என் மலர்
நீங்கள் தேடியது "I landed Chandrayaan 2 on the moon and then retired"
- 880 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
- சந்திராயன் 2-ஐ நிலவில் இறக்கிவிட்டு அதன்பின்னரே பணி ஓய்வு பெற்றேன்.
வந்தவாசி:
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 21-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவியருக்கு பட்டங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:-
நம்மால் என்ன முடியும் என்பதை நிர்ணயிப்பது நமது மனம் மட்டுமே. மூச்சு உள்ளவரை முயற்சி இருக்க வேண்டும். அந்த முயற்சி தனது சுற்றம் மற்றும் நாட்டை உயர்த்துவதாக இருக்க வேண்டும். பிறக்கும் போதே யாரும் சான்றோராக பிறப்பதில்லை. அவர்களின் இலக்கும் முயற்சியுமே அவர்களை சான்றோர்களாக ஆக்குகிறது.
விரும்பியதை அடைவது மட்டுமே வெற்றியல்ல. விருப்பத்துக்கு மாறாக கிடைப்பதும் வெற்றியைத் தரும் என்பது எனது அனுபவம் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வகத்தில் புதிது புதிதாக செயற்கைக் கோள்களை உருவாக்கும் ஆராய்ச்சிப் பணியை விரும்பினேன். கிடைத்ததோ செயற்கைக் கோள்களின் செயல் இயக்கத்தை கவனிக்கும் பணி. அதையும் விரும்பி செய்து படிப்படியாக உயர்ந்து சந்திராயன் செயற்கைக் கோளிற்கான திட்ட இயக்குநரானேன்.
80-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை உருவாக்கியதில் முக்கிய பொறுப்பேற்றிருக்கிறேன். நிறைவாக சந்திராயன் 2-ஐ நிலவில் இறக்கிவிட்டு பின் பணி ஓய்வு பெற்றேன்.
பின்னர் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 3 லட்சம் கி.மீ. பயணித்து சுமார் 10 லட்சம் மாணவர்களிடையே பேசியுள்ளேன். இந்தியா திறமைக்கு வாய்ப்பளித்து சாதனைக்கு சந்தர்ப்பம் அளிக்கிறது. சாதித்தால் மிகப் பெரிய அளவில் அங்கீகாரத்தையும் கொடுக்கிறது. அயராத உழைப்பையும் உயர்ந்த லட்சியமும் இருந்தால் நிலவுக்கு போவது கனவல்ல நிஜமே.
பெண் என்ற காரணத்தால் மட்டுமே வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. எனவே பெரிய கனவுகளுடன், அந்த கனவுகளுக்கு செயல் கொடுக்கும் உறுதிப்பாட்டுடன் பட்டச் சான்றிதழை பெற்றுச் செல்லுங்கள் என்றார்.
விழாவில் 880 மாணவியருக்கு அவர் பட்டங்களை வழங்கினார்.
விழாவுக்கு கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் எம்.ரமணன், கல்லூரி முதல்வர் எஸ்.ருக்மணி, தெள்ளார் சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி தலைவர் டி.கே.பி.மணி மற்றும் கல்லூரி பேராசிரியைகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






