என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூரில் ஒவ்வொரு வார்டிலும் 2 போலீசார் ரோந்து
வேலூர் மாநகராட்சி தேர்தலையொட்டி ஒவ்வொரு வார்டிலும் 2 போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளில் ஒவ்வொரு வார்டுக்கும் 2 போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்த வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி.க்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் ரவுடிகள் யாராவது போட்டியிடுகிறார்களா? என்றும் ஆலோசிக்கப்பட்டது. அப்படி யாராவது போட்டியிட்டால் அவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என்று ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் போலீஸ் நிலையங்கள் வாரியாக திரும்பப்பெறப்பட்டுள்ள தனிநபர் பாதுகாப்பு துப்பாக்கிகள், தலைமறைவு ரவுடிகள், நிலுவையில் உள்ள கைது வாரண்டுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் 2 போலீஸ் வீதம் நியமித்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். பேரூராட்சிகளின் வார்டு பரப்பளவு குறைவு என்பதால் 5 வார்டுகளுக்கு ஒரு ரோந்து குழுவை நியமிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்பு பணியை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
Next Story






