என் மலர்tooltip icon

    கதம்பம்

    • நாத்திகரென்றால் செய்த முயற்சியின் முழுபலனையும் பிரபஞ்சத்திடம் இருந்து பெறலாம்.
    • யார் எப்படியோ எண்ணியது எண்ணியவாறு நடக்கும், தினந்தோறும் வாழ்வில் மகிழ்ச்சி கிட்டும்.

    மனித உடலில் ஐம்பூதங்களின் தன்மைகள் கீழ்கண்ட அடையாளங்களாக காணப்படுகின்றன.

    நீர் - இரக்கம்

    நெருப்பு - ஒழுக்கம் (சுத்தம்)

    காற்று - விழிப்புணர்வு

    நிலம் - பொறுமை

    ஆகாயம் - இனிமையான பேச்சு

    1. நீர், நாம் எப்போதும் "இரக்கத்துடன் நடந்துகொண்டால்" நம் உடலில் நீர்ச்சத்துக் குறையாது, அது தொடர்பான எந்த நோய்களும் வராது. அதற்கு நெஞ்சில் ஈரம் வேண்டும்.

    2. நெருப்பு, நாம் எப்போதும் சுத்தத்தை பேணி "ஒழுக்கத்துடன் நடந்து கொண்டால்" நம் உடல் மற்றும் மனதிலுள்ள அனைத்து அழுக்குகளையும் நெருப்பு பொசுக்கி உடலின் வெப்பத்தை பாதுகாக்கும். அதற்கு அசுத்தத்தை சுட்டெரிக்க வேண்டும்.

    3. காற்று, நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் "விழிப்புணர்வுடன்" செய்தால் சுவாசம் சம்பந்தமான எந்த நோய்களும் வராது, முதுமை என்பது எளிதில் நெருங்காது. அதற்கு வாசியில் கவனம் வேண்டும்.

    4. நிலம், நாம் கோபத்தை அறவே ஒழித்து எல்லோரிடத்தும் "பொறுமையைக் கடைபிடித்தால்" ஆயுள் அதிகரிக்கும். அதற்கு அரவணைக்கும் கைகள் வேண்டும்.

    5. ஆகாயம், நாம் பிறர் நோகும்படி பேசாமல் இனிமையான பேச்சை மேற்கொண்டால் ஆகாயம் அளவு அன்பு அதிகரிக்கும். அதற்கு எல்லையற்ற மனம் வேண்டும்.

    இந்த ஐந்துவிதத் தன்மைகளையும் உடலில் ஒருபோதும் குறையாமல் பார்த்துக்கொண்டால், இயற்கையாகிய ஐம்பூதங்களும் நம் உடலில் சரியாக வாசம் செய்யும்! ஆத்திகரென்றால் கடவுளை அடையும் உண்மை வழியறிந்து முக்தி அடையலாம்.

    நாத்திகரென்றால் செய்த முயற்சியின் முழுபலனையும் பிரபஞ்சத்திடம் இருந்து பெறலாம்.

    யார் எப்படியோ எண்ணியது எண்ணியவாறு நடக்கும், தினந்தோறும் வாழ்வில் மகிழ்ச்சி கிட்டும்.

    -ஆர்.எஸ். சீதாராமன்

    • ஆண்டாள் மார்கழி 30 நாளும் இவ்வாறு விரதம் இருந்து பூஜை செய்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்க பெருமானுடன் ஐக்கியமானாள்.
    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் போகி கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.

    கோதை என்றும் ஸ்ரீஆண்டாள் என்றும் போற்றி வணங்கப்படும் ஸ்ரீதேவியின் அம்சமாகிய பூமி பிராட்டியார், ''அரங்கன்தான் என் கணவர், அதில் மாற்றம் இல்லை'' என்று உறுதியாக இருந்தாள். அவள் மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து கண்ணனையே தன் கணவனாக அடைந்தாள்.

    ஆடிப்பூர நாளில் அவதரித்த ஆண்டாள், பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீரங்கத்தில், 'ரங்கநாதா' என்று கூறியபடி கருவறைக்குள் சென்று ஆண்டவனுடன் ஐக்கியம் ஆனாள்.

    இந்த நிகழ்வை, நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர தினத்தன்று அம்பாள், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும். ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட தலங்களில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடக்கும்.

    பகவான் தனது ஒரு அவதாரத்தில் ஸ்ரீராமனாக வந்து பிறந்தான். மகாலட்சுமியும் சீதையாக ஜனக குலத்தில் பிறந்தாள். அவனும் மனுஷ்யன்; இவளும் மனுஷி. இருவருக்கும் கல்யாணம் நடந்தது. அதேபோல், கிருஷ்ணனாக பகவான் ஒரு தடவை அவதரித்தான். மகாலட்சுமியும் ருக்மணியாக வந்து பிறந்தாள். கிருஷ்ணன்- ருக்மணி கல்யாணம் நடந்தது.

    ஆனால், ஆண்டாள் அவதரித்தபோது, பகவான் ராமனாகவோ கிருஷ்ணனாகவோ வந்து பிறந்தானா என்றால், இல்லை. கோவிலில் அர்ச்சா ரூபமாய் படுத்துக் கொண்டிருந்த எம்பெருமானைத் தட்டி எழுப்பி, அவரை ஆண்டாள் கல்யாணம் செய்து கொண்டாள். ஆகவே, மற்ற திருக்கல்யாணங்களைக் காட்டிலும் பூதேவியான ஆண்டாளின் கல்யாணம் ஏற்றமுடையது, தனித்துவம் கொண்டது.

