என் மலர்tooltip icon

    கதம்பம்

    • கடற்கரை பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை கோவில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும்.
    • வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது. கல்வெட்டிலும் உள்ளது.

    வெட்டி வேலை என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்காலத்தில் "வெட்டி" என்ற பெயரில் நிலவிய ஊதியமில்லா கட்டாய வேலை முறை "ஊழியம்" என்ற பெயரில் தென் திருவிதாங்கூர் மன்னர் (தற்போதைய கேரள மாநிலம்) ஆட்சி பகுதியில் நிலவியது. பல்வேறு வகையான ஊழியங்கள் மக்கள் மீது சுமத்தப்பட்டன. இவற்றுள் ஒன்று "உப்பு ஊழியம்" ஆகும்.

    கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை பகுதியில் எடுக்கப்படும் உப்பில் ஒரு பகுதியை திருவட்டாறு, நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் உள்ள கோவில் மடப்பள்ளிகளுக்கு சுமந்து சென்று வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கும் உப்புக்கு விலை கிடையாது. சுமை கூலியும் கிடையாது. அதே வேளையில் இப்பணியைச் செய்யாவிட்டால் தண்டனை மட்டும் உண்டு.

    இதிலிருந்து தான் பயனற்ற வேலையை வெட்டி வேலை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. இன்று வரை அந்த வார்த்தை புழக்கத்தில் உள்ளது. வரலாறு வாழும் மக்களிடமும் உள்ளது. கல்வெட்டிலும் உள்ளது.

    - அண்ணாமலை சுகுமாரன்

    • கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி அவ்வளவு ஜோர் கிடையாது.
    • ஆந்திராவிலும் பெரிசாக இல்லை.

    ஸ்ரீரங்கம், சென்னை, டெல்லி, பெங்களூர், அமெரிக்கா என்று பல இடங்களில் தீபாவளி கொண்டாடின அனுபவம் எனக்கு உண்டு.

    சின்ன வயசில் தீபாவளியைவிட, அதன் எதிர்பார்ப்புகள்தான் சுவாரஸ்யமாக இருக்கும். புதுத் துணி வாங்குவது, பட்டாசு வாங்கி நன்றாக வெயிலில் காயப் போடுவது, அண்ணனுடன் பங்கு பிரித்துக்கொள்வது, டெய்லரிடம் சட்டை, டிராயருக்கு அளவு கொடுப்பது, அவர் ராத்திரி பன்னிரண்டு மணி வரை இழுத்தடிப்பது, தீபாவளி மலருக்கு அட்வான்ஸ் கொடுப்பது, தீபாவளி ரிலீஸ் படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்துப் பரவசப்படுவது... எல்லா எதிர்பார்ப்புகளும் பொழுது விடிந்து, எண்ணெய் தேய்த்துக்கொண்டு லேகியமும், தேங்காய் பர்பியும், தேன்குழலும் சாப்பிட்டபின் ஆவியாகிவிடும்!

    பட்டாசு சீக்கிரமே தீர்ந்துவிடும். பாதி வெடிக்காது. ஆட்டம்பாம் ரெண்டு பொறி உதிர்த்துவிட்டு, கம்மென்று இருக்கும். பாம் ஸ்குவாடு போல, கிட்டே போய் அதை உதைக்க வேண்டும். அடிவயிற்றைக் கலக்கும். அடையவளஞ்சான் குட்டிப் பையன்கள் வந்தால், தைரியமாக அதைக் கையில் எடுத்து ஊதி, மாற்றுத் திரி போட்டு, 'டமால்' என்று வெடிக்க வைப்பார்கள்.

    தீபாவளி ரிலீஸ் படங்கள் அத்தனை சிறப்பாக இருக்காது. தைத்த சட்டையில் காஜா அடிக்காமல், பட்டன் உதிரும். சட்டை நெஞ்சைப் பிடிக்கும். டிராயர் இடுப்பில் நிற்காது. இதையெல்லாம் சின்ன வயசில் பொருட்படுத்தாமல் ராத்திரியை, கார்த்திகையை, அடுத்த தீபாவளியை எதிர்பார்த்திருப்போம். பட்டாசு சுடுவதன் மகிழ்ச்சி இன்றும் பாக்கியிருக்கிறது. மற்றதெல்லாம் வேஷம் மாறிவிட்டது! தீபாவளி ரிலீஸ் படங்கள் பார்ப்பது சிலருக்குக் கட்டாயப் பாடம்.

    வாழ்க்கையின் வருஷங்கள் கழியும்போது, தீபாவளியின் முக்கியத்துவமும், ஆரவாரமும் பரபரப்பும் மெள்ள மெள்ளத் திருத்தப்பட்டுத் தணிந்து, இப்போதெல்லாம் சாவகாசமாக எழுந்து, ஒரே ஒரு கை எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டு, கை வைத்த ஒரு புது பனியனும் வேஷ்டியும் அணிந்துகொண்டு, ஒரு சிலரோடு 'ஹேப்பி தீபாவளி' போன் பேசுவதோடு சரி!

