என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் சைதாப்பேட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் செய்ய முயற்சி செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

    வேலூர் சைதாப்பேட்டை மெயின் பஜாரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. கால்வாய் அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் கிடப்பில் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    மெயின் பஜார் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் லாங்கு பஜார் தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் உள்ளிட்டோர் சென்று வருகின்றனர். கால்வாய் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மெயின் பஜாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றிவிட்டு விரைந்து கால்வாய் பணி அமைக்க வேண்டும் என கோரி மறியலில் ஈடுபட முயன்றனர். 

    இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட முயன்றவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சைதாப்பேட்டையில்  பரபரப்பு ஏற்பட்டது.
    பா.ஜ.க.வால் மட்டுமே ஊழல் இல்லாத ஆட்சி தர முடியும் என வேலூரில் அண்ணாமலை பேச்சு
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூர் மண்டி தெருவில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

    தமிழகத்தில் ஊழல் இல்லாத நிர்வாகம் அமைய நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 517 வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் 7 வாக்குறுதிகளை கூட அவரால் முழுமையாக நிறைவேற்றமுடியவில்லை.

    அண்மையில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பொருட்களில் ஒன்று கூட தரமான பொருட்கள் வழங்கப்படவில்லை. இதனால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    மஞ்சள் தூளுக்கு பதிலாக மரத்தூளையும், மிளகுக்கு பதிலாக பருத்தி கொட்டையையும் கொடுத்தனர். வெல்லத்தை பக்கெட்டில் கொண்டு சென்றனர். சில இடங்களில் பொங்கல் தொகுப்பில் பல்லி போன்றவை இருந்தது.

    தமிழகத்தின் 8 மாத கால ஆட்சியில் மக்களுக்கான எந்தவித திட்டமும் கொண்டு வரப்படவில்லை.

    நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதன் மூலம் தற்போது அரசு பள்ளியில் பயின்ற 541 மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். 

    அரசு நிர்ணயித்த கட்டணங்களை கூட கட்டமுடியாத நிலையில் பல மாணவர்கள் உள்ளனர். இவர்கள் எல்லாம் தற்போது மருத்துவ கல்வி பயில காரணமாக இருப்பது நீட்தேர்வு தான். நீட் தேர்வு இல்லாத காலத்தில் மருத்துவக் கல்வி பயில பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. 

    அவை எல்லாம் தற்போது களையப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நீட் தேர்வை எதிர்க்கிறார்கள். தனியார் கல்லூரியின் கல்விக்கொள்கையை நீட் உடைத்துள்ளது.

    கொரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதற்காக, பிரதமர் மோடி மக்களின் உயிர்களை காப்பாற்ற நாடு முழுவதும் 450 ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார்.

    உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்திருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன் மூலம் 172 கோடி தடுப்பூசி டோஸ் செலுத்தப் பட்டுள்ளது.

    கிருஷ்ணா, கோதாவரி, தென்பெண்ணை ஆறுகளை இணைக்க ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது.

    2024-ல் எம்.பி. தேர்தலும், எம்.எல்.ஏ. தேர்தலும் ஒன்றாக வரும் என்று கூறுகிறார்கள். இது தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்கிறது என்பதைப் பொருத்துத்தான் அமையும்.

    வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகி உள்ளது. ஊழலின் காரணமாக இந்த திட்டம் நிறைவேற்ற பல ஆண்டுகள் ஆகியுள்ளது. இன்னும் கூட அந்த திட்டம் முடியவில்லை.

    எனவே இது போன்ற ஊழல் இல்லாத ஆட்சி தர பா.ஜ.க.வில் மட்டுமே தான் முடியும். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். மக்களின் வாழ்க்கையும் மேம்படும். தமிழகத்தில் பா.ஜ.க மட்டுமே மாற்றுக்கட்சியாகும். மக்களுக்கு மாற்றத்தை தரும் கட்சியாகும்.

    தி.மு.க. மீது மக்களுடைய கோபம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொண்டதால் நேரிடையாக பிரசாரம் செய்யாமல் காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்கிறார். வேலூரிலும் வாரிசு அரசியல் உள்ளது.

    ஹெலிகாப்டரில் இருந்து வெடிகுண்டு போட்டாலும் கொள்கை நிலைப்பாட்டில் இருந்து மாறமாட்டோம்.  இவ்வாறு அவர் பேசினார். 

    கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    காட்பாடி அருகே கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவியை மீட்க வாலிபரின் குடும்பத்தினரை கடத்த முயற்சி செய்த சென்னையை சேர்ந்த 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி&குடியாத்தம் சாலையில் கிளித்தான்பட்டரை அருகேயுள்ள கடை ஒன்றில் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய ஒரு கும்பல் ரகசிய திட்டம் தீட்டி வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

    அதன்பேரில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான குழுவினர் அங்கு விரைந்து சென்று 4 பேர் கும்பலை சுற்றிவளைத்தனர்.

    அந்த நேரத்தில் கடைக்கு வெளியே நின்றிருந்த சென்னை பதிவெண் கொண்ட கார் ஒன்று அங்கிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் குடியாத்தம் நோக்கி வேகமாக சென்றது.

    இதைப்பார்த்த போலீசார் அந்த காரை விரட்டிச் சென்றனர். அந்த கார் எல்.ஜி புதூர் அருகே சென்றதும் சாலையோரத்தில் நின்றது. 

    காரில் இருந்த 2 பேர் இறங்கி ஊருக்குள் தப்பி ஓடினர். அவர்களை விரட்டியதில் ஒருவரை மட்டும் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

    பிடிபட்ட 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவர்களில் எல்ஜி புதூர் கிராமத்தில் சிக்கியவர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த இம்ரான் என்றும் மற்றவர்கள் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்த பாஷா (25), மணலியை சேர்ந்த அசோக் (39), ராயபுரத்தைச் சேர்ந்த மாதவன் (27), எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிபாலன் (26) என்றும் தெரியவந்தது.

    இதில், இம்ரான் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு பேரணாம்பட்டில் காரில் சென்றபோது விபத்தை ஏற்படுத்தியதும், அப்போது அந்த காரில் இருந்து பாஜக கொடி, வாள் மற்றும் கையெறி குண்டு போன்ற சிகரெட் லைட்டர் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருந்தனர்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் பிரபல ரவுடி ஒருவரின் மனைவியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். அவர்கள் தலைமறைவாக உள்ளனர். 

    அந்தப் பெண்ணை மீட்பதற்காக வாலிபரின் குடும்பத்தினரை இந்த கும்பல் கடத்தி மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேரணாம்பட்டு வாக்கு எண்ணும் மையத்தை மாற்றியமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    குடியாத்தம்:

    பேர்ணாம்பட்டு நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையத்தை பழைய நடைமுறைப்படி நகரின் மையப்பகுதியில் உள்ள பள்ளியிலேயே அமைக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின. 

    பேரணாம்பட்டு நகராட்சியில் பதிவாகும் வாக்குகள் நீண்ட காலமாக நகரின் மையப் பகுதியில் உள்ள பள்ளியில் எண்ணப்பட்டு வந்தன.

    தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் மையம் கொண்டம்பல்லி கிராமத்தில் உள்ள மரீத் ஹாஜி இஸ் மாயில் சாஹிப் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்  பேரணாம்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலரும், நகராட்சி ஆணையருமான சையது உசேன் வியாழக்கிழமை அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் முன்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இணையதளம் வாயிலாக ஒதுக்கீடு செய்வது குறித்தும், தேர்தல் விதிமுறைகள் குறித்தும் விளக்கினார்.

    அப்போது அ.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நாம் தமிழர் கட்சி, பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய கட்சி வேட்பாளர்கள் பல ஆண்டுகளாக  வழக்கமாக பேர்ணாம்பட்டு நகரில் உள்ள பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.

    ஆனால் இப்போது அந்த நடைமுறையை மாற்றி, நகர எல்லையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவெடுத்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

    அந்த கல்லூரி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதாகவும், சுற்றுச் சுவர் இல்லாததால், வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு பாதுகாப்பு இல்லை. 

    எனவே, பழையபடி பள்ளியிலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்றனர். இது குறித்து கலெக்டரிடம் முறையிடுமாறு வேட்பா ளர்களிடம் தேர்தல் அலுவலர் கூறி விட்டு சென்றார்.
    வேலூரில் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர், சைதாப்பேட்டை காந்தி ரோடு சந்திக்கும் மெயின் பஜார் சாலையில் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சாலை அமைக்க நேற்று இரவு சந்திப்பின் 4 பகுதியிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று காலை சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் வணிகர்களும், பொதுமக்களும் சிரமப்பட்டனர்.
    இது குறித்து தகவலறித்த பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணாசலம் தலைமை தாங்கினார்.
    மணிகண்டன், மண்டல பொதுச் செயலாளர் ரவி, சிவா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சாலை பணி நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    வேலூர் மாநகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பெயர் சின்னம் ஒட்டும் பணி தொடங்கியது
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 

    வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்துவதற்காக வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய பேப்பர் அச்சடிக்கப்பட்டு அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
     
    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய நகராட்சி கள், திருவலம், பென்னாத்தூர், ஒடுக்கத்தூர், பள்ளிகொண்டா ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான பேலட் பேப்பர்களும் அந்தந்த பகுதிளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்து வருகின்றனர். 

