என் மலர்tooltip icon

    சிவகங்கை

    கீழடி அருகே கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் மேலும் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்துவருகிறது.

    இந்த நிலையில் கொந்தகையில் நேற்று நடந்த அகழாய்வு பணியில் குழந்தையின் முழு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எலும்புக்கூட்டினை சேதாரம் இல்லாமல் முழுமையாக தோண்டி எடுத்து சுத்தம் செய்தனர். அதன் அளவை கணக்கிடும்போது 95 செ.மீ. உயர குழந்தையின் எலும்புக்கூடு என்பது தெரியவந்தது.

    இதன் தலை பகுதி மட்டும் 20 செ.மீ. இருக்கும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த குழந்தையின் எலும்புக் கூடு கிடைத்த இடத்தின் அருகே கடந்த மாதம் 75 செ.மீ. உயரம் உள்ள குழந்தையின் எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த எலும்புக் கூடுகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டு பரிசோதிக்கப்படும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
    திருவாடானை அருகே கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேவகோட்டை:

    திருவாடானை அருகே உள்ளது நீர்குன்றம் கிராமம்.அந்த கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சார்லஸ் (வயது 36). இவருக்கு அழகு என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். இவர் தேவகோட்டையில் இருந்து மோட்டார் சைக்கிளில் நீர்குன்றம் கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தார் அனுமந்தகுடி அருகே செல்லும்போது எதிரே வந்த கார் மோதியதில் சார்லஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல் வழக்குபதிந்து ஆவுடையார் கோவில் தாலுகா ஆள்காட்டிவயல் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் ரமேசை கைது செய்தார்.
    சிவகங்கையில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சிவகங்கையில் ஒரு பெண், ஒரு ஆண், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், புலியடிதம்பத்தில் ஒரு ஆண், படமாத்தூரில் ஒரு ஆண், நாட்டரசன் கோட்டையில் ஒரு பெண், காளையார்கோவிலில் ஒரு பெண், இளையான்குடியில் ஒரு ஆண், மேல்குடியில் ஒரு பெண், பரமக்குடியை சேர்ந்த ஒரு ஆண், திருமங்கலத்தை சேர்ந்த ஒரு ஆண் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்த காரைக்குடியை சேர்ந்த 77 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 
    சிவகங்கையில் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் திருப்புவனத்தில் ஒரு பெண், ஒரு ஆண், சிவகங்கை பகுதியில் 4 ஆண், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், இளையான்குடி பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காரைக்குடியை சேர்ந்த 8 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் புலியடிதம்மத்தை சேர்ந்த ஒரு ஆண், பரமக்குடியை சேர்ந்த ஒரு ஆண், மானாமதுரையை சேர்ந்த ஒரு பெண், வரிச்சீயூரை சேர்ந்த ஒரு பெண், சாத்தரசன்கோட்டையில் ஒரு பெண், சிங்கம்புணரியில் ஒரு ஆண், திருப்பத்தூரில் 2 ஆண்கள் மற்றும் 4 பெண்கள், புதுக்கோட்டையில் ஒரு பெண், திருப்பாசேத்தியில் ஒரு ஆண், ஆத்தங்கரைபட்டியில் ஒரு ஆண், ஒக்கூரில் ஒரு ஆண், வீரசேகரன்புரத்தில் ஒரு ஆண் உள்பட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்பதை உணராமல் சிங்கம்புணரி பகுதியில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்காமல் உள்ளனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி பகுதியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பொதுவாக சிங்கம்புணரி பகுதியில் வாரச்சந்தை, தினசரி சந்தை உள்ளிட்ட சந்தைகள் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா ஊரடங்கு உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் தற்காலிகமாக காய்கறி கடைகள் போடுவதற்காக சிங்கம்புணரி சேவுகபெருமாள் அய்யனார் கோவில் பகுதி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதியில் தற்காலிகமாக காய்கறி கடைகள் போடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சிங்கம்புணரி 4 ரோடு சந்திப்பில் இருந்து ஆரம்பித்த வாரச்சந்தை கடைகள் சீரணி அரங்கம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் காய்கறி கடைகளை வியாபாரிகள் போட்டதால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்காக பெரும் கூட்டமாக கூடினர்.

    இந்த சந்தையில் பொருட்கள் வாங்க வந்த பெரும்பாலான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் முககவசம் அல்லது கையுறை அணிந்தோ போதிய பாதுகாப்பு இல்லாமல் வந்திருந்தனர். இதுதவிர ஆங்காங்கே போடப்பட்ட காய்கறி கடைகளில் பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியில்லாமல் பொருட்களை வாங்கும் ஆர்வத்திலேயே இருந்தனர். கடை போட்ட வியாபாரிகளும் வியாபாரத்தில் மட்டும் கவனம் செலுத்தி அவர்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்கவில்லை. சில வியாபாரிகள் முக கவசம் அணியாமல் வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டம் கூடினால் கொரோனா பரவும் என்பதை உணராமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்களால் தொற்று பரவல் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வாறு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், பொருட்கள் வாங்க வருபவர்களை போதிய சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்த வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காத வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கையை எடுத்தால் மட்டுமே கொரோனா பரவுவதை தடுக்க முடியும். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    கீழடியில் நடந்துவரும் அகழாய்வில் புதிதாக எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் செங்கல் கட்டுமான தொடர்ச்சி கண்டறியப்பட்டது.