    மார்கழியில், திருப்பாவை பாடி கண்ணனை கரம்பிடிக்க எண்ணிய ஆண்டாள், தன்னுடைய திருமணம் எப்படி எல்லாம் நடக்கும் என்பதை கனவிலே கண்டதாக நாச்சியார் திருமொழியில் பாடி இருக்கிறாள்.

    தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.."

    ஆண்டாள் திருமணம் பங்குனி உத்திர திருநாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோலவே மார்கழி மாதம் திருப்பாவை பாடலால் பெருமாளை மனமுருக பிரார்த்தித்து, பாவை நோன்பிருந்து ஆண்டாள் அந்த கண்ணனையே மணாளனாகக் கொண்டாள்.

    'சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்' என அழைக்கப்படும் ஸ்ரீ ஆண்டாள் பெருமாள் பக்தர்களில் மிகச்சிறந்த பக்தை. சிறுவயது முதலே ஸ்ரீரெங்கநாத பெருமாளிடம் அளவற்ற பக்தியையும் பிரேமையும் கொண்டிருந்த இவள் எந்நேரமும் ஸ்ரீரெங்கநாதரின் நினைவுடனே இருந்தாள். எம்பெருமானைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை தன் தந்தையான விஷ்ணு சித்தரிடம் கேட்டு அறிந்து கொள்வாள்.

    வைணவ ஆச்சாரியரும், தனது கடைசி நாட்களை ஸ்ரீரங்கத்தில் கழித்தவருமான ஸ்ரீராமனுஜர் ஸ்ரீ ஆண்டாளை பற்றி 'பாதங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்திற்கும் வித்தாகும்-கோதைத்தமிழ் ஐதெய்ந்தும் அறியாத மானிடரே வையம் சுமப்பதும் வம்பே' என்று பாடியுள்ளார்.

    'வேதம் அனைத்திற்கும் வித்து கோதையே' என்று மற்றுமொரு வைணவ பெரியவர் கூறியுள்ளார்.

    ஆயர்பாடியில் கோபியர்கள் பாவை நோன்பிருந்து ஸ்ரீ கண்ணனை அடைந்ததை ஸ்ரீ ஆண்டாள் அறிந்து, தன்னையும் கோபியருள் ஒருத்தியாகவும், ஆழ்வாருடைய திருமாளிகையே ஆயர்பாடியாகவும், பெருமாளையே கண்ணனாகவும் எண்ணி மார்கழி முதல் நாள் முதல் அதிகாலையில் எழுந்து நோன்பு பற்றிய பாசுரங்கள் பாடி பூஜித்தாள். அவையே திருப்பாவையாகும்.

    ஆண்டாள் மார்கழி 30 நாளும் இவ்வாறு விரதம் இருந்து பூஜை செய்து ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்க பெருமானுடன் ஐக்கியமானாள்.

    அதை நினைவூட்டும் விதமாக ஆண்டாள் வீற்றிருக்கும் அனைத்து கோவில்களிலும் மார்கழி மாத கடைசி தினம், அதாவது 'போகி' அன்று ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் திருமணம் நடைபெறும், இதையே 'போகி கல்யாணம்' என்றும் கொண்டாடுகிறார்கள்.

    மார்கழி மாதத்தில் பகல் பத்து, ராப்பத்து உத்சவங்கள் நடந்தேறும் வேளையில், ஆண்டாள் உத்சவமும் நடைபெறும். அதன்படி ஆண்டாளுக்கு போகி அன்று திருக்கல்யாணம் நடத்தப்படும். அன்று ஆண்டாளுக்கு எண்ணை காப்புடன் நீராட்டு உத்சவம் நடைபெறும். இதற்காகவே அன்று சிறப்பு ஹோமங்கள் நடைபெறும்.

    பின்னர் ஆண்டாள் மாடவீதிகளில் வலம் வந்த பின்னர் முறைப்படி மாலை மாற்று நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து திருமணமும் நடந்தேறும்.

    நோன்பிருந்து பெருமாளை மணந்த ஆண்டாளின் பக்தியை உணர்த்தும் விதமாக இந்த போகி கல்யாணம் அனைத்து கோவில்களிலும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்த உத்சவம் சிறப்பாக நடைபெறும். அன்று திருப்பதியில் இருந்து ஆண்டாளுக்கு சிறப்பு மலர்மாலைகள் வரும். அதுபோலவே, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும் போகி கல்யாணம் விமரிசையாக நடைபெறும்.

    சாதாரண மனிதருடன் திருமணம் என்ற பேச்சுக்கே இடம் கொடுக்காது, அந்தக் கண்ணனையே மனதில் வடித்து அவனையே கரம் பிடித்த ஆண்டாளின் பக்தியையும், பெருமாள் மீது கொண்டிருந்த அன்பையும் போகி கல்யாணத்திலும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

    மார்கழியில் விரதமிருந்து, கண்ணனையே மனதார பிரார்த்தித்து, அவனையே பதியாகக் கொண்ட ஆண்டாளைப் போலவே, திருமணமாகாத பெண்கள் பாவை நோன்பிருந்து போகி அன்று அதாவது நாளை (சனிக்கிழமை) நடக்கும் திருமணத்தில் ஆண்டாளையும் பெருமாளையும், திருமணக் கோலத்தில் தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும். ஆண்டாளுக்கு அருளிய கண்ணன், உங்கள் திருமண பிரார்த்தனையையும் நிறைவேற்றுவான்.

    • கரும்பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.
    • கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும்.

