என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பிளஸ்-2 தேர்வில் 88.28 சதவீதம் தேர்ச்சி.
    • கலெக்டர் தகவல்

    திருவண்ணாமலை, :

    10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 வகுப்பில் 93.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

    பிளஸ் 2-வில் 88.28 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்று உள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தொிவித்து கொள்கிறேன்.

    தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு வரும் ஜூலை மாதத்தில் உடனடியாக பொதுத் தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட உள்ளது. நீங்கள் எந்தவித அச்சமும், பயமும் இன்றி உடனடியாக தேர்ச்சி பெற்று நடப்பு கல்வியாண்டிலேயே உயர்கல்வியினை தொடரலாம்.

    தவறான முடிவிற்கு ஏதும் செல்ல வேண்டாம். உங்களுக்கு தேவையற்ற குழப்பமோ, பயம் ஏதும் இருந்தாலோ அல்லது உங்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை ஏதும் தேவைப்பட்டாலோ மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

    குழந்தைகள் உதவி மையம்- 1098 மற்றும் 14417, மனநல ஆலோசகர் நாராயணன் - 9842981128, முதன்மை கல்வி அலுவலகம் - 9486437686, மாவட்ட கல்வி அலுவலகம் - 9865179717 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

    • 15 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும்
    • திருவண்ணாமலை கலெக்டர் தொடங்கி வைத்தார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் உபரி உணவை வீணாக்காமல் பகிர்வோம் திட்டத்தின் பிரத்யேகமான விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் கைப்படாத உணவு 50 பேருக்கு மேல் இருந்தால் தொடர்பு கொள்வதற்கு 9087711112 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகம் செய்தார். பின்னர் அவர் கூறுகையில் உணவகங்கள் விற்பனை செய்தது போக மற்றும் திருமண மண்டபம், சமுதாயக் கூடம், வீடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தயாரிக்கும் உணவுகளில் மீதமுள்ள 50 பேருக்கு மேல் உட்கொள்ளும் தன்மையுள்ள உணவினை இந்த எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    உணவினை பெற்று தேவைப்படும் நபர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் நேரடியாக அளிக்கப்படும். மேலும் உணவு பாதுகாப்பிற்கான உறுதி செய்யும் வகையில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் திருவண்ணாலை மாவட்டத்தில் 15 நாட்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றார்.

    முன்னதாக நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவ ண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், உணவு பாதுகாப்பு த்துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எழில்சிக்கயராஜா, கலைஷ்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தேனீக்கள் கொட்டியது.
    • இதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 5 ஆசிரியர்களும் தேனீக்கள் கொட்டியதில் காயடைந்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த மங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் வந்தனர்.

    அங்குள்ள புதிய கட்டிடத்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது. இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் தேனீக்கள் கொட்டியது.

    இதில் மாணவர்கள் அலறி அடித்து ஓடினர். தேனீக்கள் விரட்டி சென்று அவர்களை கொட்டியது. இதில் 20 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். 5 ஆசிரியர்களும் தேனீக்கள் கொட்டியதில் காயடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்..

    • 40 ஆண்டுக்கு பிறகு நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்தி கடன் செலுத்தினர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் மிகவும் பழமையவாய்ந்த ஸ்ரீ திரவுபதி அம்மன் அக்னி வசந்த விழா கடந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது.

    மேலும் கடந்த 27 நாட்களாக அருள்மிகு ஸ்ரீ திரவுபதியம்மன் கோவில் அக்னி வசந்த விழாவில் பால்குடம் ஏந்தி பக்தர்கள் திரவுபதி அம்மனுக்கு வேண்டுதல் நிறைவேற்றும் விதமாக காப்பு கட்டி விரதம் இருந்துள்ளனர். அம்மன் கோவில் வளாகத்தில் கட்டைகளை கொண்டு தீயிட்டு கொளுத்தினர்.

    கோவிலிருந்து மூலவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உற்சவ சிலையை பக்தர்களுக்கு ஏந்தியவாறு தீ மிதித்து வழிபட்டனர்.

    இதில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீமிதி திருவிழாவை கண்டுகளித்தனர்.

    • 880 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
    • சந்திராயன் 2-ஐ நிலவில் இறக்கிவிட்டு அதன்பின்னரே பணி ஓய்வு பெற்றேன்.

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவியருக்கு பட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:-

    நம்மால் என்ன முடியும் என்பதை நிர்ணயிப்பது நமது மனம் மட்டுமே. மூச்சு உள்ளவரை முயற்சி இருக்க வேண்டும். அந்த முயற்சி தனது சுற்றம் மற்றும் நாட்டை உயர்த்துவதாக இருக்க வேண்டும். பிறக்கும் போதே யாரும் சான்றோராக பிறப்பதில்லை. அவர்களின் இலக்கும் முயற்சியுமே அவர்களை சான்றோர்களாக ஆக்குகிறது.

    விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றியல்ல. விருப்பத்துக்கு மாறாக கிடைப்பதும் வெற்றியைத் தரும் என்பது எனது அனுபவம் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வகத்தில் புதிது புதிதாக செயற்கைக் கோள்களை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை விரும்பினேன். கிடைத்ததோ செயற்கைக் கோள்களின் செயல் இயக்கத்தை கவனிக்கும் பணி. அதையும் விரும்பி செய்து படிப்படியாக உயர்ந்து சந்திராயன் செயற்கைக் கோளிற்கான திட்ட இயக்குநரானேன்.

    80-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கியதில் முக்கிய பொறுப்பேற்றிருக்கிறேன். நிறைவாக சந்திராயன் 2-ஐ நிலவில் இறக்கிவிட்டு பின் பணி ஓய்வு பெற்றேன்.

    பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் கி.மீ. பயணித்து சுமார் 10 லட்சம் மாணவர்களிடையே பேசியுள்ளேன். இந்தியா திறமைக்கு வாய்ப்பளித்து சாதனைக்கு சந்தர்ப்பம் அளிக்கிறது. சாதித்தால் மிகப் பெரிய அளவில் அங்கீகாரத்தையும் கொடுக்கிறது. அயராத உழைப்பையும் உயர்ந்த லட்சியமும் இருந்தால் நிலவுக்கு போவது கனவல்ல நிஜமே.

    பெண் என்ற காரணத்தால் மட்டுமே வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. எனவே பெரிய கனவுகளுடன், அந்த கனவுகளுக்கு செயல் கொடுக்கும் உறுதிப்பாட்டுடன் பட்டச் சான்றிதழை பெற்றுச் செல்லுங்கள் என்றார்.

    விழாவில் 880 மாணவியருக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.

    விழாவுக்கு கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எம்.ரமணன், கல்லூரி முதல்வர் எஸ்.ருக்மணி, தெள்ளார் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் டி.கே.பி.மணி மற்றும் கல்லூரி பேராசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கல்லின் முன்புறம் 13 வரியும், பின்புறம் 15 வரியும் உள்ளது.
    • 800 வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது உறுதியானது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா ஆகியோர் இணைந்து காஞ்சி பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

    அப்போது காஞ்சி சிவன் கோவில் அருகே வயல்வெளியில் பலகை கல்வெட்டு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது. வயல்வெயிலின் இடையில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்ட அப்பலகை கல்வெட்டை சுத்தம் செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் சுமார் 5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லின் முன்புறம் முதல் பாதியில் நிதானத்தை குறிக்கும் சூலம், அதன் அருகே இருபுறமும் விளக்கும் செதுக்கப்பட்டு மேலே சந்திரனும், சூரியனும் காட்டப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து முன்புறம் 13 வரியும் கல்லின் பின்புறம் 15 வரியும் அடங்கிய கல்வெட்டும் கண்டறியப்பட்டது.

    இது குறித்து வரலாற்று ஆய்வாளர் ராஜ்பன்னீர்செல்வம் கூறுகையில்:-

    இக்கல்வெட்டின் எழுத்துகளை கொண்டு இது 13-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின் கடைபகுதியில் கி.பி. 1216- 1246 வரை ஆண்ட 3-ம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு என்பது தெரியவருகிறது.

    அவரின் 14-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1230 ஆகும். மேலும் தற்சமயம் உள்ள கரைகண்டேஸ்வரர் கோவில் கட்டுமானம் பிற்காலத்தை சேர்ந்த நாயக்கர் காலத்தியது. அக்கோவிலின் கல்வெட்டுக்கள் ஏதும் இல்லாத நிலையில் இக்கல்வெட்டு மூலம் இக்கோவில் 800 வருடங்களுக்கு மேல் பழமையான சோழர் காலத்து கோவில் என்பது உறுதியாகிறது.

    மேலும் இக்கோவிலில் உள்ள சாமி பெயர் சோழர் காலத்தில் ஆளுடையார் கரைகண்டீஸ்சுவரமுடைய நாயனார் என்று வழங்கப்பட்டு உள்ளதை அறியமுடிகிறது. 3-ம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் சோழ பேரரசு பல்வேறு தாக்குதல்களாலும், அரசியல் சூழல்களாலும் வலிமை குன்றி இருந்த நிலையிலும், கோவிகளுக்கான தானம் தொடர்ந்து நடைபெற்றுஉள்ளதை நம்மால் அறிய முடிகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டை கிராம மக்கள் முறையாக பராமரித்து வந்தால் கோவிலின் வரலாறு பாதுகாக்கப்படும் என்றார்.

