என் மலர்
திருவள்ளூர்
- சென்னையில் சேத்துப்பட்டு ஏரிக்கு அடுத்து ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரிதான், படகு சவாரியுடன் கூடிய பசுமை பூங்கா ஏரியாக உள்ளது.
- ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆவடி:
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் 87.06 ஏக்கர் பரப்பளவில் பருத்திப்பட்டு ஏரி அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, சுற்றுவட்டார பகுதிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. ஏரியை சுற்றி ஜே.பி.எஸ்டேட், மூர்த்தி நகர், பெரியார் நகர், வசந்தம் நகர், காமராஜர் நகர், ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாக்கடை கால்வாய் வழியாக பருத்திப்பட்டு ஏரியில் கலக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி மாசடைந்து வந்தது. ஏரியை புனரமைத்து மீட்டெடுப்பதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் ரூ.28.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த தொகையில் ஏரியை சுற்றி சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு நடைபாதை, ஏரியின் நடுவில் பறவைகள் வந்து தங்கி இளைப்பாற பசுமை அடர்காடு மற்றும் பசுமை பூங்கா, சிறுவர்கள் விளையாட பூங்கா போன்றவை அமைக்கப்பட்டது.
சென்னையில் சேத்துப்பட்டு ஏரிக்கு அடுத்து ஆவடியில் உள்ள பருத்திப்பட்டு ஏரிதான், படகு சவாரியுடன் கூடிய பசுமை பூங்கா ஏரியாக உள்ளது. ஏரியில் படகு சவாரியும் தொடங்கப்பட்டது. ஏரி மேம்படுத்தப்பட்ட பிறகு அப்பகுதி பொதுமக்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்தது.
ஆனால் ஏரியில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்க ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினமும் பல ஆயிரம் லிட்டர் கழிவுநீர் பருத்திப்பட்டு ஏரியில் நேரடியாகவே கலக்கப்பட்டு வருகிறது. ஏரியின் அருகே 4 கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒரு தொட்டியில் ஒரு நாளைக்கு 9 லட்சம் லிட்டர் வீதம் 4 தொட்டிகளிலும் சேர்த்து 36 எம்.எல்.டி. தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. ஆனால் அவை முறையாக செயல்படுத்தப்படாததால் மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலந்து நேரடியாக ஏரியில் வந்து கலந்து விடுகிறது.
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஏரியில் ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் சிறிய வகை மீன்கள் செத்து மிதந்தன. மாநகராட்சி அதிகாரிகள் சிறிய மிதவை மூலம் இறந்து கிடந்த ஆயிரக்கணக்கான மீன்களை அகற்றினர்.
ஆவடி மாநகராட்சி சார்பில் ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் சுற்றுச்சூழல் துறை நிதி ஒதுக்கீடு செய்து, அந்த நிதியில் பொதுப்பணி துறை பசுமை பூங்காவை உருவாக்கி ஆவடி மாநகராட்சிக்கு வருவாய் ஏற்படுத்தும் நோக்கில் ஒப்படைத்தது. பசுமை பூங்காவினுள் சுமார் ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் அளவுக்கு திறந்தவெளி ஆடிட்டோரியம் உள்ளது. இந்த இடத்தில் பல்வேறு அரசியல் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதித்து அதன் மூலம் வருவாயை பெருக்கலாம்.
பல்வேறு இசை நிகழ்ச்சிகள், அரசு சார்பான பொருட்காட்சி, கண்காட்சிகள், தன்னார்வ கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்தி அதன் மூலமும் வருவாயை பெருக்கலாம்.
பொதுமக்கள் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளையும் திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் நடத்த அனுமதித்து குறைந்த கட்டணத்தை வசூலித்து அதன் மூலமும் வருவாயை பெருக்க முடியும். படகு சவாரி, படகு பயிற்சி கொடுக்கும் இடமாகவும் மாற்றலாம். ஆனால் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஏரி மூலம் வருவாயை பெருக்க நினைக்காமலும், ஏரியை பராமரிக்காமலும் விட்டதால் ஆவடி மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பசுமை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவில் போதிய பராமரிப்பு இல்லாததால் சிறுவர்கள் விளையாடக்கூடிய அனைத்து உபகரணங்களும் உடைந்து கிடக்கின்றன. சிறுவர்கள் விளையாடும் இடங்களின் கீழ் பள்ளமாக இருப்பதால் அதில் மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளிக்கிறது.