    பொங்கல் திருவிழாவின் கதாநாயகனான கரும்பில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. ஆனால் அதன் அருமை பலருக்கு தெரிவதில்லை. நாம் தெரிந்து கொள்வோமா...?

    1. உடனடி ஆற்றல்: கரும்புச் சாறு உடனடி ஆற்றல் தரக்கூடியது. ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது. உங்கள் வேலையினை ஆரம்பிப்பதற்கு முன்னால் சிறிதளவு கரும்பு சாற்றினை குடித்தால் உங்களின் செயல்திறன் அதிகரிக்கும்.

    2. வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள்: கரும் பில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை உண்ணும்பொழுது வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாகச் செய்யும்.

    3. மன அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

    4. புற்று நோய் வராமல் தடுக்கும்: கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் மற்றும் பிளவனோய்டுகள் நிறைந்துள்ளன. இதனை நீங்கள் உண்டு வந்தால் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.

    5. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்: கரும்பில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின் சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.

    6. கல்லீரலின் ஆரோக்கியம் : கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்த விரும்புபவர்கள் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாறு பருகுங்கள்.

    7. வயதாவதை தடுக்கும் : கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும். இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.

    8. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் : கரும்பில் அதிக அளவில் உடலுக்கு தேவையான ஆன்டிஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி எப்போதும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

    9. உடல் எடையினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புபவர்கள் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் இருக்கும் அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க உதவும்.

    10. ரத்த அழுத்தத்தினை குறைக்கும்: கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.

    கரும்பு ஏன் இனிக்கிறது?

    கரும்பில் சுக்ரோஸ் என்ற சர்க்கரை வேதிப்பொருள் உள்ளது. இதுவே கரும்புக்கு இனிப்புச்சுவையை தருகிறது. நாம் வீட்டில் பயன்படுத்தும் சர்க்கரை இந்த கரும்புச்சர்க்கரைதான்!

    கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்

    கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், தையாமின், ரிபோபிளவின், புரதம், இரும்புச்சத்து போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன.

    • வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும்போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
    • பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும்.

    பல்வேறு மருத்துவப்பயன்கள் நிறைந்த பெருங்காயத்தை 'கடவுளின் அமிர்தம்' என்பார்கள். இது சிவப்பு நிறம் கலந்த பழுப்பு நிறம் கொண்டது. பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த பயன்படும் 'சனாமிர்' மருந்து போல பெருங்காயம் வைரஸ் எதிர்ப்பு தன்மையை கொண்டது என தைவான் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்.

    தினமும் ஒரு கிளாஸ் மோரில் துளி பெருங்காயம் போட்டு பருகினால் உடல் குளிர்ச்சியாகும். 'லாக்டோபேசில்லஸ்' என்னும் நல்ல நுண்ணுயிரியும் கிடைக்கும். கூடவே பன்றிக்காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமிகளும் ஓடிவிடும்.

    வாயுவை அதிகரிக்கக் கூடிய வாழைக்காய், கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சமைக்கும்போது பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

    நெஞ்சு எலும்பின் மையப் பகுதியிலும், அதற்கு நேர்பின் பகுதியிலும் வாயு வலி வந்து இதய வலியோ என பயமுறுத்தும் நோய்க்கு பெருங்காயம் ஒரு பங்கு, உப்பு 2 பங்கு, திப்பிலி 4 பங்கு எடுத்து செம்முள்ளி கீரையின் சாற்றில் அரைத்து மாத்திரைகளாக்கி காலை, மாலை என 7 நாட்கள் சாப்பிட்டால் வாயுக்குத்து நீங்கும். ஆனால் அது ஜீரணம் தொடர்பாக வந்த வலியா என உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம்.

    'இரிடபிள் பவுல் சிண்ட்ரோம்' என்னும் சாப்பிட்டவுடன் வரும் கழிச்சல், அடிக்கடி நீர் மலமாக போகும் குடல் அழற்சி நோய்க்கும் பெருங்காயம் பலன் தரும்.

    பெருங்காயம் முக்கியமாய் குருதியை சூடாக்கி, நரம்புகளை வெப்பப்படுத்தும். துடிப்பை உண்டாக்கிப் பெண் இச்சைக் கிளர்ச்சியை உண்டாக்கும்.

    கக்குவான் நோய்க்கு இதை நீர் விட்டு அரைத்து மார்பின் மீது பற்றிட குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் குணப்படும்.

    பிறந்த குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம் என்னும் நோய்க்கு பால் பெருங்காயத்தை உரசி தாயின் மார்பில் தடவி குழந்தையை பால் உண்ணும்படி செய்தால் நோய் நீங்கும்.

    • கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது.
    • உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    உச்சி முதல் பாதம் வரை உடல் உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள் இதோ...

    மூளை: கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

    குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

    வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

    தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

    கண்கள்: பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

    தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

    அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

    வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

    தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்சனைகள் வராது.

    தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

    பற்கள்: மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

    கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

    செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

    பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

    நரம்புகள்: சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

    இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

    மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

    இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

    கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

    ரத்தம்: வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

    திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

    தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

    அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

    இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

    சருமம்: தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

    முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

    சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும். ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அருகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

    நுரையீரல் & இதயம்: தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும். கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

    ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

    இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும். சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

    திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

    முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

    ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

    வயிறு: காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

    மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

    வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

    வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் எதுவும் வராது.

    சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

    வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

    வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக்கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்.

