என் மலர்
கதம்பம்
- திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன். பிரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.
- இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.
மருந்து கசக்கத்தான் செய்யும். கசப்பான மருந்தை உட்கொள்ள அதற்கு மேல் கொஞ்சம் இனிப்பை தடவி இருப்பார்கள். நாக்கில் பட்டவுடன் இனிப்பாக இருக்கும். அந்த இனிப்பு மருந்தை உட்கொள்ள கொடுத்த ஒரு உத்தி. மருந்தை உட்கொள்ள வேண்டுமே அல்லாது மாத்திரையின் மேல் உள்ள இனிப்பை மட்டும் நக்கி விட்டு, மாத்திரையை தூர எறிந்தால் அது எவ்வளவு அறிவுடைய செயலாகும்?
புராணங்களில் சில கதைகள் வரும். கதைகள் இனிப்பு போல. அதற்கு உள்ளே உள்ள அர்த்தத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். கதையோடு நின்று விடக்கூடாது.
சிவ பெருமானின் அடி முடி தேடி திருமாலும், பிரம்மாவும் சென்றார்கள் என்றும், அவர்களால் காண முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.
இந்த கதையை வைத்துக் கொண்டு, சிவன்தான் பெரியவர், மற்றவர்கள் சிறியவர்கள் என்று சிலர் பேசித் திரிகிறார்கள். கதை சொல்ல வந்த கருத்து என்ன?
திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன். பிரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.
இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.
உண்டியலில் நிறைய பணம் போட்டால், கோவிலுக்கு நிலம் வழங்கினால், நிறைய புத்தகங்கள் படித்துத் தெரிந்தால் இறைவனை அடைய முடியாது என்று சொல்ல வந்த கதை அது.
யார் பெரியவர், யார் சிறியவர் என்று சொல்ல வந்த கதை அல்ல.
வங்கி பெட்டகத்தில் சில பல கோடிகள் இருந்தால் இறைவனை அடைந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது.
பல பட்டங்கள் பெற்றால் இறைவனை அறிந்து விடலாம் என்றும் நினைக்கக் கூடாது.
அன்பாலும் அறத்தாலும் மட்டுமே இறைவனை அடையமுடியும்.
-மோகன்ராஜ்
- திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும்.
- அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது.
வெட்டி வேலை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்காலத்தில் "வெட்டி" என்ற பெயரில் நிலவிய ஊதியமில்லா கட்டாய வேலை முறை "ஊழியம்" என்ற பெயரில் தென் திருவிதாங்கூர் மன்னர் (தற்போதைய கேரள மாநிலம்) ஆட்சிப்பகுதியில் நிலவியது. பல்வேறு வகையான ஊழியங்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் ஒன்று "உப்பு ஊழியம்" ஆகும்.
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைப்பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோயில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது. அதே வேளையில் இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை மட்டும் உண்டு. இதிலிருந்து தான் பயனற்ற வேலையை வெட்டிவேலை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. இன்றுவரை அந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது. வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது. கல்வெட்டிலும் உள்ளது.
-அண்ணாமலை சுகுமாரன்
- சும்மா என்பது சும்மா இல்ல! நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் “சும்மா” என்ற தலைப்பில் பேசினார்.
- சும்மா சொல்லுவோம் தமிழின் சிறப்பை... அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான்.
சும்மா என்பது சும்மா இல்ல! நாவலர் நெடுஞ்செழியன் ஒரு சொற்பொழிவில் "சும்மா" என்ற தலைப்பில் பேசினார்.
உலகில் தோன்றிய பல மொழிகள் அழிந்து இருந்த இடமே தெரியாமல் போயிருக்கின்றன! தமிழ் மட்டும் இன்றளவும் பேச்சிலும், எழுத்திலும் நீடித்து நிலைத்து தன்னையும், தான் சார்ந்த இனத்தையும் பெருமைப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
"சும்மா" சொல்லுவோம் தமிழின் சிறப்பை! அடிக்கடி நாம் பயன்படுத்தும் வார்த்தை தான், இந்த "சும்மா". அதுசரி "சும்மா" என்றால் என்ன?
