என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாதத்திற்கு 2 வாரம் வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    கிராமத்தில் வசிக்கும் மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இதன் மூலம் கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கிராமப் பகுதியில் வசிக்கும் பெண்கள் தங்களுக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒவ்வொருமாதமும் 2 வாரங்கள் வேலை வழங்க வலியுறுத்தி நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம், முனுகப்பட்டு ஊராட்சியில், கிராம மக்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் தற்போது மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் வேலை வழங்குவதாகவும், அதை மாற்றி, மாதத்திற்கு இரண்டு வாரங்கள் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கிராம பெண்கள் மனுக்களுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
    வெம்பாக்கம் அருகே தாலியை கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் வீட்டை விட்டு சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த சீம்பளம் கிராமத்தை சேர்ந்தவர் யுவராஜ் (வயது33). சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    சென்னை அருகே உள்ள பூந்தமல்லி அடுத்த அரண்வாயன் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (24), இருவருக்கும் கடந்த 6-ந்தேதி திருமணம் நடந்தது.

    நேற்று காலை யுவராஜ் கம்பெனி வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் பகல் 3 மணி அளவில் யுவராஜின் அண்ணன் லோகநாதன் யுவராஜிக்கு போன் செய்து உன்னுடைய மனைவியை காணவில்லை என்று தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக யுவராஜ் வீட்டிற்கு வந்தார். மனைவியை தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. வீட்டில் ஒரு கடிதம் இருந்தது.

    அதில் எனக்கு இந்த திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் அருகில் தாலி செயினும் இருந்தது. கடிதம் எழுதிவிட்டு தாலியை கழற்றி வைத்து விட்டு ஜெயஸ்ரீ வீட்டை விட்டு சென்றது தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து யுவராஜ் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒண்ணுபுரம் கோவிலில் பழமையான அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தில் பழமையான கச்சபேஸ்வரர் கோவில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. 

    இக்கோவில் வளாகத்தில் நவக்கிரக மற்றும் பைரவர் கோயில் கட்ட நேற்று காலை அஸ்திவாரம் தோண்டப்பட்டது.அப்போது பூமிக்கடியில் பழமையான அம்மன் சிலை சிதிலமடைந்து நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையை சுத்தம் செய்து அதே இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். 

    இச்சிலை அப்பகுதி பக்தர்கள் சிலர் கூறுகையில், கச்சபேஸ்வரர் கோவில் கட்டும் இடத்தில் கண்டெடுத்த சிலை பழமையானதா? என்பது உரிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்யவேண்டும். 

    தற்போது இச்சிலையின் இடுப்பு, பாதம் ஆகிய இடங்களில் உடைந்து காணப்படுகிறது. இச்சிலை சேதமடைந்து உள்ளதால் வழிபாடு இன்றி பூமிக்கடியில் புதைந்திருக்கலாம் என்றனர்.
    சேத்துப்பட்டு அருகே பைக்கில் கஞ்சா கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் சந்தைமேடு பகுதியில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி சப் இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தபோது அதில் 50 கிராம் எடை கொண்ட கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து பைக்கில வந்த இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 10.30 மணி முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) இரவு 11.30 வரை உள்ளது. பவுர்ணமி சமயத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வரவேண்டாம்.

    பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய உதவிட வேண்டும்.

    இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    செய்யாறில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 1.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    செய்யாறு:

    செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இன்று காலை 9 மணி அளவில் துணை வட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமையில் இந்தோ அமெரிக்கன் பள்ளி அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது செய்யாறு நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.1.50 லட்சம் பணம் இருந்தது. 

    காரில் வந்தவர் வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா கொசவன் புதூரை சேர்ந்த சுரேஷ் வயது 38, என்பதும் அவர் கலவை வெடிப்பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

    உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து வந்ததால் ரூ.1.50 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பணத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  ஒப்படைத்தனர்.
    ஆரணி நகைக்கடையில் நூதனமுறையில் தங்க நாணயங்கள் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு.
    ஆரணி

    ஆரணி தணிகாசலம் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70). இவர் அங்குள்ள பெரிய கடைத்தெருவில் நகைக்கடை வைத்துள்ளார். 

    நேற்று முந்தினம் அவரது கடைக்கு வந்த நபர் ஒருவர் நவரத்தினக் கற்கள் செட் ஆக வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கான பணத்தை பெற்றுக்கொண்ட அருணாச்சலம் அவர் கேட்ட நவரத்தின கற்களை கொடுப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.

    இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கல்லாவில் இருந்த தலா 2 கிராம் எடை கொண்ட 33 தங்க நாணயங்களை மர்ம நபர் நூதனமாக திருடியுள்ளார். இதை அறியாத அருணாசலம் நவரத்தின கற்களை அவரிடம் கொடுத்தார்.அவற்றைப் பெற்றுக் கொண்ட மர்ம நபர் அங்கிருந்து சென்று விட்டார்.