    கல்லீரல் & மண்ணீரல்: கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

    மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

    திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

    மலக்குடல்: அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும். பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

    அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

    மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

    மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

    பாதம்: விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும். லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

    வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

    இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

    -ராஜகோபால்

    • மூலிகை கசாயம் சாப்பிட்ட 5 மணி நேரம் கழித்து சளி அனைத்தும் மலமாக வெளியேறும்.
    • காய்ச்சல், சளி என 5 நாளில் இவை சரியானவுடன் நெத்திலி மீன் குழம்பு, ஆட்டுகால் சூப், ஈரல் என சாப்பிட்டு உடலை பலபடுத்தவும்.

    நன்றாக இருக்கும் ஒருவருக்கு தலைவலி, கால்வலி என ஒருமணி நேரத்தில் காய்ச்சல் வந்துவிடுகிறது.

    காய்ச்சல் வந்த முதல் நாள் அல்லது இரண்டாம் நாள் என ஏதாவது ஒருநாளில் மட்டும் உண்ணாநோன்பு மிக முக்கியம்... காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உணவு தண்ணீர் என எதுவும் சாப்பிட கூடாது. தாகம் அதிகமானால் சிறிது தண்ணீர் குடிக்கலாம். ஒய்வுடன் பட்டினியை கடைபிடித்தால் காய்ச்சல் தீவிர நிலைக்கு போகாமல் சமாளிக்கலாம்.

    12 மணி நேர பட்டினிக்கு பிறகு சூடான சோறு அல்லது புளிக்காத மாவு இட்லி தொட்டுகொள்வதற்கு புதினா கொத்தமல்லி கலந்த சட்டினி மட்டுமே.

    முதல் இரண்டு நாளில் பட்டினி வைத்தியம் பலன் தரும். மூன்றாவது நாளில் பட்டினி வைத்தியம் பலன் தராது..

    பப்பாளி இலை சாறு 20 எம்.எல். தேன் கலந்து காலை இரவு என மூன்று நாட்கள் சாப்பிடலாம்...

    முதல் மூன்று நாட்கள் ஓய்வும் (செல்போன், டீவி கூடாது), பத்திய உணவும் அவசியம்... (ரசம் சோறு கஞ்சி இட்லி)

    மூன்று நாட்கள் கழித்து காய்ச்சல் சளியாக மாறிவிடும். சளி இருக்கும் சமயத்தில் கற்பூரவள்ளி இலை 4, துளசி இலை 10, வெற்றிலை 1 இது மூன்றையும் கசக்கி போட்டு ஒரு டம்ளர் நீரை அரை டம்ளராக சுண்ட காய்ச்சி காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சாப்பிடவும்...

    இந்த மூலிகை கசாயம் சாப்பிட்ட 5 மணி நேரம் கழித்து சளி அனைத்தும் மலமாக வெளியேறும்.

    காய்ச்சல், சளி என 5 நாளில் இவை சரியானவுடன் நெத்திலி மீன் குழம்பு, ஆட்டுகால் சூப், ஈரல் என சாப்பிட்டு உடலை பலபடுத்தவும்.

    -ரியாஸ்

    • ‘எச்சரிக்கை சங்கிலி’ என்பது பேருந்துகளில் உள்ள காற்று பிரேக் போன்றது.
    • எஞ்சினில் வாயு அழுத்தத்தை அதிகரிக்கும் கம்ப்ரெசர் என்ற கருவி இருக்கும்.

    வெறும் ஒரு சங்கிலியைப் பிடித்து இழுத்து அத்தனை பெட்டிகள் கொண்ட ரெயிலையும் நிறுத்த முடிவது எப்படி?

    ரெயில் என்ற தொடர் பெட்டிகள், எஞ்சின் என்ற இயந்திரத்தால் இழுக்கப்படுகின்றன. அதை இயக்கும் ஓட்டுநர் எஞ்சின் பெட்டியில் இருப்பார். தொடர் வண்டி சரியான பாதையில் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க கடைசி பெட்டியில் கார்டு எனப்படும் பாதுகாவலர் இருப்பார். ஆனால் இடையிலுள்ள பெட்டிகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, பயணிகளுக்கு அவசரம் ஏற்பட்டாலோ என்ன செய்வது? இதன் காரணமாகத்தான், ஒவ்வொரு பெட்டியிலும் 'எச்சரிக்கை சங்கிலி' வைக்கப்பட்டு இருக்கிறது.

    ஆபத்து நேரங்களிலும், உரிய காரணத்துடனும் ரெயில் நிறுத்தப்படலாம். ஆனால் விளையாட்டுக்காகவோ, காரணமின்றியோ ரெயில் நிறுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படும்.

    சரி, ஒரு சங்கிலியின் மூலமாக ரெயில் எப்படி நின்றுவிடுகிறது?

    'எச்சரிக்கை சங்கிலி' என்பது பேருந்துகளில் உள்ள காற்று பிரேக் போன்றது. இதற்காக எஞ்சினில் வாயு அழுத்தத்தை அதிகரிக்கும் கம்ப்ரெசர் என்ற கருவி இருக்கும். முதன்மை காற்றுக் கொள்கலனுக்குச் செல்லும் காற்றை இந்த கம்ப்ரெசர் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். அந்த கொள்கலனில் இருந்து அனைத்து பெட்டிகளுக்கும் முதன்மை பிரேக் குழாய் செல்லும். ஒவ்வொரு பெட்டியின் கீழும் உள்ள பிரேக்கை கட்டுப்படுத்தும் துணை காற்றுக் கொள்கலன்களுக்கும் இந்த கம்ப்ரெசரே காற்றை அனுப்புகிறது. ஒவ்வொரு பிரேக் கருவியிலும் பிரேக்கை நிறுத்தும் வகையில் அழுத்தப்பட்ட காற்று பிரேக் சிலிண்டருக்குச் செல்வதை, ஒரு சிறிய வால்வு தடுத்துக் கொண்டிருக்கும். இதனால் சக்கரத்தை நிறுத்தும் வேலையை பிரேக் சிலிண்டர்கள் செய்வதில்லை.