பேச்சுவழக்குச் சொல்லாக இருந்தாலும், தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ள ஒரு வார்த்தை தான் இந்தச் "சும்மா".
"சும்மா" என்கிற இந்த வார்த்தைக்கு மட்டும் தமிழில் 15க்கும் மேற்பட்ட அர்த்தங்கள் உண்டு என்றால் பாருங்களேன்... வேறு மொழிகளில் இல்லாத சிறப்பினை, நாம் அடிக்கடி கூறும் இந்த "சும்மா" என்ற வார்த்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது.
1. கொஞ்சம் "சும்மா" இருடா? (அமைதியாக )
2. கொஞ்சநேரம் "சும்மா" இருந்துவிட்டுப் போகலாமே? (களைப்பாறிக்கொண்டு)
3. அவரைப் பற்றி "சும்மா" சொல்லக்கூடாது! (அருமை)
4. இது என்ன "சும்மா" கிடைக்கும் என்று நினைத்தாயா? (இலவசமாக)
5. "சும்மா" கதை விடாதே? (பொய் )
6. "சும்மா" தான் இருக்கு. நீ வேண்டுமானால் எடுத்துக்கொள். (உபயோகமற்று )
7. "சும்மா, சும்மா கிண்டல் பண்ணுகிறான்". (அடிக்கடி)
8. இவன் இப்படித்தான், சும்மாசொல்லிக்கிட்டே இருப்பான். (எப்போதும்)
9. ஒன்றுமில்லை "சும்மா" தான் சொல்லுகிறேன்- (தற்செயலாக)
10. இந்தப் பெட்டியில் வேறெதுவும் இல்லை "சும்மா" தான் இருக்கின்றது. (காலி )
11. சொன்னதையே "சும்மா" சொல்லாதே. (மறுபடியும் )
12. ஒன்றுமில்லாமல் "சும்மா" போகக்கூடாது (வெறுங்கையோடு)
13."சும்மா" தான் இருக்கின்றோம். (வேலையில்லாமல்)
14. அவன் "சும்மா" ஏதாவது உளறுவான். (வெட்டியாக)
15. எல்லாமே "சும்மா" தான் சொன்னேன். (விளையாட்டிற்கு)
நாம் அன்றாடம் பயன்படுத்தும் இந்த "சும்மா" என்கிற ஒரு சொல், நாம் பயன்படுத்தும் இடத்திற்கு ஏற்றபடியும், தொடரும் சொற்களுக்கு ஏற்றபடியும் பலவிதமான அர்த்தங்களை, இங்கே கொடுக்கிறது என்றால், அது "சும்மா" இல்லை.
-ராஜகோபால்
- அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது.
- மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க.
"கையிலே என்ன பொட்டலம்?"
"மல்லிகைப் பூ சார்! மனைவிக்கு வாங்கிட்டுப் போறேன்....!"
"அவ்வளவு பிரியமா உங்களுக்கு?"
"ஆமா சார்.... என்னுடைய வெற்றிக்கெல்லாம் அவதானே காரணம்!"
"உங்க வெற்றிக்கு மட்டுமா... அமெரிக்க ஜனாதிபதியா இருந்தவர் ஆண்ட்ரூ ஜாக்சன். கல்யாணத்துக்கு முன்னாடி அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. அவருக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்து... அவருக்கு அமெரிக்க ஜனாதிபதியா ஆகக்கூடிய தகுதியை ஏற்படுத்தினதே அவருடைய மனைவி தானே!"
"அப்படியா?"
"மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு தெரியுமில்லே, அவரு தன்னுடைய ஆராய்ச்சியிலே தோல்வி கண்டு வந்தப்போ பக்கத்துலே இருந்தவங்கள்லாம் அவரை பைத்தியம்ன்னு கேலி பண்ணாங்க!"
