என் மலர்
திருவண்ணாமலை
- ஏ.டி.எம். கார்டு மூலம் நூதன மோசடி
- வாலிபர் கைது
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த நல்லேரி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 65). இவர், வந்தவாசியில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த வாலிபரிடம், ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.10 ஆயிரம் பணம் எடுத்து தருமாறு கேட்டுள்ளார்.
இதையடுத்து ரூ.10 ஆயி ரத்தை எடுத்து ஏழுமலையி டம் கொடுத்த அந்த வாலிபர், ஏற்கனவே தன்னிடம் இருந்த போலி ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
பின்னர் அந்த வாலிபர் ஏழுமலையின் ஏ.டி.எம். கார்டு மூலம் பல்வேறு இடங்களில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் எடுத்துள்ளார். இதுகுறித்து ஏழுமலைக்கு தாமதமாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏ. டி.எம்.மில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் சன்னதி தெரு வழியாக வந்தவாசி தெற்கு போலீசார் ரோந்து சென்ற போது, அங்கு தனியார் வங்கி ஏ.டி.எம். முன்பு. நின்றிருந்த வாலிபரை சந்தே கத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவுக்கு உட்பட்ட தோகைமலை நெசவாளர் தெருவை சேர்ந்த காட்ஜான் (வயது 21 )என்பதும் ஏழுமலையின் ஏடிஎம் கார்டு மூலம் ஒரு லட்சத்து 34 ஆயிரம் திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் காட்ஜானை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.86 ஆயிரத்து 500 மற்றும் 5 ஏ டி எம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.
கைதான காட்ஜான் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- திருவண்ணாமலை தீபதிருவிழாவையொட்டி நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது. 6-வது நாளான இன்று விநாயகர், சந்திரசேகரர், மூஷிக வாகனம், வெள்ளி யானை வாகனத்தில் மாடவீதியில் உலா வந்தார். தொடர்ந்து 63 நாயன்மார்களும் மாட வீதியில் பவனி வந்தனர்.
தொடர்ந்து இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளிரதம் வெள்ளி இந்திர விமானம் மற்றும் இதர வாகனங்களில் வீதி உலா நடைபெற உள்ளது.
5-வது நாளான நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம் வெள்ளி மயில் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் எழுந்தருளி வீதி உலா வந்தார்.
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- வாழ்க்கையில் முன்னேற குறிக்கோளுடன் படித்து பட்டம் பெற வேண்டும் என அறிவுறுத்தல்
செய்யாறு:
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கலைவாணி தலைமையில் வகித்தார். வேதியல் துறை தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஒ.ஜோதி எம்எல்ஏ மாணவர் பேரவையை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசுகையில்:-
மாணவர்கள் அனைவரும் தங்களது பெற்றோரின் விருப்பத்திற்கு ஏற்ப படித்து பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக வர வேண்டும். இப்பருவம் தவறான பாதையில் செல்லக்கூடிய பருவம் என்பதால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். என்ற குறிக்கோளோடு படித்து பட்டம் பெற வேண்டும். முனைவர் பட்டம் பெரும் வகையில் பல்வேறு துறைகள் செயல்பட்டு வரும் இக்கல்லூரிக்கு பெருமை காத்து கல்லூரி படிப்பை நல்ல முறையில் முடித்து பட்டம் பெற்று அனைவரும் பயன்பெற வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு முன்னதாக கல்லூரியின் பிரதான நுழைவு வாயிலை ஒ.ஜோதி எம்எல்ஏ மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். தமிழ் துறை தலைவர் கண்ணன் நன்றி கூறினார்.
- வந்தவாசி பஜார் வீதி வழியாக சென்றது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வந்தவாசி ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு சங்கத் தலைவர் ஆர்.கார்வண்ணன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் எஸ்.குமார் முன்னிலை வகித்தார்.
வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் தொடங்கிய ஊர்வலம் தேரடி, காந்தி சாலை, பஜார்வீதி வழியாகச் சென்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
ஊர்வலத்தில் சங்கச் செயலர் கே.குணசேகர், பொருளாளர் எம்.டோமினிக் சேவியோ, பயிற்றுநர் எஸ்.நித்தியானந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்றும், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நாளையும் நடக்கிறது
- இன்று முதல் 8-ந்தேதி வரை போலீஸ் பாதுகாப்பு பணி திருவண்ணாமலையில் தொடரும்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வெள்ளி தேரோட்டம் இன்றும், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நாளையும் நடக்கிறது. 6-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் குறித்தும், மகா தீபத்தின்போது வி.ஐ.பி. அமரும் பகுதி குறித்து ஆய்வு செய்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொதுமக்கள் தீபத்திருவிழாவின்போது கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா விதிகள் தளர்வு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த ஆண்டு மகாதீபத்தன்று திருவண்ணாமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் 27 ஆயிரம் பஸ்களிலும், 12 ஆயிரம் கார்களில் இருந்தும், ரெயில் மூலமும் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். வாகனங்கள் நிறுத்துவதற்காக 59 இடங்கள் மாவட்ட நிர்வாகத்தினால் கண்டறியப்பட்டு உள்ளது.