    ஆனால் அதேநேரம் ஆபத்து எச்சரிக்கை சங்கிலியை யாராவது பிடித்து இழுத்தால், அது முதன்மை பிரேக் குழாயில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாக, வால்வு பிஸ்டன் திறந்து பிரேக் சிலிண்டருக்குள் அழுத்தப்பட்ட காற்று வரும். இதனால் பிரேக் பிஸ்டன் இழுக்கப்பட்டு சக்கரங்களின் மீது பிரேக் கட்டை அழுத்த, சக்கரங்கள் நின்று விடுகின்றன. ஒட்டுமொத்த ரெயிலும் நின்றுவிடுகிறது.

    உடனடியாக எஞ்சின் ஓட்டுநரும், கார்டும் எந்தப் பெட்டியில் சங்கிலி பிடித்து இழுக்கப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அந்தப் பெட்டிக்கு ஓடி வருவார்கள். ஏன் சங்கிலியைப் பிடித்து இழுத்தார் என்று சம்பந்தப்பட்டவர் விளக்க வேண்டும். இல்லையென்றால், அபராதம்தான்.

    -அருண்நாகலிங்கம்

    • ஒரு ஆண்டில், 4 மாதங்கள் மட்டும் சூரிய எழுகைக்குச் சற்றுமுன் புதன் கீழ்த்திசையில் எழுவதால் அது நம் கண்களுக்குச் சில மணித்துளிகள் மட்டும் தெரியும்.
    • சூரியன் எழுந்து விட்டால் அதன் ஒளி வெள்ளத்தில் புதன் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது. எனவே புதன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை!

    ஒரு ஏழை பொன் (தங்கம்) வாங்க நினைத்தால், அவனால் முடிவதில்லை. காரணம் அவன் வாங்கும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் அதன் விலை. எனவே பொன் அவனுக்குக் கிடைக்காது !

    ஆனால் அவன் விரும்பும் ஒரு செயலை நிறைவேற்றிக் கொள்வதற்கு புதன்கிழமை தான் நல்ல நாள் ; புதன் தான் வேண்டும் என்று நினைத்தால் அவனுக்குப் புதன் கிடைத்துவிடும்.

    அப்படியென்றால் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதற்கு என்ன பொருள் ?

    சூரியக் குடும்பத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று ஏழு கோள்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியும். புதனும் அவற்றில் ஒன்று !

    கோள்கள் சூரியனுக்கு அருகில் வரும்போது அவற்றின் ஒளி (வடிவம்) சூரிய ஒளிக்கு முன் எடுபடுவதில்லை. புதன் 29 பாகைகளுக்கு மேல் விலகிச் செல்வதில்லை என்பதால் அது சூரியனுக்கு அருகிலேயே எப்போதும் இருக்கிறது. எனவே அதன் ஒளி சூரிய ஒளியால் அமுக்கப்பட்டு விடுகிறது. ஆகையால் புதனை நாம் பார்க்க முடிவதில்லை!

    ஒரு ஆண்டில், 4 மாதங்கள் மட்டும் சூரிய எழுகைக்குச் சற்றுமுன் புதன் கீழ்த்திசையில் எழுவதால் அது நம் கண்களுக்குச் சில மணித்துளிகள் மட்டும் தெரியும். சூரியன் எழுந்து விட்டால் அதன் ஒளி வெள்ளத்தில் புதன் மூழ்கடிக்கப்பட்டு விடுகிறது. எனவே புதன் நம் கண்களுக்குத் தெரிவதில்லை!

    ஆண்டின் கடைசி 4 மாதங்களில் சூரிய மறைவுக்குச் சற்றுப் பின்பே புதன் மறைவதால் மேற்றிசையில் ஒருசில மணித் துளிகள் மட்டும் புதன் நமது கண்களுக்குத் தெரியும் !

    ஒரு ஆண்டில் நான்கு மாதங்களுக்குப் புதனைப் பார்க்கவே முடியாது. காரணம் புதனின் உலா சூரியனுடனேயே நிகழ்கிறது; எட்டு மாதங்களில் சில நிமிடங்களுக்கு மட்டுமே பார்க்கலாம். அந்த சில நிமிடங்களிலும் மேகம், பனி, மழை போன்றவை குறுக்கிட்டால் வாய்ப்பிருந்தும் பார்க்க முடியாது !

    இதனால் தான் பணமிருந்தால் பொன் கூட கிடைத்துவிடும். ஆனால் புதன் கிடைப்பது அரிது என்னும் பொருளில் "பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்று நம்முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள் !

    -வை.வேதரெத்தினம்.

    • குரு, சுக்கிரனும் ஒரே வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் இளமையில் காதல் வயப்படுவார்.
    • மீனத்தில் மட்டும் குரு, சுக்கிரனும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. அது குருவுக்கும் ஆட்சி வீடு!

    ஜோதிட சாஸ்திரத்தை பொறுத்தவரை இரண்டு அணிகள் உண்டு!