"அய்யோ பாவம்!"
"அந்த சமயத்துலே அவரு மனைவி தான் அவருக்கு உற்சாகம் ஊட்டினாங்க... மனது சோர்ந்து போயிடாதீங்க...நீங்க நிச்சயம் வெற்றி பெறுவீங்க... அதுக்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு... அப்படின்னு சொல்லிக்கிட்டே வந்தாங்க. அதனாலேதான் அவரு கடைசியிலே மோட்டார் காரைக் கண்டு பிடிச்சார்!"
"பார்த்தீங்களா? ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருப்பாள்ன்னு சொல்றது எந்த அளவுக்குச் சரியா இருக்கு பாருங்க!"
"சரி... இப்போ நீங்க அடைஞ்ச வெற்றி என்ன?"
"அருமையா ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன் சார்!"
"இதுக்கு உங்க மனைவி ரொம்ப ஒத்தாசையா இருந்தாங்களா ?"
"ஆமாங்க!"
"எப்படி?"
"அதை நான் எழுதி முடிக்கிற வரைக்கும் அவ தன்னுடைய அம்மா வீட்டுக்கு போயிருந்தா சார் !"
- தென்கச்சி கோ.சுவாமிநாதன்
- உப்பு வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காகவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காகவும் சோடியம் அலுமினோசிலிகேட் (அ) மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா?
- இந்துப்பு எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது.
நாம் உபயோகிக்கும் தூள் உப்பு ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பக்குவப்படுத்தும்போது வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காகவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காகவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா? இந்த வேதிப்பொருட்கள் உப்பிற்கு நல்லதே தவிர உடலுக்கு நல்லதல்ல.
"இந்துப்பு" எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது. அதன்பிறகு இந்துப்புவும் 99.99% சோடியம் குளோரைடு தான்.
சிக்கல் என்னவென்றால் வணிகமயமாக்குதலால் சரிவர பக்குவப்படுத்தப்படாத இந்துப்புவில் சற்றே அதிகமாக கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் இருப்பதால், உணவிலுள்ள வைட்டமின் 'சி' யை அழித்துவிடுதல், உணவு விரைவில் நீர்த்துப்போதல் போன்ற வேலைகள் நடப்பதை யாரும் கூறுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. அதில் செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.
உடலுக்கு நல்லது... உடலுக்கு நல்லது என்று வியாபார ரீதியில் எந்த பொருளை விற்றாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் இருக்கும் வரை... உடலுக்கும், உணவுக்கும்... உலகுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.
"அப்போ எந்த உப்பைத்தான் நாங்கள் உபயோகிப்பது" என்று என்னை திட்டுவது நன்றாகவே கேட்கிறது.
கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பும், அந்த கல்லுப்பை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொண்டு தூளுப்பு என்று கூறிக்கொண்டும் உபயோகப்படுத்துங்கள். அதையும் அளவோடு பயன்படுத்துங்கள்.
- வண்டார்குழலி
- ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய 5 தினங்கள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
- உண்ணா நோன்பு கடைபிடித்து வந்தால் உங்கள் உடலுக்குள் ஏற்படும் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும்.
உண்ணா நோன்பு என்பது நம் உடலுக்குள் வாழும் நுண்கிருமிகளை கட்டுப்படுத்துவதாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். எப்படி என்றால் அமாவாசை பவுர்ணமி எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடிகிறதோ அதுவரை சாப்பிடக்கூடாது. அடுத்து வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி தினங்களில் அந்த திதி எப்போது தொடங்கி எப்போது முடிகிறதோ அதுவரை உண்ணாவிரதம் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கடுத்து உங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்றும் அது தொடங்கி முடியும் காலம் வரை நோன்பு இருக்க வேண்டும்.
இப்படியாக ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை, பவுர்ணமி,வளர்பிறை அஷ்டமி, தேய்பிறை அஷ்டமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய 5 தினங்கள் உண்ணா நோன்பு இருக்க வேண்டும். இவ்வாறு கடைபிடித்து வந்தால் உங்கள் உடலுக்குள் ஏற்படும் குறைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளமுடியும். உண்ணா நோன்பு சமயத்தில் தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும்.