    மொத்தம் 178 வார்டுகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால் ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. 

    இதற்காக மொத்தம் 628 வாக்குப்பதிவு எந்திரங்கள், 628 கட்டுப்பாட்டு கருவிகள் அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாக் குப்பதிவு எந்திரங்களில் பெயர், சின்னங்கள் அடங்கிய பேலட் பேப்பர் பொருத்தும் பணி இன்று மாலை முதல் நடக்கிறது. 

    வேலூர் மாநகராட்சியில் 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 2 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இது தவிர 58 வார்டுகளில் மொத்தம் 354 பேர் போட்டியிடுகின்றனர்.
    மொத்தம் 437 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

     இதில் 2 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடிகள் தவிர மற்ற வாக்குச்சாவடிகளுக்கு தேவையான எந்திரங்களில் வாக்காளர் பெயர் சின்னம் ஒட்டும் பணி இன்று மதியம் தொடங்கியது.

    இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்:-

     ஏற்கனவே வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங் கள் 2 கட்டமாக கனிணி முறையில் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒட்ட பேலட் பேப்பரில் வேட்பாளரின் பெயர், சின்னங்கள் அச்சிடும் பணி 9-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. 
    இவற்றை 3 வது கட்டமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வார்டுகள் வாரியாக கணினி முறையில் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளது. 

    வார்டுகள் வாரியாக பேலட் பேப்பர் பொருத்தும் பணி ஓரிருநாளில் தொடங்கும். பேலட் பேப்பர்கள் அச்சிடும் அச்சகம் மற்றும் குடோன்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

    மேலும் பேலட் பேப்பர் கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட உள் ளது. தேர்தலை எவ்வித பாதிப்பும் இன்றி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றனர்.
    வேலூரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்கிறார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 35 வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தனித்து போடுகின்றனர். இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டித் தெருவில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகிறார்.

    மாநிலத் தலைவர் அண்ணாமலை வருகையால் பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர். தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மண்டித்தெருவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    வேட்பாளர்கள் சோளிங்கர் நகராட்சியில் பதிவாக கூடிய வாக்குகளை சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைத்து எண்ண வேண்டும் என கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    சோளிங்கர்:

    தமிழகத்தில் வரும் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் முறையாக சோளிங்கர் நகராட்சி தேர்தலை சந்திக்கிறது.

    27 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் 116 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர். வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

    இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பேசியதாவது:-

    வேட்பாளர்கள் தங்களது செலவின கணக்கை தினந்தோறும் சமர்ப்பிக்க வேண்டும்.

    கொரோனா விதிமுறைகளை முறையாக கையாள வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என வேட்பாளர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

    அப்போது திடீரென்று வேட்பாளர்கள் சோளிங்கர் நகராட்சியில் பதிவாக கூடிய வாக்குகளை சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைத்து எண்ண வேண்டும் என கோரி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாரிகள் தற்போது ராணிப்பேட்டை தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனால் ஆவேசமடைந்த வேட்பாளர்கள் சோளிங்கர்- திருப்பதி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுகுறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தகவல் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவிக்கும் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்படும் என கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் வேலூருக்கு என்று தனி மரியாதை கிடைக்கும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகிறது. 8 மாதங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் மக்கள் உயிரை காப்பதிலும் சென்றுவிட்டது. ஆட்சி நிர்வாகம் முழுமையாக நடத்தமுடியவில்லை. தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்குப் பிறகு பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடைபெற உள்ளது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்து அவருக்கு புகழாரம் சூட்டுகின்றனர். ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி மு.க.ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஊழல் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கற்றுக் கொள்ளுங்கள் என கூறுகின்றனர்.

    நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் 234 உறுப்பினர்களை துச்சமாக நினைத்து முகத்தில் அடிப்பது போல் நினைத்து திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி உள்ளோம்.