    குரு பகவான் தலைமையில் உள்ளவர்கள் சூரியன், சந்திரன், செவ்வாய், கேது.

    சுக்கிரன் தலைமையில் இருப்பவர்கள் சனி, புதன், ராகு.

    குரு பகவான் அருளணியை சேர்ந்தவர்!

    சுக்கிரன் பொருளணியை சேர்ந்தவர்!

    குரு, ஞானம், வாக்கு, ஆசிரியர், ஆன்மிகம் போன்ற விசயங்களுக்கு அதிபதி!

    சுக்கிரன் அதற்கு நேர் எதிர் அதாவது சுகபோகம், காமம், காதல், உல்லாசம், ஆடம்பரம், கலை, நாட்டியம், நடனம் இவற்றிற்கு அதிபதி.

    இவர்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொள்ளாது!

    சுக்கிரன் குரு வீட்டில் இருந்தால் குரு ரொம்ப இடைஞ்சல் செய்வார். ஆனால் மீனத்தில் விதிவிலக்கு உண்டு அது சுக்கிரனின் உச்ச வீடு!

    ஆனால் குரு சுக்கிர வீடுகளில் இருந்தால் சுக்கிரன் இடைஞ்சல் செய்ய மாட்டார். ஏனென்றால் குரு எதிரியாக இருந்தாலும் குருபகவான் மேல் சுக்கிரனுக்கு ஒரு மரியாதை இருக்கும்.

    குரு, சுக்கிரனும் ஒரே வீட்டில் இருந்தால் அந்த ஜாதகர் இளமையில் காதல் வயப்படுவார்.

    ஆனால் மீனத்தில் மட்டும் குரு, சுக்கிரனும் ஒன்றாக இருந்தால் பிரச்சனை இல்லை. அது குருவுக்கும் ஆட்சி வீடு!

    - ஜோதிடர் சுப்பிரமணியன்.

    • சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம்.
    • வைணவ வழிபாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

    நம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம் முறையை இப்போது பார்ப்போம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.

    1. ஏலம்,

    2. இலவங்கம்,

    3. வால்மிளகு,

    4. ஜாதிப்பத்திரி,

    5. பச்சைக் கற்பூரம்

    இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கும் சேர்க்கவும்.

    முதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டிலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.

    இந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீரில் கலந்து முதல் நாள் இரவு வைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.

    இதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழிபாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.

    இருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும். இரத்தம் பெருகும் .

    இது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும்.

    -அகரமுதல்வன்

    • காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே ‘இழந்த காதல்’ என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.
    • திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி.. எம்.ஆர்.ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார்.

    நடிகவேள் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றிலேயே ஒப்பிட முடியாத தனித்துவம் மிக்க தைரியக்கலைஞன். அவர் வெறுமனே நடிப்பால் பெயர் பெற்றவரல்லர். கலகங்களை நிகழ்த்திய துணிச்சலாலும் தான் நம்பிய கொள்கைகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட நேர்மைக்காகவும் பெயர் பெற்றவர். கதாநாயகர்கள் தொடங்கி தயாரிப்பாளர்கள் வரைக்கும் யாருக்கும் பயப்படாதவர்; பணிந்து போகாதவர். அவரை எந்த நடிகரோடும் ஒப்பிடவே முடியாது.

    தான் நடித்த எந்தப் படத்தின் வெற்றி விழாக்களிலும் அவர் கலந்துகொள்ளவில்லை. காரணம் கேட்டால் 'வியாபார ரீதியாக வசூலைக்குவித்த படங்களுக்கே விழா கொண்டாடப்படுகிறதே தவிர, நன்றாக நடித்திருக்கிறோம் என்று விழா கொண்டாடப்படுவதில்லையே' என்றார்.

    1966 -இல் தமிழக அரசின் சார்பில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு ராதா தேர்ந்தெடுக்கப்பட்டு கவர்னர் பரிசளிப்பதாய் இருந்தது. ஆனால், 'மொழி தெரியாத கவர்னர் என் படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனவே, விருது வாங்கமாட்டேன்' என்று மறுத்துவிட்டார் ராதா.

    நாடகத்தில் போலீஸ் வருவதுபோல காட்சி இருக்கும். அப்போது ராதா உடன் நடிப்பவர் பயப்படுவதுபோல நடிப்பார். உடனே ராதா வசனம் பேசுவார். 'ஏன்டா பயப்படுறே? போலீஸ்னா என்ன பெரிய கொம்பா? (ரசிகர்களைப் பார்த்து கைநீட்டி) எல்லாம் ஓசி டிக்கெட்ல முன்னாடி உட்கார்ந்திருக்கான் பாரு. காசு கொடுத்தவன்லாம் பின்னாடி உட்கார்ந்திருக்கான்' ராதாவின் இந்த நக்கல் தாங்காமல், ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள் எழுந்து செல்வதும் உண்டு.

    அப்போதைய அரசு ராதாவின் நாடகங்களைக் கண்காணித்து ரிப்போர்ட் அளிக்குமாறு சிஐடிகளை அனுப்பியது. அவர்களும் நாடகம் ஆரம்பிக்கும் முன்னரே முதல் வரிசையில் வந்து குறிப்பெடுக்க அமர்ந்தார்கள். "எவன்டா அவன்? கவர்மெண்ட் ஆளு மாதிரி தெரியுது. போய் டிக்கெட்டு வாங்கியாரச் சொல்லு. முன்வரிசை டிக்கெட்15 ரூபாய்" தன் மேனேஜரிடம் சொல்லி அனுப்பினார் ராதா. அவரும் சிஐடிக்களிடம் சொன்னார். அவர்களும் டிக்கெட் வாங்கி வந்து பின் நாடகம் பார்த்தனர்.