ஏரியின் சுற்றுப்புற பகுதிகளில் போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி கிடக்கிறது. பூங்காவை சுற்றிலும் நடைபாதை ஓரங்களிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் நடைபயிற்சி செல்வோர் மற்றும் ஏரிக்கும் வரும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பசுமை பூங்கா ஏரி தொடங்கிய புதிதில் பொதுமக்கள் வருகை அதிகமாக காணப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பு இல்லாததால் தற்போது பொதுமக்கள் வரத்து குறைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அங்கு நடைபயிற்சிக்கு வருபவர்கள் கூறும்போது, "இந்த ஏரியில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கழிவுநீர் நேரடியாக கலக்கப்பட்டு வருவதால் தண்ணீர் கருமை நிறமாக மாறி உள்ளது. ஏரி நீரும் மாசடைகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவையும் சீரமைத்து பராமரிக்க வேண்டும்.
புதர்களை அகற்றி பாம்புகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் புதுப்பிக்க வேண்டும்" என்றனர்.
- திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு 19 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு கடந்த ஜுலை மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டலபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிலையில், மண்டலபிஷேகம் நிறைவு விழாவான இன்று காலை கலசபிஷேகம், 108 சங்காபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றது. இரவு மயில் வாகனத்தில் சுவாமி திரு மீது உலா நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் லட்சுமணன், உதவி ஆணையர் சித்ரா தேவி, செயல் அலுவலர் செந்தில்குமார், எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மணி 2 பாம்புகளை கையில் எடுத்துக் கொண்டு வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சிறுவன் முருகனுக்கு குழந்தைகள் நல பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவரது மனைவி எல்லம்மாள். இவர்களுக்கு 8 வயதான முருகன் என்ற மகன் உள்ளான். கூலித் தொழிலாளிகளான இவர்கள் அதே பகுதியில் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்பு ஆகியவை சிறுவன் முருகனை கடித்துவிட்டு அவன் மேலே படுத்து இருந்ததை கண்டு தந்தை மணி அதிர்ச்சி அடைந்தார். அந்த இரண்டு பாம்புகளையும் அடித்து கையில் எடுத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 பாம்புகளையும் எடுத்துக் கொண்டு தன் மகனுடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுவன் முருகனுக்கு குழந்தைகள் நல பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணி 2 பாம்புகளை கையில் எடுத்துக் கொண்டு வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- பூச்சி மருந்து குடித்து விவசாயி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி செங்காளம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 33). விவசாயி. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வாகன விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு காரணமாக வீட்டில் இருந்து வந்தார். குடும்பத்தை சரியாக கவனிக்க முடிய வில்லை என மனமுடைந்தார்.
கடந்த 5-ந் தேதி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்தார். அக்கம், பக்கத்தினர் அவரை பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்துவிட்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- முருகேசன் வங்கியில இருந்து எடுத்து வந்த ரூ.2 லட்சம் பணத்தை பையுடன் எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
- முருகேசன் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (56). இவர் சொந்தமாக லாரி வைத்து தானே ஓட்டி வருகிறார்.
இவர் நேற்று திருமழிசையில் உள்ள தனியார் வங்கியிலிருந்து ரூ.2 லட்சத்தை எடுத்துக் கொண்டு அதை தனது பையில் வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டார்.
வங்கியில் இருந்து சிறிது தூரத்தில் சென்று கொண்டிருந்த போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், முருகேசனிடம் பணம் கீழே விழுந்ததாக கூறியுள்ளனர்.
இதனால் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பின்னால் திரும்பி பார்த்த போது முருகேசன் வங்கியில இருந்து எடுத்து வந்த ரூ.2 லட்சம் பணத்தை பையுடன் எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி அடுத்த மத்தூர் பகுதியில் திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநில எல்லையில் இருந்து திருத்தணி நோக்கி டிராக்டர் ஒன்று அதிவேகமாக வந்தது. போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். டிராக்டரை ஓட்டி வந்தவரிடம் மணல் ஏற்றிச்செல்வதற்கான அனுமதி உள்ளதா என கேட்டபோது அவரிடம் அனுமதி எதுவும் இல்லை. இதனால் டிராக்டரில் மணல் சட்டவிரோதமாக கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் நகரி அடுத்த எஸ்.வி.புரம் பகுதியை சேர்ந்த லோகையா (வயது 38) என்பவரை கைது செய்தனர்.
- மதியம் உணவு இடைவேளையின் போது திரும்பி வந்து பார்த்தப் போது வாகனம் திருட்டு போனது தெரியவந்தது.
- திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
திருத்தணி:
திருவாலங்காட்டில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இங்கு ஆலை பராமரிப்பு ஊழியராக பணிபுரிபவர் தங்கவேலு 55. இவர் பழையனூரை சேர்ந்தவர். நேற்று காலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆலைக்கு பணிக்கு வந்தார்.