    • 108 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கல்யாணபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் புதியதாக கட்டி, பஞ்ச வர்ணம் பூசி, இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசங்கள் வைத்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து கோ பூஜை, கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ஆகிய மூன்று கால யாக பூஜைகள் செய்து.மேளதாளத்துடன் புனிதநீர் கலசத்தை கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடி இருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளித்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவில் சேத்துப்பட்டு, கோட்டுப்பாக்கம், மடம், வந்தவாசி, சென்னை, மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.இரவு இன்னிசை கச்சேரி, பக்தி பாடல்கள், கிராமிய தப்பாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    • எந்திரம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
    • விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவுரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி கூட்டத்தில் பேசியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மணிலாவை 6 மாத காலத்திற்குள் சாகுபடி செய்வதால் அதனை அதிக அளவில் பிரித்தெடுக்கும் சிறிய அளவிலான அறுவடை எந்திரத்தை விவசாயிகள் எவ்வாறு பயன்படுத்துவது என்று வேளாண்மைத் துறை சார்பாக நடத்தப்படும் முகாம்களில் அதன் உபயோகம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும்.

    அதன் மூலம் அதிக விவசாயிகள் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு அந்த எந்திரத்தை பயன்படுத்த முன் வருவார்கள். மணிலா அறுவடை எந்திரம் வாங்குவதற்கு வேளாண்மை துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மண்வளத்தை பாதுகாத்து நீர்வள ஆதாரத்தை மேம்படுத்தி நிலத்திற்கு ஏற்ப பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிர்களை வைத்து விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும்.

    நெல் பயிர் மற்றும் தானிய வகை பயிர்களை வைத்து ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு அடைய வேண்டும். புதிய மின் இணைப்பு பெற்று உள்ள விவசாயிகள் மானியத்துடன் கூடிய மின் மோட்டார்களை பெற்று விவசாயிகள் நல்ல முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.

    விவசாயிகள் கிசான் கடன் அட்டை மூலம் விவசாயத்திற்கான பயிர்கடன்களை பெற்று பயன்பெறலாம். கிசான் அட்டை இல்லாதவர்கள் அந்ததந்த வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு அட்டை பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணகிரிபுரம் பகுதியை சேர்ந்தவர் தாண்டவராயன், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி சுசிலா (வயது 65). இவரும் ஓய்வு பெற்ற ஆசிரியர்.

    இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3-வது மகன் குமரனுடன் தங்கி வசித்து வருகின்றனர். சுசிலாவிற்கு வயது முதிர்வு காரணமாக கண்பார்வை தெரியவில்லை என்றும், கடந்த சில நாட்களாக அவர் உடலநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் உள்ள பாத்ரூமிற்கு சென்று அங்கிருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார்.

    சிறிது நேரம் கழித்து பாத்ரூம் சென்ற தாண்டவராயன், சுசிலா அங்கு மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுசிலா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
    • ஏராளமானோர் பங்கேற்பு

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் உலக நன்மை வேண்டி விநாயகர், சிவன், அனுமன், ஆகிய கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.

    காலையில் சிவன், அனுமன், விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கு பல்வேறு மூலிகைகள் மூலம் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து வைத்து, உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் விரதமிருந்த 208 சுமங்கலிப்பெண்கள் விநாயகர் கோவிலில் இருந்து தலையில் பால், குடங்களை சுமந்து கொண்டு பல்வேறு வேண்டுதல்களை வேண்டி ஊர்வலமாக ருத்ரகிரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று. ருத்ரகிரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விநாயகபுரம் கிராம பொதுமக்கள், பெரியவர்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.

    • 1 முதல் 10-ம் வகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
    • உடல்நலம், மனநலம் பற்றி விளக்கப்பட்டது.

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி குறுவள மையத்தில் நேற்று 18-ந்தேதி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    தலைமை ஆசிரியர் கருணாநிதி தலைமையில் நடந்த பயிற்சி முகாமில் ஆசிரியப்பயிற்றுநர் ராமச்சந்திரமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர் சாவித்திரி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் 40 பள்ளி தலைமையாசிரியர்கள், உதவி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் இமிஸ், உடல்நலம் மனநலம் பற்றி விளக்கப்பட்டது. அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.

    • தாய் இறந்ததால் மனஉளைச்சலில் இருந்தார்.
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த கிட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மகன் கவுதம் குமார் (வயது25). இவருடைய தாயார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    அதிலிருந்து கவுதம்குமார் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் கடந்த ஒரு மாதமாகவே திருவண்ணாமலை அரசு மருத்துவமனைவில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் போளூர் ெரயில் நிலையம் யார்டில் நேற்று மதியம் சுற்றித்திரிந்து உள்ளார்.

    அப்போது திருப்பதியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் அதிவிரைவு ெரயில் வந்து கொண்டிருந்தது. கவுதம்குமார் திடீரென்று ெரயில் முன் பாய்ந்துள்ளார். இதில் தலை வேறு, கை, கால், வேறு என துண்டு துண்டாக கவுதம் குமாரின் உடல் சிதறி உள்ளன.

    இதுகுறித்து தகவலறிந்து போளூர் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து பார்வையிட்டார். பின்பு காட்பாடி ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×