என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • பல்வேறு கருத்துக்கள் குறித்தும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்க உள்ளதாக சங்கத்தினுடைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    • சங்கம் மூலமாக 23 டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய அங்கமான சமூக முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு அணிகளின் சார்பில் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் தொடர் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக இன்று பாட்டாளி மக்கள் கட்சி உருவாவதற்கு காரணமான சமூக முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்கத்தின் மாநில தலைவர் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சங்கத்தின் வருங்கால செயல் திட்டங்கள் மற்றும் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களுக்கு பாராட்டு விழாக்கள், சமீபத்தில் அரசு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் குறித்தும் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்க உள்ளதாக சங்கத்தினுடைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இந்த சங்கம் மூலமாக 23 டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சகாய செல்வம், சிவக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் போதை புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு உரிய நடவடிக்கைகளை மாவட்ட எஸ்.பி சரவணன் மேற்கொண்டு வருகிறார்.

    இதனையடுத்து ஏ.எஸ்.பி. ரவீந்திர குமார் மேற்பார்வையில், வளவனூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் மற்றும் போலீசார் வளவனூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றதா என்று சோதனை செய்தனர்.

    இந்நிலையில் பகண்டை சாலையில் சகாய செல்வம் (வயது 34) என்பவரின் பெட்டிக்கடையை சோதனை செய்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 24 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சகாய செல்வத்தை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் புதுச்சேரி மாநிலம் கொத்தம்புரி நத்தம் கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்பவரிடம் இருந்து வாங்கியதாக கொடுத்த தகவலின் பேரில் சிவகுமார் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டதில் சுமார் 110 கிலோ எடை கொண்ட புகையிலை, குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து புகையிலை பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சகாய செல்வம், சிவக்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • காரை சோதனை செய்ததில் அதில் 864 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையை ஒட்டி திண்டிவனம் அருகே உள்ள ஆத்தூர் டோல்கேட் அருகே விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன் , சப்-இன்ஸ்பெக்டர் ஹினாயத் பாஷா,மற்றும் போலீசார் அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முற்பட்டனர் அப்பொழுது போலீசாரை இடிப்பது போல வேகமாக சென்ற காரை ஆத்தூர் டோல்கேட்டில் பேரிகார்டு வைத்து மடக்கினார்கள்.

    காரை சோதனை செய்ததில் அதில் 864 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதுவையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில்கள் கடத்திய புதுவை ரெயின்போ நகரை சேர்ந்த கமல் என்கின்ற கமலநாதன் (45)புதுவை டி.வி.நகரை சேர்ந்த பாலாஜி (34)ஆகியோரை கைது செய்து மது பாட்டில்கள், காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமூக நீதியை இந்திய அளவில் பேச என்னை விட்டால் வேறு யாரும் இல்லை.
    • நான் எப்போதும் இனிப்பான செய்தியை மட்டும் தான் சொல்லுவேன்.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வன்னியர் சமுதாயத்தில் கையெழுத்து போட தெரியாமல் இருந்த நிலையில் அவர்களை ஆயிரம் வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் உருவாக்கி உள்ளோம். இவர்கள் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள், நிறைய நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருந்து மேலவை நீதிமன்றம் வரைக்கும் உருவாகியுள்ளார்கள். என்னுடைய உழைப்பால் என்னுடைய போராட்டத்தால் அனைவரும் பயன்பெற்றுள்ளனர்.

    சமூக நீதியை இந்திய அளவில் பேச என்னை விட்டால் வேறு யாரும் இல்லை. நான் ஒருவன் தான் அதைப்பற்றி பேச முடியும். வேறு யாரும் பேச முடியாது, தெரியாது. மிகப் பிற்படுத்தப்பட்ட இந்த சமுதாயம் படித்துக் கொண்டிருக்கிறது. படித்து வக்கீலாக வந்து கொண்டிருக்கிறார்கள். வக்கீல் சங்கங்களுக்கு ஊடகங்களின் ஆதரவு தேவை நீங்கள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம். நீதித்துறையில் இட ஒதுக்கீடு வேண்டும். நீதிமன்றங்களில் சமூக நீதி இல்லை, உயர் நீதிமன்றத்தில் சமூக நீதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் அன்புமணி ராமதாஸ் தங்களை சந்திக்க வாய்ப்புள்ளதா என கேட்டபோது வருவார். விரைவில் தன்னை வந்து சந்திப்பார். இருவருக்கும் இடையே மனகசப்பு இல்லை. நான் எப்போதும் இனிப்பான செய்தியை மட்டும் தான் சொல்லுவேன். நான் தொடர்ந்து நிருபர்கள் சந்திப்பில் இனிப்பான செய்திகளை மட்டும் தான் சொல்லுவேன். டாக்டராக இருந்தாலும் இனிப்பான மருந்து தான் கொடுப்பேன். கசப்பான மருந்தை கொடுக்க மாட்டேன். திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுப்பிரமணிய அய்யர் சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையவில்லை என்று சொன்னார். ஆனால் சிங்கத்தின் கால்கள் பழுதடையவில்லை, சீற்றமும் குறையவில்லை என டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

    • பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.வின் பல்வேறு அணி நிர்வாகிகளின் கூட்டத்தை டாக்டர் ராமதாஸ் கூட்டினார்.

    இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மகளிரணி, இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொள்ளவில்லை.

    ஆனால் நேற்றுமுன்தினம் நடந்த வன்னியர் சங்க வடக்கு மண்டல மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் 62 பேரில் 55 பேர் கலந்து கொண்டனர். மற்ற நிர்வாகிகள் 310 பேரில் 200 பேர் வரை பங்கேற்றதால் ராமதாஸ் உற்சாகம் அடைந்தார்.

    3 நாட்கள் நடைபெற்ற கூட்டங்களையும் அன்புமணி புறக்கணித்தார். கட்சியை தனது கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்த நிலையில் வன்னியர் சங்கம் ராமதாசுக்கு ஆதரவாக நின்றதால் பா.ம.க.வை முழுமையாக தன் வசமாக்கும் அன்புமணியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இந்த நிலையில் நேற்று டாக்டர் ராமதாஸ் எந்த நிர்வாகிகள் கூட்டத்தையும் கூட்டாமல் தோட்டத்தில் ஓய்வெடுத்தார்.

    இந்த நிலையில் இன்று பா.ம.க. சமூக நீதிப் பேரவையின் வக்கீல் பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இக்கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பப்பட்டு இருந்தது. டாக்டர் அன்புமணி, சமூக நீதி பேரவை தலைவர் வக்கீல் பாலு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், பா.ம.க. சமூக நீதி பேரவை நிர்வாகிகளுடன் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என டாக்டர் ராமதாஸ் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத்தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும்போது:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விரைவில் சந்திப்பார்கள். 3 நாள் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. இருவரும் ஒன்று கூடி செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றார்.

    அவரிடம் ஏற்கனவே நடைபெற்ற 3 கூட்டங்களிலும் மாநில பொருளாளர் திலகபாமா, எம்.எல்.ஏ.க்கள் மயிலம் சிவக்குமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனரே என கேட்ட போது அவர்களும் வருகிற கூட்டத்திற்கு வருவார்கள், வருவார்கள் என 2 முறை அழுத்தமாக தெரிவித்தார். 

    • 3-வது நாள் கூட்டத்தில் டாக்டர் அன்புமணி பங்கேற்கவில்லை.
    • பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க. சார்பில் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. மாநில இளைஞரணி தலைவராக தனது பேரன் பரசுராமன் முகுந்தனை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அக் கட்சியின் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இருவருக்கும் மேடையிலே மோதல் வெடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் பா.ம.க. தலைவராக நானே செயல்படுவேன். அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார் என அறிவித்தார். இந்த அறிவிப்பு அண்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மாமல்லபுரம் அருகே பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் செயல்கள் குறித்து கடுமையாக எச்சரித்து பேசினார்.

    கட்சிக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் உழைக்காவிட்டால் யாராக இருந்தாலும் பதவி பறிக்கப்படும். அது எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் சரி என்று கூறினார்.

    மேலும் கட்சியில் நான் தான். நான் இருக்கும் வரை நான் எடுப்பது தான் முடிவு என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு மீண்டும் அன்புமணி ஆதரவாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இதில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் பங்கேற்கவில்லை.

    2-வது நாளாக பா.ம.க. மகளிரணி, இளைஞர் அணி, மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓரளவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 3-வது நாளாக பா.ம.க. வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

    3-வது நாள் கூட்டத்திலும் டாக்டர் அன்புமணி பங்கேற்கவில்லை. அவர் கூட்டத்தை புறக்கணித்தார். மேலும் மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., பா.ம.க.பொருளாளர் திலகபாமா, சதாசிவம் எம்.எல்.ஏ. ஆகியோரும் 3 நாள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்கள் அன்புமணியின் தீவிர ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி நிருபர்களிடம் கூறும்போது,

    டாக்டர் ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்தித்து பேசுவார்கள். சுமூக முடிவு ஏற்படும். இந்த சலசலப்பு விரைவில் தீரும் என்றார்.