    பெங்களூரில் தீபாவளி, தமிழர்கள் மட்டும் அதிகம் கொண்டாடும் பண்டிகை. கன்னடக்காரர்களுக்குப் புதுசு உடுத்தும் வழக்கம் கிடையாது. வேடிக்கைக்குப் பட்டாசு வெடிப்பார்கள்!

    கேரளா, மகாபலி சக்ரவர்த்தியைக் கொண்டாடுவதால், தீபாவளி அவ்வளவு ஜோர் கிடையாது. ஆந்திராவிலும் பெரிசாக இல்லை. தீபாவளியை அகில இந்திய விழாவாகச் சொல்லமுடியுமா... தெரியவில்லை.

    ஆனால், தீபாவளி தமிழ்நாட்டின் பொருளாதாரத்துக்கு ஒரு முக்கியமான அம்சமாகிவிட்டது. நரகாசுரன் சாகவில்லையேல், சிவகாசியும் பட்டுச் சேலையும் பிழைக்காது!

    - எழுத்தாளர் சுஜாதா

    • மனிதனுக்கான மிகப்பெரிய சாபம் என்பது அவன் அடிமையாக நீடித்திருப்பதே என்பதை மறந்து விடாதீர்கள்.
    • அநீதியுடனும் தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே மிகப்பெரிய குற்றம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    காந்திஜியின் வேட்பாளரான பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்து காங்கிரஸ் தலைவரான பிறகு நேதாஜியால் கட்சிக்குள் அதிக நாள் நீடிக்க முடியவில்லை. தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுகிறார், கட்சியை விட்டு விலக்கப்படுகிறார். 1939 இல் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை ஆரம்பித்து அதன் தலைவராகிறார்.

    ஆங்கிலேய கவர்னரும் வங்காள மாகாண அரசும் சேர்ந்து அடுத்தடுத்து அவர் மீது வழக்குகளை பதிவு செய்கின்றன. "ஏன் இரண்டு இடத்தில் பேசியதற்காக மட்டும் வழக்கு போடுகிறீர்கள் நான் எல்லா ஊர்களில் பேசும்போதும் உங்களை தூக்கி எறிய வேண்டும் என்று தானே பேசுகிறேன்" என்று நேதாஜியே கேட்கிறார். அவர் நடத்திய பார்வர்ட் பிளாக் பத்திரிகை தடை செய்யப்படுகிறது. கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இந்த நேரத்தில் அவர் மாகாண சட்டசபை உறுப்பினராகவும் இருக்கிறார். சட்டசபை நடக்கும் நாட்களில் தனக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதி கோரினார். மறுக்கப்பட்டது.

    அவருடைய எந்த கோரிக்கைகளும் ஏற்கப்படாத நிலையில் வங்காள அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் தேசிய ஆவணத்தில் இருக்கிறது. நம் பார்வைக்கு கிடைக்கிறது. வாசித்துப் பார்த்தேன். ஐந்து பக்க கடிதத்தில் முக்கியமான பகுதியை மட்டும் சொல்கிறேன்.

    "நியாயமாக நடந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். எனது இரண்டு வேண்டுகோள்களை மட்டும் நிறைவேற்றித் தர வேண்டுகிறேன். முதல் வேண்டுகோள் என்னவென்றால் என்னுடைய நியாயமான கோரிக்கைகள் எவற்றையும் நீங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இந்த கடிதத்தை மட்டும் பத்திரமாக வைத்திருங்கள். இதை அரசின் ஆவணக் காப்பகத்தில் சேர்த்து விடுங்கள். நீங்கள் தோற்கடிக்கப்பட்டு என் மக்கள் ஆட்சியை கைப்பற்றும் போது அவர்கள் கையில் இந்த கடிதம் கிடைக்கட்டும். இக்கடிதம் என் நாட்டு மக்களுக்கான என்னுடைய செய்தியும் என் அரசியல் நிலைப்பாடின் சாசனமும் ஆகும்.

    இப்படி துவங்கும் கடிதத்தில் தேசிய சர்வதேசிய அரசியல் உதாரணங்களை ஒப்பிட்டு தான் கைது செய்யப்பட்ட சூழலையும் தன் கோரிக்கைகளின் நியாயத்தையும் பற்றி கூறுகிறார்.

    "மனிதனுக்கான. மிகப்பெரிய சாபம் என்பது அவன் அடிமையாக நீடித்திருப்பதே என்பதை மறந்து விடாதீர்கள்.

    அநீதியுடனும் தவறுகளுடனும் சமரசம் செய்து கொள்வதே மிகப்பெரிய குற்றம் என்பதை மறந்து விடாதீர்கள்.

    என்றும் மாறாத விதி எது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்களுக்கான வாழ்வைப் பெற வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்துதான் ஆக வேண்டும்.

    ஒப்பற்ற நற்குணம் என்பது, எது வந்தாலும் சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவதே!'