கார்த்திகை தீபத்திருவிழா பாதுகாப்பை கருதி தற்போது இருந்தே வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 4 டி.ஐ.ஜி., 27 போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இந்த மாவட்டத்தில் முன்பு வேலை பார்த்த அனுபவம் உள்ள போலீஸ் அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால் அந்தந்த பகுதியை சேர்ந்த குற்ற தடுப்பு போலீசார் சீருடையற்ற உடையில் (சாதாரண உடை) மக்களோடு மக்களாக இருந்து சந்தேகப்படும் நபர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண கூடிய சாப்ட்வேர் மூலம் கேமராக்களில் கண்காணிக்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியுள்ள மக்களின் விவரங்கள் மற்றும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை வந்து தங்கியுள்ளவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் 500 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இன்று முதல் 8-ந்தேதி வரை போலீஸ் பாதுகாப்பு பணி திருவண்ணாமலையில் தொடரும். தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மேலும் பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது அனுமதி அட்டை வைத்துள்ள பக்தர்கள் எந்தவித தங்கு தடையின்றி கோவிலுக்குள் சென்று வருவதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும், மகாதீபம் பார்ப்பதற்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அனுமதி அட்டை இல்லாதவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். விழா தொடர்பாக மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இவ்விழா நடத்தி முடிப்பதற்கு காவல்துறை சார்பில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டுகளில் பரணி தீபத்திற்கும், மகா தீபத்திற்கும் எவ்வளவு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு உள்ளார்களோ அதே அளவு பக்தர்கள் மட்டுமே இந்த ஆண்டும் அனுமதிக்க முடியும். கடந்த காலங்களில் இருப்பது போன்று இல்லாமல் இந்த ஆண்டு தேவையான அளவு எண்ணிக்கையிலான போலீசார் மட்டுமே கோவிலுக்குள் மகா தீபத்தின்போது இருப்பார்கள். தேவையற்ற போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன், கலெக்டர் முருகேஷ், வேலூர் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், நகராட்சி ஆணையாளர் முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் நடந்தது
- நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி சார்பில் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆய்வுக்கூட்டம் காஞ்சி கூட்ரோடு ஆஷா ஓட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர்கே ரமேஷ் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பெருங்கோட்ட பொறுப்பாளரும் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, மாவட்ட பார்வையாளர் தசரதன், மாவட்டத் தலைவர் கே.ஆர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
குடியரசு தினவிழா தடகள போட்டி பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 63-வது குடியரசு தின தடகளப் போட்டிகள் திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 25-ந் தேதி தொடங்கி நேற்று வரை 6 நாட்கள் நடைபெற்றது.
இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து 7 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 14, 17, 19 என்ற வயதின் அடிப்படையில் முதல் 3 நாட்கள் வீராங்கனைகளுக்கும், அடுத்த 3 நாட்கள் வீரர்களுக்கும் என்று நடைபெற்றது.
இதில் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கோல் ஊற்றி தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.
இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவில் குடியரசு தின தடகளப் போட்டிகளுக்கான நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என். அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் 46 புள்ளிகள் பெற்ற தேனி மாவட்ட அணியினருக்கும், மகளிர் பிரிவில் 55 புள்ளிகள் பெற்ற சேலம் மாவட்ட அணியினருக்கும் தனித் தனியே ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கான கோப்பையை வழங்கி பாராட்டினார்.
மேலும் அதிக பதக்கங்களை பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் கோப்பைகளை வழங்கினார். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டது.
முன்னதாக 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான 200 மீட்டர் இறுதி சுற்று ஓட்டப்பந்த யத்தினை அமைச்சர் பார்வையிட்டார்.
விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பலாமுருகன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட உற்கல்வி அலுவலர் முத்துவேல் உள்பட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கார்த்திகை தீப 5-வது நாள் விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ேகாவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது.
5-வது நாளான இன்று காலை மூஷிக வாகனத்தில் விநாயகர் கண்ணாடி ரிஷப வாகனத்தில் அண்ணாம லையார் எழுந்தருளி மாடவீதியில் உலா வந்தார். இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி மூஷிகம் வெள்ளி மயில் வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் அண்ணாம லையார் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
நேற்று நான்காம் நாள் இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி கற்பகவிருட்சகம், வெள்ளி காமதேனு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- 8 பவுன் தங்க நகை 2 கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை அள்ளி சென்றனர்
- தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தாதுசாகிப் தெருவை சேர்ந்தவர் ஜாகிர்உசேன் பழைய இரும்பு வியாபாரி.
நேற்று மதியம் நேரத்தில் அருகில் உள்ள தங்களின் மற்றொரு வீட்டிற்கு செல்வதற்காக வீட்டின் முன்பக்க கதவை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.
மேலும் மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது பின்பக்க கதவை உடைத்து இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த சுமார் 8 பவுன் தங்க நகை 2கிலோ வெள்ளி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து இரும்பு கடை வியாபாரி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து திருவண்ணா மலையிலிருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கபட்டு கைரேகை தடயத்தை சேகரித்து விசாரணை மேறகொண்டனர்.