ஏன் இந்த 5 நாட்களில் உண்ணா நோன்பு இருக்க வேண்டும் என்றால், உடலில் நன்மை பயக்கக் கூடிய நுண்கிருமிகளும் தீமை பயக்கக் கூடிய நுண் கிருமிகளும் இருக்கின்றன. தீமை பயக்கக்கூடிய நுண்கிருமிகள் சாப்பிட்டுவிட்டு ஏற்படுத்தக்கூடிய கழிவுகள் தான் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த கிருமிகள் மேற்கண்ட 5 தினங்களில் மிகவும் செயலூக்கத்துடன் இருக்கும்.
அதனால் அந்த நாட்களில் நிறைய உணவை சாப்பிடும். எனவே அவற்றை தடுக்கும் வகையில் அன்றைய தினம் உண்ணாவிரதம் இருக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள்.
இந்த நாட்களில் நாம் உண்ணாவிரதம் இருந்து வந்தால் தீமை செய்யும் நுண்ணுயிர்களால் உண்டாகும் விஷக்கழிவுகள் இருக்காது. உடல் தூய்மையாக இருக்கும். இதற்கு தான் அந்த உண்ணா நோன்பு, கடவுளைச் சென்று அடைவதற்காக அல்ல.
நம்முள் இருக்கும் உயிர்தான் கடவுளின் அங்கம். அந்த உயிரை காத்து நிற்கும் நம் உடல் ஒரு கோயில். அந்த கோயிலை தூய்மையாக வைத்திருக்க ஏற்படுத்தப்பட்டது தான் உண்ணா நோன்பு.
-டாக்டர் சி கே. நந்தகோபாலன்.
- வாழை பழத்தை மூலப்பொருளாக கொண்டு உருவாக்கப்படும் மருந்து எடுக்கும் போது எலுமிச்சை பழம் சாப்பிடக் கூடாது.
- வாழைப்பழமும் எலுமிச்சை பழமும் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது.
நாட்டு மருந்து சாப்பிட்டால் ஏன் பத்தியம் இருக்க சொல்கிறார்கள்?
ஒவ்வொரு நாட்டு மருந்திலும் ஒவ்வொரு மூலிகைகள் இருக்கும். சில மூலிகைகள் சில உணவோடு கலந்தால் வேலை செய்யாது அல்லது விஷமாக மாறும்.
எனவே நாட்டு மருந்து எடுக்கும் நபர்கள் சில பொருட்களை, காய்கறிகள், பழங்களை, சுவைகளை சாப்பிடக்கூடாது என்பார்கள்.
ஒருவேளை பத்தியம் கடைப்பிடிக்காமல் இருந்தால் அந்த மருந்து விஷமாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அல்லது அது வேலை செய்யாமல் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
உதாரணமாக கேரட்டை மூலப்பொருளாக வைத்து செய்யப்பட்ட மருந்தை எடுக்கும் போது ஆரஞ்சு பழம் சாப்பிட கூடாது. ஏனென்றால் கேரட் ஆரஞ்சுப் பழம் இரண்டும் கலந்தால் மருந்து வேலை செய்யாது.
பசும்பாலை மூலப்பொருளாக கொண்டு மருந்து எடுக்கும் போது அண்ணாச்சி பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் அன்னாச்சி பழமும் பாலும் சேர்த்தால் மருந்து வேலை செய்யாது.
ஆரஞ்சுப் பழத்தை மூலப்பொருளாக கொண்டு தயாரித்த மருந்து எடுக்கும் போது பால் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் ஆரஞ்சு பழமும் பாலும் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது.
வாழை பழத்தை மூலப்பொருளாக கொண்டு உருவாக்கப்படும் மருந்து எடுக்கும் போது எலுமிச்சை பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் வாழைப்பழமும் எலுமிச்சை பழமும் சேர்ந்தால் மருந்து வேலை செய்யாது.