    சிறிதுநேரம் கழித்து கல்லாவை பார்த்த அருணாச்சலம் அதிலிருந்த கால் காசு, தங்க நாணயங்கள் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து அவர் வெளியே வந்து மர்ம நபரை தேடினார்.ஆனால் அவரை காணவில்லை. 

    இந்த நூதன திருட்டு குறித்து அக்கம்பக்கத்து கடைக்காரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.அவர்களும் அந்த நபரை நாலாபுறமும் தேடினர்.

    ஏற்கனவே இது போன்று 3 கடைகளுக்கு அந்த நபர் சென்று வந்ததாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.பின்னர் அருணாச்சலம் தனது கடையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    சப் இன்ஸ்பெக்டர் தர்மன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து நகைகளை திருடிச் சென்ற நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    பட்டப்பகலில் நூதன முறையில் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலையில் வாக்காளர்களை கவர புது யுக்திகளை கையாளும் வேட்பாளர்கள்
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களைகட்டியுள்ளது. நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    தினமும் காலை முதல் இரவு வரை பிரச்சாரம் மேற்கொள்கின்றனர் இரவில் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டுகிறது.

    தொண்டர்கள் புடைசூழ வீடு வீடாகச் செல்லும் வேட்பாளர்கள் தங்கள் சொந்த செலவில் தெருவில் கண்காணிப்பு காமிரா அமைத்து தருவதாகவும் மற்றும் குடிநீர், கால்வாய் உள்ளிட்ட சில பணிகளை செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்கின்றனர்.

    மேலும் அரசின் நலத்திட்ட உதவிகளை தவறாமல் பெற்று தருவதாகவும், குடும்ப நபர்களுக்கு தேவையான சான்றுகளை பெற்று தருவதாகவும் கூறுகின்றனர். 

    வேட்பாளர்கள் தங்களது வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்கள் அச்சடித்து மக்களிடம் வழங்கி வாக்கு கேட்டனர். 

    வாக்களிக்கும் மக்களுக்கு அவர்கள் மனம் கவரும் பல பரிசுகளை வழங்க திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். ஒரு சில வேட்பாளர்கள் ஏற்கனவே மக்கள் பணியில் ஆர்வம் காட்டி வந்ததால் அவர்களுக்கு நிச்சயம் வாக்களிப்பதாக பொதுமக்கள் உறுதி அளித்து வருகின்றனர். 

    இந்த போட்டியில் வெற்றிவாகை சூடுவது யார்? என்பது விரைவில் தெரியவரும்.

    நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    திருவண்ணாமலையில் வாரிசு அரசியல் நடக்கிறது. அதற்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது. திருவண்ணாமலை மக்கள் ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருக்க கூடாது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நடந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் விடியலை கொண்டுவருவோம் என்று சொன்ன தி.மு.க.வுக்கு கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்தீர்கள். இதுவரை என்ன விடியலை கொண்டுவந்துள்ளார்கள்? மேலும் குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றார்கள்.

    அரசுக்கு நிதி நெருக்கடி என்று சொல்கிறார்கள். தேர்தல் நேரத்தில் 517 வாக்குறுதிகளை திமுகவினர் கொடுத்தனர்.அதில் எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. கையாலாகாத அரசாக இந்த அரசு செயல்படுகிறது.

    இவர்கள் மக்களை திசை திருப்புவதற்காக பிரதமரையும், மத்திய அரசு திட்டங்களையும் விமர்சிப்பதை குறிக்கோளாக வைத்துள்ளனர்.

    திருவண்ணாமலையில் வாரிசு அரசியல் நடக்கிறது. அதற்கு மக்கள் அனுமதிக்கக் கூடாது. திருவண்ணாமலை மக்கள் ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருக்க கூடாது.

    திருவண்ணாமலையில் மாற்றம் ஆரம்பமாகட்டும். பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட்டு திருவண்ணாமலையில் மாற்றம் கொண்டு வாருங்கள். அவர்கள் தி.மு.க.வினர் போல லஞ்சம், ஊழலில் ஈடுபட மாட்டார்கள். உங்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்.

    சென்னையில் பா.ஜ.க. அலுவலகத்தில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது. நீட் தேர்வை எதிர்த்து குண்டு வீசப்பட்டதாக போலீசார் சொல்கின்றனர் பிடிப்பட்ட குற்றவாளி மீது 7 வழக்குகள் உள்ளன.கொலை முயற்சி வழக்கு கூட உள்ளது.

    அவனுக்கும் நீட்தேர்வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? அவன் நீட்டாக முடித்துவிட்டேன் என்றுசொன்னதை நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டு வீசினான் என்று சொல்கிறார்கள்.

    தமிழகத்தில் பல மருத்துவ கல்லூரிகள் தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு சீட்டுக்கு ரூ.40 லட்சம் பெற முடியவில்லையே என்ற சுயநலத்தில் இதுபோன்ற செயல்களைத் தூண்டி விடுகின்றனர். ஆனால் நீட் தேர்வு மூலம் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளும் மருத்துவருக்கான கல்வியை பெறுகின்றனர்.

