என் மலர்
நீங்கள் தேடியது "ஆண்டிக்கோலம்"
- மனித பிறவியில் சுக துக்கங்களை மாற்றி மாற்றி அனுபவிக்கும் நமக்கு, ராஜ அலங்காரம் என்றுமே சிறப்புதான்.
- நல்ல செல்வ வளம், மன அமைதி, சிறப்பான வாழ்வு இவற்றை குறிக்கும் குறியீடு ஆக ராஜ அலங்காரத்தை கருதி கொண்டிருக்கிறோம்.
ஒரு முறை குடும்பத்தார், உறவினர் என்று சுமார் 20 பேர் பழனி சென்று, முருகப் பெருமானை தரிசிக்கும் போது, முருகர் ஆண்டிக் கோலத்தில் இருந்தார்.
அனைவருக்கும் சற்றே வருத்தம்.
ராஜ அலங்காரத்தில் முருகரை தரிசித்திருக்க கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை அனைவரும் பகிர்ந்து கொண்டிருந்தோம்...
அப்போது மண்டபத்தில் எங்கள் அருகில் அமர்ந்திருந்த பெரியவர் சுமார் 80 வயது இருக்கும். தூய வெள்ளாடையில் நெற்றி நிறைய திருநீறுடன் நல்ல முகப்பொழிவுடன், புன்சிரிப்புடன் நாங்கள் பேசிக்கொண்டு இருப்பதை கவனத்துக் கொண்டு இருந்தார்.
"நான் ஒன்று சொல்லட்டுமா?" என்று கேட்டார்.
"சொல்லுங்கள் ஐயா" என்று ஆவலோடு கேட்டோம்.
"மனித பிறவியில் சுக துக்கங்களை மாற்றி மாற்றி அனுபவிக்கும் நமக்கு, ராஜ அலங்காரம் என்றுமே சிறப்புதான். நல்ல செல்வ வளம், மன அமைதி, சிறப்பான வாழ்வு இவற்றை குறிக்கும் குறியீடு ஆக ராஜ அலங்காரத்தை கருதி கொண்டிருக்கிறோம்.
நம் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்பாக வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ராஜ அலங்காரத்தையே விரும்புவோம். அது மனதின் இயல்பான ஈர்ப்பு.
ஆனால் ஆண்டிக்கோலம் என்பது முக்திக்கு வழிவிடுகின்ற பற்றற்ற முற்றும் துறந்த கோலத்தின் அடையாளம். ஞானக்கோலம்.
புற உலகியல் வாழ்வின் சுக, துக்கங்களிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு, பிறவியின் பயனாகிய இறைவனை அடைய அகம் - உள் நோக்கி பயணிப்பதற்கு நம்மை உணர்த்துகின்ற கோலம் அது.
தொடர்பிறவி அறுத்து, என்னோடு சங்கமமாகி முக்தி பெறுவாய் என்று அன்போடு நம்மை அழைக்கும் கோலம்.
தொடர் பிறவிகளிலேயே உழன்று கொண்டு இருக்கும் நீங்கள், பிறவி அறுத்து முக்தி அடைய ஆசிர்வதிக்கும் கோலமே ஆண்டிக்கோலம்.
எனவே, ஆண்டிக்கோலத்தில் முருகரை தரிசிப்பதே மிகமிக சிறப்பாகும்" என்று கூறி முடித்தார்.
என்ன அருமையான ஞான விளக்கம்.
-வாசன் சுருளி