    தற்போது அவர் நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை திருப்பி அனுப்ப முடியாது. அதுதான் சட்டம். ஒன்று அவராகவே வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொண்டால் அவரை திட்டி கொண்டே தான் இருப்போம். ஒருவேளை அவர் தீர்மானத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தால் அவரை திட்டமாட்டோம் அதற்கு பிறகு பார்த்து கொள்ளலாம்.

    மக்களுக்கு அனைத்து வளர்ச்சி பணிகள் அடிப்படை வசதிகளை கொண்டு செல்வது உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கையில்தான் உள்ளது.

    ஒரு அகப்பை நன்றாக இருந்தால்தான் அதில் நான்கு துண்டு அதிகமாக விழும். அகப்பை தேய்ந்திருந்தால் 2 துண்டு தான் விழும்.

    நாங்கள் நல்ல (வேட்பாளர்கள்) அகப்பைகளாக தேர்வு செய்து நிறுத்தி உள்ளோம்.

    அவர்களை வெற்றி பெற செய்யுங்கள். கட்சி எனக்கு என்ன செய்தது என கேட்பவன் கட்சிக்கு ஏற்பட்ட தொற்று நோய். கட்சிக்காக நான் என்ன செய்தேன் என்பவன் தான் திமுகவின் ரத்த நாணம் என கலைஞர் கூறுவார்.

    அவரது வழியில் செயல்பட்டு வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் வேலூருக்கு என்று தனி மரியாதை கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூர் மாவட்டத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு 2-வது கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு, நகராட்சிகள் பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர், ஒடுகத்தூர் பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலகம் மூலமாக தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 31-ந் தேதி நடந்தது.இன்று 2-வது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.

    வேலூர் மாநகராட்சியில் டி.கே.எம். கல்லூரி, குடியாத்தம் நகராட்சி திருவள்ளுவர் பள்ளி, பேரணாம்பட்டு இஸ்லாமியா உயர்நிலைப்பள்ளி, பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பென்னாத்தூர் பேரூராட்சியில் அடுக்கம்பாறை அரசு நடுநிலைப்பள்ளி, திருவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒடுகத்தூர் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் 2 ஆயிரத்து 331 பேர் கலந்து கொண்டனர்.

    ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோருக்கான பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 

    தொடர்ந்து 3-வது கட்ட பயிற்சி வகுப்பு வருகிற 18-ந் தேதி நடக்க உள்ளது.
    குடியாத்தம் அருகே ரெயில் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கீழ் பாட்டி, குரு நாதபுரம், அருந்ததியர் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 42) இவர் மாற்றுத் திறனாளி. இவர் நேற்று காலை மேல் ஆலத்தூர் வளத்தூர் ரெயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். 

    அப்போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற டபுள்டக்கர் விரைவு ரெயிலில்  அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் வேலூரில் நேற்று நடந்தது.

    இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சி ஜனநாயக முறைப்படி நடந்தது ஆனால் தி.மு.க. ஆட்சி தலைகீழாக நடக்கிறது.

    நீட் தேர்வு காரணமாக ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டதின் காரணமாக கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. ஆட்சியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

    இதனால் ஆண்டுக்கு 541 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
    கொரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக 10 மாத காலம் இலவச அரிசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்பட்டது. மேலும் அம்மா உணவகங்கள் மூலம் நாளொன்றுக்கு 3 வேளையும் 7 லட்சம் பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க. அரசு சிறுபான்மை இன மக்களுக்காக தொடர்ந்து ஆதரவு அளிக்கும். அ.தி.மு.க. கொள்கையிலிருந்து என்றும் மாறாது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளையும், வாக்கு எண்ணுவதையும், வாக்குப்பதிவையும், வாக்குப்பெட்டி வைக்கும் இடத்தையும், வாக்கு எண்ணிக்கையும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய வேண்டும்.

    சக்கரம் போல் ஆட்சி மாற்றம் ஏற்படும் அதனால் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும், நடுநிலையோடும் ஜனநாயகத்தோடும் மக்களுக்காக செயல்பட வேண்டும்.

    அப்பாவி மக்களை காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காப்பதில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது.
    ஆனால் இன்று தி.மு.க.ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

    கொலைகள், கொலை, திருடு போன்ற சம்பவங்கள் அனுதினமும் நடந்து வருகிறது.

    வேலூரில் தி.மு.க.வினரால் அ.தி.மு.க. வினர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    வேலூரில் தோல்வி பயம் காரணமாக தி.மு.க.வினரால் அ.தி.மு.க.வினர் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
    ×