    தி.மு.க.வினர் கொடுத்த பொங்கல் பரிசில் மஞ்சளுக்கு பதில் மரத்தூள் இருந்தது.மிளகுக்கு பதில் பருத்திக்கொட்டை இருந்தது.வெல்லம் உருகியதால் பக்கெட் கொண்டு சென்று வாங்கினர். சிலர் வாங்கிய வெல்லத்தில் பல்லிகள் போன்ற உயிரினங்களும் செத்து கிடந்தது. இதுபோன்ற பொங்கல் பரிசை மக்கள் கேட்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருவண்ணாமலையில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து வருகிறது.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் கடந்த மாதம் கொரோனா 3-வது அலை வேகம் காட்டியது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு ஊரடங்கு உத்தரவுகள் பல விலக்கப்பட்டன.
     
    தற்போது மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை மறந்து அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பூங்கா மற்றும் சுற்றுலாத் தலங்கள் செல்ல தடை நீடிக்கப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு 700-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரவி வந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. 

    எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் எப்படி கொரோனா கட்டுக்குள் வந்தது என்பது தெரியவில்லை.

    இந்த நிலையில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கொரோனா தொற்று வந்து செல்கிறது. மேலும் பலர் தங்களுக்கு காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தாலும மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு சரி செய்து கொள்கின்றனர். 

    அவர்கள் பரிசோதனை செய்துகொள்ளாதால் அவர்களுக்கு கொரோனா வந்ததா? இல்லையா? என்பது தெரியாமல் இருக்கின்றது. ஆனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதுபற்றி சுகாதார அதிகாரிகள் கூறுகையில்:-

    தேர்தலுக்கு பின்னர்தான் உண்மையான நிலவரம் தெரியவரும். அப்போது அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. 

    தற்போது கிராமங்களில் இருந்து நகரத்துக்கும், நகரங்களில் இருந்து கிராமத்துக்கும் அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர். 

    மேலும் மக்கள் அதிகளவில் கூடும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. இவை எல்லாம் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே மக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏற்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.
    திருவண்ணாமலை அருகே காப்புக்காடு பகுதியில் செல்லும் கிராம மக்களை மிரட்டி நகை&பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க கோரி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள காப்புக்காடு பகுதியில் வழிபறி மற்றும் கத்தியைக் காட்டி மர்ம நபர்கள் செயின் மற்றும் பணம் பறிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

    இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    மேலும் தொடர் வழிபறியில் ஈடுபட்டுவரும் குற்றவாளிகளை கைது செய்யாமல் மெத்தனமாக இருக்கும் போலீசாரை கண்டித்து பாவுப்பட்டு, காட்டாம்பூண்டி, பறையம்பட்டு, பழையனூர், நரியாபட்டு, தச்சம்பட்டு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தச்சம்பட்டு போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    தச்சம்பட்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட வந்த பொதுமக்களை போலீஸ் நிலையத்திற்குள் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாவுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டனை வழிமறித்து மர்ம கும்பல் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ரூ.60ஆயிரம் ரொக்கத்தை பறித்துச் சென்றுள்ளனர். 

    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். 

    மேலும் இரவு நேரங்களில் போலீசார் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும். காப்புக்காடு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.

    காப்புக்காடு பகுதியில் உள்ள கிராமங்களுக்கு பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில்தான் அதிகமாக செல்கின்றனர். இந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனை கொள்ளையர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். 

    எனவே போலீசார் ரோந்து வாகனங்களை அந்த வழியில் இயக்கவும், ஆங்காங்கே புறக்காவல் நிலையம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தால் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூறப்படுகிறது.
    திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை நகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மற்றும் திருமண நிகழ்ச்சி ஆகியவற்றால் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. 

    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரம் செய்ய வரும்போது பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க செல்வதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

    மேலும் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்று மாலை பல திருமண மண்டபங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    இதில் கலந்து கொள்வதற்காக கிராமங்களிலிருந்து பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர்.இதில் சில வாகனங்களில் சிறுவர்கள் தொங்கியபடி வந்தனர். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் நிலவியது.

    சரக்கு வாகனங்களில் பொது மக்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று போக்குவரத்து விதிமுறை உள்ளது. ஆனால் அதை மீறி திருவண்ணாமலையில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கிராம மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வருகின்றனர்.

    இதனை போக்குவரத்து போலீசார் தடுத்தாலும் அவர்களை சமாளித்து விட்டு சென்று விடுகின்றனர்.

    இந்த அலட்சிய போக்கு ஆபத்து நிறைந்தது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நேற்று மாலை திருவண்ணாமலை மாட வீதிகள் மற்றும் பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் தவித்தனர்.

    திருவண்ணாமலையில் மேம்பால பணிகள் நிறைவு பெற்று உள்ளதால் விரைவில் அவைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். 

    எனவே காலம் தாழ்த்தாமல் மேம்பாலங்களை திறந்து வைப்பது மக்கள் நலம் காக்கும் செயலாக இருக்கும்.
    ×