என் மலர்
வேலூர்
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க., பா.ம.க. தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 56 வார்டுகளில் அ.தி.மு.க.வும், (4 வார்டுகளில் மனுக்கள் நிராகரிப்பு), 25 வார்டுகளில் பா.ம.க.வும் களமிறங்கியுள்ளன.
இந்த நிலையில், 24-வது வார்டு பா.ம.க. வேட்பாளர் பரசுராமன், அந்தக் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் எஸ்.ஆர்.கே.அப்புவை அவரது அலுவலகத்தில் நேற்று சந்தித்து சால்வை அணிவித்து, பா.ம.க. போட்டியிடும் வார்டுகள் தவிர மற்ற வார்டுகளில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்ததாக எஸ்.ஆர்.கே.அப்பு தெரிவித்தார். சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார். இந்த சந்திப்பு வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பா.ம.க. மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலருடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அதிமுகவுக்கு பா.ம.க. ஆதரவு அளிப்பதாக கூறவில்லை. இந்த விவகாரத்தில் எஸ்.ஆர்.கே.அப்பு அரசியல் செய்கிறார் என்றார். இதே கருத்தை பரசுராமனும் உறுதிப்படுத்தினார்.
இந்த வேட்பாளர் பரசுராமனை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கடத்தி சென்று வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு மிரட்டுவதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடந்த வாரம் குற்றஞ்சாட்டியிருந்தார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்து ஏ.பி.நந்தகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டதுடன் பரசுராமன்தான் தங்களை நேரில் சந்தித்து தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் அடுத்த சர்ச்சையில் பரசுராமன் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட துணைத் தலைவர் சரவணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாநகரத்தை சேர்ந்த வேலூர் மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கே.சரவணன் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். பா.ம.க.வினர். எந்த வகையிலும் சரவணனுடன் தொடர்பு வைத்து கொள்ள வேண்டாம்.என பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி புகார்: ராஜேந்திரபாலாஜியிடம் 134 கேள்விகள் கேட்ட போலீசார்