    மேலும் பா.ம.க. முக்கிய நிர்வாகிகள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி இடையே சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே விரைவில் அன்புமணி சமரசம் ஆவார் என பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதற்கிடையே பா.ம.க. சமூக ஊடக பேரவை, மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கி ஆலோசனை வழங்குகிறார். இந்த கூட்டத்தில் அன்புமணி பங்கேற்பாரா? என பா.ம.க. நிர்வாகிகள் தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ராமதாசும் அன்புமணியும் விரைவில் ஒன்று சேர வேண்டும் என்பதே பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் கூட்டேரிப்பட்டு அருகே பந்தமங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாலையன் (வயது 50) அரசு பஸ் டிரைவர்.இவர் திருவக்கரையிலிருந்து திண்டிவனம் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் டிரைவர் நெடுஞ்சாலையில் திடீரென்று நிறுத்தி பயணிகளை ஏற்றியுள்ளார்.

    அப்போது கேரள மாநிலம் கொச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ்சில் பயணம் செய்த கூட்டேரிப்பட்டை சேர்ந்த முனுசாமி மனைவி கவுரி( 42) உட்பட 32 பேர் காயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது.
    • எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

    திண்டிவனம்:

    வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுக்காவிடில் கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம். கடுமையான போராட்டங்கள் நடைபெறாமல் இருப்பது தமிழக அரசின் கைககளில் தான் உள்ளது என்று வன்னியர் சங்க நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

    இதையடுத்து, தைலாபுரம் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பா.ம.க. தொடர்பாக வதந்தி பரப்பப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், வதந்தி வேண்டாம். எப்போதும் போல் நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம் என்றார். 

    • டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
    • பா.ம.க. மகளிர் அணி தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் ஆகியோர் கூட்டத்திற்கு வந்தனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று பா.மக. மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இதில் பல்வேறு கட்சிப் பணிகள் குறித்து டாக்டர் ராமதாஸ் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ் 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே வெற்றி பெறுவது எப்படி என பா.ம.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினேன் என்றார். இந்த கூட்டத்தில் பா.மக. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, பா.மக. எம்.எல்ஏ. சேலம் அருள், பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் போன்ற முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து டாக்டர் ராமதாசிடம் கேட்ட போது, அவருக்கு அழைப்பு கொடுத்துள்ளோம். வரலாம். வந்து கொண்டிருக்கலாம் என பதில் அளித்தார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

    இந்த நிலையில் பா.ம.க. மாணவரணி, மகளிர் அணி, இளைஞரணி முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இக்கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. மகளிர் அணி தலைவர் சுஜாதா, மாநில செயலாளர் ஆகியோர் வந்தனர். மேலும் விழுப்புரம் பாராளுமன்ற வேட்பாளராக தேர்தலில் நின்ற மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்துள்ளார்.

    கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி வந்தவுடன் கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 2026 சட்ட மன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பான ஆலோசனையை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வழங்கினார்.

    • வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர்.

    தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்தில் உள்ள செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதிய 167 மாணவ-மாணவிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 பேர், செஞ்சி தனியார் பள்ளி தேர்வு மையத்தில் 35 பேர், அனந்தபுரம் அரசு பள்ளியில் 11 பேர், அவலூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் 14 பேர், சத்தியமங்கலம் அரசு பள்ளியில் 7 பேர் என மொத்தம் 251 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதுவரை இப்படிப்பட்ட தேர்ச்சி கிடைத்தது இல்லை. அதுவும் செஞ்சி அரசு பெண்கள் பள்ளியில் தேர்வு எழுதியவர்களில் 167 பேர் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பது ஆசிரியர்கள், மற்ற மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கண்ட தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பியடிக்க ஆசிரியர்கள் உதவி செய்திருக்க வேண்டும் அல்லது முன்கூட்டியே வினாத்தாள் கசிந்து மாணவர்களுக்கு விடைகள் தயார் செய்து வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், இந்த முறைகேடுக்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் எழுந்துள்ளது.

    இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன் மறுப்பு தெரிவித்து கூறியதாவது:-

    செஞ்சி அரசு பெண்கள் பள்ளி தேர்வு மையத்தில் 3 பள்ளிகளை சேர்ந்த 414 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் செஞ்சி அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் 65 பேர், தனியார் பள்ளியை சேர்ந்த 148 மாணவர்களில் 91 பேர், மற்றொரு தனியார் பள்ளியை சேர்ந்த 138 பேரில் 11 பேர் என மொத்தம் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். மாதந்தோறும் பள்ளி அளவில் குறுந்தேர்வு நடத்தி ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளனர். இதனால் கடந்த அரையாண்டு தேர்விலும் அம்மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    மாநில அளவில் 3,181 மாணவ-மாணவிகள் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வேதியியல் பாடத்தில் வினாக்கள் மிகவும் எளிதாக கேட்கப்பட்டிருந்ததாக பெரும்பாலான மாணவ-மாணவிகள் கூறியிருந்தனர். அனைத்து தேர்வு மையங்களிலும் பறக்கும்படை குழுவினர் தீவிரமாக கண்காணித்தனர். வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த மையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆகவே தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை, முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பும் இல்லை என்று அவர் கூறி இருந்தார்.

    இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில்,

    தேர்வின்போது காப்பியடித்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை, மாணவர்கள் நன்கு படித்து புரிந்து விடைகளை திறம்பட எழுதியுள்ளனர் என்று கூறி உள்ளனர்.

    இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,

    அந்தப் பள்ளியில் மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற சிறப்பான பயிற்சி முறை காரணம் என்றால், அதை அறிந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கொண்டு சேர்ப்போம் என கூறி உள்ளார்.

    • பா.ம.க.வில் விரைவில் சுமூக சூழல் திரும்பும்.
    • பா.ம.க.விற்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்.

    தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அப்போது பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம், கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில்,

    இந்த கூட்டத்துக்கு கட்சியின் செயல் தலைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    கட்சிக்குள் அப்பா, மகன் என்ற கோஷ்டி பிரச்சனை ஏதுமில்லை. சட்டசபை தேர்தலில் நிச்சயமாக கூட்டணி உண்டு. 10.5 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு கடுமையான போராட்டம் நடத்துவோம்.

    சிங்கத்தின் கால்கள் பழுதுபடவும் இல்லை, சீற்றம் அதிகமாகி கொண்டு இருக்கிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற அந்த எண்ணம் அதிகமாகி கொண்டுதான் உள்ளது என்று கூறினார்.

    இதையடுத்து பா.ம.க.வில் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் முற்றுவதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தந்தை - மகனிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்துகிறேன்.

    * பா.ம.க.வில் விரைவில் சுமூக சூழல் திரும்பும்.

    * நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக முழு முயற்சி எடுத்து வருகிறேன்.

    * பா.ம.க.விற்கு நான் ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டேன்.

    * விரைவில் ராமதாஸ் - அன்புமணி இருவரும் சந்திப்பார்கள்.

    * நேற்று இரவு முழுவதும் ராமதாசுடன் பேசி கொண்டிருந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம் என ஜி.கே.மணி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    • பா.ம.க. நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன்.
    • செயல்தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    திண்டிவனம் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பா.ம.க.வுக்கு 92 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிருஷ்ணகிரி, கோவை, திருப்பூர் உள்பட 10 மாவட்ட முக்கிய தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மட்டும் கலந்து கொண்டு உள்ளனர். மற்ற மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை.

    இதனால் பெரும்பாலான பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமதாஸ் ஏற்பாட செய்த இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இது பா.ம.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தநிலையில் கூட்டத்திற்கு முன்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

    * அனைத்து தொகுதிகளிலும் படுத்துக்கொண்டே ஜெயிக்கும் வித்தையை நான் சொல்லிக் கொடுக்கப்போகிறேன்.

    * பா.ம.க. நிர்வாகிகள் கூறும் யோசனைகளையும் இன்று நான் கேட்க உள்ளேன்.

    * செயல்தலைவர் அன்புமணி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்.

    * செயல்தலைவர் அன்புமணிக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    * 50 தொகுதிகளில் இலகுவாக வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை வழங்க உள்ளேன்.

    * 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கோடு செயல்பட ஆலோசனை வழங்க உள்ளேன்.

    * சிங்கத்தின் கால்கல் பழுதுபடவில்லை, சீற்றமும் குறையவில்லை.

    * களைப்படைந்ததால் சிலர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்.

    * சித்திரை மாநாட்டு பணியால் சிலர் களைப்படைந்திருக்கலாம், அதனால் கூட்டத்திற்கு வராமல் இருக்கலாம்.

    * கூட்டத்திற்கு வராதவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×