    மக்களுக்கான இந்தச் செய்தியைச் சொன்ன பிறகு தனது இரண்டாவது வேண்டுகோளை சொல்லுகிறார்.

    எல்லா கதவுகளும் அடைக்கப்பட்ட நிலையில் சிறை கைதிக்கு உள்ள ஒரே ஆயுதம் உண்ணாவிரதம் தான்.

    1940 நவம்பர் 29 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கப் போகிறேன். தடுக்கவோ எனக்கு வலுக்கட்டாயமாக உணவூட்டவோ கூடாது. அதனை நான் எப்பாடுபட்டேனும் தடுப்பேன்.

    பின் குறிப்பு : எப்பொழுதும் போலவே நான் உப்பு கலந்த நீரை மட்டுமே எடுத்துக் கொள்வேன். அதையும் நிறுத்திக் கொள்ள எனக்குத் தோன்றும்பொழுது நான் நிறுத்தி விடுவேன்.

    இந்த கடிதம் வங்காள அரசுக்குக் கிடைத்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் உளவுத்துறை பிரிட்டிஷ் உள்துறை அரசியல் பிரிவுக்கு இக்கடிதத்தின் நகலை அனுப்பி வைக்கிறது. அதன் பலனாக இந்த கடிதம் ஆவணக்காப்பகத்தில் சேர்ந்து விடுகிறது. ஆனால் அதற்கு முன்பாக இந்த கடிதத்தை வாசித்த உள்துறை அதிகாரி சர் ரிச்சர்ட் டோட்டன்ஹம் உச்சபட்ச திமிருடன் ஒரு குறிப்பு எழுதி இருக்கிறான் பாருங்கள்.

    "இது போய் சேர்ந்திருக்க வேண்டிய சிறந்த இடம் குப்பைத் தொட்டி தான் என்று சொல்வேன்"

    நேதாஜிக்கு என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா.. உண்ணாவிரதம் தொடங்கினார். வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுகிறார். அங்கிருந்து தப்பித்து நான்கே மாதங்களில் ஜெர்மனியில் இருக்கிறார்.

    -முத்துக்குமார் சங்கரன்

    • செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை.
    • இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

    நாம் உபயோகிக்கும் தூள் உப்பு ஏறக்குறைய 97 முதல் 99 சதவீதம் சோடியம் குளோரைடு மட்டுமே என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை பக்குவப்படுத்தும்போது வெகுநாட்களுக்கு கட்டியாகாமல் தூளாகவே இருப்பதற்காவும், நீர்த்துப்போகாமல் இருப்பதற்காவும் சோடியம் அலுமினோசிலிகேட் அல்லது மக்னீசியம் கார்போனேட் சேர்க்கப்படுகிறது என்பது தெரியுமா? இந்த வேதிப்பொருட்கள் உப்பிற்கு நல்லதே தவிர உடலுக்கு நல்லதல்ல.

    "இந்துப்பு" எனப்படும் பாறைகளிலிருந்து எடுக்கப்படும் கல் உப்பு பல்வேறு கட்ட சுத்தப்படுத்துதலுக்கு உள்ளாக்கிய பின்னரே உண்பதற்கு தகுதியாகிறது. அதன்பிறகு இந்துப்புவும் 99.99% சோடியம் குளோரைடு தான்.

    சிக்கல் என்னவென்றால் வணிகமயமாக்குதலால் சரிவர பக்குவப்படுத்தப்படாத இந்துப்புவில் சற்றே அதிகமாக கால்சியம், மெக்னீசியம், இரும்பு, காப்பர் இருப்பதால், உணவிலுள்ள வைட்டமின் 'சி' யை அழித்துவிடுதல், உணவு விரைவில் நீர்த்துப்போதல் போன்ற வேலைகள் நடப்பதை யாரும் கூறுவதும் இல்லை, கண்டுகொள்வதும் இல்லை. அதில் செயற்கையாக நிறமும் ஏற்றப்படுகிறதென்பதும் அதிர்ச்சியான உண்மை. இந்துப்புவிலும் போலி அதிகம் இருக்கிறது என்பது 100/100 உண்மை.

    உடலுக்கு நல்லது.. உடலுக்கு நல்லது என்று வியாபார ரீதியில் எந்த பொருளை விற்றாலும் வாங்கிக்கொண்டு இருக்கும் மக்கள் இருக்கும்வரை... உடலுக்கும், உணவுக்கும்... உலகுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்கள் பெருகிக்கொண்டுதான் இருக்கும்.

    "அப்போ எந்த உப்பைத்தான் நாங்கள் உபயோகிப்பது" என்று என்னை திட்டுவது நன்றாகவே கேட்கிறது.

    கடலில் இருந்து எடுக்கப்படும் கல்லுப்பும், அந்த கல்லுப்பை நீங்களே கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து வைத்துக்கொண்டு தூளுப்பு என்று கூறிக்கொண்டும் உபயோகப்படுத்துங்கள். அதையும் அளவோடு பயன்படுத்துங்கள்.

