search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கருணாநிதி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும்.
    • அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கட்சி சார்பில் ஒரு வருடம் கொண்டாட முடிவெடுத்து உள்ள நிலையில் அரசு சார்பிலும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந் தேதி கட்சி சார்பில் சிறப்பாக கொண்டாடப்படும். அதே நேரத்தில் அரசு சார்பிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது பல்வேறு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

    கலைஞர் நூற்றாண்டு விழா என்பது கலைஞர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும்.

    நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர். எனவே அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விழாவாக இந்த விழாவை நடத்த வேண்டும்.

    5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக அமர்ந்தவர் தலைவர் கலைஞர். 13 முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர். தமிழக மேல்-சபை உறுப்பினராகவும் அமர்ந்து அரிய விவாதங்களை எடுத்து வைத்தவர்.

    அவர் தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாது இந்திய அரசியல் திசையை தீர்மானிப்பவராகவும் இருந்தவர். முதல் முறையாக அவர் ஆட்சிக்கு வந்த போது, கூறிய வார்த்தை நான் முதலமைச்சராக இருந்தாலும் அங்கிருந்தபடியே குடிசைகளை பற்றி சிந்திப்பேன் என்றார். தன்னுடைய ஆட்சிக்கு 3 இலக்கணம் இருப்பதாக கலைஞர் கூறுவார்.

    சமுதாய சீர்திருத்த தொண்டு, வளர்ச்சிப் பணிகள், சமதர்ம நோக்கு இவை மூன்றும்தான் ஆட்சியின் இலக்கணமாக இருந்தது.

    அந்த இலக்கணத்தின் அடிப்படையில் தான் ஆட்சி நடத்தினார். அதனால் அனைத்து துறைகளும் ஒரு சேர வளர்ந்தது.

    அன்னை தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி, ஒன்றிய அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உரிமை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம், மகளிருக்கு சொத்தில் சமஉரிமை சட்டம், சமூகநீதி உரிமைகள், உழவர்களுக்கு இலவச மின்சாரம், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட ரூ.7 ஆயிரம் கோடி கடன் ரத்து, சென்னை தரமணியில் டைடல் பார்க் என பல்வேறு சாதனை திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

    மொத்தத்தில் நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் என்று சொன்னால் அது மிகையாகாது.

    கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந்தேதி முதல் நடைபெற உள்ளதால் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நூற்றாண்டு விழா, தலைமைக்குழு, விழாக்குழு, மலர்க்குழு, கண்காட்சி குழு போன்ற குழுக்கள் அமைச்சர்கள் கொடுத்த ஆலோசனைகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி தொகுத்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    கலைஞர் ஆற்றிய நலத்திட்டங்களை பட்டியலிட்டு நிகழ்ச்சிகள் அமைய வேண்டும்.

    ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் அவர் ஆற்றிய பணிகளை நினைவு கூர்வதாக இருக்க வேண்டும். எனவே அமைச்சர்கள் குழுக்களுடன் அடிக்கடி கலந்து பேசி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சென்னை கிண்டி கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைத்து நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க உள்ளதால் அவரது வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது தொடர்பாகவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

    Next Story
    ×