என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலை தடுக்க தடுப்பு அமைக்கப்பட்டுள்ள காட்சி.
திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம்-திருமண நிகழ்ச்சிகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி
திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மற்றும் திருமண நிகழ்ச்சிகளால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை நகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மற்றும் திருமண நிகழ்ச்சி ஆகியவற்றால் நேற்று கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பிரச்சாரம் செய்ய வரும்போது பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க செல்வதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
மேலும் இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் நேற்று மாலை பல திருமண மண்டபங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் கலந்து கொள்வதற்காக கிராமங்களிலிருந்து பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர்.இதில் சில வாகனங்களில் சிறுவர்கள் தொங்கியபடி வந்தனர். இதனால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் நிலவியது.
சரக்கு வாகனங்களில் பொது மக்களை அழைத்துச் செல்லக்கூடாது என்று போக்குவரத்து விதிமுறை உள்ளது. ஆனால் அதை மீறி திருவண்ணாமலையில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கிராம மக்களை சரக்கு வாகனங்களில் அழைத்து வருகின்றனர்.
இதனை போக்குவரத்து போலீசார் தடுத்தாலும் அவர்களை சமாளித்து விட்டு சென்று விடுகின்றனர்.
இந்த அலட்சிய போக்கு ஆபத்து நிறைந்தது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். நேற்று மாலை திருவண்ணாமலை மாட வீதிகள் மற்றும் பஸ் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.இதனால் பொதுமக்கள் தவித்தனர்.
திருவண்ணாமலையில் மேம்பால பணிகள் நிறைவு பெற்று உள்ளதால் விரைவில் அவைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம் போக்குவரத்து நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே காலம் தாழ்த்தாமல் மேம்பாலங்களை திறந்து வைப்பது மக்கள் நலம் காக்கும் செயலாக இருக்கும்.
Next Story