    மறுநாள் கமிஷனர் அருள் ராதாவைக் கூப்பிட்டு அனுப்பினார். அவர் மிகவும் கண்டிப்பானவர். டிபார்ட்மெண்ட்டே அவரைப்பார்த்து தொடை நடுங்கிய காலம் அது. "நாடகத்துக்கு வந்த சிஐடிக்களை 15 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு வர சொன்னீங்களா?"

    " ஐயா நீங்க தப்பா நினைக்கக் கூடாது. சர்க்காருக்குப் புரியணும். நாங்க கலைஞர்கள். நாங்க பண்றது வியாபாரம். அந்த ஸ்தலத்திற்கு யார் வந்து உட்கார்ந்தாலும் காசு கொடுத்துத்தான் ஆகணும்"

    கமிஷனருக்கு ராதாவின் வாதம் நியாயமாகப்பட்டது. அன்றும் நாடகம் நடந்தது. இரண்டு சிஐடிகள் வந்தார்கள். முன்வரிசை டிக்கெட்டை 100 ரூபாய் ஆக உயர்த்தினார் ராதா. 200 ரூபாய் கொடுத்த பின்பே அவர்கள் உள்ளே நுழைய அனுமதித்தார் ராதா.

    குமாரபாளையத்தில் அப்போது நாடகம் நடந்துகொண்டிருந்தது. மேக்கப் ரூமில் இருந்த ராதாவிடம் மேலாளர் வேக வேகமாக ஓடி வந்தார். அவருக்கு மூச்சு வாங்கியது.

    " பெரியார் வந்திருக்கார். கூடவே அண்ணாவும் ஈவிகே சம்பத்தும் வந்திருக்காங்க"

    " எதுக்கு?"

    " நாடகம் பார்க்கத்தான்"

    " பார்த்துட்டுப் போகட்டும்"

    " உட்கார வைக்க இடம் இல்லையே"

    " அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்ற? இஷ்டம் இருந்தா தரையில் உட்கார்ந்து பார்க்கட்டும். இல்லைன்னா போகட்டும்"

    " இல்ல அவங்க ரொம்பப் பெரியவங்க.." "என்னை விடப் பெரியவங்களா வேற யாரையும் நான் நினைத்துக்கூட பார்க்கறதில்லை"

    மேனேஜருக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்த பெரியார், அண்ணா, சம்பத் மூவரும் தரையில் அமர்ந்தே 'இழந்த காதல்' என்ற அந்த நாடகத்தை ரசித்தனர்.

    இடைவேளை நேரம்... மேடையேறினார் அண்ணா... "அழையா வீட்டில் நுழையா சம்பந்திகள் போல நாங்கள் வந்துள்ளோம். திராவிடர் கழக மாநாடுகள் நூறு நடத்துவதும் சரி.. எம்.ஆர்.ராதா நாடகம் ஒன்னு நடத்துறதும் சரி" என்று பாராட்டிப் பேசிவிட்டு அமர்ந்தார். ராதாவுக்கு மகிழ்ச்சி. நாடகத்தை முழுதாகப் பார்த்து விட்டே அவர்கள் கிளம்பினார்கள்.

    -அம்ரா பாண்டியன்

    • கொல்லிமலை 16 நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான்.
    • கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காபி, மிளகு, அன்னாசி பழங்கள். கொல்லிமலையில் விளையும் மிளகு இந்திய அளவில் தரமிக்கது.

    கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த வளமான மலை நாடு கொல்லிமலை.

    2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்து புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புடைய கொல்லிமலையில் குளுமையான சீதோஷண நிலை, பச்சைபசேல் என வயல்வெளி, காய்த்து குலுங்கும் பலாப்பழம், வாழை, அன்னாசி, குட்டிகுட்டி நீரோடைகள், காண துடிக்கும் சிறிய அருவிகள் போன்றவை கொல்லிமலையின் அடையாளங்கள். மலைப்பகுதியில் சிதறி கிடைக்கும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ்மக்கள் வசித்து வருகின்றனர்.

    கொல்லிமலை 16 நாட்டில் உள்ள மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் விவசாயம்தான். என்னதான் வீரிய ஒட்டுரகங்கள், மரபணு மாற்று விதைகள் என்று நவீன விவசாயம் ஆட்டிப்படைக்கும் சூழலில், இங்குள்ள மக்கள். கேழ்வரகு, தினை, சமை ஆகிய இந்த 3 சிறுதானியங்களை பல நூறு வருடங்களாக பல நூறு ஏக்கரில் பயிரிட்டு வருகிறார்கள்.

    பாரம்பரிய விவசாயத்தை கைவிடாமல் 'பழமைப்புரட்சி' செய்து வருகிறார்கள் இந்த மக்கள். ஏரு பிடிப்பது, பாத்தி அமைப்பது, விதைப்பது, அறுப்பது, மாடுகளை வைத்து தம்பு அடிப்பது, தூற்றுவது, மூட்டை பிடிப்பது, வீடு கொண்டு வருவது என்று அனைத்து விவசாயப் பணிகளையும் மனிதர்களும், மாடுகளுமே பார்த்து கொள்கின்றனர்.

    கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காபி, மிளகு, அன்னாசி பழங்கள். கொல்லிமலையில் விளையும் மிளகு இந்திய அளவில் தரமிக்கது. இங்கு சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் காபி, மிளகுகள் பயிரிடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் மிளகு அறுவடை சீசன் மே மாதம் தொடங்கும்.