    - வண்டார்குழலி ராஜசேகர்

    • நமது அறிவு வளரவளரத் தேவையற்ற நரம்பு இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன.
    • மூளை வளர்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் ஏராளமான செல் மரணம்தான் அங்கே நிகழ்கிறது.

    கல்லிலிருந்து வேண்டாத பகுதிகளை உளியால் வெட்டி நீக்கினால் அதில் கற்சிலை தோன்றுவதுபோல, மூளையிலிருந்து தேவையற்ற நரம்புச்செல்களைக் கவாத்துச் செய்வதன் மூலமே அறிந்தவை பதிவாகின்றன.

    தினமும் புதிதுபுதிதாகப் பெயர்களை, காட்சிகளை, அனுபவங்களை நாம் பெறுந்தோறும் அவை மூளையில் புதிய நரம்புச் செல்சந்திப்புகளாக ஆக்கப்பட்டு நினைவுகளாகப் பதிகின்றன. அப்போது தேவையற்ற நரம்புச் செல்சந்திப்புகள் அகற்றவும் படுகின்றன. ஏனெனில் அறியாமை நீங்குவதுதானே அறிவு!

    நமக்கு வாழ்நாள் முழுவதும் எவ்வளவு தேவையோ அதைவிடப் பலமடங்குக்கு அதிகமான நரம்புச்செல் இணைப்புகளுடன் நாம் பிறக்கிறோம். நமது அறிவு வளரவளரத் தேவையற்ற நரம்பு இணைப்புகள் துண்டிக்கப்படுகின்றன. மூளைவளர்கிறது என்று சொல்கிறோம். உண்மையில் ஏராளமான செல் மரணம்தான் அங்கே நிகழ்கிறது.

    -பேரா.க.மணி

    • அஞ்சறைப் பெட்டியில் தீராத அரியநோய் எதுவும் ஆஸ்பத்திரியில் போய் தீர்ந்ததாய் வரலாறு இல்லை...!
    • வாழைப் பழத்தைபோல் வைத்தியனைப் பார்த்தது யார்...?

    வைத்தியனுக்கு

    கொடுப்பதை

    வணிகனுக்கு கொடுத்துப்பார்

    வாழ்க்கை வளமாகும்...!


    அஞ்சறைப் பெட்டியில் தீராத

    அரியநோய் எதுவும்

    ஆஸ்பத்திரியில் போய்

    தீர்ந்ததாய் வரலாறு இல்லை...!


    முந்திரியும் திராட்சையும்

    முற்றிய பாதாம் பருப்பும்

    நித்தம் ஒருமுறை

    நிதானமாய் கொஞ்சம்

    மென்று சாப்பிட்டுப்பார்

    மேனி வளமாகும்

    மின்னுகிற உடலாகும்...!


    தேனைத் தினந்தோறும்

    தேக்கரண்டி சுவைத்துப்பார்

    தேகம் குளிர்ந்து போகும்

    தெளிந்த ஞானம் உதயமாகும்...!


    ஆரஞ்சும் எலுமிச்சையும்

    இன்னபிற கனிச்சரக்கும்

    உன் சாப்பாட்டு மேஜையின்மேல்

    ஓரமாய் வைத்துப்பார்

    ஓடிப்போகும் நோயெல்லாம்...!


    வாழைப் பழத்தைபோல்

    வைத்தியனைப் பார்த்தது யார்...?

    கீரைக்காரியோடு

    கலகலப்பாய் பேசிப்பார்

    கேட்டவரம் கொடுப்பாள்

    கீழ்வாதமும் குணமாகும்...!


    காய்கறிகளுக்கு

    நீ செய்யும் செலவுகளால்

    உன் கடைசிக்காரியம்

    பலவருடங்கள் தள்ளிப்போகும்

    வைத்தியனுக்கு கொடுத்து

    வதைபட்டு சாவதை விட

    வணிகனுக்குக் கொடுத்து

    வாய்நிறையத் திண்றுபார்

    வாழ்ந்திடுவாய் நூறாண்டு...!


    -கோடாங்கி

    • மனித பிறவியில் சுக துக்கங்களை மாற்றி மாற்றி அனுபவிக்கும் நமக்கு, ராஜ அலங்காரம் என்றுமே சிறப்புதான்.
    • நல்ல செல்வ வளம், மன அமைதி, சிறப்பான வாழ்வு இவற்றை குறிக்கும் குறியீடு ஆக ராஜ அலங்காரத்தை கருதி கொண்டிருக்கிறோம்.

    ஒரு முறை குடும்பத்தார், உறவினர் என்று சுமார் 20 பேர் பழனி சென்று, முருகப் பெருமானை தரிசிக்கும் போது, முருகர் ஆண்டிக் கோலத்தில் இருந்தார்.

    அனைவருக்கும் சற்றே வருத்தம்.

    ராஜ அலங்காரத்தில் முருகரை தரிசித்திருக்க கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டிருந்தோம்...