எலுமிச்சை பழத்தை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து எடுக்கும் போது, பப்பாளிப் பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால் எலுமிச்சை பழமும் பப்பாளி பழமும் சேர்ந்து சாப்பிட்டால் மருந்து வேலை செய்யாது.
பொதுவாக நாட்டு மருந்து கொடுக்கும் பொழுது அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது என்று பத்தியம் சொல்வார்கள். உடனே நீங்கள் அகத்திக் கீரை உடலுக்கு கெடுதல் என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அகத்திக் கீரை சாப்பிட்டால் அது உடலிலுள்ள மருந்துகளை, கெமிக்கல்களை வெளியே தள்ளிவிடும். எனவே மருத்துவர் கொடுத்த மருந்து வேலை செய்யாது. எனவேதான் அகத்திக் கீரை சாப்பிடக் கூடாது என்று பத்தியம் கூறுகிறார்கள்.
எனவே, பல வருடமாக ஆங்கில மருந்து சாப்பிட்டு பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி அகத்திகீரை சாப்பிடுங்கள். அப்போதுதான் மருந்து, மாத்திரையால் உண்டான கழிவுகள் உடம்பில் இருந்து வெளியே செல்லும்.
-ஹீலர் பாஸ்கர்
- இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கோழி, பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றையே ஹன்ஸா இன மக்கள் சாப்பிடுகிறார்கள்.
- வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். ரசாயன உரங்கள் பற்றி இவர்களுக்கு என்னவென்றே தெரியாது.
காஷ்மீரைத் தாண்டி காரகோரம் மலைத் தொடர்களின் மடியில் இருப்பதுதான் ஹன்ஸா பள்ளத்தாக்கு. இங்கு வாழும் மக்களின் சராசரி வயது 120 என்பதையும், பெண்கள் 90 வயதிலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவு ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் சொன்னால் நம்புவீர்களா?
பெண்களே இப்படி என்றால் ஆண்களை பற்றி சொல்ல வேண்டுமா என்ன.. நூற்றியிருபது வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். இதில் அதிசயம் என்னவென்றால், நூறு வயது என்பது இங்கே நடுத்தர வயது தான்.. நூறு வயதிலும் இவர்கள் அப்பாவாகிறார்கள்.
இது எப்படி சாத்தியம்? இந்த விஷயம் வெளி உலகுக்கு எப்படி தெரியவந்தது? என்று கேள்வி எழுப்பினால் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்கைப் பார்த்துவிடலாம். 1984-ம் ஆண்டில் ஹன்ஸா இனத்தைச் சேர்ந்த அப்துல் என்பவர், லண்டன் செல்வதற்காக விமான நிலையத்தில் காத்திருந்தார்.
'பிறந்த வருடம் 1932 என்பதற்குப் பதிலாக 1832 என்று தவறாக அச்சாகியிருக்கிறது' என்று அதிகாரிகள் அப்துலிடம் கேட்டார்கள். 'இல்லை... 1832 என்பது தான் சரி' என்று அப்துல் சொன்னதும் கோபம் கொண்ட அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காரணம், அப்துல் நடுத்தர வயது மனிதராகவே தோன்றினார்.
அப்துலுக்கு வயதை உறுதிப்படுத்த மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு வயது 152-தான் என்பது உறுதியானதும் உறைந்துபோனார்கள் அதிகாரிகள். ஹன்ஸா இன மக்கள் பற்றிய ரகசியம் அதன் பிறகே உலகுக்குத் தெரியவந்தது. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது இன்னும் பல அதிசயங்கள் வெளிவந்தது.
இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், கோழி, பால், வெண்ணெய், முட்டை போன்றவற்றையே ஹன்ஸா இன மக்கள் சாப்பிடுகிறார்கள். அதுவும் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டுமே சாப்பிடுகிறார்கள். ரசாயன உரங்கள் பற்றி இவர்களுக்கு என்னவென்றே தெரியாது. சுவாசிக்க தூய்மையான மலைக்காற்று, பகல்முழுவதும் உழைப்பு, ஜீரோ டிகிரி குளிராக இருந்தாலும் குளிர்ந்த ஆற்றுநீரிலேயே குளிப்பது போன்ற நல்லவாழ்க்கை முறையே அந்த ரகசியம் என்பதை ஆய்வு புரிய வைத்தது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் இதெல்லாம் நமக்கும் சாத்தியம்தானே!
-சரவணகுமார்
- ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இயங்கும்.
- பூஜைக்காலமான மண்டல மகர லக்னத்தில் மட்டுமே இந்த தபால் அலுவலகம் செயல்படும். 62 நாட்களுக்குப் பின் அஞ்சல் குறியீடு எண் செயலிழப்பு செய்யப்படும்.
நம் நாட்டில், இரண்டு பேருக்கு மட்டுமே சொந்த அஞ்சல் குறியீடு (பின் கோடு) உள்ளது. அதில் ஒருவர் குடியரசுத் தலைவர். மற்றொருவர் சபரிமலை ஐயப்பன் என்றால் அது எல்லோரையும் விழியுயர்த்தி ஆச்சர்யப்பட வைக்கும் விஷயம் தான்.
குடியரசுத் தலைவரின் ராஷ்டிரபதி பவன் அஞ்சல் குறியீட்டு எண்: 110004.(ஆண்டு முழுவதும்)
சபரிமலை ஐயப்ப சுவாமி சந்நிதானத்தின் அஞ்சல் குறியீட்டு எண்: 689713 ( அறுபத்திரண்டு நாள்களுக்கு மட்டும்) இந்த அஞ்சல் குறியீட்டு எண்ணில் தற்போது சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அஞ்சல் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் அஞ்சல் முத்திரையில் சபரிமலையின் 18-ஆம் படி மற்றும் ஐயப்பன் சிலை உலோகத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் வேறு எந்த அஞ்சல் அலுவலகமும் இதுபோன்ற தனி அஞ்சல் முத்திரைகளைப் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்த இந்திய அஞ்சல் துறையும் அனுமதிப்பதில்லை.
ஐயப்ப சுவாமியின் அஞ்சல் குறியீட்டு எண் கொண்ட சபரிமலை சந்நிதான அஞ்சல் அலுவலகம், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் மட்டுமே இயங்கும். பூஜைக்காலமான மண்டல மகர லக்னத்தில் மட்டுமே இந்த தபால் அலுவலகம் செயல்படும். 62 நாட்களுக்குப் பின் அஞ்சல் குறியீடு எண் செயலிழப்பு செய்யப்படும்.
இத்தனை சிறப்பு பெற்ற சபரிமலை சன்னிதானம் தபால் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, இந்த 18 ஆம் படி மற்றும் ஐயப்பன் முத்திரையிடப்பட்ட அஞ்சல் உறைகளை வாங்கி தங்கள் வீடுகளுக்கும், அன்புக்குரியவர்களுக்கும் கடிதங்களாக அனுப்புகின்றனர். பத்திரப்படுத்தவும் செய்கின்றனர்.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் முடிந்ததும் இந்த சிறப்பு உலோக அஞ்சல் முத்திரை பத்தனம்திட்டா அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலக பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்படும். தொடர்ந்து அடுத்த மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காலத்தில் மீண்டும் பயன்படுத்தப்படும்.
ஐயப்ப சுவாமிக்குப் பக்தர்கள் எழுதும் ஏராளமான கடிதங்கள் இந்த அஞ்சல் அலுவலகத்திற்கு வருகின்றன. சந்தோஷம், சோகம், துக்கம், தீராத பிரச்னைகள், கவலைகள், காதல் என பல்வேறு உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் கடிதங்கள் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் இந்த சந்நிதான அஞ்சல் அலுவகத்திற்கு வருகின்றன. ஐயப்பன் பெயரில் காணிக்கையாக பணவிடைகளும் இந்த அஞ்சல் அலுவகத்திற்கு வந்து கொட்டுகின்றன.