    இதேபோல் காபி சீசனும் மே, ஜீன் மாதங்களில் தொடங்கும். கொல்லிமலையில் விளையும் காபி மிகவும் சுவை மிக்கது. காபி சீசனில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்ய கொல்லிமலைக்கு வந்து குவிகின்றனர். கொல்லிமலையின் மற்றொரு சிறப்பு காய்த்து தொங்கும் அன்னாசி மற்றும் பலாப்பழ வகைகள், குறிப்பாக இங்கு விளையும் அன்னாசி பழங்கள் ருசியானது.

    சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் அன்னாசி பழங்கள் விளைவிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு கொல்லி மலையில் இருந்துதான் அன்னாசி பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அன்னாசி பழங்களை வாங்கி சுவைக்க மறப்பதில்லை. இதேபோல், கொல்லிமலை பலாப்பழங்களும் சுவைமிக்கது.

    கொல்லிமலை கிராமங்களில், சீத்தாப்பழ மரங்கள் உள்ளன. மலைவாழ் மக்களிடம் இருந்து பழங்களை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி, தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள ஊா்களில் விற்பனை செய்கின்றனா். கொல்லிமலை சீத்தாப்பழங்கள் சுவைமிகுந்தவை என்பதால், பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. கொல்லிமலையின் ஆலத்தூர், ஆரியூர் மற்றும் வேள்ப்பூர் கிராமத்தில் அதிகளவில் அன்னாசி பழங்கள் விளைகின்றன.

    இந்த புல் ஒன்றை பிடுங்கி தீயில் பற்றவைக்க மெழுகுவர்த்தி போல விடிய விடிய சுடர் விட்டு வெளிச்சம் தருமாம். இன்றும் இந்த மலையில் உள்ள குகைகளில் தங்கியிருக்கும் சித்தர்கள் பலர் இரவு நேர வெளிச்சம் கொடுப்பது இந்த ஜோதிப்புல் தானாம்.

    இதேபோல், ரோம விருட்சம் என்கிற மரத்தின் இலைகளை அரைத்து 45 நாட்கள் தலையில் தேய்த்து, கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை அருவியில் குளித்துவர தலைமுடி உதிர்வது உடனே நின்று, கருகரு முடியை பெறலாமாம். இந்த இலையின் சாற்றை தவறியும் கை, கால் உள்ளிட்ட உடம்பின் வேறு பகுதியில் தேய்த்து குளிக்கக்கூடாது, அந்த சாறுபட்ட இடங்களில் முடிவளர தொடங்கி விடுமாம்.

    கொல்லிமலையில் உள்ள அடர் வனங்களில் இயற்கையில் விளையும் ஒரு வாழைதான் கால் வாழை, இதன் பழத்தை 2 மண்டலம் (90 நாட்கள்) சாப்பிட்டு வர, பெருத்த தேகம் கொண்டோர் இளைத்து சராசரியான தேகத்தை பெறுவார்கள் என கூறுகின்றனர்.

    இந்த மூலிகை செடியின் இலையை கிள்ளினால் அதில் ஒருவித பால் கசியும், அந்தப்பாலுடன் கரும்பூனையின் முடி, இவைகளுடன் கலந்து செம்பு பாத்திரத்தில் ஊற்றி, சூடு செய்து சுண்டவைத்து, அதை மலைத்தேன் கொண்டு பிசைந்து, சிறு உருண்டையாக்கி, அதை செப்பு தகடு எந்திரத்தினுள் இட்டு மூடி, அதை வாயினுள் போட்டு அதக்கி, மறைய நினைக்க யார் கண்ணுக்கும் தெரியாமல் மனிதர்களை மாயமாக மறையச்செய்யும் அபூர்வ மூலிகைதான் ஆதளம். இந்த அபூர்வ மூலிகையின் சக்தியினால்தான் இன்றளவும் பல சித்தர்கள் யார் கண்ணுக்கும் புலப்படாமல் வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது. ஆக, இதுபோன்ற அபூர்வ மூலிகைகள் ரகசியங்கள் சொல்லத் தீராது.

    இங்கு விளையும் கொல்லிமலை சீனிமிளகாய் மானாவாரியில் இங்கு மட்டும்தான் விளைகிறது. மருத்துவக்குணம் கொண்ட வல்லாரை உள்பட கொல்லிமலையில ஏராளமான மூலிகைச்செடிகள் இயற்கையாக விளைகின்றன. பெயர் தெரியாத அநேக அரியவகை மூலிகைகளும் இங்கு உள்ளன.

    கொல்லிமலையின் மேல் உள்ள மணப்பாறை நாடு, விரவனூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக நாவல் மரங்கள் உள்ளன. மற்ற பகுதி நாவல் பழங்களை விட கொல்லிமலையில் மூலிகை தண்ணீரில் விளைகின்ற நாவல் பழங்கள் சுவை மிகுதியாக இருக்கும். நாவல் கொட்டைகள் சர்க்கரை நோய்க்கு சிறந்தது என்பதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    அபூர்வ மூலிகைகளும், ஆரோக்கியமான காற்றும், மாசில்லா தண்ணீரும், நோய் எதிர்ப்பு ஆற்றலும், பலமும் கொடுக்கும் சிறுதானியங்களும் கொண்டதுதான் கொல்லிமலை... அதன் ரகசியமும் இதுதான். ஆயுளைக்கூட்ட ஒரு முறை அந்த அதிசய மலைக்கு போய்வரலாமே...

    ×