    அப்போது மண்டபத்தில் எங்கள் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் சுமார் 80 வயது இருக்கும். தூய வெள்ளாடையில் நெற்றி நிறைய திருநீறுடன் நல்ல முகப்பொழிவுடன், புன்சிரிப்புடன் நாங்கள் பேசிக்கொண்டு இருப்பதை கவனத்துக் கொண்டு இருந்தார்.

    "நான் ஒன்று சொல்லட்டுமா?" என்று கேட்டார்.

    "சொல்லுங்கள் ஐயா" என்று ஆவலோடு கேட்டோம்.

    "மனித பிறவியில் சுக துக்கங்களை மாற்றி மாற்றி அனுபவிக்கும் நமக்கு, ராஜ அலங்காரம் என்றுமே சிறப்புதான். நல்ல செல்வ வளம், மன அமைதி, சிறப்பான வாழ்வு இவற்றை குறிக்கும் குறியீடு ஆக ராஜ அலங்காரத்தை கருதி கொண்டிருக்கிறோம்.

    நம் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ராஜ அலங்காரத்தையே விரும்புவோம். அது மனதின் இயல்பான ஈர்ப்பு.

    ஆனால் ஆண்டிக்கோலம் என்பது முக்திக்கு வழிவிடுகின்ற பற்றற்ற முற்றும் துறந்த கோலத்தின் அடையாளம். ஞானக்கோலம்.

    புற உலகியல் வாழ்வின் சுக, துக்கங்களிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு, பிறவியின் பயனாகிய இறைவனை அடைய அகம் - உள் நோக்கி பயணிப்பதற்கு நம்மை உணர்த்துகின்ற கோலம் அது.

    தொடர்பிறவி அறுத்து, என்னோடு சங்கமமாகி முக்தி பெறுவாய் என்று அன்போடு நம்மை அழைக்கும் கோலம்.

    தொடர் பிறவிகளிலேயே உழன்று கொண்டு இருக்கும் நீங்கள், பிறவி அறுத்து முக்தி அடைய ஆசிர்வதிக்கும் கோலமே ஆண்டிக்கோலம்.

    எனவே, ஆண்டிக்கோலத்தில் முருகரை தரிசிப்பதே மிகமிக சிறப்பாகும்" என்று கூறி முடித்தார்.

    என்ன அருமையான ஞான விளக்கம்.

    -வாசன் சுருளி

    • எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலையின் மேற்பாக தோளின்மூலம் முடியின் வேர்கால்கள்வரை எளிதில் ஊடுருவிச் செல்லும் தன்மையால், புறஊதாக்கதிர்களின் தீமையை அகற்றி, தலையின் வெப்பத்தை சமன்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது.
    • உடல் வெப்பத்தையும் சீராக்குவதோடு, மனஅழுத்தம், கண்ணெரிச்சல், நீர் சுருக்கு உள்ளிட்ட சிறுநீர்ப்பாதை தொற்று, வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவையும் உங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கிறது.

    குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் தேய்த்து தலை குளிக்க வையுங்கள்.

    அவசர உலகம், நவநாகரீகம், கல்லூரி மாணவர்கள், ஸ்டைல் ..... என்றெல்லாம் ஆயிரத்தெட்டு காரணங்களைக் கூறாமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாரம் இருமுறைகள் கட்டாயமாக தலையில் நல்லெண்ணெய் தேய்த்து, ஊறவைத்து குளிப்பதற்கு என்னெவெல்லாம் செய்யவேண்டும் அதையெல்லாம் செய்துபாருங்கள். செய்துவிடுங்கள்.

    நிறைந்த கால்சியம் சத்தையும், புரதம், மக்னீசியம் போன்ற சத்துக்களையும் தன்னகத்தே வைத்துள்ள நல்லெண்ணெய் என்னும் எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலையின் மேற்பாக தோளின்மூலம் முடியின் வேர்கால்கள்வரை எளிதில் ஊடுருவிச் செல்லும் தன்மையால், புறஊதாக்கதிர்களின் தீமையை அகற்றி, தலையின் வெப்பத்தை சமன்படுத்தி, முடி உதிர்தலைத் தடுக்கிறது.

    உடல் வெப்பத்தையும் சீராக்குவதோடு, மனஅழுத்தம், கண்ணெரிச்சல், நீர் சுருக்கு உள்ளிட்ட சிறுநீர்ப்பாதை தொற்று, வயிற்றுவலி, மலச்சிக்கல் ஆகியவையும் உங்கள் குழந்தைகளுக்கு வராமல் தடுக்கிறது.

    முடியின் கருமை, அடர்த்தி, உறுதி, நீளம் ஆகியவை தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் எந்தஅளவிற்கு முடியின் வேர்கால்களைத்தொட்டு, உள்ளே செல்கிறதோ, அந்த அளவிற்கு நன்றாக அமையும்.

    இதனுடன் சேர்ந்து, புரதம், இரும்புச்சத்து, வைட்டமின் 'ஏ' 'சி' 'ஈ' மற்றும் செலினியம் ஆகியவை நிறைந்த பழங்கள், காய்கள், கொட்டை உணவுகள், கீரைகள், முட்டை ஆகியவையும் மிருதுவான, அடர்த்தியான, நீளமான, கருமையான கூந்தலுக்கு மிக அவசியம்.

