என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inscription of Rajaraja Chola"

    • கல்லின் முன்புறம் 13 வரியும், பின்புறம் 15 வரியும் உள்ளது.
    • 800 வருடங்களுக்கு மேல் பழமையானது என்பது உறுதியானது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் உதயராஜா ஆகியோர் இணைந்து காஞ்சி பகுதியில் கள ஆய்வு செய்தனர்.

    அப்போது காஞ்சி சிவன் கோவில் அருகே வயல்வெளியில் பலகை கல்வெட்டு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆய்வு செய்யப்பட்டது. வயல்வெயிலின் இடையில் பாதி புதைந்த நிலையில் காணப்பட்ட அப்பலகை கல்வெட்டை சுத்தம் செய்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதில் சுமார் 5 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட பலகை கல்லின் முன்புறம் முதல் பாதியில் நிதானத்தை குறிக்கும் சூலம், அதன் அருகே இருபுறமும் விளக்கும் செதுக்கப்பட்டு மேலே சந்திரனும், சூரியனும் காட்டப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து முன்புறம் 13 வரியும் கல்லின் பின்புறம் 15 வரியும் அடங்கிய கல்வெட்டும் கண்டறியப்பட்டது.

    இது குறித்து வரலாற்று ஆய்வாளர் ராஜ்பன்னீர்செல்வம் கூறுகையில்:-

    இக்கல்வெட்டின் எழுத்துகளை கொண்டு இது 13-ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சியின் கடைபகுதியில் கி.பி. 1216- 1246 வரை ஆண்ட 3-ம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு என்பது தெரியவருகிறது.

    அவரின் 14-ம் ஆட்சியாண்டு கல்வெட்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1230 ஆகும். மேலும் தற்சமயம் உள்ள கரைகண்டேஸ்வரர் கோவில் கட்டுமானம் பிற்காலத்தை சேர்ந்த நாயக்கர் காலத்தியது. அக்கோவிலின் கல்வெட்டுக்கள் ஏதும் இல்லாத நிலையில் இக்கல்வெட்டு மூலம் இக்கோவில் 800 வருடங்களுக்கு மேல் பழமையான சோழர் காலத்து கோவில் என்பது உறுதியாகிறது.

    மேலும் இக்கோவிலில் உள்ள சாமி பெயர் சோழர் காலத்தில் ஆளுடையார் கரைகண்டீஸ்சுவரமுடைய நாயனார் என்று வழங்கப்பட்டு உள்ளதை அறியமுடிகிறது. 3-ம் ராஜராஜன் ஆட்சி காலத்தில் சோழ பேரரசு பல்வேறு தாக்குதல்களாலும், அரசியல் சூழல்களாலும் வலிமை குன்றி இருந்த நிலையிலும், கோவிகளுக்கான தானம் தொடர்ந்து நடைபெற்றுஉள்ளதை நம்மால் அறிய முடிகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டை கிராம மக்கள் முறையாக பராமரித்து வந்தால் கோவிலின் வரலாறு பாதுகாக்கப்படும் என்றார்.

    ×