வீட்டில் நடக்கும் பல்வேறு வைபோகங்கள், விசேஷங்களுக்கு ஐயப்பனை அழைக்கும் முதல் அழைப்பிதழும் இங்கு வருகின்றன.
இந்தக் கடிதங்கள் அனைத்தும் சன்னிதானத்தில் ஐயப்பனிடம் அளித்து நிவர்த்திக்காகவும், வாழ்த்துக்களுக்காகவும் பூஜிக்கப்படுகிறது.
-வீரமணி வீராசாமி
- ராத்திரி தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் பாய் ஒரு பக்கம் கெடக்கும்...
- தலையணை வேற பக்கம் கெடக்கும். நானு அந்த ரெண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் கெடப்பேன்.
"நிம்மதியாக..சந்தோஷமாக வாழ வழி சொல்லு முருகா..."
"பக்தா மூணு வேளையும் ஒழுங்கா பசிக்குதா... ?
சாப்பாடும் கிடைக்குதா... ?
சாப்பிட்டது ஜீரணம் ஆகுதா..?"
"ஆமாம் முருகா.... மூணு வேளையும் நல்லா கொட்டிக்கிறேன்....
இது போக காபி டீ... வடை, பஜ்ஜி , சமோசா, சிப்ஸூ, பப்ஸூ னு எல்லாம் போயிட்டு இருக்கு...
ஞாபக சக்தியை விட ஜீரண சக்தி அதிகமாக இருக்கு முருகா...."
"நல்லா தூக்கம் வருதா... ?"
"அத ஏன் கேட்குற முருகா... ராத்திரி தூங்கி காலையில் எழுந்து பார்த்தால் பாய் ஒரு பக்கம் கெடக்கும்.. தலையணை வேற பக்கம் கெடக்கும். நானு அந்த ரெண்டுக்கும் சம்பந்தம் இல்லாமல் கெடப்பேன். அதிலும் வாய பே ன்னு வச்சுட்டு தூங்குறேன்..."
"ஏன்டா அவனவன் சோறு கிடைக்காம... கிடைத்தாலும் நினைத்த நேரத்திற்கு சாப்பிட முடியாம... அப்படியே சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாம.... தூங்கினா தூக்கம் வராம நாயா பேயா அலைஞ்சுட்டு இருக்கானுங்க... இதுல நீ இன்னும் நிம்மதி சந்தோஷம் கேட்குற... உன்னை எல்லாம்...."
"அதில்ல முருகா....",
"இப்ப பேசாம போறீயா.. இல்ல வேல எடுத்து வாயில சொருகவா..."
"முத்தைதிரு பத்தித்திரு...."
"டேய் பாட்டு பாடாம போடா....
வந்தேன் ன்னா அம்புட்டுத்தேன்...."
-ஜெய் ஸ்ரீராம்
- இளம்பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.
- நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும்.
பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச்செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை, சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. துளசி
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
2. தூதுவளை
தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.
3. சோற்றுக்கற்றாழை
இளம்பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு. சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள், பெண் மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
4. மஞ்சள் கரிசலாங்கண்ணி
ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
5. பொன்னாங்கண்ணி
வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
6. நேத்திரப்பூண்டு
இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்க கால கண் புரை நோய் தடுக்கப்படும்.
7. நிலவேம்பு
நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.
8. பூலாங்கிழங்கு
கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
9. ஓமவள்ளி
கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10. அருகம்புல்
அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
11. ஆடாதொடை
எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தைகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேறுகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி
இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை போன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.
13. நொச்சி
நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லாவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.
14. தழுதாழை
தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக்கன்றுகள் அதிகம் முளைக்கும்.
15. கழற்ச்சி
இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப்பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'.