    -முனைவர் வண்டார் குழலி

    • மண்டபத்தில்‌ உட்காருந்திருந்தவர்கள்‌ வெளியே போய்‌ மீண்டும்‌ உள்ளே வந்திருக்கிறீர்கள்‌.
    • உங்களில்‌ போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில்‌ உட்கார்ந்திருப்பவர்கள்‌ எத்தனை பேர்?

    ஒரு ஞானி பிரகதீஸ்வரர்‌ திருக்கோவிலுக்கு விஜயம்‌ செய்தார்‌.

    கல்மண்டபத்தின்‌ வடக்கில்‌, அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது.

    எதிரே ஆண்களும்‌ பெண்களும்‌ கணக்கிலடங்காது கூடியிருந்தனர்‌.

    வேதங்கள்‌ பற்றியும்‌, புராணங்களைப்‌ பற்றியும்‌ விளக்கிக் கொண்டே வந்த ஞானியார்‌ "யாரும்‌ கேள்விகள்‌ கேட்கலாம்‌. பதில்‌ சொல்லப்படும்‌" என்று தெரிவித்தார்‌.

    யார்‌ என்ன கேள்வி கேட்கப்‌ போகிறார்கள்‌ என்பதையே ஒவ்வொருவரும்‌ ஆவலாக எதிர்பார்த்தார்கள்‌.

    மண்டபத்தின்‌ மேற்கு மூலையிலிருந்து ஓர்‌ உருவம்‌ மெதுவாக எழுந்து நின்றது.

    சபையில்‌ இருந்த எல்லோரும்‌ அவரையே திரும்பிப்‌ பார்த்தார்கள்‌.

    தாங்கள்‌ என்ன கேட்க விரும்புகிறீர்கள்‌? என்று ஞானியார்‌ கேட்டார்‌.

    அவர்‌ சொன்னார்‌:

    சுவாமி! விதியையும்‌ மதியையும்‌ பற்றி வெவ்வேறு காலங்களில்‌ வெவ்வேறு சர்ச்சைகள்‌ தோன்றி முடிவுக்கு வராமல்‌ முடிந்து இருக்கின்றன.

    "விதியை மதியால்‌ வெல்லலாம்‌ என்றும்‌, மதியை விதி வென்றுவிடும்‌" என்றும்‌, இரண்டு கருத்துகள்‌ இன்னும்‌ இருந்து கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்கு தெரிந்தால்‌ சொல்லுங்கள்‌. "

    கேள்வி பிறந்ததும்‌, ஞானியார்‌ லேசாகச்‌ சிரித்தார்‌.

    மண்டபத்தில்‌ இருந்த எல்லோரையும்‌ பார்த்து, "எல்லோரும்‌ எழுந்து வெளியே செல்லுங்கள்‌; நான்‌ கூப்பிட்ட பிறகு வாருங்கள்‌" என்றார்‌.

    மண்டபம்‌ காலியாயிற்று.

    இரண்டு நிமிஷங்கள்‌ கழித்து, "எல்லோரும்‌ வாருங்கள்‌" என்றழைத்தார்‌.

    திபுதிபுவென்று எல்லோரும்‌ ஓடிவந்து அமர்ந்தார்கள்‌.

    ஞானியார்‌ கேட்டார்‌:

    இந்த மண்டபத்தில்‌ உட்காருந்திருந்தவர்கள்‌ வெளியே போய்‌ மீண்டும்‌ உள்ளே வந்திருக்கிறீர்கள்‌. உங்களில்‌ போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில்‌ உட்கார்ந்திருப்பவர்கள்‌ எத்தனை பேர்?

    எல்லோரும்‌ விழித்தார்கள்‌.

    நாலைந்து பேர்‌ மட்டும்‌ பழைய இடத்தில்‌ அமர்ந்திருந்தார்கள்‌. மற்ற எல்லோரும்‌ இடம்‌ மாறி இருந்தார்கள்‌. கேள்வி கேட்டவரைப்‌ பார்த்து, ஞானியார்‌ சொன்னார்‌:

    பாருங்கள்‌, இந்தச்‌ சின்ன விஷயத்தில்கூட இவர்கள்‌ மதி வேலை செய்யவில்லை.

    கொஞ்சம்‌ நிதானமாக யோசித்தால்‌, இவர்கள்‌ மெதுவாக வந்து, அவரவர்‌ இடங்களில்‌ அமர்ந்திருப்பார்கள்‌! இவர்கள்‌ மதியை மூடிய மேகம்‌ எது? "

    கேள்வியாளர்‌ கேட்டார்‌:

    இது அவர்கள்‌ அறியாமையைக்‌ குறிக்கும்‌; இதை விதி என்று எப்படிச்‌ சொல்கிறீர்கள்‌? "

    ஞானியார்‌ சொன்னார்‌:

    அறியாமையே விதியின்‌ கைப்பாவை.

    அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால்‌, விதியும்‌ இல்லை, விதித்தவனும்‌ இல்லை.

    கேள்வியார்‌ கேட்டார்‌:

    மனிதனின்‌ அறியாமையே விதி என்றால்‌, விதிக்கு தனி நியமங்கள்‌ இல்லையா?

    ஞானியார்‌ சொன்னார்‌:

    இருக்கின்றன!

    இந்த உருவத்தில்‌, இந்த இடத்தில்‌ பிறக்க வேண்டும்‌ என்று நீங்கள்‌ நினைக்கவில்லை.

    உங்களைப்‌ பிறக்க வைத்தது விதியின்‌ பிரவாகம்‌.

    இப்படித்தான்‌ வாழவேண்டும்‌ என்று நீங்கள்‌ திட்டமிடுகிறீர்கள்‌; அப்படி வாழ விடாமல்‌ செய்வது விதியின்‌ பிரவாகம்‌.

    இந்த‌ பெண்தான்‌ எனக்குத்‌ தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்‌: அவளைக்‌ கிடைக்கவிடாமல்‌ செய்வது விதியின்‌ பிரவாகம்‌.

    எப்போது நீங்கள்‌ நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள்‌ நினைவுக்கு மேல்‌ இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்‌.

    அதற்கு நம்‌ மூதாதையர்‌ சூட்டிய பெயரே விதி.

    -கண்ணதாசன்.

    • உன் வடிவம் ஒவ்வொரு கணமும் மாறிவருகிறது.
    • இறப்பு என்பது ஒரு மாற்றம். முக்கியமான மாற்றமே தவிர வேறில்லை.

    நீ பிறக்கவுமில்லை... இறக்கவுமில்லை...

    வாழ்விருப்பு என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாதது. அது எப்போதும் இங்கு இருக்கும். நீயும் எப்போதும் இருப்பாய். வடிவங்கள் வேறாய் இருக்கலாம். இந்த வாழ்விலும் வடிவங்கள் மாறவே செய்கின்றன.

    உன் தாயின் கருப்பையில் நீ இருந்த முதல் நாளில், நீ ஒரு கேள்விக்குறியின் தலைப்புள்ளி அளவு கூடயில்லை. அதை ஒரு புகைப்படம் எடுத்து உன்னிடம் காண்பித்தால் அது நீதான் என்று உனக்குப் புரியவே புரியாது. உண்மையில் அதற்கு முன்னால்....?

    உன்னால், உன் தகப்பனாரிடம் நீ இருந்ததை நினைத்துப்பார்க்க முடியுமா? ஒரு படம் வேண்டுமானால் காட்டலாம். உன் வெறும் கண்களால் நீ காணும் அளவு அதைப் பெரிதுபடுத்தினாலும் உன்னால் அதை அடையாளம் காட்ட முடியாது. ஆனால் அது, அதே உயிர்தான். உனக்குள் இப்போது இங்கே துடிக்கும் அதே உயிரின் ஆதாரத் துடிப்புதான்.

    உன் வடிவம் ஒவ்வொரு கணமும் மாறிவருகிறது. இறப்பு என்பது ஒரு மாற்றம். முக்கியமான மாற்றமே தவிர வேறில்லை. கொஞ்சம் பெரிய மாற்றம்... ஒரு வேகமான மாற்றம்.

    குழந்தையிலிருந்து வாலிப வயது... உன் குழந்தைத்தனம் எப்போது மாறி வாலிபம் வந்தது என்றே உனக்குத் தெரியாது. பிறகு வாலிபன் வயோதிகன் ஆவது மெல்ல மிக மெல்ல நகருவதால், எந்த நாளில், எந்த கிழமையில், எந்த வருடத்தில் உன் வாலிபம் உன்னை விட்டுப் போனது என்றே உன்னால் கூறமுடியாது.

    அந்த மாற்றம் மெதுவாக சிறிது சிறிதாக நடக்கும். ஆனால் 'மரணம் ஒரு உடலிலிருந்து வேறு உடலுக்கு பெரிதாக தாவிக் குதித்து செல்லும் மாற்றம்.' ஒரு வடிவிலிருந்து மற்றொரு வடிவிற்கு செல்வதாகும்.

    ஆனால் அது உன் முடிவு அல்ல. "நீ பிறக்கவுமில்லை: இறக்கவுமில்லை: நீ எப்போதும் இங்கே உள்ளாய்."

    -ஓஷோ 

    • வறுமையின் வெம்மை தாங்காது தங்கள் ஊரான கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தனர்.
    • குடும்பத்தின் நிலையறிந்து உதவிகள் செய்து பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு மாமனிதர்.

    "பிள்ளைகளே! ஆற்றுக்குப் போகலாம் வாருங்கள்'' என்று அழைத்தாள் அந்த அம்மா.