    இதற்காக தோண்டப்பட்ட அகழாய்வு குழி அருகே தற்போது இரும்பு உலை அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அகழாய்வு குழி மற்றும் அதனை சுற்றியுள்ள குழிகளில் பல்வேறு அளவுகளில் கருங்கல்லில் ஆன நான்கு எடை கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை உருளை வடிவில் அமைந்துள்ளன. அதன் கீழ் பகுதி தட்டையாக உள்ளன.

    இவை ஒவ்வொன்றும் முறையே 8, 18, 150 மற்றும் 300 கிராம் எடை கொண்டுள்ளன. கீழடி அகழாய்வு பகுதி முன்பு தொழில் நிறைந்த பகுதியாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கண்டறியப்பட்டுள்ள உலை அமைப்பு மற்றும் இரும்புத் துண்டுகள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மூலப்பொருட்களில் இருந்து உருக்கிய பின்னர் வெளியேறும் கசடுகள், எடைகற்கள் ஆகியவை, அங்கு ஏற்கனவே தொழில்கள் நடந்ததை உறுதிபடுத்தும் ஆதாரங்களாக உள்ளன. 
    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள். 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 39பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. சிவகங்கையை சேர்ந்த 5 ஆண் மற்றும் 4 பெண்கள், மதுரையை சேர்ந்த ஒரு ஆண், மானாமதுரையை சேர்நத 7 ஆண்கள், 8 பெண்கள், புதுவயலை சேர்ந்த ஒரு ஆண், விருதுநகரை சேர்ந்த ஒரு ஆண், பரமக்குடியை சேர்நத ஒரு பெண், சிங்கம்புணரியை சேர்ந்த 3 ஆண்கள், ஒரு பெண், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண், தேவகோட்டை பகுதியை சேர்ந்த 3 ஆண்கள், திருப்புவனம் பகுதியை சேர்ந்த ஒரு பெண், வரிச்சியூரை சேர்ந்த ஒரு ஆண் உள்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த 62 வயது ஆண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் சிவகங்கையை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு வந்தபோது திடீரென உயிரிழந்தார். இவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சுகாதார நடவடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
    திருப்புவனம் அருகே அகழாய்வுகளில் இதுவரை வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

    அகரத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கீழடி பகுதியில் நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.

    இந்நிலையில் முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பாசிகள் தொழில் வர்த்தக பயன்பாட்டில் இருந்துள்ளன. மேலும் இந்த வகை பாசிகளை வியாபாரிகள், மிகப்பெரிய அளவில் வியாபாரத்திற்கு பயன்படுத்தி இருக்கலாம் எனவும் இந்த பாசிகள் எதற்காக பயன்படுத்தினர், எந்த வகையை சார்ந்தவை, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியவை என்பது ஆய்வில் தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
    காரைக்குடி அருகே கானாடுகாத்தான் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையின்றி கைத்தறி நெசவாளர்கள் தவித்துவருகின்றனர்.
    காரைக்குடி:

    செட்டிநாடு என்றாலே முதலில் கட்டிட கலைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டு தான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்தப்படியாக செட்டிநாடு உணவு வகைகளும், செட்டிநாட்டு பகுதியில் தயாராகும் கைத்தறி சேலை ரகங்களும் இந்த பகுதியை பெருமைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. காரைக்குடி பகுதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பாரம்பரியமாக செய்யப்பட்டு வரும் இந்த தொழில் நூற்றாண்டை கடந்து தற்போது தனி மவுசை பெற்று வருகிறது. இந்த தொழிலாளர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் செட்டிநாடு சேலைகளுக்கு புவிசார் குறியீடும் கிடைத்துள்ளது.

    ஆண்டுதோறும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து பிரமாண்ட வீடுகளை பார்வையிட்டு செட்டிநாட்டு உணவுகளை சாப்பிட்டு, இங்கு கைத்தறி மூலம் தயாராகும் செட்டிநாட்டு சுங்கடி சேலைகள் மற்றும் கண்டாங்கி சேலைகளின் ரகம் மற்றும் அவற்றின் தரம் ஆகியவற்றை அறிந்து நேரடியாக சேலைகளை வாங்கி சென்று வந்தனர். ஆண்டுதோறும் இவர்களின் வியாபாரம் சூடுபிடித்து வந்தது. தற்போது கொரோனா தாக்கத்தால் கைத்தறி நெசவு தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து கானாடுகாத்தான் பகுதியில் கைத்தறி நெசவு தொழிலை நடத்தி வரும் வெங்கட்ராமன் என்பவர் கூறியதாவது:- கைத்தறி வைத்து செட்டிநாட்டு கைத்தறி சேலைகளை தயார் செய்து வருகிறேன். இதற்கு முன்பு 100 பேர் வரை என்னிடம் வேலை செய்து வந்தனர். தற்போது கொரோனாவால் இந்த தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு 15 பேர் மட்டும் தான் வேலை செய்து வருகின்றனர். இதுதவிர ஏற்கனவே இங்கு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்ப முடியாமல் சேலைகள் தேக்க நிலையில் உள்ளன. இதுதவிர இதன் உபரி பொருட்களான நூல், சாயம் உள்ளிட்டவைகளை வெளி மாவட்டத்தில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் இருந்து வருகிறது.