உங்களால் இயன்ற மூலிகை செடிகளை மூலிகை பண்ணைகளில் வாங்கி வந்து வளருங்கள்.
- அஷ்டாம்சக் கஞ்சி வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக்கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.
- பூண்டு மிளகுக்குழம்பு பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும்.
'ராத்திரியெல்லாம் புள்ளை இருமிக்கிட்டே இருந்தானே... மதியம், பச்சரிசி, வெந்தயம், துருவிய தேங்காய், ஒரு கை உரிச்ச வெள்ளைப் பூண்டைப் போட்டுக் குழையக் கஞ்சி வெச்சு, சூடாக் குடும்மா!
தொட்டுக்கிறதுக்கு, ஒரே ஒரு வரமிளகாய் வெச்சு, கொள்ளுத் துவையல் அரைச்சிரு!'' என்று திருகையில் (எந்திரம்) உளுந்தையோ, அரிசியையோ போட்டு ரவையாக உடைத்தபடி, கண்டாங்கிச் சேலை கட்டிய அப்பத்தாக்களும் ஆயாக்களும் சொல்லிய காலமெல்லாம் கடந்து, நைட்டியில் பாட்டிகள் உலவியபடி, பேரப்பிள்ளைகளுக்கு உணவு, மருந்து எதுவானாலும் இன்டர்நெட்டில் தேடிக்கொடுக்கும் காலம் இது என்பதால், 'மறந்துபோன' மருத்துவ உணவுகளை நினைவூட்டும் நேரம் இது!
அஷ்டாம்சக் கஞ்சி
தேவையானவை: கோதுமை, கழுவி காயவைத்த கேழ்வரகு, பொட்டுக்கடலை, பார்லி அரிசி, ஜவ்வரிசி, பாசிப்பயறு - முறையே அரை ஆழாக்கு, கசகசா - கால் ஆழாக்கு, ஓமம் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: எல்லாவற்றையும், வெறும் கடாயில் தனித்தனியே வறுத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துச் சலித்து வைத்துக் கொள்ளவும்.
இந்தப் பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, கொதிக்க வைத்துப் பால் சேர்த்துக் குடித்தால், தெம்பு கிடைக்கும். சோர்வே இருக்காது.
மருத்துவப் பலன்கள்:
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட பிறகு, சாப்பிடக்கூடிய மித உணவு. ஓமம் இருப்பதால், செரிமானத்துக்கு உதவும்.
பூண்டு மிளகுக்குழம்பு
தேவையானவை: உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும். பூண்டுக்கு, கொழுப்பைக் குறைக்கும் தன்மை உண்டு.
அமிர்தப் பொடி: (இந்தப் பொடியைப் பயன்படுத்தி பத்திய ரசம் வைக்கலாம்)
தேவையானவை: தனியா - ஒரு சிறிய கிண்ணம், ஓமம், துவரம் பருப்பு - அரை கிண்ணம், மிளகு, உடைத்த சுக்கு - தலா கால் கிண்ணம், சீரகம், கண்டதிப்பிலி - தலா ஒரு கிண்ணம், காய்ந்த கறிவேப்பிலை - அரை கிண்ணம், பெருங்காயம் - ஒரு கட்டி.
செய்முறை: கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் வறுத்து மிக்ஸியில் பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். வெயிலில் காய வைத்த புளியுடன், உப்பு சேர்த்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் புளி, உப்பு பொடித்த பொடி, அமிர்தப் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். பத்திய ரசம் தயார்.
மருத்துவப் பலன்கள்: நோயிலிருந்து மீண்ட பிறகு, ஏற்படும் பசி மந்தத்தைப் போக்கும். எப்படிப்பட்ட வயிற்றுப் பிரச்சனை இருந்தாலும், அதைப் போக்கி உடலைத் தெம்பாக்கும். குழந்தைகளுக்குப் பசியின்மை இருந்தால், சுடு சாதத்தில் போட்டுப் பிசைந்து தரலாம்.
-அண்ணாமலை சுகுமாரன்