    இரு பெண்கள் ஒரு சிறுவன் என மூவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

    " 'ஏனம்மா ஆற்றுக்கு அழைத்துச் செல்கிறாய் குளிப்பதற்காகவா?" என்று அதில் ஒரு பெண் குழந்தை துணிந்து கேட்டாள்.

    அந்தத் தாய்க்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. கண்களிலிருந்து நீர் திரண்டு வழிந்தது.'

    "என் அருமைக் குழந்தைகளே! உங்கள் பசியெடுக்கும் வயிற்றுக்கு உணவு போட இந்தப் பாழாய்ப்போன தாயால் முடியவில்லை. வறுமையின் கொடுமையோ வாட்டி எடுக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. உங்கள் மூவரையும் ஆற்றில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்திலே தள்ளிவிட்டு, நானும் உங்களுடனேயே சாகப் போகிறேன்'' என்று கதறித் துடித்தாள்.

    அதைக் கேட்ட அந்த மூவரில் கேள்வி கேட்ட அதே பெண் குழந்தை, தாயைத் தடுத்து, மனம் மாற்றி, "எப்படியாவது சமாளித்து வாழ்ந்து விடலாம். நீ எடுத்திருக்கும் இந்த முடிவு சரியில்லை. வீட்டுக்கு வா போகலாம்" என்று சொல்லி தாயையும், தன் உடன் பிறப்புகளையும் திருப்பி அழைத்து வந்துவிட்டாள்.

    வறுமையின் வெம்மை தாங்காது தங்கள் ஊரான கொடுமுடியை விட்டுக் கரூருக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்தனர். அந்தக் குடும்பத்தின் நிலையறிந்து உதவிகள் செய்து பிழைக்க வைத்துக் கொண்டிருந்தார் ஒரு மாமனிதர்.

    தாயைத் தடுத்து அழைத்து வந்த அந்தச் சிறுமி, ஒரு நாள் கரூர் வீதியில் நின்று கொண்டு ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்தபடி இருந்தாள். அப்போது, அந்த வழியாகச் சென்ற உதவி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி ஐயர் அந்தச் சிறுமியின் துருதுருப்பையும், துள்ளலையும் கண்டு, "நாடகத்தில் சேர்த்து விடுகிறேன். நடிக்கிறாயாம்மா?" என்று கேட்டார்.

    அந்தச் சிறுமி மகிழ்ச்சியோடு தலையை அசைத்தாள். அவளை அப்போது கும்பகோணம் பகுதியில் நாடகம் நடத்திக்கொண்டிருந்த வேல் நாயர் நாடகக் கம்பெனியில் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார்.

    எட்டு வயது நிரம்பாத அந்தச் சிறுமிக்கு அங்கே கிடைத்த பாத்திரம் என்ன தெரியுமா? நல்லதங்காள் நாடகத்தில் கிணற்றில் தள்ளப்படும் குழந்தைகளிலே ஒருத்தி! அவர்தான் பின்னாளில் இலட்ச ரூபாய் பெற்ற கொடுமுடி கோகிலம் என்று அழைக்கப்பட்ட நடிகை கே.பி. சுந்தராம்பாள்!

    கே.பி. சுந்தராம்பாள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்றால் அதில் அப்படியே பொறுந்திவிடும் இயல்பு கொண்டவர். அவரை, ஔவையாக காரைக்கால் அம்மையாக கௌந்தி அடிகளாக பக்த நந்தனாராகத்தான் காணமுடியுமே தவிர ஒரு நடிகையாகத் திரையில் காணவே முடியாது.

    திரைக் கலைத்துறையில் நடிப்புத் துறையில் இருந்து தமிழக சட்டப்பேரவை அமைப்புக்குள் நுழைந்த முதல் நபரும் கே.பி.சுந்தராம்பாள் தான்!

    -பாண்டியன் சுந்தரம்

    • திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
    • கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்.10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும்.

    ஒன்பது நவக்கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணைபடி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெறலாம்.

    1. திங்களூர் (சந்திரன்): - காலை 6 மணி

    நவக்கிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.

    2. ஆலங்குடி (குரு): - காலை 7.30 மணி

    ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம். காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்.

    3. திருநாகேஸ்வரம் (ராகு): - காலை 9.30 மணி

    கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம்.10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.

    4. சூரியனார் கோவில் (சூரியன்): - மதியம் 11.00 மணி

    நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவக்கிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

    5. கஞ்சனூர் (சுக்கிரன்): - மதியம் 12.15

    சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15 மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

    6. வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்): - மாலை 4 மணி

    நவக்கிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2 மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00 மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

    7. திருவெண்காடு (புதன்): - மாலை 5.15 மணி

    வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15 மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00 மணிக்கு கிளம்ப வேண்டும்.

    8. கீழ்பெரும்பள்ளம் (கேது): - மாலை 6.15 மணி

    திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். 45 நிமிஷ நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00 மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்.

    9. திருநள்ளாறு (சனி): - இரவு 8.00 மணி

    நவக்கிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00 மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.

    9.30 மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு புறப்படலாம்.

    ×