என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மகனை கடித்த 2 பாம்புகளுடன் மருத்துவமனைக்கு வந்த வாலிபர்- சிறுவனுக்கு தீவிர சிகிச்சை
- மணி 2 பாம்புகளை கையில் எடுத்துக் கொண்டு வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சிறுவன் முருகனுக்கு குழந்தைகள் நல பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த கொல்ல குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் மணி. இவரது மனைவி எல்லம்மாள். இவர்களுக்கு 8 வயதான முருகன் என்ற மகன் உள்ளான். கூலித் தொழிலாளிகளான இவர்கள் அதே பகுதியில் வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் கண்ணாடி விரியன் மற்றும் கட்டுவிரியன் பாம்பு ஆகியவை சிறுவன் முருகனை கடித்துவிட்டு அவன் மேலே படுத்து இருந்ததை கண்டு தந்தை மணி அதிர்ச்சி அடைந்தார். அந்த இரண்டு பாம்புகளையும் அடித்து கையில் எடுத்துக் கொண்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 பாம்புகளையும் எடுத்துக் கொண்டு தன் மகனுடன் சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுவன் முருகனுக்கு குழந்தைகள் நல பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணி 2 பாம்புகளை கையில் எடுத்துக் கொண்டு வந்ததால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