வாகனத்தை ஆலைக்கு வெளியே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி சென்றார். மதியம் உணவு இடைவேளையின் போது திரும்பி வந்து பார்த்தப் போது வாகனம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து தங்கவேலு திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வாகனத்தை திருடியவரை தேடி வருகின்றனர்.
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் அருகிலுள்ள குப்பைகள் கொட்டும் பகுதியில் மூட்டையாக கட்டி ஷூக்கள் போடப்பட்டுள்ளது.
- ஷூக்களை ஊர்க்காவல் படை, போலீஸ்துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர்களுக்காவது போலீஸ்துறை சார்பில் வழங்கியிருக்கலாம்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை பயன்படுத்தக்கூடிய ஷூக்களை கடந்த 2 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாருக்கும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த ஷூக்கள் அனைத்தும் தனியாக எடுத்து வைக்கப்பட்ட நிலையில் தற்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகம் அருகிலுள்ள குப்பைகள் கொட்டும் பகுதியில் மூட்டையாக கட்டி ஷூக்கள் போடப்பட்டுள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கொண்டாடுவதற்காக சுத்தம் செய்யும்போது அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஷூக்களை மூட்டையாக கொண்டு வந்து குப்பையில் போட்டுவிட்டு சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஷூக்களை ஊர்க்காவல் படை, போலீஸ்துறை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆகியோர்களுக்காவது போலீஸ்துறை சார்பில் வழங்கியிருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- மகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
- வாலிபர் கடத்தப்பட்ட வழக்கில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.
செங்குன்றம்:
சென்னையை அடுத்த மாதவரம் தணிகாசலம் நகர் நடேசன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்(வயது 25). இவரை கடந்த 2015-ம் ஆண்டு பணத்துக்காகவும், தொழில் போட்டி காரணமாகவும் காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்த மகேஷ்(41) என்பவர் கடத்தி சென்றுவிட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கடத்தப்பட்ட கார்த்திக்கை போலீசார் மீட்டனர். ஆனால் மகேஷ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் 7 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்த மகேஷ், நேற்று சென்னை பேசின்பாலம் அருகே பதுங்கி இருப்பதாக புழல் உதவி கமிஷனர் ஆதிமூலத்துக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று மகேசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சு கொடுத்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
- இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த கச்சனங்குப்பம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் பேச்சுகொடுத்து அருகில் நிறுத்தப்பட்டு இருந்த லாரிக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜோதிலட்சுமி விசாரணை நடத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான செந்தில் என்பவரை கைதுசெய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
- ஷட்டருக்குள் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரைப்பாம்பு கீழே விழுந்து கடைக்குள் சென்றது.
- அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அம்பத்தூர்:
கொரட்டூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கொரட்டூர் சிக்னல் அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடுவதற்காக ஷட்டரை இழுத்தார். அப்போது ஷட்டருக்குள் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரைப்பாம்பு கீழே விழுந்து கடைக்குள் சென்றது. இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர்.அந்த பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
- திருக்கல்யாண ஏடு வாசிப்பு 14-ந்தேதி நடக்கிறது.
- திருத்தேர் உற்சவம் 16-ந்தேதி நடக்கிறது.
மணலிபுதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி பிரசித்திப் பெற்றது.
இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியபடி பதி வலம் வந்தனர். காலை 7 மணியளவில் திருநாம கொடியேற்றப்பட்டது.
விழாவில் தலைவர் துரைப்பழம், பொருளாளர் ஜெயக்கொடி, சட்ட ஆலோசகர் ஐவென்ஸ், நிர்வாகிகள் சுந்தரேசன், மனுவேல், கிருபாகரன், பாலகிருஷ்ணன், கண்ணன், ராஜா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று மதியம் பணிவிடை உச்சிப்படிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் திருஏடு வாசிப்பு இரவு அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருகிறார்.
தொடர்ந்து விழா நடக்கும் நாட்களில் அய்யா வைகுண்டர் அன்னம், கருடன், மயில், ஆஞ்ச நேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண ஏடு வாசிப்பு, சரவிளக்கு பூஜை வருகிற 14-ந் தேதியும், அய்யா வைகுண்ட தர்மபதி திருத்தேர் உற்சவம் 16-ந் தேதியும், நடைபெற உள்ளது. அன்றைய தினம் இரவு அய்யா பூப்பல்லக்கில் பதிவலம் வருதல் மற்றும் இரவு திருநாம கொடி அமர்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.