ஆரணியில் கடந்த 20 நாட்களில் கோவில் மற்றும் வீட்டின் பூட்டை உடைத்தும் சாலையில் நடந்து சென்ற பெண்ணின் வழிப்பறி செய்த சம்பவம் தொடர்கதையாக நடந்தேறி வருகிறது.
தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அண்ணாதுரை எம்.பி. தொடங்கி வைத்தார்
- பல்வேறு போட்டிகள் நடந்தது
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் கலைத்திருவிழா நடைபற்றது.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான வட்டார அளவிலான போட்டிகள் கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கியது. விழாவிற்கு, வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, பேரூராட்சி தலைவர் சரவணன், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்க தலைவர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் கூட்டுறவு சங்க துணை தலைவர் சி.ஏ.முருகன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சி. என்.அண்ணாதுரை எம்.பி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், பரதநாட்டியம், வயலின் இசை, பறை இசை, பேச்சு, ஓவியம், கட்டுரை போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிளில் மாணவர்கள் கலந்து கொண்டு கலை திறன்களை வெளிபடுத்தினர். விழாவில், வட்டார வளமைய பொறுப்பாளர்கள், கலை திருவிழா நிர்வாகிகள் பொய்யாமொழி, வேலு, வெங்கடேசன், அய்யாசாமி, முருகன், குமார், ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றிய அளவில் நடைபெறும் கலைத் திருவிழா போட்டிகள் வருகிற 5-ந்தேதி வரை நடைபெறும் என விழா குழுவினர்கள் தெரிவித்தனர்.
- ஆதார் கார்டு கட்டாயம்
- முன்ேனற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம், கடலாடி ஊராட்சிகளுக்கு இடையில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் சுமார் 4 ஆயிரத்து 560 அடி உயரம் கொண்ட பருவதமலை அமைந்துள்ளது.
இந்த மலையின் உச்சியில் உள்ள கோவிலில் மல்லிகாஜுனேஸ்வரர் அன்னை பிரம்மராம்பிகை அம்பாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள்.
மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான படிகளை கடந்து செல்ல வேண்டும். மூலிகைச் செடி, கொடி, மரங்கள் உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த பருவத மலைக்கு ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் அமாவாசை, வார விடுமுறை நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு சென்று பக்தர்களே சாமிக்கு அபிஷேகம் தீபாரதனை செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வரும் டிசம்பர் 6 தேதி அன்று கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு பருவதமலை உச்சியில் கொப்பரை வைத்து தீபம் ஏற்றப்படுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளனர். இதனால் மலையின் மீது ஏறி சென்று பக்தர்கள் இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்காக முன்ேனற்பாடு பணிகள் குறித்து கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கலசப்பாக்கம் தி.சரவணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்து சமய உதவி ஆணையர் ஜோதிலட்சுமி முன்னிைல வகித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா அன்று பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரஉள்ளதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கூடுதல் போக்குவரத்து வசதி, மலையேறும் வழியில் மின்விளக்கு வசதிகள் மற்றும் மலை அடிவாரத்தில் மருத்துவ வசதி செய்வது மற்றும் மலை மீது ஏறி செல்ல பக்தர்களிடையே கட்டுப்பாடுகள் விதித்து எவ்வளவு பக்தர்கள் செல்ல வேண்டும் என முன்னதாக வரையறுக்கப்பட்டு மலை மீது செல்பவர்களுக்கு கட்டாயம் ஆதார் கார்டு நகல் மற்றும் மொபைல் எண் பெற்றுக் கொண்டு அனுமதிக்க வேண்டும்.
மேலும் மலை உச்சியில் நீண்ட நேரம் பக்தர்களை ஓய்வெடுக்க அனுமதிக்க கூடாது எனவும் வழியில் அதற்கான ஏற்பாடுகளை செய்யப்பட வேண்டும் உட்பட பல்வேறு கருத்துகள் பற்றி கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
கூட்டத்தில் கலசப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், அறங்காவலர் குழு தலைவர் ராமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர் கலையரசிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் எழில்மாறன் மற்றும் அரசு அலுவலர்கள் இந்து சமய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம்
- மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் பாதிப்பு
வந்தவாசி:
வந்தவாசி துணை மின் நிலையத்தில் ஊழியர்க ளான ராம்பிரகாஷ், பாபு, காண்டீபன், ஆகியோர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து நபர் மின்சார ஊழியர்கள் மீது திடீரென தாக்கியுள்ளார்.
இது குறித்து மின்சார ஊழியர்கள் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று அனைத்து மின் ஊழியர்கள் பதிவேட்டில் கையொப்பமிடாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின் ஊழியர்கள் மீது தாக்கிய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் ஊழியர்கள் வலியுறுத்தினர்.
மின் ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் மின் கட்டணம் செலுத்துபவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.
மின் ஊழியரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் போராட்டத்தால் வந்தவாசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






