search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    கல் கடவுளாகுமா?...
    X

    கல் கடவுளாகுமா?...

    • ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படிக்காமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.
    • பள்ளித்துணை ஆய்வாளர் அப்பள்ளிக்கு வந்தார். எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள்.

    பெருமானே! தாங்கள் கூறியவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது கடவுள் அறிவு வடிவானவர் என்பது ஆகும். கடவுள் அறிவுப்பொருளாக இருக்க, கோயில்களில் செம்பாலும் சிலையாலும் உருவங்கள் வைத்து வழிபடுகிறார்களே? கல்லும் செம்பும் கடவுளாகுமா? இது அறிவுக்குப் பொருந்துமா?

    அப்பனே! இத்தகைய வினாக்கள் எழுவது இயல்புதான். இவைகளுக்கு தக்க விடைகள் பகிர்கின்றேன். ஒருமைப்பட்ட மனத்துடன் கேள்.

    பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவியிருந்தாலும், அந்தப் பசுவின் கொம்பைப் பிடித்து வருடினால் பாலைப் பெறமுடியுமா? வாலைப் பிடித்து வருடினால் என்ன கிடைக்கும்? பால் கிடைக்காது. பல் கிடைக்கும். பாலைப் பசுவின் மடி மூலம் பெறுவது போல், எங்கும் பரந்து விரிந்திருக்கும் இறைவனுடைய திருவருளைக் கோவிலில் விளங்கும் திருவுருவத்தின் மூலமாகப் பெறுதல் வேண்டும்.

    ஒரு பெருந் தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படிக்காமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான்.

    பள்ளித்துணை ஆய்வாளர் அப்பள்ளிக்கு வந்தார். எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்று வணக்கம் என்றார்கள். ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப் பெற்று, மோர்க்குழம்பு போல் மொழு மொழுவென்று இருந்த இந்தப் படியாதவனை பார்த்து.

    தம்பி! நீ என்ன படிக்கின்றாய்? என்று கேட்டார்.

    அவன் "புத்தகம் படிக்கின்றேன் " என்றான்.

    புத்தகம் எங்கே ? என்று கேட்டார்.

    வீட்டில் இருக்கிறது என்றான்.

    புத்தகம் இல்லாமல் ஏன் வந்தாய் ?

    மோட்டார், லாரிகளில் அகப்பட்டுக்கொள்வேன் என்று என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.

    இது என்ன ஆடு, மாடு அடைக்கின்ற பவுண்டா? என்று கேட்ட பள்ளித்துணை ஆய்வாளர் கரும்பலகையில், "அறம் செய்ய விரும்பு " என்று எழுதி, "தம்பி இது என்ன படி" என்றார்.

    அவன் அதைப் பார்த்துக்கொண்டே நின்றான்.

    என்னப்பா! ஆறு மாதங்களாக பள்ளிக்கு வருகின்ற உனக்கு 'அறம் செய்ய விரும்பு' என்பதை படிக்கக் கூடத் தெரியவில்லையே ? " என்று கூறி வெகுண்டார்.

    பின்னர் குழந்தைகள் சுலபமாக படிக்கக் கூடிய விதத்தில் அக்கரும்பலகையில் " படம் " என்று எழுதினார்.

    அம்மாணவனைப் பார்த்து " இதனைப் படி" என்றார். அவன் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நின்றான்.

    பள்ளித் துணை ஆய்வாளர் 'படம்' என்ற பதத்தில் பகரத்தையும் மகர மெய்யையும் அழித்தார். நடுவில் உள்ள எழுத்தைக் காட்டி, தம்பி! இது உனக்குத் தெரிகிறதா? என்றார்.

    தெரிகிறது என்றான். ஆசிரியரும், ஆய்வாளரும் சற்று மகிழ்ந்தார்கள். ஓர் எழுத்தாவது தெரிகின்றது என்றானே என்று உள்ளம் உவந்தார்கள்.

    தம்பி இது என்ன எழுத்து?

    கோடு என்று கூறினான் அம்மாணவன்.

    ஆசிரியரும் ஆய்வாளரும் சிரித்தார்கள்.

    மற்றொரு மாணவனை அழைத்து "இது என்ன?" என்று கேட்டார்.

    அவன் ' ட' என்று கூறினான்.

    கோடும் அதுதான், ' ட' வும் அதுதான். கற்றவன் ' ட' என்று கண்டான். கல்லாதவன் " கோடு " என்று கண்டான்.

    கோட்டுக்குள்ளே அறிவுள்ளவன் ' ட' என்ற ஒலியைக் காண்கின்றான்.

    இது போல, கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளுக்குள்ளே சச்சிதானந்தப் பரம்பொருளை ஞானிகள் காண்கின்றார்கள்.

    அவைகளைச் செம்பு என்றும் கல் என்றும் கூறுவது ' ட' என்ற எழுத்தைக்கோடு என்று கூறுவதை ஒக்கும்.

    திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் இயற்றிய " வாழும் வழி " என்ற புத்தகத்திலிருந்து...

    -ஆர். எஸ். மனோகரன்

    Next Story
    ×