    இதற்கு முன்பு தினந்தோறும் ரூ.50ஆயிரம் வரை இங்கு தயாரிக்கப்பட்ட சேலைகள் விற்பனையாகி வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த 80 நாட்களுக்கும் மேலாகியும் எவ்வித விற்பனையும் நடைபெறவில்லை. கொரோனாவால் சுமார் ரூ.40லட்சம் வரை நஷ்டத்தை சந்தித்துள்ளேன். வருங்காலத்தில் இந்த நஷ்டத்தை எப்படி ஈடுகட்டுவது என தெரியவில்லை. இழப்பை ஈடுகட்ட உபரி பொருட்களை வாங்க தமிழக அரசு, மானிய உதவி தொகை வழங்கவேண்டும். அப்போது தான், இந்த தொழிலை மீண்டும் எடுத்து நடத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்தனர். புதிதாக 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    சிவகங்கை:

    சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் உடல் நலம் பாதிப்படைந்த சிவகங்கையை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும், காரைக்கடி சூடாமணிபுரத்தை சேர்ந்த 67 வயது பெண் ஒருவரும் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதேபோல் சிகிச்சையில் இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த ஒட்டபாளையத்தை சேர்ந்த 70 வயது ஆண் ஒருவரும், பார்த்திபனூரை சேர்ந்த 56 வயது ஆண் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சிவகங்கை மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்தவர்களில் பூரண குணமடைந்த 13 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் தேவகோட்டையை சேர்ந்த 9 ஆண், 2 பெண், காரைக்குடியை சேர்ந்த 8 ஆண், 3 பெண், சிவகங்கையை சேர்ந்த 3 ஆண், ஒரு பெண் திருப்பத்தூரை சேர்ந்த 2 ஆண், கோட்டையூரில் ஒரு ஆண், புதுவயலில் ஒரு பெண், சருகணியில் ஒரு பெண் உள்பட 32 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 
    கீழடியில் அகழாய்வு பணியின் போது அகரம் பகுதியில் நேற்று நடந்த அகழாய்வில் உடைந்த நிலையில் பழங்கால வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் கீழடி,அகரம், கொந்தகை, மணலூரில் 6-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. நேற்று கீழடியில் பெரிய சுவர் தெரிந்த பகுதியில் தொடர்ந்து பணிகள் மேற்கொண்ட போது பழங்கால செங்கல் கட்டிட பகுதி கிடைத்துள்ளது. பழங்கால மக்கள் பயன்படுத்திய செங்கல் நன்கு அகலமாக உள்ளது. இதன் மூலம் பண்டைய தமிழர்கள் செங்கல் தயாரித்து அவற்றை கட்டிட வேலைக்கு பயன்படுத்தி இருப்பது தெரிய வருகிறது.

    இதேபோல் அகரம் பகுதியில் நேற்று நடந்த அகழாய்வில் உடைந்த நிலையில் பழங்கால வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் கூறியதாவது:- இந்த வளையல்கள் சங்கு வளையல் ரகத்தை சேர்ந்தது. பண்டைய கால பெண்கள் இந்த வளையல்களை விரும்பி அணிந்துள்ளனர். இந்த வளையல்களின் நீளம் 3 செ. மீட்டர் கொண்டதாகவும், ½ சென்டி மீட்டர் அகலம் உள்ளது. தொடர்ந்து 4 இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெறும்போது மேலும் பல்வேறு பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
    பாதாள சாக்கடை திட்ட பணியின்போது மண் சரிந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தற்போது பாதாள சாக்கடை திட்ட பணி நடைபெற்று வருகிறது. இதற்காக காரைக்குடி கீழஊருணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 21 அடி ஆழ குழியில் எந்திரங்கள் மூலமாக குழாய்கள் பொருத்தும் பணி நடைபெற்றது.

    இதில் எந்திரம் மூலம் இறக்கப்பட்ட குழாயை சரியாக பொருத்துவதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த ராஜா (வயது45) என்பவர் குழியின் உள்ளே இறங்கினார். அப்போது திடீரென மேலே இருந்த மண் சரிந்து ராஜாவின் மீது விழுந்தது.

    உடனே இது குறித்து தகவல் அறிந்த காரைக்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று எந்திரங்கள் மற்றும் ஆட்கள் உதவியுடன் ராஜா மீது குவிந்த மண்ணை அகற்றினர். ஆனால் ராஜா மூச்சுத்திணறி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ×