந்த தொண தொண பேச்சு, அவர்களைக் காப்பாற்ற, அவர்களை அறியாமலேயே இயற்கை கையாளும் ஒரு வழி. ஆம்.. வயதாகும்போது அதிகம் பேசுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    மூத்த குடிமக்கள் அதிகம் பேச வேண்டும், ஏனெனில் நினைவாற்றல் இழப்பை தடுக்க தற்போது வழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.

    மூத்த குடிமக்களிடம் அதிகம் பேசினால் குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன. முதலாவதாக பேசுவது மூளையை செயல்படுத்துகிறது மற்றும் மூளையை சுறுசுறுப்பாக வைக்கிறது, ஏனெனில் மொழியும் சிந்தனையும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன, பேசாத மூத்த குடிமக்களுக்கு நினைவாற்றல் குறையும் வாய்ப்புகள் அதிகம்.

    அடுத்து, பேசுவது மன அழுத்தத்தை நீக்குகிறது, மன நோய்களைத் தவிர்க்கிறது மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. அடிக்கடி ஒன்றும் சொல்லாமல் நெஞ்சில் புதைத்து நம்மையே திணறடித்துக் கொள்கிறோம். உண்மைதான்! அதனால் மூத்தவர்கள் அதிகம் பேச வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

    மூன்றாவதாக, பேசுவது முகத் தசைகளுக்குப் பயிற்சியளிக்கும். தொண்டை மற்றும் நுரையீரலின் திறனை அதிகரிக்கும். அதே நேரத்தில், இது கண்கள் மற்றும் காதுகள் சிதைவடையும் அபாயத்தைக் குறைக்கிறது. மற்றும் தலைச்சுற்றலை குறைக்கிறது.

    சுருக்கமாகச் சொன்னால், ஓய்வுபெற்றவர்கள், அதாவது மூத்த குடிமக்கள் மறதி நோயைத் தடுக்க ஒரே வழி, முடிந்தவரை மக்களுடன் சுறுசுறுப்பாகப் பேசுவதும்தான். இதற்கு வேறு எந்த சிகிச்சையும் இல்லை.

    -தஞ்சை வராகி

    • தமது வறுமையைப் போக்க, புலவர்கள் பொதுவாக மன்னர்களிடம் சென்று பாடி பொருள் பெறுவது அக்கால வழக்கம்.
    • அவ்வாறு பரிசு பெறுகையில் பரிசளித்த தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவர்.

    அறுபடை வீடு என்றால் என்ன?

    வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது..

    யோசித்ததுண்டா?

    விடை தேடனும்னா, முதல்ல நக்கீரரை தான் தேட வேண்டும்.

    ஏன்னா.. அவர்தான் முதன்முதலாக கடவுளைப்போற்றி நூல் எழுதியவர்.

    அதற்கு முன்.. இந்த உலகில் நிறைவான வாழ்க்கை வாழ மனிதனுக்கு ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், பாதுகாப்பு, ஆளுமை, அறிவு ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும்.

    இவைகளை பூர்த்தி செய்துதரும் பாஸிட்டிவ் வைப்ரேஷன் உள்ள இடங்களை கண்டுணர்ந்து அங்கு வீடுகள் எழுப்பப்பட்டன.

    அதாவது, 'ஆரோக்கியத்திற்கு திருவேரகம்,

    உறவுக்கு திருப்பரங்குன்று,

    பொருளாதார வசதிக்கு சோலைமலை,

    பாதுகாப்புக்கு சீரலைவாய்,

    ஆளுமை திறனுக்கு குன்றுதோறாடல்,

    ஞானம் பெற திருவாவினன்குடி'

    இவைதான் அந்த தலங்கள்.

    தமது வறுமையைப் போக்க, புலவர்கள் பொதுவாக மன்னர்களிடம் சென்று பாடி பொருள் பெறுவது அக்கால வழக்கம். அவ்வாறு பரிசு பெறுகையில் பரிசளித்த தலைவனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்துக் கூறுவர்.

    மேலும் பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள்.

    இவ்வாறு வழிப்படுத்துவதற்கு அல்லது நெறிப்படுத்துவதற்கு 'ஆற்றுப்படுத்துதல்' என்று பெயர்.

    ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்பதால் பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள். அப்படி எழுதப்பட்ட நூல்கள் 'ஆற்றுப்படை நூல்கள்' எனப்பட்டன.

    பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த முருகனை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை.

    தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் இதுவே. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான்.

    ஆற்றுப்படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் நக்கீரரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார். அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்..

    முத்தமிழ் கடவுள் முருகனின் அருமை பெருமைகளை பாராட்டி அவனிடம் 'இன்ன இன்ன' இடங்களுக்கு சென்றால் 'இதை இதை' பெறலாம் என்று பட்டியலிட்டு எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை.

    அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன.

    -சமரன் நாகன்

    • ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படிக்காமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.
    • பள்ளித்துணை ஆய்வாளர் அப்பள்ளிக்கு வந்தார். எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள்.

    பெருமானே! தாங்கள் கூறியவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது கடவுள் அறிவு வடிவானவர் என்பது ஆகும். கடவுள் அறிவுப்பொருளாக இருக்க, கோயில்களில் செம்பாலும் சிலையாலும் உருவங்கள் வைத்து வழிபடுகிறார்களே? கல்லும் செம்பும் கடவுளாகுமா? இது அறிவுக்குப் பொருந்துமா?

    அப்பனே! இத்தகைய வினாக்கள் எழுவது இயல்புதான். இவைகளுக்கு தக்க விடைகள் பகிர்கின்றேன். ஒருமைப்பட்ட மனத்துடன் கேள்.

    பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவியிருந்தாலும், அந்தப் பசுவின் கொம்பைப் பிடித்து வருடினால் பாலைப் பெறமுடியுமா? வாலைப் பிடித்து வருடினால் என்ன கிடைக்கும்? பால் கிடைக்காது. பல் கிடைக்கும். பாலைப் பசுவின் மடி மூலம் பெறுவது போல், எங்கும் பரந்து விரிந்திருக்கும் இறைவனுடைய திருவருளைக் கோவிலில் விளங்கும் திருவுருவத்தின் மூலமாகப் பெறுதல் வேண்டும்.

    ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படிக்காமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.

    பள்ளித்துணை ஆய்வாளர் அப்பள்ளிக்கு வந்தார். எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள். ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப் பெற்று, மோர்க்குழம்பு போல் மொழு மொழுவென்று இருந்த இந்தப் படியாதவனை பார்த்து.

    தம்பி! நீ என்ன படிக்கின்றாய்? என்று கேட்டார்.

    அவன் "புத்தகம் படிக்கின்றேன் " என்றான்.

    புத்தகம் எங்கே ? என்று கேட்டார்.

    வீட்டில் இருக்கிறது என்றான்.

    புத்தகம் இல்லாமல் ஏன் வந்தாய் ?

    மோட்டார், லாரிகளில் அகப்பட்டுக்கொள்வேன் என்று என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.

    இது என்ன ஆடு, மாடு அடைக்கின்ற பவுண்டா? என்று கேட்ட பள்ளித்துணை ஆய்வாளர் கரும்பலகையில், "அறம் செய்ய விரும்பு " என்று எழுதி, "தம்பி இது என்ன படி" என்றார்.

    அவன் அதைப் பார்த்துக்கொண்டே நின்றான்.

    என்னப்பா! ஆறு மாதங்களாக பள்ளிக்கு வருகின்ற உனக்கு 'அறம் செய்ய விரும்பு' என்பதை படிக்கக் கூடத் தெரியவில்லையே ? " என்று கூறி வெகுண்டார்.

    பின்னர் குழந்தைகள் சுலபமாக படிக்கக் கூடிய விதத்தில் அக்கரும்பலகையில் " படம் " என்று எழுதினார்.

    அம்மாணவனைப் பார்த்து " இதனைப் படி" என்றார். அவன் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நின்றான்.

    பள்ளித் துணை ஆய்வாளர் 'படம்' என்ற பதத்தில் பகரத்தையும் மகர மெய்யையும் அழித்தார். நடுவில் உள்ள எழுத்தைக் காட்டி, தம்பி! இது உனக்குத் தெரிகிறதா? என்றார்.

    தெரிகிறது என்றான். ஆசிரியரும், ஆய்வாளரும் சற்று மகிழ்ந்தார்கள். ஓர் எழுத்தாவது தெரிகின்றது என்றானே என்று உள்ளம் உவந்தார்கள்.

    தம்பி இது என்ன எழுத்து?

    கோடு என்று கூறினான் அம்மாணவன்.

    ஆசிரியரும் ஆய்வாளரும் சிரித்தார்கள்.

    மற்றொரு மாணவனை அழைத்து "இது என்ன?" என்று கேட்டார்.

    அவன் ' ட' என்று கூறினான்.

    கோடும் அதுதான், ' ட' வும் அதுதான். கற்றவன் ' ட' என்று கண்டான். கல்லாதவன் " கோடு " என்று கண்டான்.

    கோட்டுக்குள்ளே அறிவுள்ளவன் ' ட' என்ற ஒலியைக் காண்கின்றான்.

    இது போல, கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளுக்குள்ளே சச்சிதானந்தப் பரம்பொருளை ஞானிகள் காண்கின்றார்கள்.

    அவைகளைச் செம்பு என்றும் கல் என்றும் கூறுவது ' ட' என்ற எழுத்தைக்கோடு என்று கூறுவதை ஒக்கும்.

    திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய " வாழும் வழி " என்ற புத்தகத்திலிருந்து...

    -ஆர். எஸ். மனோகரன்

    • நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும் , கண்ணுக்கும் நல்லது.
    • பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

    நெய் என்பது கொழுப்பு மற்றும் எண்ணெய் வகையில் வருவதால், உடலுக்கு ஆற்றல் தந்து, கூடுதலாக இருப்பின் திசுக்களில் சேமித்து வைக்கப்படுகிறது.

    20 கிராம் கொழுப்பு ஒரு நாளைக்கு உண்ணவேண்டும் என்ற நிலையில் அது, நெய், வெண்ணெய், இறைச்சி, மீன், எண்ணெய் வித்துக்கள் என்று எதிலிருந்து வேண்டுமானாலும் பெறப்படலாம்.

    நிர்ணயித்த அளவில் எடுத்துக் கொள்ளப்படும்போது, உடல் எடை சரியாகவே இருக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டு, உடல் உழைப்பும் இல்லாத நிலையில் சேமிக்கப்பட்டு, எடை கூடும். இதில் உடலில் உள்ள நோய்களின் தன்மையும் கவனிக்கத்தகுந்தது.

    கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் ஏ, ஈ, டி, கே போன்றவை கரைவதற்கு, கொழுப்புத் தேவை என்பதால், இதய நோய் உள்ளவர்களுக்கு கூட குறைந்த பட்சம் 15 கிராமாவது பரிந்துரைக்கப்படுகிறது. அது தாவர கொழுப்பாக/எண்ணெயாக இருப்பதும் நல்லது.

    நெய்யில், சற்று கூடுதலாக விட்டமின் ஏ இருப்பதால், தோலுக்கும் , கண்ணுக்கும் நல்லது. பிற மாமிச கொழுப்புகளை விட, செல்களினூடே எளிதில் ஊடுருவும் என்பதால் மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இது சுத்தமான பசு நெய்க்கு மட்டுமே பொருந்தும்.

    பசும்பாலில் இருந்து எடுக்கும் வெண்ணெயில் தயாரித்த நெய்யை தினமும் ஒரு தேக்கரண்டியளவு பருப்புடனோ, தோசையுடனோ, குழம்புட னோ எடுத்துக்கொள்வதில் தவறில்லை. அதனுடன் கூடுதலான அசைவம் அல்லது தாவர எண்ணெய்/ வித்துக்கள் உடலுக்குப் போகிறதா, உடலுழைப்பே இல்லாமல் இருக்கிறீர்களா என்பதிலேயே, உடலில் கொழுப்பு சேர்வதை கணக்கிட முடியும்.

    ஆக, நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் குறையும் என்பதை குறிப்பிட்டுக் கூற முடியாது. சரியான அளவில் எடுத்துக் கொள்ளும்போது, அதன் ஆற்றலுடன் சத்துகளை மட்டுமே உடலுக்கு கொடுக்கிறது. சுத்தமான பசுநெய் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதே.

    -முனைவர். ப. வண்டார் குழலி

    ×